வழியனுப்பல்

individual-interview-full

 

அடுத்தவாரம் அமெரிக்கா செல்லவேண்டும். புராஜக்ட் மேனேஜர் அவசர அவசரமாய் அழைத்துச் சொன்னபோது விஜயால் நம்ப முடியவில்லை. ஏறக்குறைய இல்லை என்றாகியிருந்த வாய்ப்பு அது, திடீரென மீண்டும் உயிர்கொண்டு எழுந்திருக்கிறது.

நான்கு மாதங்களுக்கு முன்பே அமெரிக்கன் கவுன்சிலேட்டில் காத்துக் கிடந்து விசா வாங்கியாகிவிட்டது. இதோ அதோ என்று புறப்படும் காலம் வந்ததும் புராஜக்ட் கேன்சலாகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். அதன் பின் வாய்ப்பு வரும் வருமென்று காத்திருந்து கடைசியில் இனிமேல் இப்போதைக்கு அமெரிக்காவைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு இல்லை என்று முடிவு செய்திருக்கும் வேளையில் வந்திருக்கிறது இந்த அவசர அழைப்பு.

தாங்க்யூ சார். ஐயாம் ரெடி.

குட். இன்னிக்கு பதினோரு மணிக்கு என்னை வந்து பாரு. உன்னோட வேலையைப் பத்தி விரிவா பேசவேண்டியிருக்கு. மானேஜர் சேஷாத்ரி சொல்லிவிட்டு விடைபெற விஜய்க்குள் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது.

திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் பார்த்துப் பார்த்து வியந்து நின்ற அமெரிக்காவை ஒரு முறையேனும் நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆசை கல்லூரி காலத்திலிருந்தே விஜய்க்குள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கணிணி மென்பொருள் எழுதும் பணிக்கு வந்தபின் அந்த வாய்ப்பு ரொம்பவே பிரகாசமடைந்தது. பணிக்குச் சேர்ந்து சில ஆண்டுகளுக்குள்ளேயே இப்படி ஒரு வாய்ப்பு. விஜய்க்கு இந்த உற்சாகச் செய்தியை உடனே அம்மா அப்பாவிடம் சொல்லவேண்டும் போல் இருந்தது. பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து பெருவிரலால் லாவகமாக எண்களை அழுத்தி அம்மாவை அழைத்தான்.

செய்தி கேட்ட அம்மா உற்சாகமானாள். பெயர் தெரிந்த அத்தனை தெய்வங்களுக்கும் பொத்தாம் பொதுவாக ஒரு நன்றி சொல்லிவிட்டு. கூடவே எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்று ஒரு பிரார்த்தனையையும் வைத்தாள்.

அப்பா ஆனந்தமடைந்தார். ஊரெல்லாம் தன்னுடைய பையன் அமெரிக்கா போகும் விஷயத்தைச் சொல்லவேண்டும் என்று உள்ளுக்குள் பரபரத்தார்.

மணி பதினொன்று. தனக்கே உரித்தான தன்னுடைய பிரத்யேக குரலில் பேச ஆரம்பித்தார் சேஷாத்ரி.

உனக்கு விசா எத்தனை நாளைக்கு இருக்கு ? ஐமீன் வேலிடிடி..

எனக்கு பத்து வருட மல்டிபிள் எண்ட்ரி பிஸினஸ் விசா இருக்கு சார். விஜய் சொன்னான்.

வெரி குடு. விஜய், நீ போகப்போறது யு.எஸ்.பி.எஸ் புராஜக்ட்டுக்காக. அது அமெரிக்க தபால் நிலையம் சார்ந்த ஒரு புராஜக்ட். நம்முடைய புராடக்ட் ஐ, அவங்க பயன்படுத்தப் போறாங்க. அதுக்காக நாம அவர்களுடைய தேவைக்குத் தக்கபடி சில மாற்றங்களை நம்ம புராடக்ல செய்ய வேண்டி இருக்கிறது. புதுசா சிலவற்றைச் சேர்க்கணும், இருக்கிறவற்றை அவர்களுக்குத் தக்கபடி கஸ்டமைஸ் பண்ணணும்.

மில்வாக்கி டெவலப்மெண்ட் செண்டர்ல அந்த வேலை ஏற்கனவே ஆரம்பமாகி நடந்துட்டிருக்கு. அஸ் எ டெஸ்டர் நீ அங்கே போய் டெஸ் பிளான் பிரிபேர் பண்ணணும். கஸ்டமர் கூட நீ அதிகமா பேசவேண்டியிருக்கும். நம்ம டெவலப்பர்ஸ் மற்றும் கஸ்டமர்ஸ் இவங்க இரண்டு பேரோட தகவல்களை வெச்சு ஒரு அருமையான டெஸ்ட் பிளான் பிரிபேர் பண்ணணும். லெஸ் டைம், மோர் எஃபக்டிவ். அதுதான் எனக்குத் தேவை. உன்னோட திறமைக்கும், உன்னோட ஆங்கில அறிவுக்கும் நான் கொடுக்கிற வாய்ப்பு இது.

உன்னை விட எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் உள்ள ஆட்கள் டீம்ல இருந்தாலும் நான் உன்னை தேர்ந்தெடுத்திருப்பதற்கு உன்மேல நான் வெச்சிருக்கிற நம்பிக்கை தான் காரணம். அதை நீ காப்பாத்தணும். சேஷாத்ரி சொல்லிவிட்டு விஜயைப் பார்த்தார்.

விஜய்க்கு அமெரிக்கா போகும் ஆர்வமே அதிகமாய் இருந்து. வேலையை எப்படியாவது முடித்துவிடலாம் என்று மனம் அவனுக்கு உத்தரவாதம் கொடுத்தது.

‘எவ்வளவு நாள் சார் அசைன்மண்ட் ? ‘ விஜய் கேட்டான்.

நான் இப்போதைக்கு உனக்கு டெட்லைன் எதுவும் தரலை. என்னோட கணிப்புப் படி ஒரு மாசம் ஆகும். ஆனா அதைவிட அதிகமானாலும் பரவாயில்லை. பிளான் அருமையா இருக்கணும் அது தான் முக்கியம். சேஷ் சொன்னார்.

‘கண்டிப்பா நல்லா பண்ணுவேன் சார்’. விஜய் சொன்னான். ஒரு மாதம் மட்டும் தானா என்னும் ஒரு ஏமாற்ற உணர்வு அவனுக்குள் மெலிதாக முளைத்தது. ஆனாலும் அது அவனுடைய உற்சாகத்தை முழுவதுமாக தடுத்து விடவில்லை.

குட். அப்போ உனக்கு டிக்கெட்டை புக் பண்ண சொல்லிடறேன். நீ வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கி புறப்படத் தயாராகு. சேஷ் சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார்.

சேஷ் இருக்கையில் சாய்ந்து உட்கார்கிறார் என்றால், பேசவேண்டியதெல்லாம் பேசியாகிவிட்டது இனிமேல் கிளம்பு, என்று சொல்லாமல் சொல்வதாக அர்த்தம். விஜய் குறிப்பறிந்து கிளம்பினான்.

அடுத்தவாரம் அமெரிக்கா பயணம் என்னும் நினைப்பு அவனுக்குள் உற்சாகத்தை நிறைத்துக் கொண்டே இருந்தது. கொஞ்ச நாள் தான் ஆனாலும் கூட அந்த கனவு தேசத்தில் கால் வைக்கவேண்டும் என்று பரபரத்தான். முதலில் ஷாப்பிங் பண்ணவேண்டும். அதற்குச் சரியான ஆள் சரவணன் தான். மனதுக்குள் நினைத்துக் கொண்டே விஜய் தலையாட்டினான்.

சரவணன், இப்படியும் ஒரு மனிதன் ஒல்லியாய் இருக்க முடியுமா என்று எல்லோரையும் ஆச்சரியப் படவைக்கும் தேகம். மொத்தமாய் முப்பது கிலோ இருப்பானா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்படிப் பட்ட ஒரு தேகத்தை வைத்துக் கொண்டு எப்படி பயங்கர சுறுசுறுப்பாய் இருக்கிறான் என்பது பிரம்ம ரகசியம்.

விஜய் அமெரிக்கா செல்லும் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் வலது கையிலிருந்த வில்ஸ் ஐ இடதுகைக்கு மாற்றிக் கொண்டு கை குலுக்கினான்.

கிரேட் நியூஸ் மேன். எப்போ ? எங்கே ?

அடுத்த வாரமாம். ஒருமாச டிரிப் தான். அமெரிக்கா, மில்வாக்கி. என்னென்ன வாங்கணும் எங்கே வாங்கணும்ன்னெல்லாம் ஒரு ஐடியாவும் இல்லை. அதனால தான் உன்னைத் தேடி வந்தேன். நீதான் அமெரிக்கா போறவங்களுக்கெல்லாம் ஐடியா வழங்கற ஐயா வாச்சே. விஜய் சிரித்தான்.

நோ பிராப்ளம். வா அப்படி ஓரமா போய் பேசுவோம். சரவணன் விஜய்யை அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங் பக்கமாகப் போனான்.

மச்சி, ஒருமாச டிரிப் க்கு அதிகமா எதுவும் வாங்க வேண்டியது இல்லை. முதல்ல போய் ஒரு ஐஞ்சு செட் டிரஸ் எடுக்கலாம். ஒரு ஃபார்மல் ஷூ வாங்கிடு, ஒரு காஷுயல் ஷூ வாங்கிடு. அப்புறம் வேணும்னா ஒரு சிலிப்பர் வாங்கிக்கோ வீட்டுக்குள்ளே பயன்படுத்திக்கலாம்.

நல்லவேளை நீ சம்மர்ல போறே. இல்லேன்னா கண்டிப்பா விண்டர் குளோத்திங்ஸ் வாங்கணும். அது லெதர் ஜாக்கெட், வுல்லன் டிரஸ், கிளவுஸ், சாக்ஸ் , தொப்பி ந்னு நிறைய காசு செலவாகும். சம்மர் ஆனதனால எதுவும் தேவையில்லை.

கொஞ்சம் அரிசி, சமையல் பொடி எல்லாம் எடுத்துக்கோ. ஹோட்டல்ல தங்கினா கூட சமைக்கிற வசதி இருக்கும். அதனால் கொஞ்சம் புளியோதரை மிக்ஸ், மோர்க்குழம்பு பொடி, பருப்பு பொடி இப்படி கொஞ்சம் பொடிகளை வாங்கிக்கோ.

சோப், சீப்பு, கிரீம் இதெல்லாம் எடுத்துக்கோ. முக்கியமா கொஞ்சம் மெடிசின்ஸ் வாங்கி வெச்சுக்கோ. தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், வாந்தி, பேதி இப்படி சில முக்கியமான ஐட்டம்ஸ் வாங்கிக்கோ. ரொம்ப யூஸாகும். அங்கே போய் தலைவலி வந்தாகூட கடைல மருந்து தரமாட்டாங்க. மருந்து கேட்டா டாக்டரோட பிரிஸ்கிரிப்சன் கேப்பாங்க, பிரிஸ்கிரிப்சன் வேணும்ன்னா டாக்டரை பாக்கணும், டாக்டரைப் பாக்கணும்ன்னா அப்பாயிண்ட்மெண்ட் வேணும், டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறதுக்குள்ள நீ இந்தியா வர டைம் வந்துடும். சோ, மருந்து கண்டிப்பா வாங்கிக்கோ. சரவணன் சொல்லிக் கொண்டே கையிலிருந்த வில்ஸின்
நீளத்தைக் குறைத்துக் கொண்டிருந்தான்.

மச்சி. என்னென்னவோ சொன்னே. எதுவும் மண்டைல ஏறவே இல்லை. விஜய் சிரித்தான்.

கவலைப்படாதேடா. என்கிட்டே ஒரு டாக்குமெண்ட் இருக்கு. அதுல என்னென்ன எடுத்திட்டு போகணும்ன்னு டீட்டெயிலா வெச்சிருக்கேன். அதை மெயில்ல அனுப்பறேன் உனக்கு. பார்த்துக்கோ. சரவணன் சொல்லி முடித்ததும் விஜயின் கையிலிருந்த செல்போன் கிணுகிணுத்தது.

விஜயின் தம்பியின் பெயரை செல்போன் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
‘என்னடா தம்பி…’ விஜய் கேட்டான்.

‘ஒரு குட் நியூஸ் இருக்கு அண்ணா’ விக்னேஷ், விஜயின் தம்பியின் குரல் ஆனந்தத்தில் குளித்திருந்தது.

‘ஏய்.. என்ன குட் நியூஸ். என் கிட்டே கூட ஒரு குட் நியூஸ் இருக்கு’ விஜய் சொன்னான்.

‘சரிண்ணா.. அப்போ உன்னோட குட் நியூஸை நீ முதல்ல சொல்லு. என்னோட நியூஸை நான் அப்புறமா சொல்றேன்’

‘இல்லே..இல்லே.. நீயே சொல்லு முதல்ல’ விஜய் சொல்ல விக்னேஷ் சொன்னான்.

‘எனக்கு பெங்களூர்ல ஒரு கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. ஒருவருஷமா வேலை தேடி அலைஞ்சதுக்கு ஒரு முடிவு. ‘ விக்னேஷ் சொல்ல விஜய் உற்சாகமானான்.

‘சூப்பர்டா.. என்னோட மேட்டர் தெரியுமா ? நான் அமெரிக்கா போகப் போறேன்’

‘வாவ். எப்போண்ணா ?’

‘அடுத்த வாரம்… எல்லாத்தையும் சாயங்காலம் வீட்டுக்கு வந்து விவரமா சொல்றேன்.’ சொல்லிவிட்டு விஜய் செல்போனை நிறுத்தினான்.

அதன் பின் எல்லாம் பரபரப்பாய் நிகழ்ந்தேறின. சரவணனும் விஜயும் சென்னையை புரட்டிப் போட்டு ஷாப்பிங் முடித்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சித் தகவலைப் பரிமாறி நாட்கள் விரைந்தோடின. ஓடியது. விஜய் அமெரிக்கா செல்லவேண்டிய நாளும் வந்தது.

ஊரிலிருந்து விஜயின் பெற்றோர் வந்திருந்தார்கள். விஜயின் தம்பியும் வந்திருந்தான். வீடு அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

செக்கின் பேகேஜ் வெயிட் பாத்தாச்சா ? காபின் பேகேஜில கத்தி, நெயில்கட்டர் ஏதும் இல்லையே ?

பாஸ்பேர்ட், டாக்குமெண்ட்ஸ், டிக்கெட் எல்லாம் ஹாண்ட் பேக்ல வெச்சுக்கோ.

சரி. டையமாச்சு. இண்டர்நேஷனல் டெர்மினல்ஸ் ல மூணு மணி நேரத்துக்கு முன்னாடி போனா தான் டைம் சரியா இருக்கும். கிளம்புவோம்.

பரபரப்புகளுக்கிடையே எல்லோரும் ஒரு கால்டாக்சி பிடித்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள். விமான நிலையத்தில் வழியனுப்பல் படலம். சொன்ன அறிவுரைகளையே எல்லோரும் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி விஜயை வழியனுப்பி வைத்தார்கள். விஜய் டிராலியைத் தள்ளிக் கொண்டே நீளமான வராண்டாவில் நடந்து விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்று விட்டு, மனசுக்குள் பிரார்த்தனையும், சந்தோசமுமாக திரும்பிய பெற்றோரிடம் விக்னேஷ் சொன்னான்.

‘அம்மா, நாளை மறு நாள் எனக்கு பெங்களூர் ஆபீஸ்ல ஜாயின் பண்ணணும். நாம் இங்கேயிருந்து நாளைக்கே பெங்களூர் போயிடலாம். அங்கே இரண்டு நாள் என்கூட தங்குங்க. அப்புறம் உங்களை நான் பஸ் ஏத்தி வுட்டுடறேன்.’

‘இல்லேடா.. நீ பஸ் புடிச்சு போயிடு. நாங்க இப்போ பெங்களூர் வரலை. நாஙக நாளைக்கே நாகர்கோயில் போயிடறோம். இங்கே இருக்கிற பெங்களூர்ல போறதுக்கு நாங்க எதுக்கு ? ‘ அப்பா சொன்னார்.

விக்னேஷ் திரும்பி ஏர்போர்ட்டைப் பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *