வெள்ளக்காரன் சாமி

ch1.jpg
‘வெள்ளக்காரன் சாமி இறந்துட்டாராம்’ – பரக்குன்று கிராமத்தின் தெருக்களில் இந்த செய்தி பரவியபோது தெருக்களை ஒருவித சோக இருள் கவ்விக் கொண்டது. கடையிலிருந்த முதியவர்களின் நினைவுகளெல்லாம் பழைய நாட்களை நோக்கி ஓடியிருக்க வேண்டும் அவர்களுடைய கண்களில் ஒரு திடீர்ச்சோகம் பற்றிக் கொண்டது.

சந்தையிலும் அந்த செய்தி கூறு வைத்த மீன்களிடையே பரவியது. சில பெண்கள் கதறியழத் துவங்கினார்கள். பலர் உச்சுக் கொட்டினார்கள். சந்தையின் வியாபாரச் சந்தடிகளிலும் ஒருவித கனத்த மௌனம் வந்து தொற்றிக் கொண்டது.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த செய்தி வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும், ரப்பர் மரங்களிடையே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும், மரச்சீனி தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும் மின்னலென பரவியது.

ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒருவிதமான நிறமற்ற சோகம் வந்து சூழ்ந்து கொண்ட அதே வேளையில் பரக்குன்றிலிருந்த அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் துக்க மணி அடித்தது. தாசையன் தன்னுடைய வெள்ளைத் தாடியை மெதுவாகத் தடவியபடி வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவருடைய கண்களில் குதித்து விடத் தயாராய் காத்திருந்த கண்ணீர் துளிகளிடையே கடந்த காலம் விரிந்தது.

பரக்குன்று !. குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமம். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நசுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த கிராமத்தை ஒருகாலத்தில் கண்டெடுத்தவர் அந்த வெள்ளக்காரச் சாமி என்று கிராமத்தினரால் அன்புடன் அழைக்கப்படும் ஜேம்ஸ் தொம்மர் தான்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜேம்ஸ் பரக்குன்று கிராமத்துக்குள் நுழைந்தபோது அது வெறும் காட்டுப் பகுதியாய் மட்டுமே இருந்தது. பரந்து விரிந்த குன்றுகள் இருந்த இடம் பரக்குன்று என்று அழைக்கப்பட்டதாய் காரணப் பெயர் சொன்னார்கள். மேல் துண்டு அணியாத கிராமத்து வாசிகள்.

கிராமத்தில் நிலம் வைத்திருந்த சமூகத்தினர் நிலமில்லாத, வசதியில்லாத ஏழைகளை கொத்தடிமைகள் போல நடத்தி வந்த நிலை ஜேம்ஸ் கண்களை வருத்தியிருக்க வேண்டும். இந்த சமூக ஏற்றத்தாழ்வை சமன்படுத்த ஏதேனும் செய்யவேண்டும் எனும் ஏக்கம் அவருக்குள் முளைத்தது.

தான் பரக்குன்று பகுதியில் குடியேற வேண்டுமெனில் ஒரு ஆலயம் வேண்டுமென்று நினைத்தார் அவர். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆலயம் வந்துவிட்டால், ஜேம்ஸ் அங்கே பணியாற்றத் துவங்கினால் தங்களுடைய பிடி தளர்ந்துவிடும் என்றும், அவர்களை கொத்தடிமைகளாக நடத்தும் வாழ்க்கை நின்றுவிடும் எனவும் கருதிய சமூகத்தினர் அதை தீவிரமாக எதிர்த்தார்கள்.

அப்போது அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்ட ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் தான் தாசையன். கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு தினமும் நடந்தே கேரளாவில் சென்று படித்தவர் அவர். சுருங்கக் கூறின் கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருந்தவர் அவர் ஒருவரே.

ஜேம்ஸ் ஆலயம் கட்ட ஆதரவு தெரிவித்த மக்களை அழைத்து கூட்டம் போட்டார். அவருடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் உடனிருந்தார்.

‘இங்கே ஒரு ஆலயம் அமைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கு உங்களுடைய உதவி வேண்டும். இந்த ஆலயம் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமையும். எல்லா மதத்தினரும் இந்த ஆலயத்துக்கு வரலாம். இந்த ஆலயம் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் முதல் முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்’ ஜேம்ஸ் கூறினார்.

ch2.jpg

சாமி… இங்கே கோயிலு கட்டறது பயங்கர கஷ்டம். ஏமான் மாருவ அதுக்கு ஒத்துக்க மாட்டினும். பிரச்சனை பண்ணுவினும்.

ஏன் பிரச்சனை பண்ணுவார்கள் என நினைக்கிறீர்கள் ?

ஜேம்ஸ் தொம்மரின் கேள்விக்கு கிராம மக்களிடம் சரியான பதில் இல்லை. ஆனாலும் அவர்களுக்குள் ஒரு அச்சம் இருந்தது. தாழ்ந்த நிலையிலேயே தங்களை நினைத்து வந்த சமூகத்தினருக்கு இயல்பாகவே இருக்கும் அச்சமே அது என்பது ஜேம்ஸ் க்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் போய் மக்களிடம் சொல்லுங்கள். இது ஊருக்கான ஆலயம். இந்த ஆலயம் கட்டினால் இங்கே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவேன். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் கிராம மக்கள் அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் இலவசமாய் படிக்க அனுமதி உண்டு என எல்லோடுக்கும் சொல்லுங்கள். ஜேம்ஸ் சாதுர்யமாகப் பேசினார்.

கிராமத்துப் பெண்களைத் தான் அந்த செய்தி முதலில் வசீகரித்தது. தங்கள் பிள்ளைகளும் படிக்க முடியும், அதுவும் இலவசமாய் படிக்க முடியும் என்னும் செய்தி அவர்களுக்குள் ஒரு இனிப்பான மழையாய் பொழிந்தது. பெண்களைக் கவர்ந்த செய்தி ஆண்களை சம்மதிக்க வைத்தது.

கிராமத்தில் ஆலயம் கட்டும் பணி துவங்கியது. கிராமத்து மக்களின் உழைப்பைக் கொண்டே அந்த ஆலயம் எழும்பத் துவங்கியது. உழைக்கும் மக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் ஊதியத்தின் பெரும்பகுதி கோதுமையாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டது !

இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பாகுபாடின்றி மக்கள் வேலையில் ஈடுபட்டனர். பாறையை உடைத்து கற்கள் கொண்டு வரப்பட்டன, மண் ஆழமாகத் தோண்டப்பட்டது, கொட்டாங்குச்சியை எரித்து அதிலுள்ள சாம்பலைக் கொண்டு கருப்பு நிறத்தில் பெயிண்ட் போன்ற கலவை தயாராக்கப்பட்டது. ஆலயம் வேகமாக வளர்ந்தது.

எதிர்பார்த்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லாதது ஜேம்ஸ் தொம்மரை கொஞ்சம் ஆனந்தமும் வியப்பும் அடையச் செய்தது. இரவு வேளைகளில் நிகழ்ந்த ஓரிரு மிரட்டல் சம்பவங்களைத் தவிர ஏதும் அசம்பாவிதங்கள் இல்லை. ஜேம்ஸ் தன்னுடைய முதல் திட்டம் வெற்றியடைந்ததில் மகிழ்ந்தார். அவருடைய முதல் திட்டம் ஆலயமாக இருக்கவில்லை. மக்களின் ஒற்றுமையாக இருந்தது !

‘தாசையா.. சாமிக்க அடக்கத்துக்கு போகல்லியா ?’ குரல்கேட்டு நிமிர்ந்தார் தாசையன்.  கீழ விளை தங்கராஜ் நின்றிருந்தான்.

‘எதுக்கு அடக்கத்துக்கு போயி ? ‘ தாசையன் குரலில் விரக்தி தெரிந்தது.

‘ஏன் அப்படி சொல்றே ? சாமிக்கு நீயின்னா உயிரு.. நீயும் போவலேன்னா நல்லா இருக்காது’

தாசையன் பதில் சொல்லவில்லை. அவருடைய நினைவுகள் பழைய காலத்துக்குள்ளேயே அலைந்து திரிந்தன.

‘சாமி.. கோயிலு கட்டியாச்சு. ஆனா.. பூசைக்கு ஆள் இல்ல. வெறும் கொறச்சு பேரு தான் வராங்க. என்ன செய்யலாம் ?’ தாசையன் கேட்க ஜேம்ஸ் புன்னகைத்தார்.

‘இது சினிமா இல்லை மக்கள் முண்டியடித்துக் கொண்டு வர. வருபவர்கள் வரட்டும். முதலில் அவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும்.. அப்புறம் பார்க்கலாம் மற்ற விஷயங்கள்’ ஜேம்ஸ் குரலில் இருந்த உறுதியினால் விரைவிலேயே ஒரு ஓலை கொட்டகை பள்ளிக்கூடமாக உதவியது.

‘திரு இருதய ஆலயம்’  பக்கத்திலேயே பள்ளிக்கூடம் ஆரம்பமானது.

பள்ளிக்கூடத்துக்கும் பிள்ளைகள் இல்லை. சிறுவயதிலேயே பிள்ளைகளை வயலுக்கும், காட்டுக்கும் அனுப்பி காசு வாங்கிப் பழக்கப்பட்ட பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்கவில்லை.

பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளுக்கு சீருடை, புத்தகங்கள்,மதிய உணவு இலவசம். ஜேம்ஸ் மக்களைக் கெஞ்சினார்.

ஒரு சில பிள்ளைகள் வந்தார்கள். எதிர் பார்த்த கூட்டம் வரவில்லை. தெருக்களில் ஏராளம் சிறுவர்கள் அலைந்து திரிந்தார்கள். பலர் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப் போனார்கள்.

‘பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளுடைய வீட்டுக்கு கோதுமை தருவேன்’ ஜேம்ஸ் அறிவித்தார். அந்த அறிவிப்பு மக்களைக் கொஞ்சம் வசீகரித்திருக்க வேண்டும். மாணவர்கள் வந்தார்கள்.

பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட மகிழ்ச்சி ஜேம்ஸ் முகத்தில் மிளிர்ந்தது.

தினமும் மாலையில் கிராமத்து மலைகளில் ஏறி அனைத்து குடிசைகளையும் சென்று சந்தித்து அவர்களுடன் உண்டு, அவர்கள் கஷ்டங்களைக் கேட்பது அவருடைய பணி. அந்த வீடு சந்திப்பு நிகழ்ச்சி ஜேம்ஸ்க்குள் ஒரு பொறியை எழுப்பியது.

பெரும்பாலானோர் பனையேற்றுத் தொழில் செய்கிறார்கள். ஆனால் அதற்குரிய ஊதியம் இல்லை. ஏமான்மார் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதியமே கிடைத்தது. விற்பனை செய்யுமிடத்திலும் சரியான வருவாய் இல்லை. இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும். ஜேம்ஸ் யோசித்தார்.

‘ஊரில் ஒரு பனஞ்சீனி ஆலை அமைப்போம். நான் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். ஜெர்மனியிலிருந்து பனஞ்சீனி ஆலைக்குரிய உபகரணங்கள் கொண்டு வருவோம். ‘ ஜேம்ஸ் மக்களிடம் சொல்ல மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.

பனஞ்சீனி ஆலையும் சில வருடங்களில் அமைந்தது.

பனஞ்சீனி ஆலை அமைத்த போதுதான் ஜேம்ஸ் தொம்மரை பிரச்சனைகள் விஸ்வரூமபமெடுத்துத் தாக்க ஆரம்பித்தன.  கிராம மக்களின் உழைப்பை மூலதனமாகக் கொண்டு சுரண்டல் சாலைகளாய் வியாபித்திருந்த செங்கல் சூளைகளும் விவசாய நிலங்களும், பனையேறும் தொழிலும் முதலாளி வர்க்கத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி ஒரு சமத்துவ சமுதாயத்துக்குள் விழுமோ எனும் பயம் முதலாளிகளை ஆக்கிரமித்தது.

ஜேம்ஸ் எல்லாரையும் கிறிஸ்தவராக்குகிறான். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும், நமது ஆதிக்கம் அற்றுப் போகும். வெளிநாட்டுப் பணம் கொண்டு வந்து இந்துக்களை அழிப்பான், இந்துக் கோயில்கள் இடிப்பார்கள் என்று ஒரு புரளியைப் பரப்பிவிட்டார்கள்.

புரளிக்கு புரவியை விட வேகம் அதிகம். அது மிக வேகமாகப் பரவி, ஊரில் இருந்த ஒற்றுமையின்  வேர்களில் கோடரியாய் இறங்கியது.

ஊருக்குள் விஷயம் விஷமாய் பரவிக் கொண்டிருந்தபோது பனம் ஓலை மடலை மூலதனமாகக் கொண்டு ஒரு நார் ஆலை உருவாக்கும் சிந்தனையில் அமர்ந்திருந்தார் ஜேம்ஸ்.

பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பனை ஓலை பாயாகவும், பனை ஓலை கூடைகளாகவும், கடவங்களாகவும் மாறிக்கொண்டிருக்க ஓலையின் அடிப்பாகமான மடல் மட்டும் வெறும் விறகாய்ப் போவதை விரும்பாமல் அதை முதலீடாகக் கொண்டு நாற்றாலை ஒன்றை நிறுவவேண்டும் என்பது அவருடைய அடுத்த கட்ட சிந்தனையாய் இருந்தது.

‘தாசையா….’  தங்கராஜ் மீண்டும் மௌனத்தைக் கலைத்தான்.

‘போயிட்டு வா தாசையா… சாமியோட ஆவி உன்னைப் பாக்காம வருத்தப்படும்…’ தங்கராஜ் மீண்டும் சொன்னான்.

சற்றுநேரம் தங்கையனைப் பார்த்துக் கொண்டிருந்த தாசையன் சாணம்  மெழுகியிருந்த திண்ணையிலிருந்து கீழிறங்கினார். கயிற்றில் கிடந்த டவலை எடுத்து முகத்தைத் துடைத்தார். உள்ளறைக்குச் சென்று வேட்டியைக் கட்டிக் கொண்டார். ஒரு சட்டையை எடுத்து மாட்டினார்.

‘டேய்.. சாமிக்க அடக்கத்துக்கு போறேன்’ உள்பக்கம் நோக்கி குரல் கொடுத்தார் தாசையன். மனைவியை ‘டேய்’ என்று அழைப்பதே அவருடைய வழக்கமாய் இருந்தது.

‘சுங்காங்கடையில இல்லியா அடக்கம் ? அங்க வரைக்கும் போறியளா ? எப்ப வருவிய ? ‘ மனைவி சமையல் கட்டிலிருந்து குரல்கொடுத்தார். தாசையன் பதில் ஏதும் சொல்லாமல் முற்றத்தில் இறங்கி நடந்தார்.

சரளைக் கற்கள் காலை குத்தும் உணர்வு கூட இல்லாமல்  அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து ஓடையைத் தாண்டி ரோட்டுக்கு வந்தார் தாசையன். ரோடு என்றால் பெரிய ரோடு இல்லை. சற்றே அகலமான ஒரு ஒற்றையடிப் பாதை. எப்போதாவது ஒரு பஸ் வந்து போகும். அதையும் அவ்வப்போது குழித்துறை ஆற்றிலிருந்து மணல் அள்ளிக்கொண்டு வரும் லாரியின் சத்தத்தையும் தவிர்த்தால் நிசப்தமான சாலை.

இரண்டு குடிசைக் கடைகள், ஓலைக் கூரையுடனும் இரண்டு பாட்டில்களில் சர்பத் மற்றும் நாரங்காய்கள், கூரையில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு குலை வாழைப்பழத்தோடு யாருடைய வருகைக்கோ காத்திருக்கும். சந்தை வேளைகளில் வெற்றிலையோ, பழமோ, நாரங்கா வெள்ளமோ செலவாகும் வாய்ப்பு உண்டு.

தாசையன் அந்தக் கடைகளின் பின்புறம் வழியாக நடந்தார்.

கடைகளுக்குப் பின்புறம் கிடந்தது சிதிலமடைந்த கட்டிடம் ஒன்று. அந்தக் கட்டிடத்தின் அருகே வந்து சற்று நேரம் மௌனமாய் இருந்தார் தாசையன். கட்டிடத்திற்கு உள்ளே குப்பைக் கூளங்கள் நிறைந்து வழிந்தன. பல்லியும் ஓணானும் சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் தாசையன். ‘திரு இருதய பனஞ்சீனி ஆலை’ போர்ட் முக்கால் வாசி எழுத்துக்கள் அழிந்து போயிருக்க மிச்சம் மீதியுடன் விழுந்து கிடந்தது.

அதற்கு அந்தப் பக்கமாய் இருந்தது உடைந்து மண்ணோடு மண்ணாக பனம்தும்பு ஆலை. பனை மட்டையிலிருந்து நார் தயாரிக்கும் இடம்,

‘தாசையா.. எந்த கஷ்டம் வந்தாலும். இந்த தொழிற்சாலைகள் முடங்கிவிடக் கூடாது. நமது மக்களின் வியர்வையை ஏதோ முதலாளி உறிஞ்சிக் கொழுக்கக் கூடாது. அதுக்குத் தேவை இந்த தொழிற்சாலைகள். நம்ம மக்கள் அவர்களுடைய வியர்வைக்கு ஏற்ற கூலியைப் பெற்வது மட்டுமல்ல, நியாயமான வருவாயையும் பெறவேண்டும் அதுக்கு இந்த இரண்டு தொழிற்சாலைகளும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்’ ஜேம்ஸ் சாமியார் சொல்வது தாசையனின் காதுகளில் எதிரொலித்தது.

‘இந்த சாமியால நமக்கு பெரிய பிரச்சனை. ஏமான் மாரு யாரையும் வேலைக்கு வரவேண்டாம்ன்னு சொல்றாங்க. சாமி வேணும்ன்னா சாமி கிட்டே போங்க. எங்க கிட்டே வரவேண்டான்னு விரட்டுறாங்க. நமக்கு வேலை முக்கியம். சாமிக்க பேச்சைக் கேட்டா நாம ஒருநாள் பட்டினி கிடக்க வேண்டியது தான்’  ஊரில் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

‘ஆமா.. இந்த சாமி ஒரு நாள் போயிடுவாரு. அப்புறம் நாம என்ன பண்றது ?’

‘பேசாம இவரை இந்த இடத்துல இருந்து மாற்றிடலாம். கோட்டாறு மறைமாவட்டத்துக்குச் சொன்னா அவங்க இவரை மாத்திடுவாங்க’

இருபது வருடங்கள் பரக்குன்று மக்களின் வளர்ச்சிக்காக சுயநலமின்றி உழைத்த ஜேம்ஸ் தொம்மருக்கு எதிராக கிராமத்தில் தங்கள் பிரதிநிதிகளை வலுவாக உருவாக்கியிருந்தார்கள் முதலாளிகள்.

பேச்சு வலுவடைந்தது. ஊர் இரண்டு குழுவாக மாறியது. ஜேம்ஸ் பரக்குன்றில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று விவாதங்கள் அனல் பறந்தன. கிராமத்தில் இருந்த ஒற்றுமைக்கு ஒரு பேரிடியாக வந்தது அந்த பிரச்சனை.

இந்த விவாதங்களினால் மனமுடைந்து போன ஜேம்ஸ் ஊருக்கு மத்தியில் வந்து நின்றார்.  ஊர் மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘ஊரின் அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே நான் போராடினேன். பள்ளிக்கூடம் இன்று எட்டாம் வகுப்பு வரை இருக்கிறது. நூற்பாலை இருக்கிறது, பனஞ்சீனி ஆலை இருக்கிறது. நான் நினைத்த எல்லாம் இருக்கிறது. ஆனால் ஒன்றைத்தவிர. அது தான் ஊர் மக்களின் ஒற்றுமை. ஆலயம் கட்டியபோது உங்களுக்கு இருந்த ஒற்றுமை, பனஞ்சீனி ஆலை உருவாக்கிய போது உங்களுக்கு இருந்த ஒற்றுமை, பள்ளிக்கூடம் கட்டியபோது உங்களுக்கு இருந்த ஒற்றுமை இப்போது இல்லை. நான் ஒற்றுமையை விரும்புபவன்.  ஒற்றுமைக்குப் பங்கம் என்னால் தான் வருகிறது என்றால் நான் இங்கே இருக்கமாட்டேன்’

ஜேம்ஸ் தொம்மர் சொல்ல அவருடைய ஆதரவாளர்கள் குரல்கொடுத்தனர்.

‘நீங்க ஏஞ்சாமி போணும். நீங்க போவண்டாம். கிறுக்குப் பயலுவ ஏதாச்சும் சொல்லுவினும்’

ஜேம்ஸ் இடைமறித்தார்,’ இல்லை. அடுத்த ஞாயிற்றுக் கிழமை உங்கள் பங்கிலிருந்து விடைபெறுகிறேன். வேறொரு பங்குப் பணியாளர் உங்களிடம் வருவார். இது என்னுடைய இறுதி முடிவு. இது சம்பந்தமாக இனிமேல் ஊரில் எந்தப் பேச்சும் எழவேண்டாம்’

சொல்லிவிட்டு ஜேம்ஸ் கூட்டத்தினரிடமிருந்து விலகினார். கூட்டத்தினரிடம் சலசலப்பு. மகிழ்ச்சியும், அழுகையுமாக அந்த கூட்டம் கலைந்தது.

இல்லம் சென்ற ஜேம்ஸ் கண்ணீர் விட்டார். தலை குனிந்து தன்னுடைய பணிகள் பாதியிலேயே நின்று விட்டதற்காகவும். தான் செய்த பணிகளுக்காக கடைசியில் கிடைக்கும் அவமரியாதைகளுக்காகவும் அவருடைய உள்ளம் வெகுவாக வலி கண்டிருந்தது.

‘சாமி…’ பாதிரியார் கண் திறந்து பார்க்க முன்னால் தாசையன்.

‘வா.. தாசையா… ‘

‘சாமி.. நீங்க நிஜமாவே போறீங்களா ?’

‘ஆமா… என்னால ஊருக்கு பிரச்சனை வேண்டாம். நான் சுங்கான்கடை பக்கத்துல இருக்கிற துறவியர் மடத்துக்குப் போகிறேன். இந்த கிராமத்திலேயே சாகும் வரை இருந்து, இறந்து, இதே பங்குக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படணும்னு நினைச்சேன். ஆனா அது முடியல… ‘ ஜேம்ஸ் சொல்லச் சொல்ல அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

‘தாசையா… என்ன இங்க வந்திருக்கே ? சாமிக்க அடக்கத்துக்கு போகலையா ‘ மீண்டும் ஒரு குரல் தாசையனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

தாசையன் ஜேம்ஸ் கட்டிய ஆலயத்தின் பின் பக்கமாக அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் நின்றிருந்தார். கல்லறைத் தோட்டத்தின் இடது ஓரமாக நின்ற செம்பருத்திச் செடியின் அருகே அமர்ந்து கைகளால் கல்லறை அளவுக்கு ஒரு சதுரம் வரைந்து கொண்டிருந்தார்.

தாசையன் நிமிர்ந்தார். ‘ஆமா.. இன்னிக்கு ஜேம்ஸ் சாமியாரோட அடக்கம் இல்லையா.. அதான் வந்திருக்கேன் ‘ எதிரே நின்றிருந்த சினேகப்பூ
நெற்றி சுருக்கினாள்.

‘சாமியாரோட அடக்கம் அங்கே சுங்காங்கடையில. அவரை இங்கே அடக்கம் செய்யக் கூடாதுன்னு பங்கு மக்கள் ஏற்கனவே சொல்லியிருந்தாங்களே.. ‘ சினேகப்பூ சொன்னாள்.

‘ம்.. அது நம்ம மக்கள் அவருக்குக் காட்டிய நன்றிக்கடன். அவருடைய உடலை அவங்க எங்கே வேணும்ன்னாலும் அடக்கம் செய்யட்டும். ஆனா அவரு அடக்கம் செய்யப்பட விரும்பிய இடம். இதோ.. நான் வரைஞ்சிருக்கிற இந்த சதுரம் தான்’

சினேகப்பூ புரியாமல் பார்த்தாள்.

நான் சாமியாரை இங்கே அடக்கம் பண்ணிட்டிருக்கேன். அவரோட உயிர் இங்கே தான் உலவிட்டிருக்குன்னு என்னோட உள் உணர்வு சொல்லுது. அவரை நான் மானசீகமா இங்கே அடக்கம் பண்றேன். அவர் விரும்பிய இடத்தில.. அதற்குமேல் சொல்ல முடியாமல் தாசையன் விம்மினார்.

காற்று வேகமாக வீச ஊசியிலை மரங்கள் அடந்த அந்த கல்லறைத் தோட்டம் துயரம் கூட்டியது. மரங்களுக்கிடையே அவர் கட்டிய ஆலயம் மௌனமாய் நின்றிருந்தது

( த சண்டே இந்தியனில் – எனது சிறுகதை )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *