ஷாரூக்கான் : தேவதைகளின் தேசிய கீதம்

Sharuk

 

தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் பட்டையைக் கிளப்பியது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அதன் வரவேற்பு பிரமாதமாக இருந்தது. அந்த சூட்டோடு சூடாக ஷாரூக்கான் அதே போன்றதொரு வித்தியாசமான ஃபேன்டஸி திரைப்படத்தை எடுக்க நினைத்ததன் விளைவு தான் ரா.ஒன்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் ‘சிட்டி ரோபோ’ வாகவே வருவார் எனும் ஒரு காரணம் போதுமானதாக இருந்தது இதைத் தமிழில் டப் செய்ய. ஷாரூக்கானின் படங்களில் தமிழில் டப் செய்யப்பட்ட முதல் படமும் இது தான். உண்மையில் எந்திரன் திரைப்படம் முதலில் கமலஹாசனுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் ஷங்கர் எதிர்பார்த்தது ஷாரூக்கானை. ஷாரூக்கான் அந்தப் படத்தில் பல மாற்றங்களைச் சொன்னதாகவும், அது ஷங்கருக்கு உடன்பாடில்லை என்றும் மீடியாவில் அலசப்பட்டது.

எந்தப் படத்தின் பாதிப்பும் இல்லாமல், ஆனால் பல படங்களிலிருந்து கிடைத்த ஐடியாக்களின் அடிப்படையில் இந்த படம் உருவானது என்று சொல்லலாம். வீடியோ கேமுக்குள் இருக்கும் வில்லனும், ஹீரோவும் நிஜ உலகத்துக்கு வந்து அதகளம் பண்ணுவது தான் கதை. வீடியோ கேமை உருவாக்கியவர் ஷாரூக்கான்.

ரொம்ப‌ ப‌வ‌ர்புல் வில்ல‌ன், கொஞ்ச‌ம் ப‌வ‌ர் குறைந்த‌ ஹீரோ என‌ டெர்மினேட்ட‌ர் ஸ்டைலில் உருவான‌ க‌தாபாத்திர‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெகுவாக‌ வ‌சீக‌ரித்த‌ன‌. தொழில்நுட்ப‌த்தில் மிர‌ட்டியிருந்த‌ ப‌ட‌த்துக்கு விம‌ர்ச‌ன‌ங்க‌ள் க‌ல‌ந்து க‌ட்டி வ‌ந்த‌ன‌. சூப்ப‌ர் என்றோ, மொக்கை என்றோ எந்த‌ வ‌கையிலும் க‌ட்டி விட‌ முடியாத‌ ப‌ட‌ம் அது.கதை எழுதி இயக்கியிருந்தார் அனுப‌வ் சின்ஹா. ப‌ட‌த்துக்கான திரைக்கதையை எழுத அவருடன் க‌னிகா டிலன் இணைந்தார்.

விஷால் சேக‌ரின் இசையில் வெளியான‌ இந்த‌ப் ப‌ட‌த்தில் ஷாரூக்கானுட‌ன் இணைந்து க‌ரீனா க‌பூர், அர்ஜூன் ராம்பால், அர்மான் வ‌ர்மா ஆகியோர் ந‌டித்திருந்த‌ன‌ர். மிக‌வும் பேச‌ப்ப‌ட்ட‌ ஆடை வ‌டிவ‌மைப்புக‌ளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ச‌ல‌ஸிலுள்ள‌ ராப‌ர் குட்ஸ்மேன் த‌ன‌து குழுவின‌ருட‌ன் செய்தார்.

ப‌ட‌த்துக்கு ப‌ல்வேறு எதிர் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் வ‌ந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் ப‌ட‌ம் வெற்றிய‌டைந்த‌து. 130 கோடி ரூபாய் செல‌வில் உருவான‌ ப‌ட‌ம் உல‌கெங்கும் வ‌சூலித்த‌ தொகை 208 கோடிக‌ள். இருநூறு கோடி ரூபாய் எனும் நிலையைக் க‌ட‌ந்து முத‌லீட்டாள‌ர்க‌ளுக்கு முக‌த்தில் புன்ன‌கை வ‌ர‌வ‌ழைத்த‌ ப‌ட‌ம் இது.

உல‌கெங்கும் இதன் இந்திப் பதிப்பு சுமார் 4000 திரைக‌ளில் வெளியானது. இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் முத‌ல் இந்திய‌ப் பட‌ம் எனும் பெருமை இத‌ற்குக் கிடைத்த‌து. த‌மிழ் ப‌திப்பும் 275 திரைய‌ர‌ங்குக‌ளில் வெளியான‌து. தெலுங்குப் ப‌திப்பு 125 திரைக‌ளில் வெளியாகின.

சீனாவில் 1000, ஜெர்ம‌னியில் 600, அமெரிக்காவில் 344, தென்கொரியாவில் சுமார் 250, யூகே வில் சுமார் 200, ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் சுமார் 75. ர‌ஷ்யாவில் சுமார் 50, கன‌டாவில் சுமார் 50, நியூசிலாந்தில் 25 என உல‌கெங்கும் இந்த‌ப் ப‌ட‌ம் க‌ணிச‌மான‌ திரைக‌ளில் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. இவை த‌விர‌ பாகிஸ்தான், பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்க‌ம் ம‌ற்றும் ஹாங்காங் போன்ற‌ நாடுக‌ளிலும் இந்த‌ திரைப்ப‌ட‌ம் கால் ப‌தித்த‌து. இத‌ன் 3டி ப‌திப்பும் 550 திரைக‌ளில் வெளியான‌து.

தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, நான்கு சர்வதேச விருதுகள் போன்றவை இதன் அங்கீகாரத்தை பறைசாற்றின. எதிர்மறையாய் இதற்கு மோசமான படம் என பரிசு அளித்தவர்களும் உண்டு.

புதிதாக எதையேனும் செய்ய வேண்டும் ஆர்வம் ஷாருக்கானுக்கு அதிகரிக்க இந்தப் படம் ஒரு காரணம். இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாய் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

(ஷாரூக்கான் : தேவதைகளின் தேசிய கீதம் நூலிலிருந்து. தோழமை 9444302967  வெளியீடு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *