106. போந்தியு பிலாத்து

Ecce Homo by Antonio Ciseri c. 1880

 

இயேசுவை அறிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒரு பெயர் பிலாத்து. இயேசுவின் மீது பொய் குற்றம் சாட்டி அவரை பிலாத்துவின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் தான் அப்போதைய ஆளுநர்.

தனக்கு முன்னால் நின்றிருந்த இயேசுவை விசாரணை செய்தான் பிலாத்து. ஆனால் இயேசுவிடம் குற்றம் எதையும் காண அவனால் முடியவில்லை.

“இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை.” என மக்களைப் பார்த்துச் சொன்னான். அவன் இயேசுவை அப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

அவன் நீதி இருக்கையில் அமர்ந்திருந்த போது அவனுடைய மனைவியும் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினார்.

“இயேசுவை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் நேர்மையாளர். அவர் குறித்து ஒரு கனவு கண்டேன்” என்பதே அந்த செய்தி.

கூட்டமோ இயேசுவைக் கொன்றே ஆகவேண்டுமென கொந்தளித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதென தலையைச் சொறிந்தான். அப்போது அவனது நினைவுக்கு வந்தது இன்னொரு ஐடியா.

விழா நாளில் ஒரு கைதியை விடுதலை செய்யும் அதிகாரம் அவனுக்கு உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் இயேசுவை விடுதலை செய்ய நினைத்தான். அதை நேரடியாகச் செய்யவில்லை.

“இயேவையா ? படுகொலைக்காரன் பரபாவையா ? யாரை நான் விடுதலை செய்ய வேண்டும் ?” என கேட்டான்.

கூடியிருந்தவர்கள் இயேசுவின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே. அவர்கள் இயேசுவை விடுதலை செய்ய வேண்டும் என கனவிலும் விரும்பமாட்டார்கள்.

“பரபாவை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் அறை” என்றது கூட்டம்.

இயேசுவை விடுதலை செய்யும் வாய்ப்புகளும், அதிகாரங்களும் அவனுக்குப் போதுமான அளவில் இருந்தன‌. அவனுடைய விசாரணை இயேசுவை நிரபராதி என்றது. கனவில் கிடைத்த தரிசனமும் இயேசு நேர்மையாளர் என்றது. ஆனால் பிலாத்துவோ கைகளைக் கழுவினான்.

“இவரது இரத்தத்தில் எனக்குப் பங்கில்லை” என ஒதுங்கிக் கொண்டான். அங்கே நீதி வெளிப்படவில்லை, பிலாத்துவின் பீதியே வெளிப்பட்டது.

மக்களின் முன்னிலையில் தனது பெயர் கெட்டுப்போகுமோ, பதவி போய்விடுமோ எனும் பயமே அவனுக்கு இருந்தது. எனவே மக்களின் மிரட்டலுக்குப் பணிந்தான்.

யூதேயாவை கிபி 26 முதல் 36 வரையிலான பத்து வருடங்கள் ஆட்சி செய்தான் இந்த பிலாத்து. கிபி 39ல் மரணமடைந்தான் என்கிறது வரலாறு. அதாவது இயேசுவின் மரணத்துக்குப் பின் வெகு சில ஆண்டுகளே அவனது வாழ்க்கை இருந்தது. அந்த வாழ்க்கையின் மீதான வெறியே அவனை இயேசுவின் விரோதியாக மாற்றியது.

ஆனால் இந்த நிகழ்வு பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றும் விதமாக அமைந்தது.

அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை ( ஏசாயா 50:6) என இயேசுவின் பிறப்புக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்ட இறைவாக்கு

“அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, “இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” ( மத்தேயு 26: 67,68) என இயேசுவின் படுகொலை நிகழ்ச்சியோடு நிறைவேறியது.

“அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் (ஏசாயா 53 : 7) எனும் இறைவார்த்தை

“அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை” (மத்தேயு 27 : 12,13,14) என நிறைவேறியது.

“அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;  நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.(ஏசாயா 53: 4,5) எனும் வார்த்தைகள்,

“சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள் ( 1 பேதுரு 2 :24)” என நிறைவேறியது.

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்(சங் 22:18) எனும் இறைவார்த்தை, “அதைக்(இயேசுவின் ஆடை) கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்”  என்று படை வீரர்கள் சொன்னபோது நிறைவேறியது.

இப்படி இன்னும் பல தீர்க்கத் தரிசனங்கள் இயேசுவின் மரணத்தோடு நிறைவேறின.

மக்கள் என்ன நினைப்பார்களோ எனும் கவலையிலும், சுயநல சிந்தனைகளுடனும் வாழ்ந்தால் இறைவனுக்கு எதிராக பெரும் பாவம் செய்தவர்களாக மாறுவோம் என்பதே பிலாத்துவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும்.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *