நம்பிக்கை

bread-of-life

நம்பிக்கை.

கிறிஸ்தவர்கள் பல வேளைகளில் தடுமாறும் ஒரு விஷயம் நம்பிக்கை. கடவுளிடம் முழுமையாய் நம்பிக்கையை வைப்பதில் தடுமாற்றம். எந்த ஒரு செயலும் சரியாக அமையவேண்டுமென்றால் அதைத் தானே முன்னின்று நடத்தவேண்டும் என்னும் எண்ணம். கடவுளிடம் ஒப்படைப்பதில் வரும் தயக்கம். இந்த நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாகவும், பல தோல்விகளை வெற்றிகள் என்று நாம் கருதிக் கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது.

தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போல, ‘நம்பிக்கை வை’ என்னிடம் என்று பலமுறை கடவுள் சொல்லியும் நாம் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை விட ஒரு படி அதிகமாக நம்மீதே நம்பிக்கை வைத்து விடுகிறோம். எனக்குத் தெரியும் என்பது தான் தெரியாத பலருடைய வாதம் !

மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்களே இனிமேல் என்னைக் காப்பாற்ற யாரால் முடியும் ? என்று சொல்வோமே தவிர, கடவுளால் அது முடியும் என்னும் நம்பிக்கையை வைக்க நம்மால் முடிவதில்லை. ஏன் ?

‘அசைக்க முடியாத நம்பிக்கை உன்னிடம் இருந்தால் இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போய் கடலில் விழு என்று சொன்னால் விழும்’. என்கிறார் இயேசு. ஆனால் யார் சொல்லியும் மலை நகரவில்லை. காரணம் அது நகரப்போவதில்லை என்று நாம் நமக்குள் எழுதி வைத்திருக்கும் நம்பிக்கை.

நம்பிக்கை உன்னிடம் இருந்தால் இந்த மரத்தை நோக்கி நீ வேருடன் பெயர்ந்து போய் கடலில் விழு என்றால் விழும் என்றார் இயேசு. ஆனால் ‘மரமாவது வேருடன் பெயர்வதாவது’ என்று தான் உள்ளுக்குள் நினைக்கிறோமே தவிர, அதை அப்படியே நம்ப மறுக்கிறோம்.

இயேசு வாழ்ந்த காலத்தில் பலரைக் குணப்படுத்தினார், பிறவியிலேயே பார்வையற்றவன், பல்லாண்டுகாலமாக தொழுநோயாய் இருந்தவன் இப்படிப் பலர். அவர்களுடைய குணமடைந்த நிகழ்வை நாம் உற்றுப் பார்த்தால் குணமடைந்தவர்களிடம் இயேசுவின் மீது நம்பிக்கை நிறைந்து இருந்ததைக் காணமுடியும்.

‘உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்று இயேசு பலமுறை சொல்கிறார். அவர் ‘நோயாய் இருக்கிறாயா ? சரி குணமடை ‘ என்று சொல்லாமல் ‘நீ நலம்பெற முடியும் என்று நம்புகிறாயா ?’ என்றுதான் முதலில் கேட்கிறார். நம்பிக்கையில்லாவிடில் நீ அதிசயங்களைக் காணமுடியாது என்று தெள்ளத் தெளிவாக எச்சரிக்கையும் விடுக்கிறார்.

பேதுரு இயேசுவை நம்பியபோது கடல்மீது நடந்தார். அந்த நம்பிக்கை தளர்ந்தவுடன் தண்ணீரில் மூழ்கினார்.

வாழ்வில் நாம் தேவையற்ற பலரிடம் நம்பிக்கை வைத்து முடிவில் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால் நம்பிக்கை வைக்க வேண்டிய கடவுளிடம் நம்பிக்கை வைக்க தயங்குகிறோம்.

நம்பிக்கை இல்லாவிட்டால் உயர்வு இல்லை. மகிழ்ச்சி இல்லை.

மனைவியிடம் நம்பிக்கை வைக்காத கணவன்,
கணவனிடம் நம்பிக்கை வைக்காத மனைவி,
பிள்ளைகளிடம் நம்பிக்கை வைக்காத பெற்றோர்,
இப்படி… நம்பிக்கை குறையும் இடங்களில் எல்லாம் நமக்கு மிஞ்சுவது வருத்தங்கள் மட்டுமே.

காதலனை நம்பி காதலி ஏமாந்து போவது,
மேலதிகாரியை நம்பி தொழிலாளி ஏமாந்து போவது
பைனான்சியரை நம்பி பொதுமக்கள் ஏமாந்து போவது – என
தவறான இடத்தில் நம்பிக்கை வைப்பதால் எழும் சோகங்கள் சொல்லில் அடங்காது.

நம்பிக்கை மிக அவசியம். அதை விட அவசியம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும் என்னும் புரிதல்.

நம்பிக்கையை நிறைவாய் வைப்போம்
வைப்பதை இறையில் வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *