109. பத்து தொழுநோயாளர்

10-lepers-slide1

இயேசு எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். சமாரியா, கலிலேயா பகுதிகள் வழியாகச் சென்றபோது தொழுநோயாளியர் பத்து பேர் தூரத்தில் நின்று கொண்டு இயேசுவை நோக்கிக் கத்தினார்கள்.

“ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்”

தொழுநோயாளிகள் பாவிகள் என்பது அந்தக் கால நம்பிக்கை. அவர்கள் நகருக்குள் நுழைய முடியாது. நகரத்துக்கு வெளியே குகைகளில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்கள் வெளியே வந்தால் ஒரு மணிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டே தான் வர வேண்டும்.

வரும் போதே “தீட்டு..தீட்டு..விலகுங்கள்” என சத்தமிட்டுக் கொண்டே தான் வரவேண்டும். யாரையும் நெருங்கக் கூடாது. யாருடனும் சகவாசம் இருக்கக் கூடாது. யாரையும் தொட்டு விடவே கூடாது. சொந்த மனைவி, குழந்தைகள் என எல்லோருக்குமே அவர்கள் அன்னியர்கள் தான்.

உணர்வு ரீதியாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். நிராகரிப்புகளின் நிழலில் தான் படுத்திருந்தனர். உடல் வலி இன்னொரு பக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் உடல் உதிர்ந்து  விழுவதைப் பார்க்கும் துயரம். மரத்துப் போன கால்கள் துண்டானால் கூட அறிய முடியாத பரிதாபம்.

இந்த சூழ்நிலையில் உடல்நலம் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அதிசயத்தால் மட்டுமே அப்படி நடக்க முடியும். பழைய காலத்தில் அப்படி நடந்த வரலாறுகள் உண்டு. அப்படி ஏதேனும் ஒரு அதிசயம் நடக்காதா எனும் ஏக்கம் அவர்களுடைய மனதில். இயேசு நினைத்தால் நிச்சயம் சுகம் கிடைக்கும் எனும் நம்பிக்கையும் அவர்களிடம் உண்டு.

எனவே தான் தொலைவில் இருந்து கொண்டு அவர்கள் கத்தினார்கள், “ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்”.

இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார்.

ஒருவர் குணமானால் குணமான உடலைக் குருவிடம் காட்ட வேண்டும். சுகமாகிவிட்டோம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கென ஒரு காணிக்கை உண்டு, அதை செலுத்தவும் வேண்டும். அப்போது தான் அவர்களால் சமூகத்தில் நடமாட முடியும்.

“சுகமாக்குங்கள் ” என வேண்டினால், குருக்களிடம் காட்டச் சொல்கிறாரே என்று அவர்கள் தயங்கவில்லை. இயேசுவின் வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்கள் நடந்தார்கள்.

போகும் வழியிலேயே அவர்களுடைய தொழுநோய் நீங்கிவிட்டது. அவர்கள் பரவசமடைந்தார்கள்.

அதில் ஒருவன் தனது பரவசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உரத்த குரலில் ஆண்டவரைப் புகழத் துவங்கினான். இயேசுவை நோக்கி திரும்பி ஓடினான். இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன்னால் நிற்கவும் தோன்றாமல் முகம் குப்புற விழுந்தான்.

“இயேசுவே, நன்றி.. நன்றி” என உரத்த குரலில் கூறினான். அவன் ஒரு சமாரியன். யூதர்களுக்குப் பிடிக்காத இனத்தைச் சேர்ந்தவன். பிற இனத்தினன்.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். “எல்லாரும் சுகமடையவில்லையா ? மற்ற ஒன்பது பேரும் எங்கே ?” என்று கேட்டார்.

மற்ற ஒன்பது பேரும் குணமளித்த இறைவனுக்கு நன்றி சொல்லவும் தோன்றாமல் எங்கோ போய்விட்டிருந்தனர். ஒருவேளை அவர்கள் குருக்களைப் பார்க்க போயிருக்கலாம்.

இயேசு அவனைப் பார்த்து, “எழுந்து செல்லும். உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

திரும்பி வந்தவன், இயேசுவின் வல்லமையால் தான் சுகமானேன் என நம்பினான். அதற்கான புகழை முதலில் இறைவனுக்கு உரத்த குரலில் செலுத்தினான். பின்னர் இயேசுவின் பாதத்தில் விழுந்து நன்றி செலுத்தினான்.

இந்த நிகழ்வு நமக்கு எவற்றைக் கற்றுத் தருகிறது.

  1. இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் நாம் விலகி விடக் கூடாது.
  2. இறைவனைப் புகழ்வதில் தாமதமோ, தயக்கமோ கூடாது.
  3. இயேசுவின் வார்த்தைகளை நம்பினால் நலம் கிடைக்கும்.
  4. நலமளிப்பவர் இறைவனே அவரை நம்பி அவரிடம் விண்ணப்பம் வைப்பதே முதன்மையானது. நெருங்கமுடியாதபடி வாழ்க்கைச் சூழல் அமைந்தாலும் அவரையே வேண்ட வேண்டும்.
  5. கடவுளுக்கு நன்றி செலுத்து என இயேசு சொல்லவில்லை, ஆனால் அதை நம்மிடமிருந்து அவர் தானாகவே வரவேண்டும் என விரும்புகிறார்.
  6. தூய ஆவியானவர் இதயத்தில் இருந்தால் நம்மை இத்தகைய சூழல்களில் வழிநடத்துவார். எனவே தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக் கொள்தல் வேண்டும்.
  7. நோயிலிருந்து விடுதலை நம் உடலைப் பாதுகாக்கிறது. நன்றி செலுத்துகையில் இயேசு, “எழுந்து செல், நலமானீர்” எனும் போது நம் ஆன்மா சுகமடைகிறது. மீட்பு வருகிறது.
  8. நம்மை இறைவன் விடுவித்தால், பின்னர் இறைவன் பாதத்தை பணிந்து அவர் விரும்பும் வழியில் நடப்பதே தேவையானது.
  9. இயேசுவின் இந்த சுகமளித்தல் அவர் இறைமகன் என்பதை மீண்டும் உணர்த்துகிறது.
  10. தொழுநோய் நீங்குவது, நாம் பாவத்திலிருந்து மீள்வதற்கு ஒப்பானது. “எழுந்திரும்” என்று இயேசு சொல்வது மீண்டும் பாவத்தில் விழாமல் சரியான வாழ்க்கை வாழ்வதற்கான அழைப்பாகும்.

இந்த சிந்தனைகளை பத்து தொழுநோயாளர் நிகழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *