Christianity படரும் நெருப்பு

xavi-wordpress-3

 

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் கொழுந்துவிட்டெரிந்த காட்டுத் தீ சுமார் ஒரு இலட்சத்து முப்பத்து ஏழாயிரம் ஏக்கர் நிலத்தை சுட்டெரித்தது. வானம் அந்தக் கரும் புகையினால் மறைந்து போய்விட்டது, எங்கும் இருள் புகை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்பிழைக்க தங்கள் வீடுகளையும் உடமைகளையும் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்கள். கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டது அந்தக் காட்டுத் தீயை அணைக்க. அந்த முழு காட்டுத் தீயும் ஒரு சிறு பொறியிலிருந்து துவங்கியது தான்.

அந்த சிறு பொறி துவங்கப்படாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?

காலையில் மனைவி சொல்லும் வார்த்தை கணவனுக்கு எரிச்சலூட்டுவதாய்த் தோன்ற, அவர் வெளியில் விளையாடும் சிறுவனைத் திட்டிக் கொண்டே காரை வேகமாக ஓட்டி அலுவலகத்தில் எதிர்படுவோரிடமெல்லாம் எரிச்சலைக் கொட்டி மீண்டும் மாலையில் மனைவியிடம் கொட்டித் தீர்க்கிறார். கோபமும் எரிச்சலும் அந்த முழு நாளையும் தத்து எடுத்துக் கொண்டு எந்தவிதமான மகிழ்ச்சியையும் தராமல் முடிந்துவிடுகிறது. அந்த வார்த்தை வீசப்படாமலேயே இருந்திருந்தால் ! அல்லது வீசப்பட்டவுடன் அணைந்திருந்தால் அந்த நாள் எத்தனையோ இனிய நிகழ்வுகளுக்குக் காரணமாயிருக்கும் அல்லவா ?. அலுவலகத்தில் எத்தனைபேர் இவனுடைய கோபத்தைப் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குச் சென்று வினியோகித்தார்களோ ?

எத்தனையோ கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் காரணமாக மனதைத் தைக்கும் சில வார்தைகளே அமைந்துவிடுகின்றன. அந்த வார்த்தைகள் முளைக்காமலேயே இருந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும் அல்லவா ?

வாழ்வில் நாம் பலவற்றைக் குறித்துக் கவலைப்படுகிறோம் ஆனால் ஒரு மெல்லிய புன்னகையையோ, ஒரு அன்பான வார்த்தையையோ நம்முடைய அருகிலிருப்பவருக்குப் பகிர்ந்து கொடுக்கும் அனுபவத்தைப் பெற பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.

சட்டையில் அடித்துக் கொள்ளும் வாசனைத் திரவியம் வழியெங்கும் வாசனையைப் பரப்புவது போல, நாம் சொல்லும் ஒரு அன்பான வார்த்தை அடுத்த மனதிற்குப் பரவி, அடுத்தடுத்து பரவிக் கொண்டே இருக்கும். மெல்லிய தென்றலைப் போல.

நாம் விடும் அன்பான புன்னகை உதடுகள் மாறி மாறி பயணித்துக் கொண்டே இருக்கும். பூக்கள் மீது அமர்ந்து சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியைப் போல.

நெருப்பு படரும்போது அழிவு விரிவடைகிறது.
புன்னகை பரவும்போது மகிழ்வு விரிவடைகிறது.

விவிலியம் பல இடங்களில் இதைத் தான் அழுத்தமாய்ச் சொல்கிறது. தோழமையுடன் பழகு. அன்புடன் அரவணைத்துக் கொள். புன்னகை பரிசளி. சகோதரனுடன் கொண்டுள்ள பகைமையைக் களை என்றெல்லாம் விவிலியம் நமக்கு அறிவுறுத்துவதன் நோக்கம் ஒரு மகிழ்வான சமுதாயம் மலர வேண்டும் என்பது தான்.

அழிவோ, வாழ்வோ எதுவானாலும் ஒரு சிறு பொறியின் நீட்சியே. சரியானதைத் தேர்ந்தெடுப்போம்
பயணங்கள் அனைத்துமே முதல் சுவடின் நீட்சியே. சரியான திசையில் கால் வைப்போம்.

வார்த்தைகளை வீசும் முன் அவற்றை அன்பில் வார்த்தெடுப்போம்.

கல்லை வீசினால் எலும்புகள் உடையும்.
வார்த்தையை வீசினால் மனம் உடையும்.
உடைக்காதிருப்பதே உத்தமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *