105. கயபா

caiaphas

 

இலாசர் என்றொருவர் இறந்து விட்டார். அவரைக் கல்லறைக் குகையில் வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இயேசு அந்த இடத்துக்குச் சென்றார். ‘லாசரே வெளியே வா’ என்றார். லாசர் உயிர்பெற்று வெளியே வந்தான். கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டனர்.

சிலர் இந்த அற்புதச் செயலைப் பரிசேயர்களுக்குத் தெரிவித்தனர். பரிசேயர்கள் ஏற்கனவே இயேசுவின் போதனைகளாலும், மக்கள் செல்வாக்கினாலும் எரிச்சலடைந்து கிடந்தனர். இப்போது இந்தச் செய்தியும் வந்து விட்டது.

பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் எல்லோருடைய மனதிலும் கோபம். இயேசுவினால் தங்கள் புகழும், வருமானமும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது, என்ன செய்யலாம் என கூடிப் பேசினார்கள்.

கயபா அப்போது அங்கே தலைமைக் குரு. அவன் இயேசுவை ஒரு கிளர்ச்சிக்காரனாகப் பார்த்தான் அவன். காரணம் அப்போதைய மத குருக்களின் சட்டங்களுக்கு எதிராக இயேசு போதித்தார். ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கிய கயபாவின் ஆதரவாளர்களை கோயிலை விட்டே அடித்துத் துரத்தினார்.

இப்போது கயபா எழுந்தான், “இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்று சொன்னான். ஒரு குழப்பவாதியை ஒழித்துக் கட்டினால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்பது அவன் சொன்னதன் அர்த்தம். ஆனால், “இயேசு அழிந்து போகும் இனத்துக்காக தனது உயிரைப் பலியாகக் கொடுப்பார்” எனும் தீர்க்கதரிசன வார்த்தையாய் அது ஒலித்தது.

தலைமைக்குருவின் அந்த வார்த்தை கூடியிருந்த பரிசேயர்கள், மதவாதிகள் அனைவருக்கும் ஒரு மாபெரும் புத்துணர்ச்சி ஊட்டியது.  அன்று முதல் அனைவருடைய ஒட்டு மொத்த சிந்தனையும் இயேசுவை எப்படித் தீர்த்துக் கட்டலாம் என்பதில் தான்  இருந்தது.

இயேசுவைப் பிடிக்க செய்த சதி ஆலோசனையில் கயபாவின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. அவர்கள் சதியாலோசனை செய்யும் இடமே காய்பாவின் வீடாகத்தான் இருந்தது. அவர்கள் இயேசுவைக் கொலைசெய்வதுடன், கூடவே இயேசு உயிர்கொடுத்த லாசரையும் கொலை செய்ய வேண்டும் என தீர்மானம் செய்தார்கள்.

கடைசியில் இயேசு பிடிக்கப்பட்டு கயபாவின் முன்னால் கொண்டு வரப்பட்டார்.

இரண்டு பேருடைய சாட்சிகள் இருந்தால் தான் இயேசுவைக் கொலை செய்வது சட்டப்படி சாத்தியமாகும். ஆனால் சாட்சிகளோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசி குழப்பினார்கள்.

கயபா மனதுக்குள் திட்டமிட்டான். ஏன் சாட்சிகளை அழைக்கவேண்டும். இயேசுவையே விசாரிக்கலாமே. அவர் மூலமாகவே அவருடைய குற்றத்தை நிரூபிக்கலாமே. இறைவாக்கினர் என்றால், பெரிய வல்லமையுடையவர் என்றால் அவர் பொய் சொல்லப் போவதில்லையே. கயபா எண்ணினான்.

‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா ?’ கயபா துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.

இயேசு அவன் கண்களைப் பார்த்தார்.

‘நீர் தான் சொல்லுகிறீர்’

‘தெளிவாகச் சொல்லுங்கள். நீர் மெசியாவா ?’

‘ஆம். நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின்  வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

கயபா தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ… நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு ? இவனை என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள்’.

சாட்சிகளால் நிரூபிக்கப் படாமல் போன குற்றத்தை இயேசுவே ஒப்புக் கொண்டதில் கூட்டத்தினர் அதிர்ந்தனர். வழக்கத்துக்கு மாறான காட்சி !.

‘இப்போது என்ன சொல்கிறீர்கள்.’ கயபா அவையைப் பார்த்துக் கேட்டான்.

‘இயேசு குற்றவாளி தான்’ அவை ஒத்துக் கொண்டது.

வாக்கெடுப்பு நடந்தது. அதிலும் கயபா தன்னுடைய வஞ்சக மூளையைப் பயன்படுத்தினான். முதியவர்கள் துவங்கி இளையவர் வரை வாக்கெடுப்பு நடத்துவது தான் முறை. ஆனால் ஒருவேளை முதியவர்கள் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களித்தால், பின்பு வருபவர்களும் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று பயந்தான். எனவே இளையவர்களிடமிருந்து வாக்கு ஆரம்பமானது. இளையவர்கள் எல்லாம் கயபாவின் ஆட்கள் !

இயேசு குற்றவாளிதான். தீர்ப்பளிக்கப்பட்டது. இயேசு கொலை செய்யப்பட்டார்.

இயேசு உயிர்த்தெழுந்தபின்பும் கயபா அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் கொல்ல வேண்டுமென மிகுந்த தீவிரம் காட்டினார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தாலும், சட்டங்களை நன்கு அறிந்திருந்தாலும், இயேசு உயிர்த்த நிகழ்வை அனுபவித்திருந்தாலும் கயபா மனம் மாறவில்லை.

பைபிள் அறிவோ, சட்டங்களின் அறிவோ நம்மை இயேசுவின் பிள்ளைகளாக மாற்றாது. அவர் மேல் கொள்ளும் ஆழமான விசுவாசமே முக்கியமானது எனும் மிகப்பெரிய பாடத்தை கயபாவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

*

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *