அப்துல் கலாம் : ஒரு கனவின் வரலாறு

IMG_0510

 

எளிமைன்னா என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அகராதியைப் புரட்ட வேண்டாம் கலாமின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டினாலே போதும். இத்தனை எளிமையாய் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறாரா என நம்ப முடியாத வியப்புடன் நமது விழிகளை விரிக்க வைக்கின்றன கலாமின் வாழ்க்கை.

கலாம் சின்ன வயதாய் இருக்கும் போது ஏழ்மை அவரது வீட்டுக் கதவைத் தட்டியது. அவரது அம்மா தியாகத்தின் சின்னம். கலாமுக்கு உலகம் தெரியாத காலகட்டம். அதிகாலை நான்கு ம‌ணிக்கே எழும்பி டியூச‌ன் போக‌ வேண்டும். பிற‌கு ஓடிப் போய் நியூஸ்பேப்ப‌ர் க‌ட்டுக‌ளை ர‌யில்வே ஸ்டேஷ‌னிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து வீடுக‌ள் தோறும் கொடுக்க‌ வேண்டும்.

ஒரு நாள் இரவு உணவு நேரத்தில் அம்மா சப்பாத்தி சுட்டுக் கொண்டே இருக்கிறார். கலாம் ஒவ்வொன்றாய் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். சாப்பிட்டு முடித்தபின் கலாமின் அண்ணன் கலாமை வெளியே அழைத்துச் சென்றார். வெளியே சென்ற அவர் சொன்னார்.

“கலாம் என்ன காரியம்டா செய்தே. அம்மாக்கு சப்பாத்தி இல்லை. கொஞ்சம் சாப்பிட்டு எழுந்திருக்கலாம்ல. இப்போ அம்மா சாப்பிட வேண்டிய சப்பாத்தியும் உனக்கு குடுத்துட்டாங்க. இது கஷ்டமான காலம் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ. வீட்ல சாப்ட எதுவுமே இல்லை” என்றார். கலாம் அதிர்ந்து போனார்.

ஓடிப் போய் அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டார். நீண்ட நேரம் விடவேயில்லை. அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. தாயின் தியாகம் என்ன என்பது கலாமுக்குப் புரிந்தது.

அந்த சின்ன வயதுப் பாடங்கள் தான் கலாமுக்கு வாழ்க்கையில் எளிமையைப் போதித்தன. எது ஆசைப்படுகிறோமோ அது நம்மிடம் இருக்க வேண்டிய தேவை இல்லை. எது தேவைப்படுகிறதோ அது மட்டும் இருந்தால் போதும் எனும் முடிவை அவர் எடுக்கிறார்.

குடியரசுத் தலைவராக இருந்த‌ கால‌த்தில் த‌ன‌து கோட்-டை தைக்க‌ தானே க‌டைக்குச் சென்று அள‌வு கொடுப்பார். டெல்லி ஆரிய சமாஜ் சாலையில் ‘ஃபேர் டீல் ஷாப்’ எனும் பெயரில் தையலகம் நடத்தி வரும்  அமர் ஜெயின் தான் கடந்த 20 ஆண்டுகளாக அப்துல் கலாமுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்து வ‌ந்த‌வ‌ர்.

“ரெண்டு தைய‌ல் போடுங்க‌. அப்ப‌ தான் ரொம்ப‌ நாள் உழைக்கும்” என்பாராம் க‌லாம். ஒரு நாள் கூத்துக்கு ப‌ல‌ இல‌ட்ச‌ம் செல‌வ‌ழித்து கோட்டு தைக்கும் த‌லைவ‌ர்க‌ளையே பார்த்து வ‌ள‌ர்ந்த‌ ந‌ம‌க்கு க‌லாமின் இந்த‌ எளிமை உல‌க‌ அதிச‌ய‌மாய் தோன்றுகிற‌து.

க‌லாம் ஆண்டுக்கு இர‌ண்டே இர‌ண்டு புதிய துணிக‌ளை ம‌ட்டுமே வாங்குவார் என்ப‌து இன்னொரு அதிச‌ய‌மான‌ செய்தி.

ஒரு முறை க‌ழுத்தை மூடிய‌ப‌டி இருக்கும் மாட‌ல் கோட் தைக்க‌ச் சொன்னார் க‌லாம். ப‌ய‌ன்ப‌டுத்திப் பார்த்த‌போது அது வ‌ச‌தியாக‌ இல்லை. யாராய் இருந்தாலும் இன்னொரு கோட் தைப்பார்க‌ள். ஆனால் க‌லாம், அடுத்த‌ முறை கோட் தைக்கும் வ‌ரை அதே அசௌக‌ரிய‌த்துட‌ன் தான் இருந்தார். அடுத்த‌ முறை கோட் தைக்க‌க் கொடுக்கும் போது

“க‌ழுத்துல‌ கொஞ்ச‌ம் இடைவெளி விட்டே த‌ச்சுடுப்பா, இது ச‌ரியா இல்லை. இவ்ளோ இறுக்க‌மா க‌ழுத்தைப் புடிச்சா நான் எப்ப‌டி ம‌க்க‌ள் கிட்டே பேச‌ற‌து” என‌ சிரித்துக் கொண்டே சொன்னாராம். அவ‌ருடைய‌ எளிமை ஒரு புற‌ம். ஒரு சின்ன‌ வார்த்தையால் கூட‌ அடுத்த‌வ‌ரைக் காய‌ப்ப‌டுத்தி விட‌க் கூடாது எனும் க‌வ‌ன‌ம் ம‌றுபுற‌ம். விய‌க்காம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.

ஒரு முறை அவ‌ர் இராமேஸ்வ‌ர‌ம் வ‌ந்தார். அப்போது அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவராகவும் பிரதமரின் ஆலோசக ராகவும் இருந்தார். இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அணு விஞ்ஞானி என்பதால் அவர் எங்கு சென்றாலும் கமாண்டோ படையினர் உடன் செல்வார்கள்.

மறு நாள், மதுரை அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு போயி கண்ணை காட்டிட்டு வர்றேன். அங்கும் எனக்கான இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்தால், நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படும். அதனால் தனியாகவே போயிட்டு வந்துடறேன் என்று உறவினர் ஒருவரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் நோயாளிகள் பலரும் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக காத்திருந்தனர்.

தொள தொளா பைஜாமா, ஜிப்பா அணிந்தபடி, தோளில் ஜோல்னா பையோடு நின்ற அப்துல் கலாமை கவுன்டரில் இருந்தவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆபரேஷன் பண்ணணும்னா எவ்வளவு ஆகும்என்று கலாம் கேட்க, 1500 ரூபாய் செலவாகும் என்றிருக்கிறார்கள்.

கலாமிடம் இருந்ததோ ரூ.300தான். அதனால் அவர், என்கிட்ட அவ்வளவு பணம் இல்லியே. செக் தரட்டுமா? என்று கேட்டிருக்கிறார். அவர்களோ, அதெல்லாம் செக் வாங்க மாட்டோம். வேணும்னா இலவச பிரிவுல அட்மிட்டாகி, இன்னைக்கு தங்கிக்கங்க. நாளைக்குத்தான் ஆபரேஷன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ச‌ரி என்று சொல்லி விட்டு இல‌வ‌ச‌ சிகிச்சைப் பிரிவில் சென்று அங்குள்ள‌ கிழிந்த‌ பாய் ஒன்றில் அம‌ர்ந்து அருகில் இருப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் பேச‌ ஆர‌ம்பித்தார். அவ‌ர்க‌ளுக்கும் க‌லாமைத் தெரிய‌வில்லை. ஏதோ ஒரு வயதான பெரியவர் வ‌ந்திருக்கிறார் என‌ அவ‌ர்க‌ளும் பேசிக்கொண்டிருந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ளோடு அங்கேயே த‌ங்கிவிட்டார் க‌லாம். இத‌ற்கிடையில் க‌லாம் எங்கே என‌ பாதுகாப்பு வீர‌ர்க‌ள் ப‌தற்ற‌ம‌டைந்த‌ன‌ர். மறுநாள் காலையில், மதுரை பயணியர் விடுதியில் கலாமை தேடினார்கள் அங்கே இல்லை. த‌க‌வ‌ல் டெல்லிக்குப் ப‌ற‌ந்த‌து. விசாரித்த‌தில் அவ‌ர் அர‌விந்த் க‌ண் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்றிருக்கும் விஷ‌ய‌ம் தெரிந்த‌து.

மருத்துவமனைக்கு விரைந்தனர் கமான்டோக்கள் ச‌ட்டென‌ ம‌ருத்துவ‌ம‌னையைச் சுற்றிலும் க‌மாண்டோக்க‌ள் வந்து குவிந்ததைப் பார்த்ததும் ம‌ருத்துவ‌ ம‌னை வெல‌வெல‌த்த‌து. இச‌ட் பிரிவு பாதுகாப்புப் ப‌டையின‌ர் த‌ங்க‌ள் ஹாஸ்பிட‌லில் வ‌ந்திருப்ப‌தை அறிந்த‌தும் ம‌ருத்துவ‌ர்க‌ளும் ப‌த‌றினார்க‌ள்.

“அப்துல் க‌லாம் ந்னு யாராச்சு வ‌ந்திருக்காங்க‌ளா ? செக் த‌ லிஸ்ட் பிளீஸ் ” ப‌ர‌ப‌ர‌ப்பான‌து ம‌ருத்துவ‌ம‌னை.

“எஸ்.சார்.. நேற்று ஒருத்த‌ர் வ‌ந்தார். இல‌வ‌ச சிகிச்சைப் பிரிவில‌ அனுப்பியிருக்கோம்”

“மை..காட்.. இல‌வ‌ச‌ சிகிச்சைப் பிரிவா.. யூ நோ ஹூ ஹி ஈஸ் ? அவ‌ரு யாருன்னு தெரியுமா ?” ப‌ர‌ப‌ர‌ப்புட‌ன் எல்லோரும் இல‌வ‌ச‌ சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினார்க‌ள்.

அங்கே க‌லாம் ஒரு கிழிந்த‌ பாயில் அம‌ர்ந்திருந்தார். அவ‌ருக்கு அருகே அவ‌ர் கியூவில் நின்று உண‌வு வாங்கிச் சாப்பிட்ட‌ அலுமினிய‌த் த‌ட்டு இருந்த‌து.

“என்ன‌ சார்.. இப்ப‌டி ப‌ண்ணிட்டீங்க‌ளே” டாக்ட‌ர் க‌லாமிட‌ம் ந‌டுங்கும் குர‌லில் கேட்டார்.

“ஏழை நோயாளிகளுக்கு முகம் சுளிக்காமல் சிகிச்சை அளிப்பதை இங்கு நான் பார்த்தேன். வயசானவங்களை நர்ஸுங்க டாய்லெட்டுக்கு கூட்டிட்டு போயி உதவி பண்ணுறதயும் பார்த்தேன். சாமானியனா நான் வரலைன்னா இப்படி ஓர் உன்னதமான இடம் இந்த உலகத்துல இருக்கிறதே எனக்கு தெரியாம போயிருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, அந்த மருத்துவமனைக்கு நன்கொடையாக ஒரு பெரிய தொகைக்கு செக் எழுதி தந்தார்” என‌ க‌லாமின் எளிமையை அவ‌ர‌து உத‌வியாள‌ர் பொன்ராஜ் தெரிவித்தார்.

இன்னொரு முறை மேடையில் உரையாற்ற‌ வேண்டும். அர‌ங்க‌ம் நிர‌ம்பி வ‌ழிகிற‌து. அர‌ங்க‌த்தில் க‌லாமும் அவ‌ருட‌ன் சில‌ரும் செல்கின்ற‌ன‌ர். ந‌டுவே ஒரு அழ‌கிய‌ இருக்கை, த‌லைவ‌ருக்கு. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சாதார‌ண‌ இருக்கை. கலாம் மேடையின் வாசலில் நின்று கொண்டே,

“அதென்ன‌ ஒரு இருக்கை ஸ்பெஷ‌லா இருக்கு ?”க‌லாம் கேட்டார்.

“இல்லை. உங்க‌ளுக்கு, த‌லைவ‌ருக்கான‌ இருக்கை அது” என்றார்க‌ள்.

“நோ..நோ.. அதை உட‌னே மாத்தி ம‌த்த‌ இருக்கை மாதிரி ஒண்ணு போடுங்க‌” என்றார் க‌லாம் பிடிவாத‌மாக‌. அந்த‌ இருக்கை மாற்ற‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ரே அவ‌ர் வ‌ந்து அம‌ர்ந்தார்.

கூடியிருந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான ம‌க்க‌ள் கைத‌ட்டினார்க‌ள். இது அவ‌ர்க‌ள் வாழ்நாளில் பார்த்திராத‌ செய‌ல். க‌லாம் அங்கே பேச‌வே தேவையில்லை. மிக‌ப்பெரிய‌ உரையை த‌ன‌து சின்ன‌ செய‌லின் மூல‌ம் காட்டினார்.

இன்னொரு முறை மேடையில் க‌லாமும், அவ‌ருடைய‌ பாதுகாவ‌ல‌ரும் சென்றார்க‌ள்.

“சார்.. இங்கே உக்காருங்க‌” க‌லாமுக்கு இருக்கையைக் காட்டினார் நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பாள‌ர்.

“இவ‌ருக்கு இருக்கை எங்கே ?” த‌ன‌து பாதுகாவ‌ல‌ரைக் காட்டிக் கேட்டார் க‌லாம்.

“இதோ போட‌ச் சொல்றேன்” என்றார் நிக‌ழ்ச்சி ந‌ட‌த்துப‌வ‌ர்.

“ச‌ரி போடுங்க‌” என்று சொல்லிவிட்டு, அவ‌ருக்கும் இருக்கை வ‌ரும் வ‌ரை நின்று கொண்டே இருந்தார் க‌லாம். பாதுகாவ‌ல‌ர் சொல்லியும் அவ‌ர் கேட்க‌வில்லை. த‌ன‌து இத‌ய‌த்தில் அவ்வ‌ள‌வு தூர‌ம் ம‌னித‌ நேய‌த்தை அவ‌ர் தேக்கி வைத்திருந்தார்.

த‌ன்னைச் ச‌ந்திக்க‌வோ, பேட்டி எடுக்க‌வோ வ‌ரும் ம‌க்க‌ளிட‌மெல்லாம் மிக‌வும் அன்பாக‌ ப‌ழ‌குவ‌து அவ‌ர‌து வ‌ழ‌க்க‌ம். நிச்ச‌ய‌ம் ஒரு காபி, டிப‌ன் எல்லாம் கிடைக்கும். பிஸி நேர‌த்தில் கூட அவ‌ர்க‌ளைக் க‌வ‌னிப்பார். பின் அவ‌ர்க‌ள் கிள‌ம்பும் போது,

“எப்ப‌டி வ‌ந்தீங்க‌ ? திரும்பிப் போக‌ வ‌ண்டி இருக்கா ?” என‌ ப‌ரிவுட‌ன் கேட்ப‌தில் ப‌ல‌ர் அழுதும் இருக்கிறார்க‌ள்.

அப்துல் க‌லாமின் மறைவுக்குப் பின் அவருடைய‌ உடைமைக‌ள் எவையென‌ ஒரு ப‌ட்டிய‌லை வெளியிட்டார்க‌ள்.

புத்தகங்கள் -2500

கை கடிகாரம் -1

முழுகை சட்டை -6

கால் சட்டை -4

சூட் – 3

ஷூ – 1 ஜோடி

ந‌ம்ப‌ முடிகிற‌தா ? ந‌ம‌து வீடுக‌ளில் அல‌மாராக்க‌ளில் மூச்சுவிட‌த் திண‌றிக் கொண்டிருக்கும் சேலைக‌ளும், பேண்ட்க‌ளும், ச‌ட்டைக‌ளும் எத்த‌னை எத்த‌னை ? ச‌ட்டையின் ஓர‌ம் கிழிந்தால் கூட‌ அதை உட‌னே மாற்றி விட‌த் துடிப்ப‌து தான் ந‌ம‌து வ‌ழ‌க்க‌ம்.

த‌ன‌து கோட் கொஞ்ச‌ம் பின்னால் தைய‌ல் விட்டிருக்கிற‌து என்ப‌தை அறிந்த‌ பிற‌கும் அதைப் ப‌ற்றி ச‌ட்டை செய்யாம‌ல் அணிந்து வ‌ந்த‌வ‌ர் தான் அப்துல் க‌லாம்.

கலாமின் சட்டைப்பையில் ஒரு பேனா இருக்கும். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களின் சட்டைப்பையில் இருக்கும் பேனா மோன்ட் பிளாங். ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் என இதன் விலை எகிறும். அது ஒரு அந்தஸ்தின் அடையாளம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகையில் ரோலக்ஸ் வாட்ச், மோன்ட் பிளாங்க் பென் போன்றவையெல்லாம் வேண்டும் என்பது எழுதப்படாத பந்தாக்கள்.

கலாமின் பாக்கெட்டில் இருப்பதோ பத்து ரூபாய் பைலட் பென். ஒரு முறை இதைப்பற்றி ஒரு உயரதிகாரி கிண்டலடித்த சம்பவமும் நிகழ்ந்தது. கலாமின் எளிமை மற்றவர்களை பதறடித்தது என்பது தான் நிஜம்.

இவ்வ‌ள‌வும் ஏன் ? ஒரு டிவி இவ‌ரிட‌ம் சொந்த‌மாய்க் கிடையாது. ஒரு ஏசி கிடையாது. யாரிட‌மும் ப‌ண‌த்துக்காக‌க் கையேந்திய‌தும் கிடையாது. த‌ன‌து வருமானத்தில் ஒரு ப‌குதியை வீட்டுக்கு அனுப்பும் நேச‌ம் நிறைந்த‌வ‌ர்.

த‌ன‌து ஓய்வூதிய‌த்திலும், த‌ன‌க்குக் கிடைத்து வ‌ந்த‌ நூலுக்கான‌ ராய‌ல்டியிலும் தான் அவ‌ருடைய‌ வாழ்க்கை சென்று கொண்டிருந்த‌து.

காம‌ராஜ‌ரின் எளிமையை நேரில் காணும் பாக்கிய‌ம் செய்யாத‌வ‌ர்க‌ள், க‌லாமின் எளிமையைக் க‌ண்டு விய‌க்க‌லாம். காம‌ராஜ‌ரே இன்று இருந்திருந்தால் க‌லாமைக் க‌ட்டித் த‌ழுவிப் பாராட்டியிருப்பார் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

 

அப்துல் கலாம் : ஒரு கனவின் வரலாறு
ஆசிரியர் : சேவியர்
பதிப்பகம் : தோழமை
பக்கங்கள் : 400
விலை : 250

One thought on “அப்துல் கலாம் : ஒரு கனவின் வரலாறு

  1. திலிப் says:

    அருமையான பதிவு நண்பா. How great he was and still humble with full of humanity. Atleast if we can follow his one teaching / way of living, we can be considered as successful. Mind blowing…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *