உனக்கு வயசாச்சு

talking-back

முன்பெல்லாம்,
இருசக்கர வாகனம்
உறுமிக் கொண்டு ஓடினால் தான்
ஒத்துக் கொள்வாய்,

காதோடு ஒட்டவைத்த
ஒலிபெருக்கி
காது மடல்களையும்
அதிரவைத்தால் தான்
இசையென்று இயம்புவாய்,

காயப் போட்டிருக்கும்
சேலையைக் கூட
காமக் கண்ணோடு பார்ப்பாய்,

மாலை வேளைகளை
தேவதைகளின் ஊர்வல நேரமென
உற்சாகமாய்
மொழிபெயர்ப்பாய்,

போங்கப்பா,
உங்களுக்கு எதுவுமே புரியாது
என்று
அப்பனுக்கே கலாச்சார
அகரம் கற்றுத் தருவாய்,

கோயிலுக்கு உள்ளே வரவே
முப்பது முறை
முரண்டு பிடிப்பாய்.

இப்போது
உன்னில்
புது மாற்றங்கள் மிதக்கின்றன.

வயதாகிறது உனக்கு !

அமைதியை அங்கீகரிக்கிறாய்
நெரிசல் சாலைகளை நிராகரிக்கிறாய்
வாகனங்களின் ஆயுள் கேட்கிறாய்
பெண்களின் கண்களைப் பார்க்கிறாய்…

மொத்தத்தில்,
அடுத்த தலைமுறையிடம்
அடிவாங்க ஆயத்தமாகிறாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *