107. நூற்றுவர் தலைவர்

images

 

இயேசு கப்பர்நகூம் எனும் இடத்திற்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் வந்தார். நூற்றுவர் தலைவர் நூறு படை வீரர்களின் தளபதி. அவர் ஒரு ரோமப் படை வீரர். படைத்தளபதி இயேசுவிடம் சொன்னார்.

“ஐயா, என் ஊழியன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்”

“நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” இயேசு பதில் சொன்னார்.

உடனே நூற்றுவர் தலைவர் பதட்டப்பட்டார்.

“ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் ஊழியன் நலமடைவான்” நூற்றுவர் தலைவர் சொல்ல இயேசு அவனைப் பார்த்தார். அவன் தொடர்ந்தான்

“நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” சொல்லி விட்டு நூற்றுவர் தலைவர் நிறுத்தினார்.

இயேசு வியந்து போய் அவனைப் பார்த்தார். பின் சுற்றியிருந்த மக்களைப் பார்த்தார். எல்லோரும் இயேசுவைப் பின்பற்றி வருபவர்கள். அவருடைய போதனைகளையும், புதுமைகளையும் கண்டு பின்தொடர்பவர்கள். அவர்களைப் பார்த்துச் சொன்னார்.

“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.”

இஸ்ரயேல் மக்களிடையே வந்த இயேசு, பிற இனத்தைச் சேர்ந்த ஒருவருடைய விசுவாசத்தை, நம்பிக்கையைக் கண்டு வியந்து போய் பேசினார்.

“கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். ” என்ற இயேசு, நூற்றுவர் தலைவனிடம்,

“நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்த வினாடியிலேயே நூற்றுவர் தலைவரின் மகன் நலமடைந்தான்.

பைபிளில் வரும் இந்த நிகழ்வு, ஒரு பிற இன மனிதர் இயேசுவின் மீது கொண்ட ஆழமான விசுவாசத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

 

நூற்றுவர் தலைவனுக்கு அதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருந்தது. காரணம் அவன் ஒரு கட்டளை கொடுத்தால் அவனுக்குக் கீழே இருக்கின்ற படைவீரன் அதைச் செய்வான்.

போ என்றால் உடனே போவான். இதைச் செய் என்றால் செய்வான். காரணம், அவன் இவனுடைய தலைமைக்குக் கட்டுப்பட்டவன்.

அதுபோல நோய்களெல்லாம் இயேசுவுக்குக் கட்டுப்பட்டவை. அவை இயேசுவின் ஒற்றை வார்த்தைக்குக் கீழ்ப்படியும் எனும் அசைக்க முடியாத விசுவாசம் அவனுக்கு இருந்தது.

வார்த்தைகளால் உலகைப் படைத்த இறைவன், வார்த்தையின் மனித வடிவமான இறைவன், ஒரு வார்த்தை சொன்னால் எதுவும் நடக்கும் என நம்புவது விசுவாசத்தின் அழகான வெளிப்பாடு.

இயேசு அவனை மனமாரப் பாராட்டுகிறார். யாரிடமும் இல்லாத விசுவாசம் அவனிடம் இருக்கிறது என வெளிப்படையாகப் பாராட்டுகிறார். அதன் மூலம் மற்றவர்களுடைய விசுவாசக் குறைவையும் இயேசு சுட்டிக் காட்டுகிறார்.

கூடவே, மீட்பு என்பது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமானதல்ல, கிழக்கிலும் மேற்கிலும் எல்லா தேசங்களிலுமிருந்து மக்கள் விண்ணரசில் நுழைவார்கள் என தனது மீட்பின் திட்டத்தையும் முன்மொழிகிறார். இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் அது சர்வதேச மீட்பின் அனுமதியாக மாறியது.

நூற்றுவர் தலைவனின் வாழ்க்கை சில படிப்பினைகளை நமக்குத் தருகிறது.

 

  1. இயேசுவைத் தேடவேண்டும் எனும் பாடம்.
  2. இயேசுவால் எல்லாம் கூடும் எனும் விசுவாசம். இயேசு ஒரு வார்த்தை சொல்வாரா ? எனும் சந்தேகம் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு வார்த்தை சொன்னால் நோய் விலகிவிடும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை.
  3. இயேசுவின் பதிலை ந‌ம்பி புறப்படும் ஆனந்தம்.
  4. உலகப் பணிகள், அந்தஸ்து, இனம் எதுவும் விசுவாசத்தை அழிக்காமல் காத்துக் கொள்ள முடியும் எனும் பாடம்.
  5. விசுவாசம் வெளிப்படையாய் இருப்பதல்ல, உள்ளுக்குள் உறுதியாய் இருப்பது எனும் உண்மை.
  6. தான் எதற்கும் தகுதியற்றவன் என தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் மனம்.
  7. தனது பணியாளனுக்காக இயேசுவைத் தேடி ஓடும் இரக்கம்
  8. பிறருக்காக வேண்டுதல் செய்யும் போது, இறைவன் மனம் இரங்குகிறார் எனும் நம்பிக்கையின் உத்தரவாதம்.
  9. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறான், இறைவன் இதயத்தைப் பார்க்கிறார் எனும் இறைவார்த்தையின் உதாரணம்.
  10. செயல்களல்ல, விசுவாசமே முதன்மையானது எனும் பாடம். நூற்றுவர் தலைவர் ஆலயம் கட்டியிருக்கிறார், ஆனால் அதற்காக அவருக்குக் கிடைத்ததல்ல இந்த பாராட்டும், சுகமளித்தலும். விசுவாசத்துக்காய் கிடைத்தது.

இந்த செய்திகளை நூற்றுவர் தலைவனின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம். அசைக்க முடியாத விசுவாசத்தைப் பற்றிக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *