Working Women – 1 : இண்டர்வியூ தயக்கம்

Job Interview with Smiles

அபினயா உற்சாகமாய் இருந்தாள். கையில் இருந்தது அவளுடைய கனவு நிறுவனத்திலிருந்து வந்திருந்த இண்டர்வியூ கார்ட். இந்த வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும். அவளுடைய மனதில் ஆர்வமும், பதட்டமும் சரி விகிதத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. கூடவே உள்ளுக்குள் ஓயாத ஸ்ருதியாய் ஒரு பயமும், திகிலும் கூட அவளை ஆக்கிரமித்திருந்தன.

அவளுடைய பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த ஆறு மாதங்களாக அவள் பல நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறாள். வேலை கிடைத்தபாடில்லை. எழுத்துத் தேர்வுகளிலெல்லாம் வெளுத்து வாங்கி விடுவாள். ஆனால் இண்டர்வியூவில் தான் அவளை பெரும்பாலும் நிராகரித்து விடுகின்றனர்.

தான் அழகாய் இல்லையோ எனும் ஒரு தாழ்வு மனப்பான்மை அவளுக்குள் நிறையவே உண்டு. அவளுடைய தோழிகள் ரெஷ்மி, ஷீபா எல்லாம் ஜஸ்ட் லைக் தேட் வேலை வாங்கி நான்கு மாதமாகி விட்டது. இத்தனைக்கும் அபினயா தான் கிளாஸ் பர்ஸ்ட் ! ரெஷ்மி, ஷீபா எல்லாருமே அட்லீஸ்ட் 10 பர்செண்ட் மார்க் கம்மி தான். ஆனால் என்ன பளிச் என அழகாய் இருப்பார்கள்.

அபினயாவுக்கும் நல்ல களையான முகம் தான். ஆனால் கொஞ்சம் கருப்பு. சினிமாவில் பெயருக்குத் தான் “கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு” பாட்டெல்லாம். மற்றபடி கருப்பு என்றாலே கொஞ்சம் நிராகரிப்பு தான் வழக்கம். கல்லூரியில் இவள் பின்னால் சுற்ற பசங்க யாரும் இல்லை. அப்படியே யாராவது பின்னால் வந்தாலும் “கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு” என்று கிண்டல்தான் அடிப்பார்கள்.   அவளுடைய தோழிகள் பலரும் கை நிறைய லவ் லெட்டர் வைத்து அலுத்துக் கொள்ளும் போது அபினயா உள்ளுக்குள் பெருமூச்சு விடுவாள்.

அந்த கல்லூரி கால நிகழ்வுகள் தான் அவளுடைய தாழ்வு மனப்பான்மைக்குப் பிள்ளையார் சுழி போட்டது. தான் அழகாய் இல்லையோ எனும் நினைப்பே அவளுடைய வளர்ச்சிக்கு முன்னால் ஒரு தடைக்கல்லாகவும் விழுந்து விட்டது.

இன்னும் சில நாட்களில் இண்டர்வியூ. அபினயாவுக்கு திடீரென ரம்யாவின் நினைப்பு வந்தது. ரம்யா அபினயாவின் கல்லூரி தோழி. செம்புலப் பெயல் நீர் போல என்றெல்லாம் சொல்வார்களே, அந்த அளவுக்கு இருவருடைய விருப்பு வெறுப்புகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். தன்னுடைய மன அழுத்தங்களையெல்லாம் அபினயா கொட்டும் ஒரே இடம் ரம்யாவின் காது தான். ஒரு வகையில் அபினயாவின் கிரியா ஊக்கியே ரம்யா தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரம்யாவை அழைத்தாள் அபினயா. ரம்யா மறு முனையில் உற்சாகமானாள்.

“ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்… எத்தனை மாசம் ஆச்சு பேசி ? ஹவ் ஆர் யூ ?” ரம்யா குதூகலித்தாள்.

“ரம்யா… இன்னிக்கு சாயங்காலம் உன் வீட்டுக்கு வரவா. எனக்கு நிறைய பேச வேண்டி இருக்கு…” அபினயா சொன்னாள்.

“ஏய்..வாடி… இதுக்கெல்லாம் என்ன பெர்மிஷன் கேட்டுகிட்டு ?” உரிமையாய்க் கோபித்துக் கொண்டாள் ரம்யா.

மாலையில், ரம்யாவின் அம்மா போட்டுக் கொடுத்த காபியை போர்ட்டிகோவில் அமர்ந்து சுவைத்துக் கொண்டே இருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டார்கள்.

“ஹேய்.. சொல்லுடி.. என்ன மேட்டர் ?” ரம்யாவுக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

“இல்ல ரம்யா.. எனக்கு இன்னும் வேலை கிடைக்கல. நிறைய இண்டர்வியூ அட்டண்ட் பண்ணினேன். ஆனா ஒண்ணும் கிளிக் ஆகல. நமக்கெல்லாம் வேலை கிடக்குமான்னு ஒரு பயமே வந்துடுச்சு.. அதான் உங்கிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்ன்னு வந்தேன்” அபினயா சொன்னாள்.

ரம்யாவுக்குப் புரிந்து விட்டது. அபினயா இப்படிப் புலம்புவது இது முதல் தடவை அல்ல. கல்லூரியில் படிக்கும் போதும் பல முறை அபினயா உடைந்து போயிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் சாதுர்யமாக ஒட்டவைப்பது தான் ரம்யாவின் வேலையே.

“இதுக்குப் போயா கவலைப்படறே ? உனக்கு சரியான வேலை எதுவோ அது கண்டிப்பா கிடைக்கும். கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காதுன்னு ரஜினி கூட சொல்லியிருக்காரே” ரம்யா நிலமையை இலகுவாக்க சிரித்தாள்.

அபினயா சிரிக்கவில்லை. தனது பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து ரம்யாவிடம் கொடுத்தாள். “இதைப் படிச்சுப் பாரேன்”

ரம்யா பிரித்துப் படித்தாள், “அழகில்லாதவர்களுக்கு வேலைகிடைப்பதிலும், பதவி உயர்வு கிடைப்பதிலும், வேலையைத் தக்க வைத்துக் கொள்வதிலும் சிக்கல் நீடிக்கிறது”.  இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவு. நியூ சயிண்டிஸ்ட் இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.

ரம்யாவுக்கு விஷயம் வெள்ளிடை மலை போலப் புரிந்து போய்விட்டது. ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் தவழ்ந்து கொண்டிருக்கும் அபினயாவுக்கு இந்தச் செய்தி இன்னும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டி விட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யாமல் போனால் கிடைக்க வேண்டிய வேலைகளைக் கூட இவள் பெற முடியாமல் போய்விடும்.

ரம்யா மனம் திறந்தாள். மெல்லப் புன்னகைத்தாள். பேப்பரை மடித்து அவளிடமே திரும்பக் கொடுத்து விட்டுச் சொன்னாள்,

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி உனக்கு எல்லாமே தப்பா தெரியுது. நீ அழகாய் இல்லேன்னு நீயாவே கற்பனை பண்ணிக்கறே. அதனால உன்னால இயல்பா புன்னகைக்கக் கூட முடியவில்லை. இயல்பா இல்லாதப்போ உன்னோட முகம் சோர்வா தெரியுது. இண்டர்வியூ பண்றவங்களுக்கு உன் மேல முழு நம்பிக்கை வர அது தான் தடையா இருக்கு. “ சொன்ன ரம்யா அபினயாவை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“நிக் வுஜிசிக் – என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாயா ?” ரம்யா கேட்டாள்.

“இல்லையே யார் அது ?”

“மனுஷனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதில் அவர் நம்பர் ஒன். உலகம் முழுதும் பறந்து திரிந்து பேசி மக்களை உற்சாகமூட்டுகிறார். நீச்சலில் கில்லாடி, தண்ணியில சர்பிங் செய்வார், கால்ஃப் விளையாடுவார்…” ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அபினயா இடைமறித்தாள்.

“இதுல என்னடி ஆச்சரியம்… ?”

“பொறு… இதோ ஒரு நிமிஷம்” சொல்லிக் கொண்டே ரம்யா தனது கம்ப்யூட்டரை இயக்கி நிக் வுஜிசிக்கின் புகைப்படத்தைக் காட்டினாள். படத்தைப் பார்த்த அபினயா வெலவெலத்துப் போனாள். ஒரு நிமிடம் அங்கே விவரிக்க முடியாத மௌனம் நிரம்பியது.

நிக் வுஜிசிக் எனும் அந்த மனிதருக்கு இரண்டு கைகளும் இல்லை, இரண்டு கால்களும் இல்லை. ஒரு செவ்வகப் பெட்டியின் மேல் முட்டையைக் கவிழ்த்து வைத்தது போல இருந்தது உருவம். கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை எனும் தலைப்பின் கீழ் உற்சாகமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார் மனுஷன்.

“நான் சொல்றது வேற ஒன்னும் இல்லை அபினயா. அழகா இல்லாதவங்களை வேலைக்கு எடுத்துக்கறதில்லைன்னு நீ நினைக்கிறதே தப்பு. தன்னம்பிக்கை இல்லாதவங்களைத் தான் வேலைக்கு எடுக்க மாட்டாங்க. நீ அழகா தான் இருக்கே. அந்த நினைப்பு உனக்கு இருக்கட்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை, இதையெல்லாம் உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இன்னொரு வாட்டி உன் மேல உனக்கு நம்பிக்கை குறையும்போ நிக் வுஜிசிக்கை நினைச்சுக்கோ… அவரால முடிஞ்சா உன்னால முடியாதா ?” ரம்யா சொல்லச் சொல்ல அபினயாவுக்கு உள்ளுக்குள் புது எனர்ஜி பாய்ந்து வந்து நிரம்பியது. முகம் நல்ல பிரகாசமானது.

“ரொம்ப தாங்ஸ் ரம்யா… ரொம்ப ரிலாக்ஸா இருக்கு… கொஞ்சம் இண்டர்வியூ டிப்ஸ் குடேன்… இந்த இண்டர்வியூல எப்படியும் ஜெயிச்சுக் காட்டணும்” அபினயா சொல்ல ரம்யாவுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.

முதல்ல நல்ல திருத்தமா டிரஸ் போடு. ஆபாசமா டிரஸ் போடறவங்களுக்கு வேலை கிடைக்காதுன்னு ஒரு இங்கிலாந்து ஆராய்ச்சி சொல்லுது. ஆபீஸ் மக்களோட கவனச் சிதைவுக்கு அது காரணமாகும்ன்னு பயப்படறாங்க. சரியா டிரஸ் பண்ணாதது தான் நிராகரித்ததன் காரணம்ன்னு 51 சதவீதம் ஆபீசர்கள் சொல்லியிருக்காங்க.  சோ, நல்ல டீசண்டா டிரஸ் பண்ணிக்கோ. முகத்துல ஒரு சிரிப்பும், தன்னம்பிக்கையும் இருக்கட்டும்.

கைகுலுக்கும்போ கான்பிடன்ஸ் அந்த கைகுலுக்கல்லயே தெரியணும். கேக்கற கேள்விக்கு நேரடியா, நேர்மையா பதிலைச் சொல்லு. நிறையப் பேசறது இண்டர்வியூல டேஞ்சர். பேசாம இருக்கிறது அதைவிட டேஞ்சர். அளவா பேசு. தெரியாததைத் தெரியாதுன்னு சொல்றது பெட்டர். மத்த கம்பெனி பத்தியோ வேலை பற்றியோ தப்பா எதுவும் பேசக் கூடாது. எனிவே, நீ இப்போ தான் முதல் முதலா வேலைக்குப் போறே, அதனால உனக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

சரியான நேரத்துக்கு இண்டர்வியூ போயிடு. உன்னோட ரெஸ்யூம்ல என்னென்ன இருக்கோ அதை ரொம்ப கிளியரா தெரிஞ்சு வெச்சுக்கோ. வாயில சூயிங்கம் போட்டுக்கறது, செல்போனை ஆன்லயே வெச்சிருக்கிறது, வியர்த்து வடியறது, பேட் ஸ்மெல் இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களை அவாய்ட் பண்ணு.

அதே போல நீ இண்டர்வியூ போகப் போற கம்பெனி பற்றி நெட்ல கொஞ்சம் சுத்திப் பாரு. உனக்கு உண்மையாவே ஆர்வம் இருக்குன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். ஆனா இதான் என் டிரீம், ஆம்பிஷன் அது இதுன்னு ஓவரா பில்டப் கொடுக்காதே. அப்படிப் பேசற ஆயிரம் பேரை அவங்க பாத்திருப்பாங்க. சோ, ரொம்பவே இயல்பா பேசு.

நீ ஏதாவது கேள்வி கேக்கிறதா இருந்தா கம்பெனி பற்றி, உன்னோட வேலை பற்றி, ரெஸ்பான்சிபிலிடிஸ் பற்றி அல்லது இப்போ நடந்த இண்டர்வியூ பற்றி பேசு. சம்பளம், பெனபிட் விஷயங்களையெல்லாம் முந்திரிக் கொட்டை மாதிரி பேசக் கூடாது.

உன்னோட பலம் என்ன, பலவீனம் என்ன, ஏன் இந்த வேலை உனக்குப் பிடிச்சிருக்கு, என்ன பண்ணிட்டிருக்கே – இதெல்லாம் நார்மல் கேள்விகள். நல்லா யோசிச்சு வெச்சுக்கோ. பக்காவான பதில் தெளிவா நறுக்குத் தெறித்தால் போல சொல்லு. வீக்னஸ் பற்றி பேசும்போ கவனம் வேணும். சில வீக்னெஸ்களை மறைக்கிறது கூட பலம் தான் !

ரம்யா சொல்லிக் கொண்டே இருக்க அபினயாவுக்கு முந்தைய இண்டர்வியூக்களில் தான் செய்த சில தவறுகள் மனதில் நிழலாடின. அதை மறுபடி செய்யக் கூடாது என்று முடிவெடுத்தாள்.

ரம்யாவிடமிருந்து விடைபெறுகையில் அபினயாவின் மனசுக்குள் நம்பிக்கை வந்து நங்கூரமடித்திருந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பின் ரம்யாவின் செல்போன் “அபினயா காலிங்…” எனும் வாசகம் காட்டி சிணுங்கியது.

“ஹே…ரம்யா.. எப்படி இருக்கே…. இந்த வீக் எண்ட் மீட் பண்ணுவோமா ?” அபினயா கேட்டாள்.

“கண்டிப்பா … வீட்டுக்கு வரியா ?” ரம்யா கேட்டாள்.

“ஹே.. வீட்டுக்கு வேணாம் ஏதாச்சும்  ஹோட்டல் போலாம், உனக்கு டிரீட் வைக்கணும்ல ” அபினயா உற்சாகமாய்ச் சொன்னாள்.

“டிரீட்டா ? எதுக்குடி ?”

“வேலை கிடைச்சா டிரீட் வைக்கமாட்டாங்களா என்ன ?” அபினயா சிரிக்க அந்த சிரிப்பின் ரம்யம் ரம்யாவுக்குள்ளும் நிரம்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *