102. மகதலா மரியாள்

 

Jesus-Magdalene-Rex

மகதலா மரியாள், மகதலேனா மரியாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஏழு அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டிருந்த பெண். இவரிடமிருந்த தீய ஆவிகளை இயேசு வெளியேற்றிய பின்னர் மகதலா மரியாள் இயேசுவின் இறை பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இயேசு தனது பணிவாழ்வின் நிறைவாக, எதிரிகளால் பிடிக்கப்பட்டு கொலை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட‌ வேளையிலும் மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகவில்லை. சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டிருக்கையிலும் கூட மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகாமல் உடைந்த இதயத்தோடு அவர் பாதத்தருகே நின்றிருந்தார்.

இயேசுவின் சீடர்களெல்லாரும் இயேசுவை விட்டு விலகி ஓடிவிட்டனர். ஆனால் இவர் ஓடவில்லை. அதிகாரிகள், படை வீரர்கள், மத தலைவர்கள், இயேசுவின் எதிராளிகள் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் மகதலா மரியாள் இயேசுவின் அருகே நின்றிருந்தார். அவருடைய துணிச்சலும், இயேசுவின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டன.

இயேசு இறந்து போனதை அவரால் நம்ப முடியவில்லை. இயேசு இறந்து கல்லறைக் குகையில் அடக்கப்பட்டு, குகை மூடப்பட்ட பின்னரும் அதன் எதிரே துயரத்துடன் அமர்ந்திருந்தார் அவர்.

அரசு அந்தக் குகைக்கு சீல் வைத்து காவலரை நியமித்தது.  மூன்றாவது நாள், இயேசு உயிர்த்தெழுந்தார். மகதலா மரியாள் அதை அறியவில்லை. இயேசுவின் இழப்பு அவரை அலைக்கழித்தது.

அதிகாலையிலேயே கல்லறைக்குச் சென்றார். அதிர்ந்தார். கல்லறைக் குகையின் வாசலில் இருந்த சீல் உடைந்திருந்தது. கல் புரட்டப்பட்டிருந்தது. உள்ளே இயேசுவின் உடலைக் காணோம்.

அலறி அடித்துக் கொண்டு ஓடிய மரியாள் சீடர்கள் இருவரிடம் சென்று, “இயேசுவைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்” என்றார்.

அவர்கள் கல்லறைக்கு ஓடி வந்துப் பார்த்தபோது அங்கே இயேசுவின் உடல் இல்லை. அவர் உயிர்த்தெழுவார் எனும் மறைநூல் வாக்கு அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. அவர்கள் அப்படி நிகழும் என நினைக்கவும் இல்லை.

மகதலா மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று கதறி அழுதார். பின்னர் கல்லறைக்குள் எட்டிப் பார்த்தபோது இரண்டு வானதூதர்கள் அவர் உடல் இருந்த இடத்தில் தலைப்பாகத்திலும், கால் பாகத்திலும் அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் அவரிடம், “அம்மா, ஏன் அழுகிறீர் ?” என்று கேட்டார்கள்.

“என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார் மரியாள்.

சொல்லிவிட்டுத் திரும்பும் போது இயேசு அவளுக்குக் காட்சியளித்தார். முதலில் அவரை இயேசு என மகதலா மரியாள் அடையாளம் காணவில்லை. அவர், மரியாளே என அழைத்ததும் சட்டென இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு பரவசமடைந்தார்.

இயேசு அவரிடம், “நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். அவள் விரைந்து மற்றவர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார். அந்த சொற்றொடர் உலகப் புகழ் பெற்றுவிட்டது.

இயேசு உயிர்த்தெழுந்தபின்னர் காட்சி கொடுத்த முதல் நபர் மகதலா மரியாள் தான். இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் நற்செய்தியை அறிவித்த முதல் நபர் மகதலா மரியாள் தான். அதன்பின்னர் மகதலா மரியாளைப் பற்றிய செய்திகள் எதுவும் விவிலியத்தில் இல்லை.

எபேசுக்குச் சென்று அங்கே அவர் மரணமடைந்தார் என்கிறது ஆதித் திருச்சபையின் வரலாறு. கி.பி 886ல் அவருடைய எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு கான்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாய் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இவர் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டு நினைவுகூரப்படுகிறார். ஜூலை 22ம் தியதி புனித மகதல மரியாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கிபி ஐந்தாம் நூற்றாண்டில் “மகதலா மரியாள் நற்செய்தி” எனும் ஒரு நூல் எழுதப்பட்டது. எல்லா பெண்களையும் விட இயேசு மகதலா மரியாளை நேசித்தார் என்கிறது அந்த நூல். “கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்”  போன்ற இயேசுவின் பிரபலமான சொற்றொடர்கள் பல இதில் காணப்படுகின்றன.

“ஆண்டவரே, நான் உம்மை ஒரு காட்சியில் கண்டேன் என அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார், என்னை விட்டுப் பார்வையை விலக்காதவர்கள் பாக்கியவான்கள். எங்கே உங்கள் மனம் இருக்கிறதோ அதுவே பொக்கிஷத்தின் இடம்” என்பது அந்த நூலிலுள்ள ஒரு முக்கியமான வசனம்.

மகதலா மரியாளின் வாழ்க்கை நமக்கு சில முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகிறது.

  1. நமது பழைய வாழ்க்கையை இறைவன் மாற்றியபின்பு அவருக்காகவே நமது புதிய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
  2. கூட இருப்பவர்கள் அனைவருமே ஓடிப் போனால் கூட இறைவனின் பாதத்தருகே நிற்க அச்சமோ, தயக்கமோ காட்டக் கூடாது.
  3. இயேசு இறந்தபின்பும் கூட பிரதிபலன் எதிர்பாராமல் நேசத்தைக் கொட்டிய மகதலா மரியாளைப் போல, பிரதிபலன் எதிர்பாராமல் இறைவனை அன்பு செய்ய வேண்டும்.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *