101. சதுசேயர்

 

004-jesus-pilate

இயேசு தனது போதனைகளின் மூலமாக மக்களை வசீகரித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு கூட்டத்தினர் இயேசுவிடம் வந்தார்கள்.

“இயேசுவே எங்களுக்கு ஒரு சந்தேகம். திருமணமான ஒருவர் குழந்தைகள் இல்லாமல் இறந்து போனால், அவருடைய மனைவியை, அவனுடைய சகோதரன் மணந்து கொள்ளலாம் என்பது மோசேயின் சட்டம். அப்படியே இரண்டாம், மூன்றாம் என ஏழாம் சகோதரர் வரை அவளை மணம் முடித்தனர். யாருக்கும் குழந்தைகள் இல்லை. எல்லோரும் இறந்தனர். கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்தாள். உயிர்த்தெழும் போது அவள் அந்த ஏழுபேரில் யாருக்கு மனைவியாய் இருப்பாள் ?”

இயேசுவை வகையாய் மடக்கிவிட்ட கேள்வியைக் கேட்டுவிட்டோம் எனும் நிம்மதி அவர்களுக்கு. காரணம் சதுசேயர்கள் உயிர்ப்பை நம்புவதில்லை. இன்னொரு வாழ்வு உண்டு என்பதையும், தேவதூதர்கள் உண்டு என்பதையும் நம்புவதில்லை. இயேசுவோ உயிர்ப்பையும், மறுவாழ்வையும் போதித்தவர். சதுசேயர்கள் மோசேயின் போதனைகளை கடைபிடித்து வாழ்ந்தவர்கள்.

அவர்களுடைய கேள்வியின் நோக்கம் இயேசுவுக்கு தெளிவாகத் தெரிந்தது. அவர் புன்னகைத்தார்.

“உங்களுக்கு மறைநூலும் தெரியவில்லை, கடவுளைப் பற்றியும் தெரியவில்லை. அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். உயிர்த்தெழுந்தவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லை. அவர்கள் வானதூதர்களைப் போல இருப்பார்கள்.” என்றார்.

அவருடைய பதிலைக் கேட்ட மக்கள் வியந்து போனார்கள்.

சதுசேயர்கள் இயேசு வாழ்ந்த காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த ஒரு பிரிவினர். கிமு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி 70ம் ஆண்டு வரை இவர்களுடைய குழு இருந்தது. அதன் பின்னர் இவர்கள் வரலாற்றிலிருந்து காணாமல் போய்விட்டனர்.

மோசேயின் சட்ட நூல்களான தோராவை மட்டுமே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள் இவர்கள். பிற செவி வழி சட்டங்களை இவர்கள் ஏற்கவில்லை.

தோராவுடன் சேர்ந்து இவர்களிடம் “கட்டளைகளின் நூல்” ஒன்றும் இருந்தது. அதில் ஏராளமான கட்டளைகள் இருந்தன. யாரெல்லாம் கழுத்து நெரித்துக் கொல்லப்பட வேண்டும், யாரெல்லாம் உயிரோடு எரிக்கப்பட வேண்டும், யாரெல்லாம் தூக்கிலிடப்படவேண்டும் என்றெல்லாம் அந்த நூல் விலாவரியாய் பேசியது.

மற்ற குழுக்களை விட பல விதங்களில் இவர்கள் வேறுபட்டிருந்தனர். முதலாவதும் முக்கியமானதும் உயிர்ப்பு சம்பந்தமானது. ஆன்மா என்பது அழிவற்றது அல்ல. மரணத்தோடு அதன் வாழ்க்கை முடிந்து போகிறது. எனவே மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை என்பது இவர்களுடைய நம்பிக்கைகளில் முக்கியமானது. இறப்புக்கு பின் நாம் செய்த நன்மைகளுக்கான பலனோ, தீமைகளுக்கான தண்டனையோ கிடைப்பதில்லை என நம்பினார்கள்.

ஜென்மபாவம் என்பது இல்லை. பாவம் என்பது அவரவர் செய்வதன் அடிப்படையிலானது மட்டுமே என்பது இவர்களுடைய நம்பிக்கைகளில் இன்னொன்று. அதே போல, கடவுள் செய்ய மாட்டார் என்றும் இவர்கள் நம்பினார்கள்.

கோயில் சார்ந்த பணிகளில் இவர்கள் அதிகமாக ஈடுபட்டனர். அரசியல் சார்ந்த பணிகளிலும், ராணுவம் சார்ந்த பணிகளிலும் இவர்களுடைய ஈடுபாடு கணிசமாய் இருந்தது.

சமூக தளத்தில் சதுசேயர்கள் நல்ல வசதிபடைத்தவர்களாக இருந்தார்கள். ஆலயங்களின் அருகிலே தங்கி வந்தார்கள். செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான போதகர்கள் அந்தக் காலத்தில் சதுசேயர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுவின் காலத்தில் மதகுருக்கள் அவர் மீது கொலை வெறியில் இருந்தார்கள். யூதாசுக்கு பணம் கொடுத்து இயேசுவை காட்டிக் கொடுக்க வைத்தவர்களும் அவர்களே, இயேசுவை நேரடியாய் பிடித்தவர்களும் அவர்களே, இயேசுவுக்கு எதிராய் பொய்சாட்சி சொல்ல‌ மக்களைத் தூண்டி விட்டதும் அவர்களே. இப்படி இயேசுவின் மரணத்தோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாக சதுசேயர்கள் இருந்தார்கள்.

பரிசேயர்கள் மக்கள் செல்வாக்குடன் இருந்தார்கள். சதுசேயர்களோ முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள். சதுசேயர்களைப் பற்றி பைபிள் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறது.

  1. இயேசு இறைபணி செய்தபோதெல்லாம் “எந்த அதிகாரத்தில் இதையெல்லாம் செய்கிறீர் ? ” என எதிர்த்து நின்றார்கள்.
  2. இயேசுவின் போதனைகள் மக்களிடம் சென்றுவிடக் கூடாது என தீவிரமாய்ச் சிந்தித்தார்கள்.
  3. இயேசுவின் போதனைகள், தங்களுடைய செல்வாக்கை அழித்துவிடும் என்று பயந்தார்கள். அதனால் இயேசுவின் மீது பொறாமை கொண்டார்கள்.
  4. இயேசுவை மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
  5. சட்டங்களை மேற்கோள் காட்டி இயேசுவை பலவீனப்படுத்த முயன்றார்கள்.
  6. எல்லாம் தோல்வியில் முடிய, இயேசுவைக் கொல்ல வேண்டுமென மும்முரம் காட்டினார்கள்.
  7. பிலாத்துவிடமும், மற்ற உயரதிகாரிகளிடமும் இயேசுவின் மரணத்துக்காக வாதாடினார்கள்.
  8. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பும் அவர்கள் மனம் மாறவில்லை, கிறிஸ்தவத்தைப் போதித்த பவுலைக் கொல்ல மும்முரம் காட்டினார்கள்.
  9. ஏழைகள் மீதும், வறியவர்கள் மீதும் சற்றும் கரிசனையின்று இருந்தார்கள். ஆலய வருமானத்தின் மீது அதிக கவனம் இருந்தது.
  10. உயிர்ப்பு, சொர்க்கம், தூதர்கள் இவற்றையெல்லாம் நம்பாததால் உலகத் தலைவர்களையே சார்ந்து வாழ்ந்து வந்தார்கள்.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *