பிழையற்ற பிழைகள்

 

M_Id_425068_Indian_Railways

இன்னும் கொஞ்ச நேரத்தில் இரயில் வண்டி சென்னையை அடைந்து விடும். நீண்ட நாட்களுக்குப் பின்பு சென்னை வருகிறேன். அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை வராமலேயே ஊருக்குப் போயிருந்தேன். சென்னை இரயில்வே நிலையத்தில் மாமாவும் குடும்பமும் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை வரலேண்ணா மாம்பலத்துல இறங்கி ஆட்டோ பிடிக்க வேண்டியது தான். ஆட்டோ சார்ஜ் இப்போ எவ்வளவோ ?

பதினான்கு மணி நேரப் பயணம் என்பது மிகவும் சலிப்பான பயணம் தான். இரயிலில் என்பதால் கொஞ்சம் தூங்கவாவது முடிகிறது. பஸ் என்றால் அவ்வளவு தான் குலுக்கும் குலுக்கலில் முதுகெலும்புகளிடையே விரிசல் விழுந்திருக்கும். மூன்று நாட்கள் உடல் வலியோடு கிடந்திருக்க வேண்டியது தான்.

என்னதான் ஆனாலும் அமெரிக்காவில் இருந்த சுக வாழ்க்கை இங்கே இருக்காது. எங்கே போகவேண்டுமானாலும் வழுக்கிக் கொண்டோடும் சாலைகள்¢ல் காரை துரத்தலாம். அதிக தூரமென்றால் விமானப் பயணம் செய்யலாம். இந்த மாதிரி எமதர்மப் பயணங்கள் தேவையில்லை அங்கே.

மணி காலை 7 ஐத் தாண்டியிருந்தது. எழும்பி முகம் கழுவலாம் என்று பாத்ரூம் பக்கமாய் எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்…. உள்ளே போய் முகம் கழுவினால் அழுக்கு அதிகமாவதற்குத் தான் வாய்ப்புகள் அதிகம். எதற்கு வம்பென்று பாட்டிலிலிருந்து தண்ணீரை கையில் கொட்டி முகத்தில் தெளித்து வெள்ளைக் கைக்குட்டையால் துடைத்தேன். துடைத்து முடித்தபோது கைக்குட்டை கருப்பு நிறமாகி இருந்தது.

அந்தக் காலை வேளையிலேயே இரயில் பரபரப்பாகி விற்பனைப் பொருட்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. உழைப்பவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில பொருட்களை வாங்கி பையில் திணித்தேன். அக்கா பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

பின் இருக்கையில் ஒரு நபர் சில புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார் நேற்று இரவு படித்துக் கொண்டிருந்தவையாக இருக்க வேண்டும். கவிதைப் புத்தகம் ஏதேனும் இருக்குமோ என்னும் ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்… இதுவரை அப்படி ஒரு சக பயணி கிடைக்கவேயில்லை. ஜெப்ரி ஆர்சர்களும், சிட்னி ஷெல்டன்களும், இந்தியா டுடேயும், தினத்தந்தியும் தான்.

இரயில் தாம்பரத்தைத் தாண்டியதும் நான் இருக்கையிலிருந்து எழுந்து இருந்த சின்ன கைப்பெட்டியைத் துடைத்து தண்ணீர் பாட்டிலையும், இரவில் படித்துக் கொண்டிருந்த கவிதை புத்தகத்தையும் பெட்டிக்குள் போட்டேன். மாம்பலத்தில் இறங்க வேண்டும். தோள் பையைத் தோளில் மாட்டி கைப்பையை எடுத்துக் கொண்டு கதவருகே வந்து காத்திருந்தேன். கருப்பு அழுக்குக்கு இடையே மஞ்சள் பலகை மாம்பலம் என்று காட்டிய ஸ்டேசனில் இறங்கிய போது தான் அவர் வந்தார்.

‘ஐயா பெட்டியக் குடுங்க நான் எடுத்து வரேன்.’
என்னிடம் இருந்ததே கனமில்லாத இரண்டே இரண்டு பொருட்கள் தான். ஒரு தோள்பை ஒரு கைப்பை. இதற்கு இன்னொருவர் கண்டிப்பாக தேவையில்லை என்பதால் மறுத்தேன்.
‘வேண்டாங்க நானே தூக்கிக்கறேன்.’

அந்த நபருக்கு அறுபது வயதிருக்கக் கூடும். இன்னும் இரயில்வே நிலையத்தில் எப்படி அவரால் பெட்டி தூக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.
சார்….
பின்னாலிருந்து மீண்டும் அவர் குரல்.
அதான் வேணாம்ன்னு சொன்னேனே ….
‘அப்படி சொல்லாதீங்க சார்…. நீங்க ஏதாச்சும் குடுத்தீங்கன்னா போதும்…’
‘இல்லீங்க… கனமான பொருள் ஏதும் என்கிட்டே இல்லை. வெளியே எப்படியும் ரிலேட்டிவ்ஸ் காத்திருப்பாங்க. அதுவரைக்கும் தானே நானே கொண்டு போயிடறேன்.’ சொல்லிக் கொண்டே கிளம்பினேன்.

இரண்டு வினாடி தாமதித்தவர் பின்னாலேயே வந்தார்…
‘சார்…. உங்களால தூக்க முடியாதுண்ணு நான் சொல்லலை சார்… காலைல இருந்தே காத்திருக்கேன். எந்த லக்கேஜும் கிடைக்கல. இது கடைசி வண்டி சார். இந்த வண்டி போச்சுண்ணா இன்னிக்கு அவ்ளோ தான் சார்… கனமான பொட்டி தூக்கவும் முடியறதில்லை இப்போ எல்லாம்… வயித்துப் பொழப்பு சார்… ஏதாச்சுக் குடுங்க’

அதற்கு மேல் என்னால் மறுக்க முடியவில்லை. கைப்பையை அவரிடம் கொடுத்து விட்டு நடந்தேன். அவர் தோள் பையையும் வலுக்கட்டாயமாய் வாங்கி கைப்பையின் மேல் வைத்து அதை தலையில் வைத்துக் கொண்டு நடக்கத் துவங்கினார்.

‘எத்தனை ரூபாய் வாங்குவீங்க ஒரு பொட்டி தூக்கறதுக்கு’ ? நான் கேட்டேன்.
‘ இருபது ரூபா வாங்குவாங்க சார்… நான் சின்ன பொட்டி தானே தூக்கறேன்… ரொம்ப கம்மியா தான் தருவாங்க’ என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

கொஞ்ச தூரம் நடந்தவுடனேயே மாமா காத்திருப்பது தெரிந்தது. அவர் என்னையும் கூடவே வரும் நபரையும் தலையிலிருந்த தம்மாத்தூண்டு பெட்டியையும் பார்த்தார். தூ… இதைக்கூட தூக்க முடியாதா உன்னால் ? என்பது போன்ற ஒரு பார்வை. நான் அதைத் தவிர்த்தேன்.

மாமாவை நெருங்கியதும், முதியவரின் தலையிலிருது பெட்டியை வாங்கிக் கொண்டு பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாயை அந்த முதியவருக்குக் கொடுத்தேன். அவர் முகத்தில் ஆச்சரியமும் ஏராளமாய் சந்தோசமும் தெரிந்தது. அந்த மலர்ச்சி மனசுக்குள் இருந்த களைப்பை எல்லாம் மாற்றி விட்டது போல் தோன்றியது.

மீண்டும் தோள்பையை எடுத்து தோளில் மாட்டி பெட்டியை கையில் தூக்கியதும் பக்கத்தில் திரும்பி அத்தையிடம் மாமா கிசுகிசுத்தார். இதைத் தூக்கிட்டு வரதுக்கு இருபது ரூபா கொடுக்கிறான். பாரின் போயிட்டு வந்தான் இல்லே… கொழுப்பு இருக்கத் தான் செய்யும்.

எனக்கு கோபம் வரவில்லை… இன்னும் அந்த முதியவரின் மகிழ்வு கலந்த சிரிப்பே நிறைந்திருந்தது மனசெங்கும்.

0

சேவியர்

2 thoughts on “பிழையற்ற பிழைகள்

    1. writerxavier writerxavier says:

      Thank you Sis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *