110. ஏழைக் கைம்பெண்

widows-mite-949912-gallery

 

இயேசு ஒரு நாள் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார்.

“மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் பிறரிடமிருந்து வணக்கமும், பெருமையும் பெற விரும்புகிறார்கள். எங்கும் அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கவும், முதன்மை இடங்கள் கிடைக்கவும் ஆசைப்படுகிறார்கள். கைம்பெண்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். ரொம்ப நேரம் செபம் செய்வது போல நடிக்கிறார்கள். அவர்களுக்கு தீர்ப்பு கடுமையாய் இருக்கும்” என்று நேரடியாக மறை நூல் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.

பின்னர் ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிரே அமர்ந்து அதில் காணிக்கை போடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் காசுகள் தான் இருந்தன. ரூபாய் நோட்டுகள் இல்லை. காசுகளை அள்ளிக் கொண்டு ஒரு உலோக காணிக்கைப் பெட்டியில் போடுவார்கள். போடுகின்ற காணிக்கைக் காசுகளின் அளவைப் பொறுத்தும், எண்ணிக்கையைப் பொறுத்தும் சத்தம் எழுப்பும். நிறைய சத்தம் வந்தால் நிறைய காணிக்கை போடுகிறார் என அர்த்தம். எல்லோரும் அவரை மரியாதையுடன் பார்ப்பார்கள். கொஞ்சம் சத்தம் வந்தால் மிகக் கொஞ்சமாகப் போடுகிறார் என அர்த்தம் அவரை இளக்காரமாகப் பார்ப்பார்கள். இது தான் வழக்கம்.

செல்வந்தர்கள் வந்தனர். பெரும் தொகையை அள்ளி அள்ளி காணிக்கைப் பெட்டியில் போட்டு விட்டு கர்வத்துடன் கடந்து சென்றனர்.

பின்னர் அங்கே ஒரு ஏழை விதவை வந்தார். அவரிடம் இருந்தது இரண்டே இரண்டு காசுகள். அதை அந்தக் காணிக்கைப் பெட்டியில் போட்டாள். டக் டக் என மெல்லிய இரண்டு சத்தங்கள் வந்தன.

இயேசு சீடர்களை அழைத்துச் சொன்னார்,

“இந்த காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட இந்தப் பெண் மிக அதிகமாகப் போட்டிருக்கிறார்”

எல்லோரும் குழம்பினர். செல்வர்கள் அதிகமாய்ப் போட்டதை பலரும் பார்த்திருந்தனர். ஏழைக் கைம்பெண்ணிடம் எதுவும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளைப் புரிந்து கொண்டு பேசினார், “மற்ற அனைவரும், தங்களுக்கு மிகுதியாய் இருந்த செல்வத்திலிருந்து பணத்தை அள்ளிப் போட்டார்கள். இவரோ தமது பிழைப்புக்குரிய அனைத்தையுமே போட்டு விட்டார்”

இயேசுவின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள். அதுவரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் உடைந்து போயிற்று. காணிக்கையிடுதல் பற்றிய அவர்களுடைய புரிதல் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது.

நமக்குப் பிடித்தமானதை வைத்துவிட்டு மற்றதைத் தருவதல்ல உண்மையான காணிக்கை. நமக்கு எது அதிக பிரியமாய் இருக்கிறதோ, அதை இறைவனுக்குத் தருவதே அழகான காணிக்கை.

உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ அங்கே தான் உங்கள் உள்ளமும் இருக்கும் என்கிறது பைபிள். செல்வத்தை இறைவனிடம் ஒப்படைத்து விட்டால், நமது உள்ளமும் இறைவனிடம் சென்று விடும். இறைவனுக்குரிய செயல்களில் ஈடுபடுவதே உண்மையான செல்வம் என்பதை உணர்ந்து, அதை சேமிக்க வேண்டும்.

பழைய ஏற்பாட்டில் வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை காணிக்கையாய் செலுத்துவது கட்டாயமாய் இருந்தது. புதிய ஏற்பாட்டில் சதவீதங்களெல்லாம் மாறிப் போயின, எல்லாமே இறைவனுடையது. அதை நாம் பயன்படுத்துகிறோம் எனும் மனநிலையே முக்கியம்.

மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் காணிக்கை இடவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.

ஏழைப்பெண்ணின் காணிக்கை நிகழ்வு நமக்கு பல சிந்தனைகளைத் தருகிறது.

  1. கொடுக்கும் காணிக்கையின் அளவை அல்ல, காணிக்கை கொடுக்கும் மனநிலையையே இயேசு பார்க்கிறார்.
  2. காணிக்கை கொடுப்பதையும், கொடுப்பவர்களையும் இயேசு கவனிக்கிறார்.
  3. சிறந்த காணிக்கை என்பது வசதியாய் இருக்கும் போது கொடுப்பதல்ல, வசதியே இல்லாமல் இருக்கும் போதும் கொடுப்பது.
  4. பத்தில் ஒரு பங்கு எனும் சட்டமெல்லாம் அந்த இரண்டு காசு விதவைக்குப் பொருந்தாது. எனினும் அவர் தனக்குரியதையெல்லாம் அன்போடு கொடுத்தார்.
  5. மனிதர் வெளிப்படையான செயல்களை நம்புவர். இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார் எனும் பைபிள் வசனத்தின் உதாரணமாய் இருக்கிறது.
  6. ஏழைப்பெண்ணின் காணிக்கை கடவுளின் மீதான அவளுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. இருந்ததையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து விட்டு, அடுத்த வேளை உணவுக்கு இறைவன் தருவார் எனும் அவளுடைய அசைக்க முடியாத விசுவாசம் வியப்பூட்டுகிறது.

7.நமக்குரியதெல்லாம் கடவுளுக்குரியது என விருப்பத்தோடு அளிப்பதை இயேசு விரும்புகிறார். தியாக உணர்வோடு இருப்பதையெல்லாம் கொடுப்பவர்களை இயேசு பாராட்டுகிறார்.

  1. “கைம்பெண்ணை ஏழையாகவே வைத்திருப்பவர்கள்,அவள் உடமைகளைப் பிடுங்கிக் கொண்டவர்கள்” அதிகமாக காணிக்கையிடுவது போலித்தனமானது.
  2. இந்த நிகழ்வு பணம் சார்ந்த நிகழ்வாக இருந்தாலும், நமது நேரம், உழைப்பு, திறமைகள், சிந்தனை அனைத்தையுமே இறைவனுக்கு முழுமையாய் அர்ப்பணிப்பதன் தேவையை இது மறைமுகமாய் விளக்குகிறது.
  3. இருப்பது ரொம்பக் கொஞ்சம் என்றோ, இதையெல்லாம் எப்படி கடவுளுக்குக் கொடுப்பதென்றோ தயங்காமல் கொடுக்க வேண்டும். மனமுவந்து கொடுப்பதையே இறைவன் விரும்புகிறார்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *