103. பரபாஸ் ( பரபா )

பரபாஸ் ( பரபா )

barabaa

*

இயேசு மதகுருக்களாலும், பரிசேயர்களாலும் பிடிக்கப்பட்டு ஆளுநர் பிலாத்துவின் முன்னால் நிறுத்தப்பட்டார். பிலாத்துவுக்கு இயேசு குற்றமற்றவர் என்பது தெரியும். பிலாத்துவின் மனைவி இயேசுவின் போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தவர்.

“இவன் தன்னை அரசன் என கூறிக் கொள்கிறான்” என பிலாத்துவிடம் சொன்னது கூட்டம். பிலாத்துவுக்குக் கொம்பு சீவி விடுவதே அவர்களுடைய திட்டம். பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான்.

“நீ யூதர்களின் அரசனா ?”

“நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” இயேசு கேட்டார்.

“நான் யூதனல்ல ? உன்னோட ஆட்களும், மத குருக்களும் தானே உன்னை என்னிடம் கொண்டு வந்தார்கள்”

“என் ஆட்சி இவ்வுலக ஆட்சி அல்ல, அப்படி இருந்திருந்தால் என் காவலர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்”

“ஓ.. அப்போ நீ அரசன் தானா ?”

“அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி” இயேசு சொன்னார். பிலாத்து குழம்பினான்.

இயேசுவின் மேல் அடுக்கடுக்கான குற்றங்களை எதிரிகள் அடுக்கிக் கொண்டே இருந்தனர். இயேசுவோ அமைதியாய் நின்றிருந்தார். பிலாத்துவுக்கு வியப்பாய் இருந்தது. அவனது வாழ்நாளில் இப்படி ஒரு அமைதியான மனிதரை அவன் பார்த்ததில்லை.

“இவ்ளோ குற்றம் சொல்கிறார்களே, உனக்குக் கேக்கலையா ?” பிலாத்து ஆச்சரியமாய்க் கேட்ட கேள்விக்கும் இயேசு பதில் சொல்லவில்லை.

பிலாத்து நடுவர் இருக்கையில் அமர்ந்து நெற்றி தேய்த்தான். அப்போது ஒருவர் வந்து பிலாத்துவின் காது கடித்தான். செய்தியைக் கொடுத்தனுப்பியது பிலாத்துவின் மனைவி.

“அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம்.” என்பதே அந்தச் செய்தி.

பிலாத்துவுக்கும் இயேசுவைத் தண்டிக்கும் எண்ணம் இல்லை. காரணம் இயேசுவைப் பொறாமையினால் தான் கொண்டு வந்திருக்கின்றனர் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

யோசித்தவனுக்கு ஒரு யோசனை வந்தது. விழா நாளின் போது ஒருவரை விடுதலை செய்ய பிலாத்துவுக்கு அதிகாரம் உண்டு. எனவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இயேசுவை விடுதலை செய்ய நினைத்தான்.

அப்போது அவன் நினைவில் வந்த கொலையாளிகள், குற்றவாளிகளின் பட்டியலில் முதலில் இருந்தவன் பெயர் தான் இந்த பரபாஸ் எனும் பரபா.

  1. பரபா ஒரு மிகப்பெரிய குற்றவாளி.
  2. ஆட்சியாளர்களின் எதிரி, கலகக் காரன்.
  3. சிறையில் வாடிய மரண தண்டனைக் கைதி.

பரபாவோடு ஒப்பிடுகையில் இயேசு செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களெல்லாம் ஒன்றுமேயில்லை. அந்த அளவுக்கு படுகொலைக்காரன் அந்த பரபா. அவன் வெளியே வருவதை நிச்சயம் மக்கள் விரும்பமாட்டார்கள். காரணம் அவன் வெளியே வந்தால் எல்லாருக்குமே ஆபத்து தான்.

அந்த நம்பிக்கையில் பிலாத்து கேட்டான்.

“நான் ஒருவரை விடுதலை செய்யப் போகிறேன். நீங்களே அந்த நபரைத் தேர்ந்தெடுங்கள். இயேசுவையா ? பரபாவையா ?”

“பரபாவை” மதகுருக்கள் தூண்டி விட, மக்கள் சொன்னார்கள்.

பிலாத்து அதிர்ந்தான். என்னது ? பரபாவையா விடுதலை செய்யச் சொல்கிறார்கள் ? குழம்பிய பிலாத்து கேட்டான்.

“அப்படியானால் மெசியா எனும் இயேசுவை என்ன செய்ய வேண்டும் ?”. இயேசுவை மெசியா, அதாவது மீட்பர் என அழைத்து மக்களிடம் கேட்கிறான். அந்த உத்தியும் எடுபடவில்லை.

“சிலுவையில் அறையும்” கத்தினார்கள் மக்கள்.

“என்னது சிலுவையா ? இல்லை, மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதும் இயேசுவிடம் இல்லை”

“சிலுவையில் அறையும்.. சிலுவையில் அறையும்” குரல்கள் உயர்ந்தன.

“இயேசு பெரிய குற்றம் ஏதும் இல்லை. அவரை தண்டித்து விடுதலை செய்வேன்”

“சிலுவையில் அறையும்… சிலுவையில் அறையும்” அங்கே ஒரு கலகத்துக்குரிய சூழல் உருவானது.

பிலாத்து செய்வதறியாது திகைத்தான். கடைசியில்இயேசுவை சிலுவையில் அறைய அனுமதி கொடுத்தான்.

பரபா ஒரு இனிய ஆச்சரியமாய் வெளியே வந்தான். தான் விடுதலையாவோம் என கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லை.

பரபா எனும் பெயருக்கு “தந்தையின் மகன்” என்பது பொருள். தந்தையின் மகனுக்காக, இறைவனின் மகன் உயிரை விட்டது வியப்பான இறை சித்தம். இவனுடைய பெயர் “இயேசு பரபா” என்கிறது ஆதிகால திருச்சபை வரலாறு.

சிலோத்தே எனும் தீவிரவாத இயக்கத்தின் தலைவராகவோ, முக்கியமான ஒரு உறுப்பினராகவோ பரபாஸ் இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தனக்குப் பதிலாக இயேசு சிலுவையில் அறையப்படுவார் என பரபா  நினைக்கவில்லை. விடுதலைக்குரிய தகுதி தனக்கு இருப்பதாக கருதவில்லை. ஒரு நீதிமானும், தானும் இடம் மாற்றிக் கொள்வோம் என அவன் கனவு காணவில்லை. ஆனால்  அனைத்துமே நடந்தன.

பாவம் செய்பவர்கள் பாவத்தின் அடிமைகள். அவர்களை இயேசு தேடி வந்து மீட்கிறார்.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுதல் மட்டுமே.

நாம் பரபாஸாய் வாழ்ந்திருக்கலாம், இனிமேல் பரமனுக்காய் வாழ்வோமே.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *