பாசம்

seaside-371229_640

‘மகேஷ் இன்னும் வரலையா ? அவன் வராம பொணத்தைத் தூக்கலாமா ?’ கூட்டத்தில் யாரோ கேட்டார்கள். அழுது அழுது சிவந்துபோன கண்களுடன் நித்தியானந்தத்தின் குடும்பமே அவருடைய பிணத்தைச் சுற்றி உறைந்து போய் உட்கார்ந்திருந்தது. அவருடைய மூத்த மகன் மகேஷ் மட்டும் இன்னும் வரவில்லை.

சென்னையில் ஒரு நல்ல கம்பெனியில் கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தான் மகேஷ். அவனுக்கு எல்லாமே அவனுடைய அப்பா என்றுதான் இருந்தது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை.

‘தகவல் சொல்லிட்டீங்களா ?’

‘காலையிலேயே சொல்லிட்டோம். ஆனா அவனுக்கு ஏதோ அவசரவேலை இருக்கிறதா சொன்னான்’

‘அப்பனோட மரணத்தை விட முக்கியமான வேலை அவனுக்கு இருக்குதோ ?’

‘பணம் நிறைய சேந்தாலே இப்படித்தான். மக்களுக்குப் பாசம் காணாம போய்டும். அது போதாதுன்னு அவனுக்கு வாய்ச்ச பொண்ணும் அப்படித்தான். மாமனார் குடும்பம்னாலே அவளுக்கு ஆகாது’

‘சரி.. இப்போ என்ன செய்யலாம் ? மறுபடி பேசிப்பார்க்கலாமா ?’

‘எதுக்கு ? ஒருதடவைக்கு நாலுதடவை பேசியாச்சு. இனிமே ஆகவேண்டியதைக் கவனிப்போம். எத்தனை நேரம் தான் பொணத்தை இங்கே வெச்சுக்கிறது ? இனிமே அவன் கிளம்பினாலும் வந்து சேரதுக்கு நடுராத்திரி ஆயிடும். அதுவரைக்கும் இவங்க எல்லாம் அழுதுட்டே கிடக்கணுமா ?’ உறவினர்கள் பேசிக் கொண்டார்கள்

‘அதுதான் சரி. அவரோட மத்த பிள்ளைங்க எல்லாம் இருக்காங்க இல்லையா ? அவங்களை வெச்சு காரியத்தை முடிச்சிடுவோம். இனிமேலும் காத்திருக்கிறது நல்லதில்லை’

கூட்டத்தினர் கூடிப் பேசி முடிவெடுத்து நித்தியானந்தத்தின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். நித்தியானந்தத்தின் மனைவி தளர்ந்துபோய் கண்ணீருடன் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மகேஷ் வராமலேயே எல்லாம் முடிந்துபோயிற்று.

சென்னையில் விடுப்பு எடுத்துக் கொண்டு தன்னுடைய அறையில் அப்பாவின் படத்துக்கு முன்னால் மகேஷ் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தான்.

‘ஏங்க.. எத்தனையோ தடவை சொன்னேன். நடந்தது நடந்து போச்சு. போய் அப்பாவை ஒருதடவை கடைசியாப் பார்த்திருக்கலாமே ?’ மகேஷின் மனைவி வித்யா விசும்பலுடன் கேட்டாள்.

‘இல்லை வித்யா. எப்பவுமே நான் அப்பாவைப் பாக்க போகும்போ அவரு சிரிச்சுகிட்டே வரவேற்பாரு. நான்னா அவருக்குக் கொள்ளை பாசம். நான் திரும்பி சென்னை வரும்போதெல்லாம் அவரோட கண்ணு நிறையும். கையைப் பிடிச்சு முத்தம் தந்து தான் அனுப்பி வைப்பார்.’ மகேஷ் அழுதான்.

‘ஆனா.. இப்போ போய் பார்த்தா, அப்பாவோட சலனமில்லாத முகம் தான் தெரியும். அப்பாவை ஒரு மரப்பெட்டியில வெச்சிருக்கிறதைக் காண என்னால முடியாது. அப்புறம் எப்பவுமே எனக்கு அந்த முகம் தான் நினைவில வரும். வேண்டாம். இப்போ அப்பா சிரிச்சிட்டே இருக்கிற முகம் தான் மனசுல இருக்கு, அதை நான் அழிக்க விரும்பல. அதனால தான் போகலை’ மகேஷ் அழுகையை நிறுத்த முடியாமல் விழும்பினான்.

வித்யா மகேஷின் குரலில் இருந்த வேதனையைத் தாங்க முடியாதவளாய் உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
‘இப்போ என்ன பண்ண போறீங்க ?’

‘நாளைக்கு விடிற்காலைல நான் வீட்டுக்கு போறேன். எனக்கு அம்மாவை சமாதானப் படுத்தணும்.’ மகேஷ் கண்ணீரைத் துடைக்கவும் மனமில்லாமல் அப்பா சிரித்துக் கொண்டிருந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *