புளிய மர புராணம்

30-tree-paintings.preview

வீரபாண்டியக் கட்டபொம்மனின் ஆவியைக் கரைத்த புளிய மரமும், சுந்தரராமசாமியின் எழுத்துகளில் நெகிழ்ந்த புளிய மரமும் போல எனக்கும் ஓர் புளிய மர புராணம் உண்டு. இன்னும் நினைவுகளில் காற்றையும், புளியம் பிஞ்சின் வாசனையையும் அனுப்பி வைக்கும் புளிய மரம். என்னைப் பொறுத்தவரையும் அந்தப் புளிய மரம் ஒரு புனித மரம் !

மரம் இயற்கையின் வரம். கிளைகள் ஒவ்வொன்றும் ஆறுதல்க் கரம். இலைகளின் தலைகளில் காற்று வடித்திறக்கும் சுரமும். அதன் இனிமையின் துளிகளில் கரைந்திறங்கும் மனமும் மனிதவாழ்வின் மகத்துவ தருணங்கள்.

வீட்டின் கொல்லைப் பக்கத்தில் இடம்பிடித்ததாலேயே எங்கள் புளிய மரத்துக்கு “வடக்கு வசத்துப் புளிய மரம்” எனும் பெயர் வந்து ஒட்டிக் கொன்டது. ஆஜானுபாகுவாய் கிளை விரித்து, ராட்சக் கழுகு தரையில் அமர்ந்திருப்பது போலக் காட்சியளிக்கும் பிரமாண்டம் அதற்குண்டு.

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே நசுங்கிக் கிடக்கும் பரக்குன்று கிராமத்தில் இருக்கிறது எனது ஓட்டு வீடு. வனத்தின் நடுவே இறக்கி வைத்தது போல வீட்டைச் சுற்றிலும் மரங்களின் இனங்கள் ! நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்,  பெற்றோர், தாத்தா பாட்டி என கூடி வாழ்ந்த வீடு அது. எப்போதும் சத்தம் குறையாத வீடு. சண்டைகளினாலும், சிரிப்பினாலும், நெகிழ்வுகளினாலும் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் அந்த வீட்டின் நிகழ்வுகளைக் கொல்லையில் இருந்து புன்னகையுடன் கவனித்து வந்த மரம் தான் எங்கள் புளிய மரம்.

எனக்கும் அந்த மரத்துக்குமான உறவு எனது பால்யத்தின் ஆனா ஆவன்னாவிலேயே ஆரம்பித்து விட்டது. எங்களுடைய விளையாட்டுத் தளம் அது தான். ஒளிச்சு விளையாடியதும், கூந்தையில் வண்டி செய்து விளையாடியதும், பந்து விளையாடியதும் எல்லாம் அந்த புளிய மரப் பிரதேசத்தில் தான் !

நகராத நாகம் போல நெளிந்து நீண்டு கிடக்கும் வேர்களில் எங்கள் வியர்வைகள் விழாத இடம் விரல்களுக்கு அகப்படாது ! அதிலும் மலைப்பாம்பு போல பெரிதாய் இருக்கும் வேர்கள் மூன்று உண்டு. அவை தான் விளையாடிக் களைக்கும் போது நாங்கள் ஓய்வெடுக்கும் இருக்கைகள். எங்கள் வீட்டில் கூடவே குடியிருந்த ஆடுகளுக்கு அது தான் தறி !

அம்மாவும் அப்பாவும் பள்ளிக்கூட ஆசிரியர்கள். தினமும் அந்த புளிய மரத்தின் நிழலைக் கடந்து தான் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போவார்கள். பல மைல் தூரம் நடக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் அடுத்தடுத்த கிராமங்களில். மலைகளில் நடந்தும், ஓடையைக் கடந்தும் செல்லும் சிலுவைப் பாதை அது.

மாலையில் எங்களுடைய காத்திருப்பு தவமும் அந்தப் புளிய மரத்தின் வேர்களில் தான். தூரத்தில் அம்மாவின் தலை தெரியும் வரை நாங்கள் புளிய மரப் புத்தர்களாய் மாறுவோம். எங்கள் தவத்தைக் கவனிக்கும் புளிய மரம், இதமான காற்றை இறக்கி ஓய்வுக்கு உதவி செய்யும்.

சமையலுக்காய் புளியை நாங்கள் கடையில் வாங்கியதே இல்லை. அந்த ஒற்றை மரம் எங்களுடைய தேவைக்கு பல மடங்கு அதிகமாக காய்த்துக் கொண்டிருந்தது. புளியங்காய் பழுத்து விட்டால் செல்வராஜ் அண்ணனைக் கூப்பிடுவோம். அவர் மரத்தில் தாவி எறி, கிளைகளிடையே நடந்து கிளைகளை உலுக்குவார். பருவப் பெண்களின் கிணற்றடிச் சிரிப்பு போல புளியம் பழங்கள் தரையில் கொட்டும்.

கொட்டிய புளியம் பழங்களை மிதிக்காமல் அவற்றைப் பொறுக்கிச் சேர்ப்பதும் எங்கள் வேலை தான். அந்த சுவாரஸ்யப் பொழுதுகளில் கடவங்கள் புளியம் பழங்களால் நிரம்பி வழியும். அதைக் குத்தி, உள்ளேயிருக்கும் புளியங் கொட்டையை வெளியே எடுப்போம். பின் புளியை உப்புடன் சேர்ந்து மண் பானைகளில் போட்டு ஓரமாய் வைப்பார் பாட்டி. அது அடுத்த ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வரும்.

“பழம் புளி” ( போன வருஷத்துப் புளி) தான் மீன் குழம்புக்கு நல்லாயிருக்குமாம் ! மண் பானையில் பழம்புளி சேர்த்த மீன் குழம்புக்கு இணை என்னவென அகராதிகள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை !

புளி பழுப்பதற்கு முன்பே அதன் காய்களைப் பறித்து, கல்லில் உரசி, காந்தரிப் பச்சை மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிடுவது எனது அக்காக்களின் பிரியத்தின் பட்டியலில் இருந்தது. அந்த காரமும் புளிப்பும் கலந்த சுவை இன்றும் எனது நாவின் ஓரங்களில் ஈரமாய் கொஞ்சம் காரமாய் !

கேரளாவின் மூச்சுக் காற்று உலவிக் கொண்டிருக்கும் கிராமம் என்பதால் ஓணத் திருவிழா அந்த மண்ணின் ஸ்பெஷல். குமரியின் பெரும்பாலான இடங்களில் ஓணம் தான் களைகட்டும். தீபாவளி எங்களுக்கெல்லாம் ஒரு நாள் விடுமுறை மட்டுமே. மற்றபடி ஓடியாடிக் கொண்டாடுவது ஓணப் பண்டிகை தான்.

“மாவேலி நாடு காணான் வருந்நு” என பாடல்கள் அலறும். அத்தப் பூக்களின் மொத்தச் சிரிப்பில் முற்றங்களெல்லாம் முறுவலிக்கும். அப்பா எங்களுக்கு “ஓணக் கோடி” வாங்கித் தருவார். மஞ்சள் நிறத்திலான துண்டு அது. அதைத் தோளில் போட்டுக் கொண்டு நடப்பதில் அப்படி ஒரு சுகம் எங்களுக்கு !

ஓணத்தின் போது கதா நாயகனே அந்தப் புளிய மரம் தான்.

ஓணத்தின் மிக முக்கிய அம்சம் ஊஞ்சல். தென்னம் ஓலையை வெட்டி, அதை நெருப்பில் வாட்டி, அந்த இலைகளைப் பிணைத்து கயிறு செய்வோம். அந்தக் கயிறை ஊஞ்சலாய்க் கட்டி ஆடுவோம். அது தான் ஓணத்தின் சிறப்பு நிகழ்ச்சி. ஓண இரவில் அந்தப் புளிய மரக் கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடுவோம். இரவின் இருட்டை விழிகளின் வெளிச்சம் விரட்டும்.

திகட்டத் திகட்ட ஆனந்தத்தை அள்ளித் தந்த ஊஞ்சல் நாட்கள் அவை. ஒரு நாள் கூட எங்களைப் புளிய மரம் கீழே தள்ளி விடவில்லை. எங்களுடன் சேர்ந்து அந்த மரமும் ஓணம் கொன்டாடும். ஊஞ்சலை உல்லாசமாய் ஆட்டும் !

என்னுடைய கல்லூரி காலம் முடியும் வரை வீட்டிலோ, கிராமத்திலோ தொலைக்காட்சி இல்லை. எனவே எங்களுடைய திருவிழா நேரங்கள் முழுக்க முழுக்க புளிய மரத்தடியில் தான்.  “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” பார்க்க இருக்கைகளில் வேர் விடாத வசந்த நாட்கள் அவை.

எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பேச வேண்டுமெனில் எங்களுடைய வட்ட மேசை மாநாடு மர நிழலில் தான். அந்த மரத்தின் மூட்டில் தான் போய் அமராத நாட்கள் இருந்ததேயில்லை என்பது வியப்பாய் இருக்கிறது. அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து பேசும் போது கொப்பளிக்கும் உற்சாகம் கணக்கில் அடங்காதது. அதற்கு மனம் ஒரு காரணம் எனில், அந்த மரமும் ஒரு காரணமே.

அக்காக்களுக்கு புளிய மர நிழல் தேசம் தான் கதையளக்கும் கலகல புரி. பக்கத்து வீட்டுப் பெண்களும் வந்து ஜோதியில் ஐக்கியமானால் பேசிக் கொண்டே இருப்பார்கள். சிரித்துக் கொண்டே இருப்பார்கள். “பொளுது அணஞ்சுது, வடக்கு பொறத்தில் இருக்காதீங்க” என பாட்டியின் குரல் எழும் வரை அவர்களுடைய குரல் அடங்காது.

பெரும்பாலும் பாறை விளையாட்டு ஜக ஜோராக நடக்கும். “பாற களிச்சாதீங்க, கடன் வரும்” என்று வழக்கம் போல பாட்டி தான் குரல் கொடுப்பார். ஆனால் விளையாட்டின் சுவாரஸ்யம் அதையெல்லாம் அசட்டை செய்யும்.

ஒரு நாள் அம்மா அந்த மரத்தின் மூட்டில் சோகமாய் அமர்ந்திருந்தார். என்னம்மா என்று கேட்டால் கண்கள் கலங்கியிருந்தன. “அப்பாவுக்கு கிட்னி பிராப்ளமாம்” எனும் அதிர்ச்சிச் செய்தி அப்போது தான் விசும்பலுடன் புளிய மர நிழலில் விழுந்து புரண்டது. அதுவரை எப்போதுமே எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த புளிய மரம் அந்த நிமிடத்தில் அமைதி காத்தது. சொல்ல முடியாத சோகத்தை இலைகளெங்கும் தாங்கிய நிலையில் அதன் கிளைகள் அசையாதிருந்தன.

மனதின் இயல்பை மரமும் வெளிப்படுத்துமா ? ஆம் என்று தான் தோன்றுகிறது. மரத்தின் சோகத்தையும், மரத்தின் மகிழ்வையும், மரத்தின் ஆறுதலையும் அனுபவித்த உணர்வு எழுகிறது அசை போடும் நிமிடங்களில்.

வருடங்கள் வழக்கம் போல சீரான வேகத்தில் ஓடி மறைந்து விட்டன. திருமணமாகி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கி இடம் பெயர்ந்தாயிற்று. சத்தங்களோடு மட்டுமே சகவாசம் கொண்டிருந்த அம்மாவுக்கு வீட்டில் உறைந்து கிடக்கும் ஆழ்கடலின் அமைதி அவஸ்தையாகிப் போனது.

வனத்தின் கூடுடைத்து சினக்கும் சென்னையின் தீப்பெட்டி வீடுகளுக்குள் அடைபட அம்மாவுக்கு அணுவளவும் விருப்பமில்லை. பலவீனம் ஒரு காரணம், கிராமத்து வீட்டின் மீதான பற்று ஒரு காரணம். இப்போதெல்லாம் அவருடைய தனிமை கலைக்கும் தோழியாய் மாறிவிட்டது அந்தப் பாசமுள்ள புளியமரம். நகரம் நோக்கி நகரும் மனிதர்களெல்லாம் நகர்ந்து முடிந்தபின், நகராமல் இருப்பது மரங்கள் மட்டும் தானே !

விடுப்பு கிடைக்கும் போதெல்லாம் கிராமத்தின் மடி தேடி ஓடுகையில் தவறாமல் அந்த மரத்தின் அடியில் வந்தமர்கிறோம். வஞ்சகமில்லாத அதன் நிழலில் அமர்கையில் குத்தும்  சரளைக் கற்கள் நினைவுகளைக் கிளறும். அரைடிராயர் பருவம் முதல் நேற்றைய கணத்தில் சிந்திய நினைவுகள் வரை கண்களுக்குள் ஈரமாய் நகரும்.

அந்த புளிய மரம், நாங்கள் கூட்டுக் குடும்பமாய் கும்மாளமடித்த இனிய நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறது. ரகசியமாய் நாங்கள் கசிந்துருகிய கண்ணீர் துணிகளையும் இறுக்கமாய்ப் பற்றியிருக்கிறது. அதன் ஒரு சின்னக் கிளையைக் கூட நாங்கள் வெட்டியதில்லை. கோபத்தின் ஒற்றை வார்த்தையால் கூட அதைத் திட்டியதில்லை. எங்கள் தனிமை வீட்டின் கொல்லைப் புறத்தின் காவல் தோழனாய் நட்ட இடத்திலேயே இன்னும் தனித்திருக்கிறது.

அம்மா தனது முதுமையின் தளர்நடையில் தினமும் அதன் அடிவாரத்தில் போய் அமர்கிறார். ஈர்க்குச்சியால் செய்த துடைப்பத்தால் அதன் சருகு மூடிய நிழல் கூந்தலைக் கோதி விடுகிறார். பின் அமைதியாய் அமர்கிறார் ஒரு தியானம் போல.

“எங்கேம்மா இருக்கீங்க” எனும் எங்கள் செல்போன் விசாரிப்புக்கு, “நம்ம புளிக்க மூட்டில தான் இருக்குதேன்” எனும் அம்மாவின் கிராமத்துப் பதில் எங்களுக்கு நிம்மதியையும் சோகத்தையும் ஒரு சேரக் கொண்டு வரும்.

ஏழு பிள்ளைகளும் ஏழு இடங்களில் வசித்தாலும் அம்மாவுக்கு உற்ற துணையாய் இருப்பது அந்த புளிய மரம் தான். அதன் அடியில் அமர்ந்து கொண்டு மேற்குப் பக்கமாய்ப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் அம்மா. அங்கே தூரமாய்த் தெரிகிறது துயரத்தின் மிகப்பெரிய கண்ணீர் துளி ! அப்பாவின் நினைவிடம்.

சேவியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *