உலக அதிசயங்கள் : மீட்பர் கிறிஸ்து சிலை

மீட்பர் கிறிஸ்து சிலை (Christ the Redeemer)


பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இயேசு சிலை புதிய உலக அதிசயமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலையின் உயரம் 130 அடி. எழுநூறு டன் எடையுள்ள இந்த வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான்.

இந்த சிலை எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் !

சிலையின் அடியில் சுமார் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய வகையில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. ஆன்மீகவாதிகள் உள்ளே சற்று நேரம் அமர்ந்து செல்கின்றனர்.

வானத்திற்கும் பூமிக்கும் இடையே கம்பீரமாய் நிற்கும் இந்தச் சிலை தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) மலையில் அமைந்துள்ளது.

1931ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிலைக்குப் பின்னால் பல வரலாற்றுச் சுவாரஸ்யங்கள் உள்ளன.

பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்த மலைக்கு விவிலியப் பெயரான “த பினாக்கிள் ஆஃப் டெம்பேஷன்” (சோதனையின் உச்சம்) எனும் பெயரை வைத்ததிலிருந்தே இந்த மலைக்கு ஒரு ஆன்மீகப் பார்வை கிடைத்தது எனக் கொள்ளலாம்.

ஆனாலும் பெயர் சூட்டப்பட்டதைத் தவிர வேறேதும் அந்த மலைக்கு நிகழ்ந்து விடவில்லை.

ஒரு நூற்றாண்டிற்குப் பின் அதற்கு தற்போதைய கொர்கோவாடோ எனும் பெயர் சூட்டப்பட்டது.

1859ம் ஆண்டு பெட்ரோ மரியா பாஸ் எனும் பாதிரியார் இந்த மலையின் அழகில் சொக்கிப் போய் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் சின்னம் உருவாக்கினால் நன்றாக இருக்குமே என ஒரு சிந்தனையைக் கொளுத்திப் போட்டார்.

அரசி இஸபெல் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஒரு ஆன்மீகச் சின்னம் என்பதே அவருடைய அப்போதைய எண்ணமாக இருந்தது.

அது நல்ல ஐடியாவாச்சே அந்த மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டிய பாதையை நான் பார்த்துக் கொள்கிறேன். என்று சொன்ன டாம் பெட்ரோ என்பவர் அந்த மலையின் உச்சிக்குச் செல்வதற்காக ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார் 1921ம் ஆண்டு வரை !

காலம் கடந்தபின் அந்த அரசியைப் பெருமைப்படுத்தும் சின்னம் எனும் கனவு நிறைவேறவில்லை. ஆனால் அங்கே இயேசுவின் சிலை ஒன்றை அங்கே நிறுவினால் அருமையாக இருக்குமே என்று கனவு வேறு வடிவமெடுத்தது.

1922ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் பணிகள் துவங்கின.

சிலை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என பல்வேறு கற்பனைகளும், சிந்தனைகளும், விவாதங்களும் பரிமாறப்பட்டன.

நல்ல கலை நயத்துடனும், பொருளுடனும், கற்பனை வளத்துடனும் ஒரு சிலையை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஏராளமானோர் பல்வேறு விதமான வகையில் இயேசுவின் சிலை எப்படி இருக்கவேண்டும் என வடிவமைத்தனர். சிலுவையில் தொங்கும் இயேசு, உலகை உள்ளங்கையில் வைத்திருக்கும் இயேசு, விண்ணகம் செல்லும் இயேசு என ஏராளம்.

இந்தப் போட்டியில் வென்றது ஹெய்டர் டா சில்வா கோஸ்டா(Heiter da Silva Costa )  . அவருடைய கற்பனையில் இயேசு இரு கைகளையும் விரித்துக் கொண்டு மலைமேல் நின்றார்.
1922ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருடைய இந்த கற்பனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவருடைய மேற்பார்வையின் கீழ் பணி நடைபெறவேண்டும் என முடிவானது.

பொதுமக்களிடமிருந்து இந்த மாபெரும் முயற்சிக்கான பண உதவிகள் பெறவேண்டுமென முடிவெடுக்கப்பட்டு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. முக்கால் வாசிக்கு மேல் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நிரம்பி வழியும் பிரேசிலின் மையப்பகுதியில் பொருளாதாரம் போதுமான அளவு பெறப்பட்டது.

இயேசுவின் சிலையின் சின்ன வடிவம் ஒன்று செய்யப்பட்டது. அதன் வடிவம், மாற்றங்கள் என விவாதிக்கப்பட்டன.

 

1926ம் ஆண்டு பணி ஆரம்பமானது.

இன்றைக்கு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் இரயில் பாதை இருக்கும் அதே இடத்தின் வழியாக மலையுச்சிக்கு கட்டுமானப் பணிக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

சிலுவை வடிவிலான இயேசுவின் சிலை இது. கான்கிரீட் கொண்டு இதைக் கட்டுவதே சிறந்தது என முடிவெடுக்கப்பட்டது. சிலையின் வெளிப்பாகம் காலநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக மார்பிள் கொண்டு வடிவமைக்கலாம் என தீர்மமனிக்கப்பட்டது.

கார்லோஸ் ஓஸ்வல்ட் எனும் ஓவியர் இயேசுவின் சிலை எப்படி இருக்க வேண்டுமெனும் நுணுக்கங்களுடன் வரைந்து உறுதிப்படுத்த, பிரஞ்ச் சிற்பி பால் லாண்டோஸ்கி இந்த சிலை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார்.

பணி மும்முரமாய் நடைபெற்றது. வருடங்கள் உருண்டோடின. பாதைகள் செம்மைப்படுத்தப்பட்டன. சிலை பல பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு ரயில்வே பாதை மூலம் கொண்டு சென்று ஒன்று சேர்க்கப்பட்டது. சிலை பணி நிறைவுற்றது.

1931 அக்டோபர் 12 சிலை திறப்பு விழாவைச் சந்தித்தது.

அதன் பின் காலமாற்றத்துக்கு ஏற்ப இடமும் வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்திலுள்ள நியூ ஓப்பன் வேர்ல்ட் கார்ப்பரேஷன் எனும் அமைப்பினால் ஜூலை 7, 2007ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் அறிவிக்கப்பட்டது. பத்து கோடிக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் உலக அதிசயம் எனும் சிறப்பைப் பிடித்திருக்கிறது இந்த இயேசு சிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *