நா.முத்துக்குமார் : அதிர்ச்சியும், நினைவலைகளும்


அதிர்ச்சி, பேரதிர்ச்சி.

நம்பவே முடியவில்லை. நண்பர் நா.முத்துகுமார் இப்போது நம்முடன் இல்லை. அதிர்ச்சியிலிருந்து மனம் விடுபட மறுக்கிறது. எனது அலுவலகத் தோழனின், பள்ளித் தோழன் அவர். ஆயினும் எங்களிடையே இருந்த நட்புக்குக் காரணம் அவரது எழுத்துகளும், அதன் வசீகரமும் தான்.

2001ம் ஆண்டு. நான் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த காலம். எனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிடவேண்டுமென சிந்தித்தபோது மனதில் வந்த முதல் பெயர் நா.முத்துகுமார் தான். அவரிடம் ஒரு முன்னுரை வாங்கி நூலை வெளியிடவேண்டும் என்பது மட்டுமே எனது சிந்தனையாய் இருந்தது. அந்த காலகட்டத்தில் அவர் அவ்வளவு பிரபலமல்ல. நான் உரையாடும் எல்லோரிடமும் அடித்துச் சொல்வதுண்டு, வைரமுத்துவுக்குப் பின் நா.முத்து தான் என. அவ்வளவு அசாத்திய நம்பிக்கை எனக்கு அப்போதே உண்டு.

ஒரு மாலை வேளையில் கோடம்பாக்கம் டீக்கரையில் ஸ்கூட்டரில் வந்தார். அக்மார்க் கவிஞருக்குரிய ஜோல்னாப் பை. தாடி ! வந்த கையோடு ஒரு தம் பற்ற வைத்துவிட்டுக் கவிதைகளை வாங்கிக் கொண்டார். மிக இயல்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். மிக எளிமையான, இனிமையான மனிதர். பல முறை நாங்கள் தொலைபேசியில் பேசியிருந்தாலும் அப்போது தான் நேரடியாகச் சந்தித்துக் கொண்டோம்.

கவிதைகளை மேலோட்டமாய் ஒரு புரட்டு புரட்டினார். ஏதேனும் சொல்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்லவில்லை, படிச்சு சொல்றேன் என்றார். சில நாட்களுக்குப் பின் போன் செய்தார்.

“சேவியர் கவிதைகள் படிச்சுட்டேன்… தலைப்பை ஒரு மழைத்துளி நனைகிறதுன்னு வெச்சிருக்கீங்க, வாழை மரத்தில் உட்காரும் கொக்குகள் ந்னு வைங்களேன் நல்லாயிருக்கும்” என்றார்.

வைத்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்போது நான் மூன்றாவதாக ஒரு பெயரை முன்மொழிந்தேன். ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் ந்னு வைக்கலாமா ? என்றேன்.

ஆங்.. அது நல்லாயிருக்கு.. அதை வெச்சுக்கோங்க.. என்றார்.

கவிதைகள் எப்படியிருக்குன்னு சொல்லலையே என்றேன், முன்னுரையில சொல்றேன் என்றார்.

அவருடைய முன்னுரை, என்னுடைய கவிதைகளை விட நன்றாக இருந்தது என்பது தான் உண்மை !

அதன் பின் அவருடனான நட்பு நீடித்தது. நூல் வெளியிட்டபின் மீண்டும் அமெரிக்கா சென்று விட்டேன். அவருடைய பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் அதுகுறித்து போனிலும் மின்னஞ்சலிலும் உரையாடுவோம். சந்திக்கும் போதெல்லாம் பாடலில் ஒளிந்திருக்கும் ஹைக்கூக்கள் குறித்துப் பேசுவோம்.

தமிழ்த் திரையுலகம் அவரை ஆஸ்தான பாடகராக்கியபின் அவருடன் பேசுவதும், உரையாடுவதும் குறைந்து போய்விட்டது. அவர் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு வந்தபின் அது மறைந்தே போய்விட்டது ! நட்சத்திரம்ன்னா வானத்துல தானே இருக்கணும் !!

அதன்பின் அடிக்கடி ஏதேனும் இலக்கிய விழாக்களில் காரில் வந்திறங்கும் அவரை புன்னகையுடன் எதிர்கொள்வேன். சட்டென அடையாளம் கண்டு கொண்டு பேசுவார். “உங்க புக் ஒண்ணு புத்தகக் கண்காட்சில பாத்தேன்” என்று நினைவில் வைத்துப் பேசுவார்.

அந்த முன்னுரையை மீண்டும் வாசிக்கிறேன். கண்கள் கலங்குகின்றன. இத்தனை திறமைகள் இருக்கும் ஒருவரை இழந்ததாலா, இத்தனை இனிமையான ஒருவரை இழந்ததாலா ?

எழுதியவர் மறையலாம்
எழுதியவை மறைவதில்லை.

… துயரத்தில் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்….
என்ன சொல்லி என்ன ?
இறைவன் தீர்ப்புக்கு வாதங்கள் ஏது ?
ஆறுதலால் தீர்ந்து விடுமா ஆறாத ரணங்கள்.

*

நூலுக்கு நா.முத்துக்குமார் அளித்த முன்னுரை இது !
—————————————————————————
வாழை மரத்தில்
உட்காரும் கொக்குகள்

வண்ணத்துப் பூச்சிகளும், காலி சிகரெட் பெட்டிகளும், கனத்த இரும்புத் துண்டங்களும்; சக்கரங்கள் உரசிப் போன சூட்டுக்கு வெப்பம் வாங்க வரும் பாம்புகளும், ஏதோ ஒரு குழந்தை கை தவறி விட்ட சாயம் போன பந்தும், எப்போதாவது வந்து போகும் ஒற்றை ரயில் கூட்ஸ் ரயிலும், என எல்லாவற்றையும் வழித்துணையாகக் கொண்டு ராட்சஸத் தனமாய் நீண்டுக் கிடக்கும் தண்டவாளக் கோடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு சின்ன சிலேட்டுக் குச்சியைப் போன்றது தான் தமிழில் இன்றைய இளங்கவிஞர்களின் நிலை.

வேறு எந்த மொழியை விடவும் தமிழில் மட்டுமே சொற்களுடன் சூதாட கவிதையைக் களமாகத் தேர்ந்தெடுப்பவனுக்கு மிகப்பெரிய சவால் காத்துக் கிடக்கிறது. அவனுக்கு முன்னால் இரண்டாயிரம் வருடத்திய சூதாட்டப் பலகை; எந்தக் காயை எடுத்து வைத்தாலும் அதன் மூலக் காயையோ, அதற்கிணையான வேறு தாயக்கட்டைகளையோ எடுத்து வைக்கிறது.

காந்தி ரோட்டிலோ, பஜார் வீதியிலோ, பெயர்ப்பலகையில் புழுதி பறக்கக் காத்திருக்கும் ஃபோட்டோ ஸ்டுடியோக்களில் பேனாவைக் கையிலோ, கன்னத்திலோ வைத்துக் கொண்டு ஆர்வமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிதா போதையுடன் கவிதை எழுதவரும் இளங்கவிகள் ( சினிமாவில் பாட்டு எழுது இளங்கவிகள் அல்ல ) காலப் போக்கில் கீழ்க்கண்ட பிரிவுகளைச் சந்திக்க நேர்கிறது.

அவையாவன

பொதுவுடமை சிந்தாந்த ஸ்டேஷனரி ஸ்டோர்சில் சிவப்பு மை வாங்கி “வாடா தோழா, புரட்சி செய்யலாம்” என அழைக்கும் கவிதைகள்.

தாமரை பூக்கும் குங்குமக் குளக்கரையில், உள்ளொளி தரிசனம், ஆன்மீகப் பேரெழுச்சி என முங்கிக் குளிக்கும் காவி வேட்டிக் கவிதைகள்.

நாற்காலி/நாலுகாலி என்று பிரசுரமாகும், கவிதைகளுக்குப் பத்துரூபாய் கொடுக்கும் ஜனரஞ்சிதக் கவிதைகள்.

நண்பா, உனக்கும் எனக்கும் காயா? பழமா ? நீ கையில் கத்தி வைத்திருக்கிறாய் நான் காட்பரீஸ் வைத்திருக்கிறேன் என்று தொடங்கி நட்பு முறிவைப் பேசும் கவிதைகள்.

பஸ் டிக்கெட் போலென் இதயமும் கிழிந்து விட்டது, புதுச் செருப்பைப் போல உன் காதலும் கடிக்கிறது, உனக்காக தாஜ்மகால் கட்டுவேன்; தண்டவாளத்தில் தலை வைக்கலாம் வா என்று தொடங்கும் 143 கவிதைகள்.

ஆத்தா, ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா, தொன்மத் தமிழுக்கு அடையாளமாகத் தாடி வளத்தா, எனத் தொடங்கும் நாட்டுப்புற மரபு சார்ந்த வட்டார வழக்குக் கவிதைகள்.

தனிமையும் தன்னிரக்கமும் கொண்ட என் அறைக்குள் நிராசையின் கடலுக்குள்ளிலிருந்து சப்த அலைகளைக் கொண்டு வந்தாய் எனத் தொடங்கும் காலச்சுவட்டுத் தன்மானக் கவிதைகள்.

மேற்கண்ட பிரிவுகளைக் கடந்தும், ஏதோ ஒரு பிரிவில் மயங்கியும் எல்லாவற்றையும் போலி செய்தும் என தமிழ்க் கவிதைகள் பாஞ்சாலியின் சேலை போல நீண்டு கொண்டேயிருக்கின்றன.

II

மேற்சொன்ன சூழலில் தனது முதல் தொகுப்புடன் அறிமுகமாகிறார் கவிஞர். சேவியர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த பரக்குன்றைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கணினிப் பொறியாளராகப் பணிபுரியும் இளைஞர். அவ்வப்போது இவரது கவிதைகளை சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் படித்திருக்கிறேன்.

சேவியர் கவிதைகளில் விவசாய வாழ்க்கைக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்குமான ஒரு மெல்லிய ஊசலாட்டம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மரவள்ளிக் கிழங்கின் மூக்கில்
மிளகாய்ப் பொடி தேய்த்து
கரை மணலில் உட்கார்ந்து
கடிக்கும்
மத்தியான வேளைகள்
நுனி நாக்கை ரத்தச் சிவப்பாக்கும்

என்றும்

என்
சின்னக் கைகளில்
சாம்பல் கிள்ளி
வயலில் இடுவதாய்ச் சொல்லி
வீசும் போதெல்லாம்
கண்களுக்குள் தான் விழுந்திருக்கிறது

என்றும் எழுதி விட்டு;

அமெரிக்க வாழ்க்கையின்
பிரம்மாண்டங்களில் பிழியப்பட்டு
என் சிறுவயது
சுவாசத்தைத் திருடிச் சென்ற
வயல்காற்றின் ஈரம் தேடி
கிராமத்துத் திண்ணையில் நான்

என எழுதுகிற போது ஒரு ஏக்கம் மெலிதாகக் கண் விழிக்கிறது.

படித்துக் கொண்டே வருகையில் சில கவிதையின் விவரணைகள் (Descriptions) அடடா ! என வியக்க வைக்கின்றன. மொழியின் பள்ளத்தாக்குகளில் புதையுண்டு போய்விட்ட தற்காலிக தமிழ்க் கவிதைகளில் மிக அரிதாகவே இப்போதெல்லாம் சங்க இலக்கியத்துக்கு இணையான விவரணைகளைக் காண முடிகிறது.

நெடுஞாலை மெக்கானிக் பற்றியும், நாடோடிக்கு மலைமகளின் கடிதத்தைப் பற்றியும் எழுதும் மகாதேவன் ( ஆம் நண்பர்களுக்குள் அது தான் நடந்தது ), மழைப் பூச்சி சொன்ன திசையையும், கல் குறிஞ்சியையும் காட்டுப் பூக்களைப் பற்றியும் எழுதும் தேன்மொழி ( இசையில்லாத இலையில்லை )

நெடிய வரப்பின் அடியில் ஒளிந்து
பீடி ருசிக்கும் கைலி இளைஞர்கள் – என்றும்,

வாழை மரத்தில் உட்கார முயன்று
தோற்றுத் தோற்று
வரப்புக் குச்சிகளில் அடைக்கலமாகும்
சலவை செய்த கொக்குகள்
சருகு மிதிக்கும் அணில் குஞ்சுகள்
சேறு மிதித்து நடக்கும் தவளைகள் – என்றும்,

கிழக்குப் பக்கத்தில்
கட்டி வைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டை தேடி முட்டை தேடி
முடிந்து போகும்
பாட்டிகளின் காலைகள் – என்றும் எழுதும் சேவியர், என தமிழ்க் கவிதையை வாழை வைத்துக் கொண்டிருக்கும் இளங்கவிகளின் வருகை நம்பிக்கையூட்டுகிறது.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதையாக என்னைப் பாதித்தது “அவரவர் வேலை அவரவர்க்கு’ என்ற கவிதை. தமிழ்க் கவிதை உலகத் தரத்திற்கு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம். மிகச் சாமர்த்தியமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையும் இந்தக் கவிதையில் காணக் கிடைக்கிறது.

இதற்கு இணையான இன்னொரு கவிதை, ‘அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்’ அனுபவமும் மொழியும் ஒன்றாகக் கலந்து அடர்த்தியாக வார்த்தெடுக்கப் பட்டக் கவிதையாக இதைச் சொல்லலாம்.

சேவியரிடம் தமிழ் கூறும் கவியுலகம் எதிர்பார்ப்பது இதைப் போன்ற கவிதைகளைத் தான். இரண்டாயிரம் வருடத்திய தமிழ்க் கவிதையின் கிரீடத்திற்கு சேவியர் தன் பங்கிற்கு சில அழகியக் கவிதைகளைத் தந்துள்ளார். அதற்காக அவரை வாழ்த்துவோம்

நா. முத்துக்குமார்
சென்னை
22-12-2001

One thought on “நா.முத்துக்குமார் : அதிர்ச்சியும், நினைவலைகளும்

  1. DULEEP says:

    ஒரு கவிஞனை இழந்த வேதனை இன்னொரு கவிஞருக்கு மட்டுமல்ல என்று உணரும் போது அவர் விட்டுச் சென்ற எழுத்தின் ஆழம் தமிழுக்கு மட்டுமே தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *