மன்னிப்பு

Torn piece of paper with the word "Forgive" in the woman's palms.

சிலுவையின் சிரத்தில்
விரித்த கரத்தில்
குருதி குளிப்பாட்டிய
ஆணிகளுடன் வடிந்தன
மன்னிப்பின் வார்த்தைகள்.

பாவங்களின் படிக்கட்டுகளில்
நிரந்தரப் பாய் விரித்து
படுத்துக் கிடந்தவர்களிடமும்
இயேசுவின் மனம்
மன்னிப்பு வினியோகம் செய்தது.

சினத்தை
சுருக்குப் பையில் சொருகி,
மன்னிப்பை
மறுகன்னத்திலும் ஏந்தி
நடக்கச் சொன்னார்.

தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு
தண்டனையின் கோடரி வீச்சு
தற்காலிகத் தீர்வுகளையே
தந்து செல்லும் என்பதும்,

மாற்றங்களின்
மெழுகுவர்த்திகளை
மன்னிப்புகள் மட்டுமே
கொளுத்தும் என்பதும்.
புரியாதவரா பரமன்.

தண்டனையின் காயம்
இன்னொரு பிழைக்கு
முன்னுரை எழுதலாம்.
மன்னிப்பின் மடியிலோ
மரணம் கூட மகத்துவமானது.

பயத்தின் மூக்கணாங்கயிறுகளில்
மனக்காளைகள்
பாதி நேரம் மண்டியிட மறுக்கும்.
தப்பிக்கும் சுரங்கம் தோண்ட
மீதி நேரம் தப்புக்கள் செய்யும்.

மன்னிப்பு,
குற்ற உணர்வுகளை
வெற்றி கொள்ளும்.
மற்ற உணர்வுகளை
மாற்றியே வைக்கும்.

தண்டனை
அணைகளைக் கட்டும் முயற்சி.
மன்னிப்போ
வாய்க்கால் வெட்டும் முயற்சி.

தண்டனை,
உடல் சார்ந்த உபாதை,
மன்னிப்போ
மனம் சார்ந்த பாதை.

தண்டனை,
ஒற்றை முகத்தோடு
உலகம் பார்க்கும்.
மன்னிப்போ,
இன்னோர் முகத்தோடு
இதயம் பார்க்கும்.

தண்டனை,
உலகம் பேச
உள்ளத்தை ஊமையாக்கி வைக்கும்.
மன்னிப்போ
மனசை மனசோடு
மதிப்பீட்டு மாநாடு நடத்த வைக்கும்.

தண்டனை,
உயிருக்குள்
கூர்க் கத்திகள் கோத்து வைக்கும்.
மன்னிப்போ
உணர்வுகளின்
துருக் கறைகளை துலக்கி வைக்கும்.

தண்டனை
அழுத்தமாய் எழுதமுயலும்
சுதந்திரம்.
மன்னிப்பு
சுதந்திரமாய் எழுதும் அழுத்தம்.

மன்னியுங்கள்.
மன்னிக்கப்படுவீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *