THE BFG : விமர்சனம்

bfg_poster
மகிழ்ச்சி.

எந்த விமர்சனம் எழுத ஆரம்பித்தாலும் இந்த வார்த்தை வந்து தொலைக்கிறது. என்ன செய்ய, இனிமையான அவஸ்தையென எடுத்துக் கொள்கிறேன்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு எப்போதுமே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கபாலி அளவுக்கு விமானத்தில் போஸ்டர் அடித்து ஒட்டமாட்டார்கள். ஆனால் உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் படம் வெளியானால் நிச்சயம் திரையரங்குகளை நோக்கிப் படையெடுப்பார்கள்.

மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தில் அவருடைய படங்கள் இருக்கும். ஆனாலும் சினிமா ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். ஜுராசிக் பார்க் எல்லோரையும் அசரடிக்கும் ரகம் என்றால், கடந்த ஆண்டு வெளியான பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் திரைப்படம் தீவிர சினிமா ரசிகர்களை மட்டுமே சுழற்றியடிக்கும் ரகம்.

எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் உணர்வு ரீதியிலான ஒரு பிணைப்பை உருவாக்குவதில் அவர் ஜித்தன். அது மனிதர்களானாலும் சரி, ஏலியன் ஆனாலும் சரி, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட் மூலம் உருவாக்கப்படும் ரோபோ ஆனாலும் சரி, கற்பனையை கிழித்து வரும் டைனோசர்களானாலும் சரி. அந்த உணர்வு இழைகளை உலவ விடுவதில் அவர் எப்போதுமே தோல்வியடைந்ததில்லை.

இந்த திரைப்படமும் அப்படித் தான். ஒரு சிறுமிக்கும் ஒரு ராட்சத உருவ மனிதனுக்கும் இடையேயான நெகிழ்வான ஒரு நட்பைப் பேசுகிறது. பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் திரைப்படத்தில் டாம் ஹேங்க்ஸை தூக்கிச் சாப்பிட்ட மார்க் ரைலன்ஸ் தான் இந்தப் படத்தில் வரும் நல்ல ராட்சசன். இவ்ளோ பெரிய உருவத்தில் அவர் காட்டியிருக்கும் உணர்வு வெளிப்பாடு தொழில்நுட்ப பிரம்மாண்டத்தையும் மீறி வாவ்…வாவ்… என ரசிக்க வைக்கிறது.

கனவு சுற்றும் கற்பனை தேசத்தின் வெளிச்ச மரம் வசீகரிக்கிறது. ஆனாலும், “இன்சைட் அவுட்” திரைப்படத்தில் ஏற்கனவே கனவுகளையும், நினைவுகளையும் கலந்து கட்டிய குமிழிகள் பின்னிப் பெடலெடுத்திருந்ததால் இந்தக் கனவு மின்மினிகள் பிரமிப்பூட்டவில்லை.

ராட்சத மனிதனையே மிரட்டும் அதி பயங்கர ராட்சத மனிதர்களும், அவர்களுக்கும் கதாநாயகனுக்கும் இடையேயான உரையாடல்கள், போராட்டங்கள் எல்லாம் விஷுவல் டிரீட். அதிலும் கடைசிக் காட்சியில் அந்த கெட்ட ராட்சசர்களின் நிலை வெகுவாக ரசிக்க வைக்கும் கற்பனை. Roald Dahl எழுதிய பி.எஃப்.ஜி நூலின் காட்சிப்படுத்தல் தான் இந்தத் திரைப்படம்.

book

கண்களுக்கு முன்னால் விரியும் கற்பனை உலகமும், அதன் அழகும், அதன் அமைதியும் மனதை வருடுகிறது. முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை இடைவேளைக்குப் பின் எக்ஸ்பிரஸ் வேகமெடுத்து சிரிக்கவும், சிலிர்க்கவும் வைக்கிறது.

கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஸ்பீல்பெர்க் எக்ஸ்பர்ட். அதிலும் சிறுவர்களையும், சிறுமிகளையும் நடிக்க வைத்து மிரட்டுவதில் அவர் ஸ்பெஷல் இயக்குனர். அதை அவருடைய இந்த படத்தில் நடித்திருக்கும், ரூபி பெர்ன்ஹில், சிறுமியும் நிரூபிக்கிறார். புன்னகையும், பயத்திலும், மென்மையிலும் அவருடைய கண்கள் நடித்துத் தள்ளுகின்றன.

ஆங்கிலத்தை பிழையாய் உச்சரிக்கும் நல்ல அரக்கனும், அதன் மூலம் வெளிப்படும் உணர்வுகளும் எதிர்பாரா நெகிழ்வு நிகழ்வுகள்.

the-bfg-759

குழந்தைகளாக மாற விரும்புபவர்களும், குழந்தைகளாகவே இருப்பவர்களும் இரண்டு மணி நேரம் ரசனைகளின் கரையில் நடந்து வர இந்தப் படம் கைகொடுக்கும்.

ஸ்பீல்பெர்க் எனும் பிரம்மாண்ட இயக்குனருக்கு வேற வேலை இல்லையா ? நல்ல ஒரு சீரியஸ் படம் எடுக்கலாமே என நினைப்பவர்கள் இன்னொரு முறை பழைய படம் ஒன்றைப் பார்ப்பதே உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *