108. கனானியப் பெண்

christ_canaanite_woman

 

தீர், சீதோன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒரு கனானியப் பெண் வசித்து வந்தார். அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். கனானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் பணிவாழ்வோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது.

அந்த கனானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது மன்னனின் வழிமரபினர் என்பதும், அவரே மீட்பர் என்பதும் எல்லாமே தெரிந்திருந்தது. அவளுடைய மகளை பேய்பிடித்திருந்தது. இயேசுவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என அவள் நம்பினாள்.

ஒரு நாள் இயேசு அந்த நாடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவள் அவரை எதிர்கொண்டு ஓடினார்.

“ஐயா, தாவீதின் மகனே… எனக்கு இரங்கும். என் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது” அவள் கத்திக் கொண்டே அவரது பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.

இயேசு அவளுடைய விசுவாசத்தைக் கொஞ்சம் சோதிக்க விரும்பினார். எனவே அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அது சீடர்களுக்கே பொறுக்கவில்லை.

“இந்தப் பெண் ரொம்ப நேரமா நமக்குப் பின்னாடியே கத்திக் கொண்டு வருகிறாள். ரெண்டுல ஒண்ணு சொல்லி அனுப்பிடுங்க” சீடர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களிடம் சொன்னார், “இஸ்ரயேல் மக்களிடையே வழி தவறிப் போன மக்களை மீட்பதே என் பணி” என்றார்.

அந்தப் பெண் விடவில்லை இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டாள்.

“ஐயா, எனக்கு உதவியருளும்”

இயேசு அவளை சோதிப்பதை நிறுத்தவில்லை.

“பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல. முதலில் பிள்ளைகள் சாப்பிடட்டும்”. என்றார்.

பிள்ளைகள் என இஸ்ரயேல் மக்களையும், நாய்க் குட்டிகள் என பிற இன மக்களையும் இயேசு குறிப்பிட்டார்.

அந்த கனானியப் பெண்ணோ இயேசு வைத்த தேர்வில் முழு வெற்றி பெற்றார்.

“ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே”

அவளுடைய விசுவாசத்தைக் கண்ட இயேசு வியந்தார்.

“அம்மா.. உன் விசுவாசம் பெரிது..நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்றார்.

அந்த வினாடியே அவள் மகளை விட்டு பேய் ஓடியது. இயேசுவின் வார்த்தைக்கு முன்னால் நிற்க பேய்களால் முடிவதில்லை.

ஒரு பிற இன பெண்ணின் விசுவாசம், இஸ்ரயேல் மக்களின் விசுவாசத்தை விடப் பெரியது என விளக்குவதற்காக இயேசு இதைச்  சொன்னார்.

உண்மையில் இயேசு அந்த ஒரே ஒரு பெண்ணின் மகளைக் காப்பாற்றவே ஐம்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து தீர் சீதோன் பகுதிக்குச் சென்றார். அந்தப் பெண் தனது மகளை விட்டு விட்டு இஸ்ரயேல் பகுதிக்கு வர முடியாத சூழலில் இருந்தார். எனவே இயேசுவே அந்தப் பகுதிக்குச் சென்றார். பணி முடிந்ததும் மீண்டும் கலிலேயாவுக்குத் திரும்பினார்.

கனானியப் பெண் இயேசுவைக் கண்டதும், இனிமேல் வேறு வழியே இல்லை. இயேசுவிடம் முழுமையாய் சரணடைந்தே தீருவது என முடிவெடுத்தாள். அதற்காக ஒரு நாயைப் போல தன்னை தாழ்த்திக் கொள்ளவும் அவள் இம்மியளவும் தயங்கவில்லை. இயேசு அவளுடைய விசுவாசத்தை அங்கீகரிக்கிறார்.

இன்று நாம் நாய்களின் இடத்திலல்ல, அவருடைய பிள்ளைகள் எனும் இடத்தில் இருக்கிறோம். பிற இனத்தவரான நமக்கும் இயேசு தனது சிலுவைப் பலியின் மூலம் தமது பிள்ளைகளாகும் உரிமையை அளித்திருக்கிறார்.

கனானியப் பெண்ணின் விசுவாசம் நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.

  1. இயேசுவின் மீட்பும், ஆசீர்வாதங்களும் அனைவருக்குமானது. அதில் பேதங்கள் ஏதும் இல்லை.
  2. இயேசுவால் மட்டுமே மீட்பைத் தரமுடியும் எனும் அசைக்க முடியாத விசுவாசம் வேண்டும்.
  3. தன்னை தாழ்த்திக் கொள்ளத் தயங்காத மனநிலை நிச்சயம் தேவை. பணிவே பிரதானம்.
  4. விடாமல் தொடர்ந்து விண்ணப்பம் வைக்கும் மனநிலை வேண்டும்.
  5. இயேசுவின் தாமதம் என்பது நிராகரிப்பல்ல. நமக்கான சின்னச் சின்ன சோதனைகளே. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
  6. இயேசுவின் வார்த்தைகள் பேய்களை விரட்டும் வலிமை படைத்தவை. இன்று நம்மிடம் விவிலியம் எனும் இயேசுவின் வார்த்தைப் பெட்டகம் இருக்கிறது, அதைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
  7. இயேசுவோடு தொடர்ந்து நடந்தாலும் இதயத்தில் ஆழமான விசுவாசம் இல்லையேல் பயனில்லை. வேறு சூழலில் இருந்தாலும் இயேசுவே மெசியா என நம்புவோர் மீட்படைவர்.
  8. ஆழமான விசுவாசம் கொண்டவர்களை இயேசு பாராட்டுகிறார். எண்ணிக்கை அல்ல, தரமே முக்கியம். நூறு மைல் தூரம் நடந்து சென்று ஒரே ஒரு நபருக்கு நற்செய்தி சொல்வதும் இறைவனின் திட்டமே.
  9. நமது குழந்தைகளுக்காக நாம் இறைவனிடம் வேண்டினால் அவர் நிச்சயம் பதில் தருவார்.
  10. யாரையும் தரக்குறைவாகவோ இழிவாகவோ நடத்தக் கூடாது. எல்லோருமே இறைவனின் பிள்ளைகளே.

இந்த சிந்தனைகளை கனானியப் பெண்ணின் வாழ்க்கை நிகழ்விலிருந்து பெற்றுக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *