104 . அன்னா

Annas

 

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தலைமைக்குரு அன்னா. இவர் சேத் என்பவருடைய மகன். கிமு 22, 23களில் பிறந்தவர்.  அன்னா என்பதற்கு “யகோவா வின் கிருபை” என்பது பொருள்.

கிமு.6 முதல் 15 வரை தலைமைக்குருவாக ரோம அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்பும் அறிவிக்கப்படாத தலைவராக இருந்தவர்.

அன்னாவுக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். அவர்கள் ஐந்து பேருமே பின்னர் தலைமைக் குருக்களாக பணியாற்றினார்கள். அவருடைய மருமகன் கயபாவும் தலைமைக் குருவாய் இருந்தார்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்காய் பிடிக்கப்பட்ட போது முதலில் கொண்டுவரப்பட்டது அன்னாவின் முன்னிலையில் தான். சட்டப்படி அவர் அப்போதைய தலைமைக்குரு கயபாவின் முன்னால் தான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அன்னாவின் முன்னால் இயேசு கொண்டுவரப்பட்டத்தில் இருந்தே அன்னாவுக்கு இருந்த எழுதப்படாத செல்வாக்கு புலனாகிறது.

அன்னா இயேசுவைப் பார்த்தார். சாதாரண உடை, சாதாரண எளிமையான தோற்றம். இந்த மனிதனைக் கொல்வதொன்றும் பெரிய செயலாக இருக்காது எளிமையாக முடிந்து விடும் என்று நினைத்தார் அன்னா.

“உன்னுடைய சீடர்களைப் பற்றியும், போதனைகளைப் பற்றியும் சொல்” அன்னாவின் குரல் உயர்ந்தது.

“நான் வெளிப்படையாய்ப் பேசினேன். அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். மறைவாக எதையும் பேசியதில்லை. நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார்.

“தலைமைக்குருவுக்கு இப்படியா பதில்சொல்வது” என அருகில் இருந்த வீரன் ஒருவன் இயேசுவை அடித்தான்.

இயேசு அவனைப் பார்த்தார், ““நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார்.

அன்னா இயேசுவின் அமைதியையும், பதில்களையும் கூர்மையாய்க் கவனித்துக் கொண்டிருந்தார். இயேசு சாதாரணமான ஆள் இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.

இயேசுவின் பதில்களில் இருந்த உட்பொருள் அவரை வியக்க வைத்தது. ஆம், அல்லது இல்லை என்று ஒரு பதிலைச் சொல்லாமல் இயேசு சொன்ன பதிலில் ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளும், மோசேயின் சட்டங்களுக்குட்பட்டு வாழும் ஒருவனுடைய மனித உரிமையுமே வெளிப்பட்டன.

இப்போது, மக்களின் சாட்சிகளை வைத்தே இயேசு குற்றவாளியென்று தீர்ப்பிடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார் அன்னா. எனவே அப்போது தலைமை மத குருவாய் இருந்த தனது மருமகன் கயபாவிடம் இயேசுவை அனுப்பினான். கட்டப்பட்ட நிலையில்.

இயேசுவைப் பிடிக்க வேண்டும் என சதித் திட்டம் தீட்டியவனே இந்த கயபா தான். எருசலேமில் பாஸ்கா விழா நடைபெறும் நேரத்தில் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்பது திட்டம்.

இயேசு “தன்னைக் கடவுளாக்கிக் கொண்டார்” என சொல்லி இயேசுவை சிலுவையில் அறைந்தாகி விட்டது. அத்துடன் சிக்கல் முடிந்தது என நினைத்தார் அன்னா. ஆனால் இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார். தகவல் அன்னா மாளிகைக்கும் எட்டியது.

இயேசு உயிர்த்தெழுந்தவுடன் இயேசுவின் சீடர்கள் வீரம் கொள்ளவில்லை. தூய ஆவியானவரை பெற்றுக்கொண்டபின் அவர்கள் துணிச்சலடைந்தார்கள். அன்னாவுக்குத் தலைவலி அதிகமானது.

எருசலேம் தேவாலயத்தில் இயேசுவின் சீடர்களான யோவானும், பேதுருவும் வந்தார்கள். பிறவியேலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைக் கண்டு , ” நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று சொல்லி குணமாக்கினார்கள். எருசலேம் முழுவதும் அந்த செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது.

அதைத் தொடர்ந்த பேதுருவின் நற்செய்தி அறிவித்தலில் சுமார் ஐயாயிரம் பேர் இயேசுவை நம்பி, கிறிஸ்தவத்தில் இணைந்த ஆண்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம். இப்போது செய்தி அன்னாவின் காதுகளில் எரிச்சல் தீயாய் விழுந்தது.

தலைவர்கள், மறைநூல் அறிஞர்கள் எல்லோரும் அன்னாவின் தலைமையில் ஒன்று கூடி யோவானையும் பேதுருவையும் விசாரித்தனர்.

“எந்த வல்லமையால் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் ?”

“இயேசுவின் வல்லமையால். நீங்கள் அவரை சிலுவையில் அறைந்தீர்கள் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார்” சீடர்களின் குரல் கம்பீரமாய் ஒலிக்க அன்னா அதிர்ந்தார். கல்வியறிவே இல்லாத இவர்களுக்கு எப்படி இந்த தைரியம் என குழம்பினார்.

“இனிமேல் இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது” அவர் எச்சரித்தார்.

அவர்களோ, “முடியாது. உங்கள் பேச்சைக் கேட்க முடியாது. இறைவன் பேச்சைத் தான் கேட்போம். நாங்கள் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்க முடியாது” என்றார்கள்.

கிறிஸ்தவம் வளர்ந்தது. அன்னாவின் எரிச்சலும், கோபமும் கூடவே வளர்ந்தது. அவருடைய மரணம் கி.பி 40ல் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மதநூல்களின் அறிவு ஒரு மனிதனை ஆன்மீகவாதி ஆக்காது. உண்மையை அறிந்து கொள்ள தாழ்மையான மனமும், இறை வெளிப்பாடும் அவசியம் என்பதை அன்னாவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *