ஆட்டோ வேளச்சேரி வருமா ?

chennai-auto

 

‘என்னது நூற்றைம்பது ரூபாவா ? நான் ஆட்டோவை விலைக்கு கேக்கலேப்பா. வேளச்சேரி வரைக்கும் போகணும், அதுக்கு கேட்டேன்’ எரிச்சலில் சொன்னேன் நான்.

‘வேளச்சேரி வரைக்கும் போகணும் இல்லையா சார். இன்னும் சரியா விடியக் கூட இல்லை. திரும்பி வரதுக்கு சவாரி கிடைக்காது சார். நியாயமா தான் கேட்டிருக்கேன்’ ஆட்டோக்காரன் எத்தனையாவது முறையாக இதே வார்த்தைகளைச் சொல்றானோ ? நாகர்கோவிலிலிருந்து ஒரு தனியார் பஸ்ஸில் ஏறி அதிகாலையிலேயே கிண்டியில் வந்து இறங்கியாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருந்தன.

வெளியூர்களிலிருந்து ஒவ்வொரு பஸ் வந்து நிற்கும் போதும் ஓடிப் போய் மொய்க்கும் ஆட்டோக்காரர்கள். யானைப்பசிக்கு சோளப் பொரி போல இறங்கும் ஒன்றிரண்டு பயணிகள். மற்றபடி நிசப்தம்.

‘வழக்கமா எழுபது ரூபா தான் கிண்டில இருந்து வேளச்சேரி போறதுக்கு. முப்பது ரூபா அதிகமா தரேன். நூறு வாங்கிக்கோ.’

‘ஐயோ… அம்பதெல்லாம் கட்டுப்படி ஆவாது சார். சரி… ஒன் பார்டி குடுங்க. அதுக்கு கம்மியா வராது’ அவன் சொன்னான்.

‘என்னப்பா சென்னைல உன் ஆட்டோவை விட்டா வேற ஆட்டோவே இல்லாத மாதிரி பேசறே. வர முடிஞ்சா வா. இல்லேன்னா எவன் வரானோ அவன் ஆட்டோல போய்க்கறேன்’ சலிப்புடன் சொன்னேன் நான்.

‘சார். நியாயமா தான் கேட்டிருக்கேன். வாங்க.. உக்காருங்க. ‘ ஆட்டோவின் பின் சீட்டை ஒரு தட்டு தட்டி விட்டு ஆட்டோக்காரன் கை காட்டினான்.

வாங்க உட்காருங்க என்றாலே சமரசத்துக்குத் தயாராகி விட்டான் என்பது ஆட்டோக்காரர்கள் அகராதியின் விளக்கம். அறுபது ரூபாய் எதிர்பார்த்தால் ஆட்டோக்காரர்கள் எழுபது ரூபாய் கேட்பார்கள். ஆட்டோவில் ஏறுபவர்களோ அறுபது ரூபாய் தரத் தயாராக இருந்தால் ஐம்பது என்று சொல்வார்கள். இவன் ஐம்பது என்று சொல்ல, ஆட்டோக்காரன் எழுபது சொல்ல, இருவரும் அறுபது ரூபாயில் உடன்பாடாகி பயணம் செய்வார்கள். எல்லோருக்கும் இது தெரிந்தே இருந்தாலும் ஆட்டோக்காரர்கள் சரியான கட்டணத்தைக் கேட்பதும் கிடையாது, பயணிகள் ஆட்டோக்காரர் கேட்கும் பணத்தைக் கொடுப்பதும் கிடையாது.

‘அறுபதெல்லாம் முடியாதுப்பா. நூறு தான் தருவேன். கிளம்பு. வேளச்சேரி ஹவுசிங் போர்ட் போ’ சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினேன்.

‘ஹைவுசிங் போர்ட் ஏரியாவுக்கு உள்ளே போக சொல்றீங்க. எழுபது ரூபா தான் தருவேன்னும் சொல்றீங்க. கண்டிப்பா கட்டுப்படி ஆவாது சார். ஒன் தர்ட்டியாச்சும் குடுங்க…’ சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தான் ஆட்டோக்காரன்.

அதெல்லாம் முடியாதுப்பா. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. ஏதோ புதுசா மெட்ராஸ் வரவன் கிட்டே பேசற மாதிரி பேசி உயிர வாங்காதே. நான் பத்து வருசமா இதே ஊரில தான் குப்பை கொட்றேன்’ கோபத்தில் சொன்னேன் நான்.

‘இல்லை சார். பகல் நேரத்துலேன்னா நான் எண்பது ரூபாய்க்கு வருவேன். பிராப்ளம் இல்லை. ஆனா இப்போ கட்டுப்படி ஆவாது.’ என்று சொல்லியபடியே ஆட்டோவைக் கிளப்பினான் அவன்.

‘ஆமா காலைல வந்த விடியவே இல்லே சார். சவாரி கிடைக்காதும்பீங்க, ராத்திரி வந்தா நைட் ஆய்டுச்சு சார். ரிட்டன் காலியா தான் வரணும்பீங்க, மழை நேரத்துல வந்தா, மழையா இருக்கில்லே சார். பேரம் பேசாதீங்கம்பீங்க, வெயிலா இருந்தா வெயில்ல அலயறோம் இல்லே சார் கொஞ்சம் போட்டுக் குடுங்கம்பீங்க, எப்போதான் நீங்க சரியான காசு வாங்கி வண்டி ஓட்டுவீங்க ?’ எரிச்சலில் முணுமுணுத்தேன் நான்.

‘திட்டாதீங்க சார். வயித்துப் பொழப்பு சார். காலைல நாலுமணிக்கே வந்து நிக்கறேன். இரண்டு மணி நேரமா எந்த சவாரியும் கிடைக்கல. நீங்க தான் மொத போணி.’

‘இப்படி அநியாய ரேட் சொன்னா எப்படி சவாரி கிடைக்கும், நியாயமா கேட்டா நிறைய சவாரி கிடைக்கும். ஆமா… அதெப்படி எப்போ கேட்டாலும் இதுவரை சவாரி கிடைக்கலே.. நீங்க தான் மொத போணின்னே எல்லா ஆட்டோக்காரங்களும் சொல்றீங்க ?’ சின்னச் சிரிப்புடன் கேட்டேன் நான்.

‘புள்ளைங்க மேல சத்தியமா சொல்றேன் சார். நீங்க தான் இன்னிக்கு முதல் சவாரி’ ஆட்டோக்காரன் திடுதிடுப்பென பிள்ளைகள் மேல் சத்தியம் செய்தது மனசுக்கு உறுத்தலாய் இருந்தது.

‘அதுக்கு ஏம்பா சத்தியம் எல்லாம் பண்றே. சவாரி பண்றவன் கிட்டே பத்து ரூபா அதிகம் கேட்டா அவன் ஆயிரத்தெட்டு விஷயம் பேசத் தான் செய்வான். அதுக்காக ஏன் புள்ளைங்க மேல சத்தியம் எல்லாம் பண்றே ? அது சரி உனக்கு எத்தனை பிள்ளைங்க ?’ கொஞ்சம் எரிச்சல் எல்லாம் குறைந்து கேட்டேன் நான்.

‘ரெண்டு பிள்ளைங்க சார். மூத்த பொண்ணு எட்டாவது படிக்குது. இரண்டாவது பையன் ஆறாவது படிக்கிறான். ஸ்கூல் பீஸெல்லாம் ஏறிப் போச்சு சார். ரெண்டு பேரையும் படிக்க வைக்கிறதுக்கே பெரும் பாடா இருக்கு. நல்லா படிக்கிறாங்க. அதனால படிப்பை நிறுத்தவும் புடிக்கல. அவங்களாவது எதிர்காலத்துல நல்லா இருக்கணும்.’ ஆட்டோக்காரர் மெலிதாகச் சிரித்தபடியே சொன்னார்.

‘இது சொந்த ஆட்டோவா ?’

‘இல்ல சார். சொந்த ஆட்டோ வாங்கற அளவுக்கு நம்மகிட்டே எங்கே காசு இருக்கு. இது ஏட்டு பரமசிவத்தோட ஆட்டோ. தினசரி நானூறு ஏட்டைய்யாவுக்கு குடுத்துடணும். நான் அவர் கிட்டே பேசி மாசம் எட்டாயிரம் ரூபான்னு ஒத்துக்க வெச்சிருக்கேன். சம்பாதிக்கிறதுல பாதி அவருக்கே போய்டும். ஆனாலும் அவரு நல்ல மனுசன். சமயத்துல வாரம் பத்து நாள் தாண்டி தான் காசு குடுப்பேன். ஒண்ணும் சொல்ல மாட்டாரு ‘ ஆட்டோக்காரர் சொல்லச் சொல்ல மனசுக்குள் ஏதோ நெருடலாய் உணர்ந்தேன்.

‘ஆமா.. ஒரு நாள் எவ்ளோ சம்பாதிப்பீங்க சராசரியா ?’ கேட்டேன்.

‘என்ன சார். மிஞ்சி மிஞ்சி போனா எழுநூறு ரூபா சராசரி ந்னு வெச்சுக்கலாம். அதுல நானூறு ஆட்டோ சொந்தக்காரருக்கு கட்டிட்டேன்னா மிச்சம் முன்னூறு ரூபா, அதுல பெட் ரோல் செலவு எல்லாம் போக நூறோ, இருநூறோ மிஞ்சும்’ ஆட்டோக்காரர் சொல்ல நான் நம்பாமல் பார்த்தேன்.

‘வெறும் எழுநூறு தான் ஆட்டோ ஓடுமா ? நிஜமாவா சொல்றே’ நம்பிக்கையில்லாமல் கேட்டேன்.

‘சத்தியமா சார். நான் ஆவரேஜ் சொல்றேன். சில நாளைக்கு கொஞ்சம் அதிகமா போகும். சமயத்துல ஒண்ணுமே கிடைக்காது. சிட்டில ஆட்டோ நிறைய ஆய்டுச்சு சார். பாதி போலிஸ்காரங்க ஆட்டோ வாங்கி உட்டு சம்பாதிக்கிறாங்க. நாங்க காலைல இருந்து நைட் வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறதை, அவங்க ஆட்டோவை எங்களுக்கு வாடகைக்கு உட்டு சம்பாதிக்கிறாங்க. போதாக்குறைக்கு இப்போ மக்கள் ஓலா, உபர் ந்னு தான் போறாங்க. ஏதோ ஒரு முதலாளி கோடி கோடியா சம்பாதிக்கிறான். கூடவே நிக்கற என்ன மாதிரி ஏழைங்க வயித்துல அடிக்கிறாங்க’

‘எப்படியும் ரெண்டாயிரம் ரூபாயாவது சம்பாதிப்பீங்கன்னு நினைச்சேன்’ நான் தலையை ஆட்டிக் கொண்டே சொல்ல ஆட்டோக்காரர் மறுத்தார்.

‘இல்லே சார். நாங்க அஞ்சு ரூபா பத்து ரூபான்னு எல்லார் கிட்டேயும் அதிகமா வாங்கினாதான் சார் பொழப்பே ஓடும். நான் என்ன உங்க கிட்டே பத்து ரூபா அதிகமா வாங்கி வீடா கட்ட போறேன். அதெல்லாம் நடக்காது சார். என் பையனுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். அவனுக்கு ஆஸ்பத்திரி செலவு மட்டுமே நேத்திக்கு நூத்தி எண்பது ரூபா. இப்படி மாசம் ரெண்டு செலவு வந்திச்சுண்ணா அவ்ளோ தான்’ ஆட்டோக்காரர் நிதானமாகப் பேசிக் கொண்டே வந்தார். எனக்கு மனசுக்குள் ஏனோ அந்த ஆட்டோக்காரர் மீது இனம்புரியாத ஒரு பாசம் உருவாவது போல் தோன்றியது.

‘நீங்க எங்கே தங்கியிருக்கீங்க ?’

‘நான் கோயம்பேடு சார். அங்கே கொஞ்ச நாள் ஸ்டாண்ட்ல ஓடிட்டிருந்தேன். அப்புறம் ஸ்டாண்ட்ல நிக்கிறதுக்கே ரேட்டை அதிகமாக்கிட்டாங்க. எனக்குக் கட்டுப்படி ஆவல, அதனால கிண்டி பக்கம சவாரிக்கு கிளம்பிடுவேன்’

‘ஓ.. ஸ்டாண்ட்ல நிக்கணுன்னா தனியா பணம் கட்டணுமா ?’

‘ஆமா சார். அது மட்டுமில்லே ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுவாங்க. ஒவ்வோரு சவாரிக்கும் அவனுக்கு கமிசன் குடுக்கணும். ஆனா ஒண்ணு சார். ஒரு மினிமம் காசு கிடைச்சுட்டே இருக்கும் எப்பவும். அதான் ஸ்டாண்ட்ல உள்ள ஒரே கியாரண்டி’ அவர் சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தார்.

‘சார் என்ன பண்றீங்க ?’

‘நான்.. ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பாக்கிறேன்’

‘நல்ல சம்பளம் தராங்களா ?’

கிடைக்கும் சம்பளத்தைச் சொன்னால் என்ன நினைப்பானோ என்ற தயக்கத்தில் ‘ஏதோ வாழ்க்கை ஓடுது..’ என்று சொல்லி வைத்தேன். சொல்லி முடித்ததும் மனசுக்குள் மீண்டும் ஒரு குற்ற உணர்ச்சி முளைத்தது. தனக்கு எவ்வளவு பணம் வரும், அதை என்னென்ன செய்வேன் என்றெல்லாம் விலாவரியாகச் சொன்ன ஒருத்தரிடம் தன்னுடைய சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்லாத மனநிலையை வெறுப்புடன் பார்த்தேன்.

‘பையனுக்கு இப்போ எப்படி இருக்கு’

‘என் பையனுக்கா சார்… பரவாயில்லை. இன்னிக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன். நாளைக்கு ஸ்கூல் போயிடுவான்.. சார்.. இந்த ரைட் எடுக்கவா சார் ?’

‘வேண்டாம்… அந்த வண்டிக்காரன் தெருல ரைட் எடுத்து ஃபஸ்ட் லெப்ட் கட் பண்ணி நேரா போங்க’

‘காலங்காத்தால ரொம்ப பேசி போரடிச்சுட்டேனா சார் ?’ ஆட்டோக்காரர் சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லேப்பா… பொதுவா ஆட்டோக்காரங்க அதிகமா பேச மாட்டாங்க. நீங்க தான் நிறைய பேசினீங்க. ‘ சிரித்தேன்.

‘இல்லே சார். ஆட்டோக்காரங்க பேசுவாங்க. ஆனா வரவங்களுக்கு அதெல்லாம் புடிக்காது சார். நாலு வார்த்தை அதிகமா திட்டாம யாருமே அஞ்சு ரூபா அதிகமா தரதில்லே சார். இப்படியெல்லாம் அநியாயமா சம்பாதிச்சா உடம்புல ஒட்டதுடா, குடும்பம் வெளங்காதுடா ந்னெல்லாம் கூட திட்டிகிட்டே தான் காசு குடுப்பாங்க சார். நான் யாரையும் திரும்ப திட்றதில்லே. எல்லோருக்கும் கஷ்டம் இருக்கத் தான் செய்யும். நமக்கு அஞ்சு ரூபா அதிகம் வேணுங்கிறதுக்காகவே வேற ஒருத்தருக்கு அஞ்சு ரூபா நஷ்டம் பண்ணிடறோம் இல்லையா. அதனால அவங்க திட்றதையெல்லாம் நான் சைலண்டா கேட்டுட்டு வந்துடுவேன் சார்’ அவனுடைய பேச்சைக் கேட்கக் கேட்க இவனிடம் பேரம் பேசியதற்காக ஏனோ வருத்தப்பட்டேன்.

சோனி வேகா செவன்டி டூ இஞ்ச் டிவி பேரம் பேசாமல் ஒரு இலட்சத்துச் சொச்சம் குடுத்து வாங்கிய நினைவு தேவையில்லாமல் வந்து தொலைத்தது. கூடவே அந்த டீவியைக் கொண்டு வர அழைத்த ஆட்டோக்காரரிடம் அவ்வளவு ரூபாய்க்குப் பேரம் பேசியதும்.

‘அதோ அந்த முருங்கை மரம் நிக்கிற வீட்டுப் பக்கமா நிப்பாட்டிடுங்க’

ஆட்டோ மரத்தின் அருகே சென்று ஒரு அரைவட்டமடித்து நின்றது.

‘சார். நீங்க நூற்றி இருபதே குடுங்க சார் போதும். என் கதையைக் கொஞ்ச நேரம் கேட்டுட்டே வந்தீங்களே. நான் அப்படியே விஜயநகர் போயி ஏதாச்சும் சவாரி பாத்துக்கறேன்’ ஆட்டோக்காரர் ஏதோ நினைத்துக் கொண்டே சொன்னார்.

ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினேன்

‘சார். சில்லறை இல்லையே சார்…’ அவர் அவசர அவசரமாக பாக்கெட்டைத் துழாவினார்.

‘இல்லே… வெச்சுக்கோங்க. பையனுக்கு ஏதாச்சும் பழம் வாங்கிக் குடுங்க’ சொல்லிவிட்டு அவர் கையில் பணத்தை வைத்து அழுத்தினேன்.

‘இ..இல்லே சார்…வேணாம்… அப்படின்னா ஒன் பிஃப்டி குடுங்க. போதும்.’ அவர் ஏகத்துக்குத் தயங்கினார்.

‘இதோ பாருங்க. யார் கிட்டே பணத்துக்கு அதிக மரியாதை இருக்கோ அவங்க கிட்டே தான் அது இருக்கணும். ஒரு 500 ரூபா குடுக்கிறதால எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனா உங்களுக்கு அதனால பயன் ரொம்ப அதிகம். காரணம் உங்களுக்கு தான் அதோட அருமை தெரியும்’ தேவையில்லாமல் விளக்கம் கொடுத்துவிட்டு ஆட்டோவை விட்டு வெளியே வந்தேன்.

ஆட்டோக்காரர்களுக்கும், ஜனங்களுக்கும் இடையே, போலீசுக்கும் – பொதுமக்களுக்கும் இடையே விழுந்தது போன்ற ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருப்பதாகத் தோன்றியது. ஆட்டோக்காரர் இன்னும் அந்த ஐநூறு ரூபாயை தயக்கத்துடன் பற்றிக் கொண்டிருந்தார்.

2 thoughts on “ஆட்டோ வேளச்சேரி வருமா ?

  1. m cs says:

    Good one.

    1. writerxavier writerxavier says:

      Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *