Working Women – 3 : வர்க் – லைஃப் பேலன்ஸ்…

xavier_wlf

 

“எனக்கு ஏழுமணிக்கு முன்னாடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்பிடுங்க” தெளிவான ஆங்கிலத்தில் அழுத்தமாய்ச் சொல்லி விட்டுப் போன மேனேஜரைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது கலைவாணிக்கு.

நேற்றும் இப்படித் தான் கடைசி நேரத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது, மண்ணாங்கட்டி இருக்கிறதென்று சொல்லி எல்லா பிளானிலும் மண் அள்ளிப் போட்டு விட்டான். வீட்ல சினிமா டிக்கெட்டோட காத்திருந்த வின்னேஷைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

“ஸோ..… உனக்கு வேலை தான் முக்கியம். டிக்கெட் வாங்கி வெச்சுட்டு நாலு மணி நேரம் காத்திருந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்.“ விக்கியின் குரலில் ஏகத்துக்கு எரிச்சல்.

“நான் என்ன பண்ணட்டும் விக்கி. கோச்சுக்காதடா. எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் அவன் விடவே இல்லை. இம்பார்ட்டண்ட் கிளையண்ட் கால் ன்னு சொல்லி உக்கார  வெச்சுட்டான்..” கலையின் கண்களில் ஈரம் எட்டிப் பார்த்தது.

“நீ… என்னவோ பண்ணு. இனிமே சினிமா கினிமான்னு என் கிட்டே பேசினே எனக்கு கெட்ட கோபம் வந்துடும்..…”  ஆபீஸிலிருந்து சீக்கிரமே வந்து காத்திருந்தவனுடைய கோபம் குறையவில்லை. எதுவும் சாப்பிடாமல் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு போய் படுத்து தூங்கி விட்டான். காலையிலும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி ஆபீஸ் போய்விட்டான்.

கலைக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருக்காதா பின்னே. ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே போட்ட திட்டம். டிக்கெட்ல இருந்து பாப்கார்ன் வரைக்கும் நெட்லயே புக் பண்ணி வெச்சாச்சு. கடைசி நிமிஷத்துல சிவ பூஜையில் கரடி போல மேனேஜர் வந்து நிற்பான்னு யாருக்கு தெரியும் ?

விக்கியும், கலையும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிகிட்டவங்க. ரொம்ப அன்னியோன்யம், சண்டையெல்லாம் வராது. ரொம்ப அப்செட் ஆனால் மட்டும் தான் விக்கி கத்துவான். நேற்று அவன் ரொம்பவே அப்செட் என்பது அவனுடைய குரலிலும், நடவடிக்கைகளிலும் நன்றாகவே தெரிந்தது.

“என்னடி கலை ? கனவு காண்றியா ?” தோளில் கைவைத்துக் கேட்ட அருணாவின் குரல் தான் அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

“ஹே அருணா ? எப்டிடி இருக்கே ? “  கலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“ஐயாம் ஃபைன். என்னாச்சுடி ? எனி திங் ராங் ? ரொம்ப டல்லா இருக்கே ? ” அருணா கேட்டாள்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லியே…. “ கலை செயற்கையாய்ச் சிரித்தாள்.

“சும்மா கதை விடாதடி… சரி வா… சூடா ஒரு டீ குடிப்போம்…”

கலை எழுந்தாள். இருவரும் அந்த காரிடாரின் நீளமான வராண்டாவில் அமைதியாய் நடந்தார்கள்.

“டீயா ? காபியா ?

“டீ”

“அங்கே உக்காருவோமா ?” அருணா காட்டிய இடத்தில் புல்தரை அழகாய் கத்தரிக்கப்பட்டு ஒரு மெத்தை போல விரிந்து கிடந்தது. டீ கொட்டி விடாமல் கவனமாய் கைகளை அசைக்காமல் அமர்ந்தார்கள்.

“நேத்திக்கு வீட்ல ஒரு பிராப்ளம் டி…படத்துக்கு போலாம்னு ரெண்டு டிக்கெட் வாங்கி வெச்சிருந்தாரு. ஆனா பாரு கடைசி நேரத்துல கான்பரன்ஸ் கால் கழுத்தறுத்துடிச்சு. நான் வீடு போய் சேர்ந்த நேரத்துல படமே முடிஞ்சிருக்கும். விக்கி செம கடுப்பாயிட்டான். நைட் சாப்பிடவே இல்லை. காலையிலயும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்டான். பொதுவா அப்பப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புவான், இன்னிக்கு ஒண்ணும் காணோம். இன்னும் கோபம் தீரல போல……”  கலை படபடவென்று தன்னுடைய கவலையையெல்லாம் கொட்டினாள்.

“அடிப்பாவி…. இவ்ளோ தான் மேட்டரா ? இதுக்குத் தான் மூட் அவுட்டா இருக்கியா ? இதெல்லாம் சிம்பிளா ஹேண்டில் பண்ணலாம்” அருணா வெகு இயல்பாகச் சொன்னாள்.

“இப்பல்லாம் அடிக்கடி இப்படி ஏதாச்சும் நடந்துட்டே இருக்குடி. போன வாரம் புல்லா  வீட்டுக்குப் போகவே பத்து மணி ஆயிடுச்சு. அதுக்கு முன்னாடி மூணு வாரம் விக்கிக்கு பெங்களூர் ஆபீஸ்ல வேலை. எங்களுக்கு ஸ்பெண்ட் பண்ண நேரமே கிடைக்கலடி.. இப்படியே போச்சுன்னா இது எங்கே போய் முடியுமே தெரியல…”

“என்ன கலை, ஆபீஸ்ல அவ்ளோ வேலையா என்ன ? “

“அதையேன் கேக்கறே. படுத்தி எடுக்கறாங்க. டெய்லி ஏதாச்சும் எக்ஸ்ட்ரா வர்க் அது இதுன்னு கழுத்தறுக்கறாங்க… டெய்லி டாஸ்க் முடிக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது” கலை சலித்துக் கொண்டாள்.

“என்ன வேலை குடுத்தாலும் செக்கு மாடு மாதிரி தலையாட்டி கிட்டே ஓ.கே சொல்லுவியா நீ ?”

“பின்னே என்ன பண்ண சொல்றே ?”

“அடிப்பாவி.. மேனேஜர் கிட்டே பேசுடி. ‘நோ’ சொல்றது தான் வேலை விஷயத்துல ரொம்ப முக்கியம். ரொம்ப கஷ்டமான விஷயமும் அது தான். நீ பாட்டுக்கு எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டேன்னா போகப் போக உன்னால எதையுமே ஹேண்டில் பண்ண முடியாம போயிடும். இப்பவே இப்படி கஷ்டப்பட்டா டெலிவரி டைம், குழந்தைங்க பிறந்தப்புறமெல்லாம் என்ன பண்ணுவே ” அருணாவின் குரலில் நிஜமான அக்கறை தெரிந்தது.

“குடுக்கிற வேலையைச் செய்ய முடியாதுன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டாங்களா ? “ கலை வியப்பாய்க் கேட்டாள்.

“ஸீ…. என்னைப் பாரு கலை, ஏழு வருஷமா இந்தக் கம்பெனில வேலை பாக்கறேன். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அப்பப்போ கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை இருக்கும், மற்றபடி எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. காரணம் ரொம்ப சிம்பிள். என்னால செய்ய முடியாத வேலையை நான் ஒத்துக்கவே மாட்டேன்”

“எனக்கு ரொம்ப தயக்கமா இருக்குடி. வேலைல சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல. இதுக்குள்ள எதிர்த்துப் பேசறான்னு நினைச்சுக்கப் போறாங்க “

“நினைச்சா நினைச்சுட்டு போறாங்கடி. அதுக்காக பேசாமலேயெ இருந்துடுவியா ? வர்க் – லைஃப் பேலன்ஸ் ரொம்ப முக்கியம்டி”

“சரியான நேரத்துக்கு வந்து, சரியான நேரத்துக்கு மூட்டையைக் கட்டிட்டு கிளம்பறதெல்லாம் நம்ம வேலைல சாத்தியமே இல்லையே…”

“யம்மா தாயே… வர்க் லைஃப் பேலன்ஸ் அது கிடையாது. வேலைக்கும், வாழ்க்கைக்கும் ஒரு பேலன்ஸ் வரமாதிரி நடக்கறது. தட்ஸ் ஆல். இன்னிக்கு வீட்ல முக்கியமான வேலை இருக்குன்னா, அதுக்கு இம்பார்ட்டன்ஸ் குடு. சில நாள் முக்கியமான ஆபீஸ் வேலை இருக்குன்னா அதுக்கு முக்கியத்துவம் குடு. சிம்பிளா சொல்லணும்ன்னா நாம வேலை பாக்கிறது லைஃபை ஓட்டறதுக்கு. வாழ்க்கையை ஓட்டறது வேலை பாக்கறதுக்கு இல்லை. அப்படிப்பட்டவங்களுக்கு இன்னொரு பேரு இருக்கு வர்க்கஹாலிக்” அருணா கலையின் கண்களையே உற்றுப் பார்த்து புருவத்தை உயர்த்தி அழுத்தமாய்ச் சொன்னாள்.

“பேசறதுக்கு நல்லா தான் இருக்கு. ஆனா டெய்லி ஏதாச்சும் முக்கியமான வேலை ஒண்ணு வந்து தொலையுதே ஆபீஸ்ல..  “

“முக்கால் வாசி வேலையும் அடுத்த நாள் வரைக்கும் காத்திருக்கும். ஒண்ணும் ஆயிடாது. நீ வேணும்ன்னா உக்காந்து யோசிச்சுப் பாரு. குடி முழுகிப் போற மாதிரியெல்லாம் டெய்லி வேலை வராது. அப்படி கதை வுடுவாங்க, அதை நம்பிடாதே”

“யா… தட் மேக் சென்ஸ்… பட், குடுக்கிற வேலை கூட சம் டைம்ஸ் முடிக்கவே முடியறதில்லை” “ கலையின் குரலில் கவலையில் சலிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

“உன்னால வேலையை முடிக்க முடியலேன்னா, உனக்கு அளவுக்கு மீறி வேலை குடுக்கிறாங்கன்னு அர்த்தம். அப்படின்னா நீ லீடர் கிட்டே பேசி தர வேலையை கம்மி பண்ண சொல்லு. ஒருவேளை கம்மியா குடுத்தும் உன்னால முடிக்க முடியலேன்னா உன்னால கான்சண்ட்ரேட் பண்ண முடியலேன்னு அர்த்தம். அதை நீதான் சரி பண்ணணும்”

“தட்ஸ் ட்ரூ… வீட்ல இந்த மாதிரி ஏதாச்சும் அப்செட் ஆயிட்டேன்னா, ஆபீஸ்ல வேலையே ஓடாது”

“அது தப்புடி… வேலை நேரத்துல வீட்டுச் சமாச்சாரங்கள் எதையுமே நினைக்காதே. முழுக்க முழுக்க வேலைலயே கவனமா இரு. அது ரொம்ப முக்கியம். வீட்ல இருந்தா ஆபீஸை நினைக்காதே லைஃபை என்ஜாய் பண்ணு. இது தான் சீக்ரெட் ஆஃப் சக்சஸ். முழுமையான வெற்றிங்கறது வாழ்க்கைலயும், வேலையிலயும் வெற்றி அடையறது தான். புரிஞ்சுக்கோ ” அருணா சொல்ல, தரையிலிருந்த ஒரு புல்லைப் பிடுங்கி அதை விரல்களிடையே வைத்து உருட்டிக் கொண்டே கலை கேட்டாள்

“இல்லேன்னா வேற ஏதாச்சும் கம்பெனி டிரை பண்ணவாடி ? எமக்கு ஏற்ற மாதிரி…”

“உனக்கு ஏற்ற மாதிரின்னா எப்படி ? போன வாரம் ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன். அதாவது வேலை செய்ற பெண்கள்ல 86 % பேருக்கு பெர்பெக்ட்டான வேலை கிடைக்கிறதில்லையாம். ஸோ, பெர்பெக்ட் வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு. இருக்கிற வேலையை நமக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மாத்திக்கணும். அது தான் திறமை ! “

“இருந்தாலும் அவங்க எதிர்பாக்கற அளவுக்கு வேலை செய்ய முடியாம போயிடுதேன்னு ஒரு சின்ன உறுத்தல் இருக்குடி…”

“இத பாரு, உன்னால என்ன செய்ய முடியும் , என்ன செய்ய முடியாதுன்னு உன்னோட மேனேஜருக்கு நல்லாவே தெரியும். புது ஆளு தானே, குடுத்துப் பாப்பமேன்னு நிறைய வேலையை தள்ளி விடறவங்களும் இருக்காங்க. நீ ஏத்துக்கற வேலையை கிளீனா செஞ்சு முடிச்சாலே போதும். சொன்னா சொன்னது மாதிரி செஞ்சுடுவா-ங்கன்னு பெயர் எடுடி. அது தான் வேணும். உனக்கும் லைஃப் ஸ்மூத் ஆயிடும்”

“ம்… சம் டைம்ஸ் எதுக்கு வேலை பாக்கறோம்.. பேசாம ரிசைன் பண்ணிட்டு வீட்ல உக்காந்துடலாமான்னு யோசிக்கிறேன்”

“சும்மா லூசு மாதிரி பேசாதே. இக்கரைக்கு அக்கரை பச்சை கதை தான் இது ! நீயும் நாலு காசு சொந்தமா சம்பாதிச்சா தான் உங்க பியூச்சர் நல்லா இருக்கும். வேலை பாக்கற பெண்கள்ல 53 சதவீதம் பெண்கள் வர்க் லைஃப் பேலன்ஸ் இல்லாம கஷ்டப்படறாங்க. மிச்ச பெண்கள் வேலையை தங்களோட லைஃப் ஸ்டைலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்க. இந்தச் சின்ன மேட்டருக்கே நீ பயந்து ஓடினா எப்படி ? லைஃப்ல எவ்ளவோ சாதிக்க வேண்டியிருக்கு ! டெலிவரி, குழந்தைங்க ன்னு வாழ்க்கை இனிமே தான் சூடு பிடிக்கப் போவுது ! அதனால ஓடி ஒளியற விஷயத்தை இப்பவே மறந்துடு” அருணா சீரியசானாள்.

“ஜாப் ரிசைன் பண்ற ஐடியா எல்லாம் இல்லை. ஆனா, அடிக்கடி அப்படி ஒரு திங்கிங் வருது … ஆபீஸ் வேலை முடிஞ்சு வீட்ல போனா அங்கயும் வேலை இருக்கா, அதான் கஷ்டமா தான் இருக்கு”

“அதுக்கு வீட்டு வேலையை நீங்க ஷேர் பண்ணிக்கணும். உலகத்துல இதெல்லாம் சர்வ சாதாரணம். எங்க வீட்ல என் ஹஸ்பண்ட் தான் காலைல பிள்ளைங்களைக் குளிப்பாட்டி ஸ்கூல் அனுப்புவாரு, காய்கறி கட் பண்ணி குடுப்பாரு. இதெல்லாம் எல்லா இடத்துலயும் நடக்கிறது தான். யூ.கே ல நடத்தின ஒரு ஆராய்ச்சி படி, அங்கே உள்ள ஆண்கள் 50 சதவீதம் வீட்டு வேலையைப் பங்கு போட்டுச் செய்யறாங்களாம். ரெண்டு பேருக்குமே ஆபீஸ் வேலைன்னா, வீட்டு வேலையும் ரெண்டு பேருக்கும் தான்…”

“யா.. என் ஹஸ்பெண்ட் கூட சொல்ற வெலையெல்லாம் செய்வாரு. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லை” கலை விக்கியை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“அப்புறம் என்ன ? பிரச்சினை ரொம்ப சிம்பிள். வீட்டு வேலையைச் செய்ய ஒரு ஆள் கிடைக்குமா பாரு. இப்பல்லாம் அதுக்கே கூட கன்சல்டன்சிங்க இருக்காங்க ! நமக்கு நிறைய நேரம் மிச்சப்படும். நீங்க புதுசா கல்யாணமானவங்க. உங்களுக்கு நிறைய நேரம் தேவைப்படும். அதனால வீக் எண்ட், ஹாலிடேஸ் எல்லாம் முழுக்க முழுக்க அவரோட செலவு பண்ணு. வேலை வரும் போகும். ஆனா குடும்பத்துல இருக்கிற அன்னியோன்யமும், தாம்பத்யமும் ரொம்ப ரொம்ப முக்கியம். அத மட்டும் எப்பவுமே மறந்துடாதே.”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லேடி. அப்பப்போ வெளியே போவோம், இந்த ஆபீஸ் டைமிங் தான் அடிக்கடி பிளானை கெடுத்துடும்……”

“பிளக்ஸி டைமிங் இருக்கான்னு மேனேஜர் கிட்டே கேளு முதல்ல. நானெல்லாம் லேட்டா கான்பரன்ஸ் இருந்தா காலைலயும் லேட்டா தான் ஆபீஸ் வருவேன். ஈவ்னிங் சீக்கிரம் போக வேண்டியிருந்தா காலைல சீக்கிரமே வந்துடுவேன். வடிவேலு சொல்ற மாதிரி எதையுமே பிளான் பண்ணி பண்ணணும்டி” அருணா இயல்பாய் சிரித்தாள். அருணாவின் வார்த்தைகள் ஒரு நாலு டம்ளர் எனர்ஜி டானிக் குடித்தது போல கலைக்குள் உற்சாகமாய் நிரம்பியது. பெரிய ஒரு இடியாப்பச் சிக்கலை ஈசியாக சமாளித்து விடலாம் எனும் நம்பிக்கையும் உள்ளுக்குள் நிரம்பியது. அதே நேரம் அவளுடைய செல்போன் மின்னியது. எஸ்.எம்.எஸ் !

“கலை டார்லிங், ஐம் சாரி…. ஈவ்னிங் டின்னர் வெளியே போலாமா ? ” விக்கி தான் கொஞ்சியிருந்தான். விக்கியின் மெசேஜ் கலைக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகத்தைக்கொடுத்தது.

“வெளியேன்னா ? மாயாஜால் ? ” கலை புன்னகையுடன் பதில் மெசேஜ் அனுப்பினாள்.

“யாருக்குடி சிரிச்சுட்டே மெசேஜ் அனுப்பறே” அருணா எட்டிப் பார்த்தாள்.

“ஹே… இத பாருடி…. வேலை நேரத்துல வேலை செய்யணும்ன்னு நீ தானே சொன்னே. இப்போ பாரு அரட்டை அடிச்சிட்டிருக்கோம்… கிளம்பு.. வேலையைப் பார்ப்போம்” கலை சிரித்தாள் அந்தச் சிரிப்பு உண்மையாய் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *