சைக்கிள்

ரண்டேல் மால் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் இல் அமைந்திருந்த அந்த வணிக வளாகம் அந்தப் பதினோரு மணி மதியப் பொழுதில் பரபரப்பாய் இருந்தது.

ஆஸ்திரேலியா எனக்குப் புதுசு. அவசரமாக ஒருமாதப் பயணம் என்று என்னுடைய மென்பொருள் நிறுவனம் என்னை குண்டுக்கட்டாய்த் தூக்கி அடிலெய்ட்ல் எறிந்துவிட்டது. என்ன செய்வது ? வேலை என்று வந்துவிட்டால் இப்படிப்பட்ட அவசரப் பயணங்களைத் தவிர்க்க முடிவதில்லை. என்னுடைய மகளுக்கு பத்து மாதங்கள் தான் ஆகிறது அவளைப் பார்க்காமல் என்னால் ஒரு மாதம் தனியாக இருக்க முடியாது என்றெல்லாம் அதிகாரியிடம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது.

அதுமட்டுமல்லாமல் நான் வந்திருப்பது கஸ்டமருடைய இடத்துக்கு. எங்களுடைய தயாரிப்பான டேட்டா நாவிகேட்டர் என்னும் புராடக்ட் சரிவர இயங்கவில்லை என்று ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததால் எங்கள் நிறுவனத்தின் பழுத்த தலைவர் மாண்டி ஹாரிஸ் நேரடியாகவே எனக்கு இந்தப் பணியைக் கொடுத்துவிட்டார். என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து உள்ளூர மகிழ்ந்தாலும் தனிமைப் பயணம் என்பது ஒரு வித சாபமாகவே எனக்குத் தோன்றியது.

சரி, மீண்டும் ரண்டேல் மாலுக்கு வருகிறேன். நான் தங்கியிருக்கும் பசிபிக் இண்டர்நேஷனல் என்னும் ஹோட்டலுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த பெரிய வணிக வளாகம். வளாகம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இது ஒரு சாலை அவ்வளவு தான். ஆனால் வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை. சாலையில் இரண்டு பக்கங்களிலும் வெவ்வேறு வண்ணங்களில் வடிவங்களில் கடைகள். ஒருவேளை நவீன வணிக வீதி என்று இதைச் சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை மாலை ஐந்து மணி ஆனவுடன் பள்ளிக்கூட மணியைக் கேட்ட பிள்ளைகளைப் போல கடைகளை அடைத்துவிட்டு மக்கள் போய் விடுகிறார்கள். அவர்களுக்கு மாலை நேரம் என்பது குடும்பத்தினருடன் செலவிடுவதற்கானது. அதனால் மாலை ஐந்துமணிக்கு மேல் துடைத்துப் போட்டது போல ஒரு அமானுஷ்ய நிசப்தத்தில் விழுந்து கிடக்கும் வீதிகள். சென்னையில் இரவு பதினோரு மணிவரை விழித்திருந்து மீண்டும் அதிகாலையில் துயிலெழும் கடைகளை நினைத்துக் கொண்டேன். நமக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட வாழ்க்கையின் அத்தனை சுவாரஸ்யங்களையும் விற்கவேண்டிய கட்டாயம் இருப்பதை நினைத்தபோது மனம் பெருமூச்சு விட்டது.

என்னுடைய பணி முடிந்து தினமும் அந்த வீதி வழியாக வருவது என்னுடைய வழக்கம். பத்து நிமிட நடை இரண்டு நிமிடம்போல கரைந்து போய்விடுவதற்குக் காரணம் எனக்கு அந்தச் சூழல் புதிது என்பது தான். மதிய உணவுக்காக அந்த வளாகத்துக்குள் வருவதை நான் தவிர்த்ததேயில்லை. ஏனென்றால் அதுதான் அந்த கடைவீதியின் பரபரப்பு நேரம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய முகங்கள். ஆஸ்திரேலிய ஆண்களின் தோளுரசிச் செல்லும் இந்தியப் பெண்கள் வெட்கத்தையும் கூச்சத்தையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வருவார்கள் போலும். இந்தியர்களைக் காணவேண்டுமானால் அந்த வணிக வளாகத்தின் இரண்டு கடைகளில் சென்றால் போதும். ஒன்று உல்வர்ட்ஸ் என்னும் கடை. அந்தக் கடையில் இந்தியர்களைக் காணாமல் இருப்பது என்பது மழைத்துளி ஈரமில்லாமல் இருக்கிறது என்பதைப் போல சாத்தியமில்லாத ஒன்று. காரணம் அங்கே மட்டும் தான் கிடைக்கிறது இந்தியக் காய்கறிகளும், தென்னிந்தியச் சமையலுக்குத் தேவையான இத்யாதிப் பொருட்களும்.

டிராலிகளைத் தள்ளிக் கொண்டு போகும் இந்தியர்கள் தக்காளிகளையும், வெங்காயங்களையும் தவறாமல் எடுத்துக் கொள்கிறார்கள். சமைக்கத் தெரியாதவர்கள் நூடூல்ஸ் வாங்கிக் கொள்கிறார்கள். அதுவும் தெரியாதவர்கள் கான் பிளேக்ஸ் மற்றும் பால் வாங்கிக் கொள்கிறார்கள். அசைவச் சாப்பாடு என்றால் காததூரம் ஓடுபவர்கள் தயிரும், ஊறுகாய்களும் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் எல்லா இந்தியர்களிடமும் இருக்கிறது தவறிப்போயும் புன்னகைத்து விடாத ஒவ்வொரு முகம்.

இன்னொரு கடை கே.எஃப்.ஜி என்னும் உணவு விடுதி. அங்கே இந்திய முகங்களைப் பார்ப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். மசால் வாசனையுடன் தயாராக்கப்படும் நன்றாக பொரிக்கப்பட்ட சிக்கன் விங்ஸ். வெந்தும் வேகாமலும் உணவு பரிமாறப்படும் மற்ற கடைகளில் இந்தியர்களைக் காண முடிவதில்லை. இங்கே தான் பஜ்ஜி போல சிக்கன் விங்ஸ் பொரித்துத் தருகிறார்கள் அதுவும் மிகக் குறைந்த விலையில். சிக்கன் விங்க்ஸ் சாப்பிடாத இந்தியர்களைக் காணமுடியுமா என்று நானும் பலமுறை எலும்பைக் கடித்துக் கொண்டே அந்தக் கடையில் காத்திருந்ததுண்டு. எனக்கு அந்த வாய்ப்பு வரவேயில்லை. பலருடைய முகங்களில் இந்தியாவில் சைவ உணவு சாப்பிட்டவர்கள் என்பதற்கான தவிர்க்க விரும்பாத சாயல். ஆனாலும் கூட்டில் போட்டால் புல்லைத் தின்னும் புலிகள் போல அங்கே அசைவத்தை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் இரண்டு நாட்கள் இந்திய முகங்களைக் காணும்போதெல்லாம் மனசுக்குள் ஏதோ ஒரு ஆனந்த மின்னல் வெட்டும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முகம் திரும்பிச் செல்லும் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை என்னால். என்னுடைய புன்னகையை வாசலிலேயே உதைத்துத் தள்ளிக் கொண்டிருந்தன அவர்களுடைய உதடுகள். ஆஸ்திரேலியர்களாவது பரவாயில்லை சம்பிரதாயப் புன்னகையாவது சளைக்காமல் செய்கிறார்கள். இரண்டு இந்தியர்கள் உம்மென்று கடந்து போய்விட்டு எதிர்படும் அயல்நாட்டவரிடம் புன்னகை பரிமாறிக் கொண்டபோது என்னுடைய வெறுப்பு மேலும் அதிகரித்தது.

சரி… தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அதிகமாய்ப் பேச விரும்பவில்லை. நான் சொல்ல வந்த விஷயமே வேறு. அந்த ரண்டேல் வணிக வீதியில் துவக்கம் முதல் கடைசி வரை பல திடீர் நிலையங்கள் காளான்களைப் போல முளைத்து முளைத்து மறையும்.

வீதியில் முதல் நான்கைந்து கடைகள் தள்ளி நிற்பார் ஒரு நடுத்தர வயது மனிதர். வெள்ளைச் சாயத்தில் மூன்றுநாள் மூழ்கிக் கிடந்தவர் போல உச்சி முதல் பாதம் வரை வெள்ளைச் சாயம் பூசிக்கொண்டு அசையாமல் நின்றிருப்பார். சிலைக்கும் அவருக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்வது என்பது அதிகப்படியான வேலை. அவருக்கு முன்னால் வாய்பிளந்து கிடக்கும் ஒரு தொப்பி. அவரைக் கடந்து போகும் மனிதர்களில் சிலர் பத்தோ, ஐம்பதோ செண்ட் என்று அழைக்கப்படும் நாணயங்களைப் போட்டுச் செல்வார்கள். அவருடைய தொப்பி பெரும்பாலும் முக்கால் பட்டினியில் தான் முனகிக் கிடக்கும்.

அதற்கு அப்பால் ஒரு பதின்மவயதுப் பெண் நடனமாடிக் கொண்டிருப்பாள் சிரித்துக் கொண்டே. அவளுக்கு முன்னால் இருக்கும் டேப்ரிகார்டர் புரியாத இசையை நிறுத்தாமல் வழங்கிக் கொண்டிருக்கும். மணிக்கணக்காய் ஆடிக் கொண்டிருந்தாலும் எப்படி அந்த அழகிய சிரிப்பை மட்டும் அவளுடைய உதடுகள் உதறிவிடவில்லை என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கும் எனக்கு. பாக்கெட்டிலிருந்து சில்லறைக் காசு போடவேண்டும் என்று மனம் நச்சரிக்கும். ஆனாலும் அவளுக்கு முன்னால் இறைந்து கிடக்கும் டாலர்கள் என்னுடைய மனசை வேண்டாம் என்று எச்சரிக்கும். அழகிய பெண் என்பதற்காகத் தான் இத்தனை பணம் கிடைத்திருக்கிறதோ என்று கூட கேள்விப் பூனை மனசுக்குள் பானைகளை உருட்டி விளையாடும்.

அதைத் தாண்டி ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார். நவீன ஓவியம் போல இந்த வயலின் இசையும் எனக்குப் புரிவதில்லை. நான் நன்றாயில்லை என்று நினைக்கும் போது கூடியிருப்பவர்கள் சிலாகித்துக் கைதட்டுவார்கள். அட.. நன்றாயிருக்கே என்று சொல்லும்போது அவர் வயலின் வேலை செய்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். அவருக்கு முன்னால் வயலின் வைக்கும் பெட்டி ஒன்று திறந்திருக்கும். அன்றன்றைய தேவைக்குரிய பணம் அதில் நிச்சயம் கிடக்கும்.

இதேபோல வயலின் வாசிப்பவர்கள் அந்த வீதியில் நான்கைந்து பேராவது இருப்பார்கள். ஒருவேளை வயலினில் வேறு வேறு விதங்கள் இருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள் நிறுத்தாமல் புன்னகைத்துக் கொண்டே. குலுக்கல் முறையில் யாரோ பரிசு பெறுவது போல சிலருடைய இசை காசைப் பெற்றுத் தரும். சிலருடைய இசை காற்றில் சுற்றித் திரியும்.

வீதியின் நடுவில் ஒரு பெரிய காலி இடம். அங்கே விசேஷ ஷோக்கள் நடக்கும். மூன்று கத்திகளை மேலே எறிந்து இரண்டு கைகளால் அவற்றை மாறி மாறி லாவகமாக பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவருடைய கால்களிடையே மல்லாக்கப் படுத்திருப்பார் ஒருவர். கூர்மையான கத்திகள் அவருடைய முகத்துக்கு மேலே வேக வேகமாகப் பறந்து கொண்டிருக்கும். கத்திகளைப் படிப்பவர் கணநேரம் கவனத்தைத் தவற விட்டால் கீழே படுத்திருப்பவரின் உயிருக்கு நிச்சயமாய் உத்தரவாதமில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடைந்து கிடக்கும் பக்தனைப் போன்றவன் அவன். ஒரு கொசு, கத்தியைப் பிடிப்பவருடைய காதில் ரீங்காரமிட்டால் கூட கீழே படுத்திருப்பவன் காலிதான் என்று நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

அந்த இடத்தில் மேலும் சில காட்சிகள் நடக்கும். சிறுவர்களைச் சிரிக்கவைக்கும் மேஜிக். ஒற்றைச் சக்கர சைக்கிள் பயணம், இப்படிப் பல.

கடைசியாக நிற்பவள் தான் எல்லோருடைய கவனத்தையும் கவர்பவள். அவள் ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பாள். அவளுக்கு சுமார் பத்து மீட்டர் தொலைவில் ஒரு பிளாஸ்டிக் குச்சி நாட்டப்பட்டிருக்கும். அந்த சைக்கிளை பத்து மீட்டர் தூரம் காலை தரையில் தொடாமல் ஓட்டினால் பத்து டாலர் பரிசு. போட்டியில் பங்கெடுக்கக் கட்டவேண்டியது ஒரு டாலர். இதென்னடா சிறு பிள்ளை விளையாட்டு என்று ஏராளமான இளைஞர்கள் வந்து அவளுடைய கைகளில் ஒரு டாலரை வைத்துவிட்டு சைக்கிள் ஓட்ட ஆரம்பிப்பார்கள் ஆனால் இரண்டடி ஓட்டுவதற்குள் காலைத் தரையில் வைத்துவிடுவார்கள். அவள் அந்த காசை இடுப்பில் கட்டி வைத்திருக்கும் லெதர் பவுச்சுக்குள் போட்டுக் கொண்டு புன்னகைப்பாள்.

இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என்று எல்லோரையும் ஒட்டு மொத்தமாகத் தோற்றுப் போக வைக்கும் அவளுடைய சைக்கிள் அவளை எப்போதும் தடுமாற வைப்பதில்லை. அனாயசமாக அந்த சைக்கிளை ஓட்டுவாள் ஓட்டுவாள் ஓட்டிக்கொண்டே இருப்பாள்.

பார்க்க சாதாரண சைக்கிள் போலவே இருக்கும் அந்த சைக்கிளில் ஒரே ஒரு வித்தியாசம். அந்த சைக்கிளின் கைப்பிடியை வலது பக்கம் திருப்பினால் சைக்கிள் இடது பக்கம் போகும். இடது பக்கம் திருப்பினால் சைக்கிள் வலது பக்கம் போகும். நேரே செல்லவேண்டுமென்றால் கைப்பிடியை ஒரு குறிப்பிட்ட திசையில் பிடிக்கவேண்டும். ஒருமுறை முயற்சி செய்தவர்கள் அந்த உத்தியைப் புரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் முயல்வார்கள். ஹூகூம். யாருமே வெற்றிபெற்றதைப் பார்த்ததில்லை நான்.

வாழ்க்கையில் மனிதருக்குப் பரிச்சயமாகிப் போன பழக்கங்கள் கொஞ்சம் மாறிப்போனாலே மக்கள் எப்படி அவஸ்தைப்படுகிறார்கள் என்பதை அந்த சைக்கிள் உலகுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது.

அந்த சைக்கிளை நெருங்கும்போதெல்லாம் என்னுடைய கையில் ஒரு டாலர் முளைக்கும். இன்றைக்காவது முயற்சி செய்யவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஓட்டியதில்லை. அத்தனை பேருக்கும் முன்னால் நான் தோல்வியடைவதை விரும்பாததால் தானோ என்னவோ என்னை தயக்கம் பீடித்திருந்தது. நாளை கிடைக்கப் போகும் பலாக் காயை விட இன்றைக்கு இருக்கும் களாக்காய் நல்லது என்பது போல என்னுடைய ஒரு டாலரைப் பாதுகாக்கும் எண்ணம் கூட அதில் ஒளிந்திருக்கலாம்.

ஆனாலும் அதைத் தினசரி வேடிக்கை பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு . நான் வெற்றி பெறாவிட்டால் கூட மற்றவர்கள் தோற்பதைப் பார்ப்பதில் மனசு திருப்திப்படுகிறதோ என்னவோ. தினமும் கொஞ்ச நேரமாவது அதை வேடிக்கை பார்க்கும் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. மதிய உணவு முடித்துவிட்டு நேராக அந்த சைக்கிள் பந்தயம் நடக்கும் இடத்தில் ஆஜராகிவிடுவேன். அரைமணி நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு மீண்டும் வேலைக்குச் சென்று விடுவேன். இப்படித் தினமும் அங்கே வந்து வெட்டியாய் பொழுது போக்குவதால் அவளுக்கு என்னை பழக்கமாகியிருந்தது.

நான் இதுவரை அந்த சைக்கிளை ஓட்டியதில்லை என்பதும், அந்த சைக்கிளை தினமும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். என்னுடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டாளோ என்னவோ, ஒரு நாள் கூட்டம் அதிகமில்லாத பொழுதில் என்னிடம் சைக்கிளை ஓட்டுகிறாயா என்று கேட்டாள். நான் வேண்டாம் என்று மறுத்தேன். ‘காசு தரவேண்டாம் என்றும் தினசரி வந்து நிற்கிறாயே ஒரு முறை ஓட்டிப் பார்’ என்றும் அவள் மீண்டும் என்னிடம் கேட்டாள். ‘காசுக்காக அல்ல, எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது’ என்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவளுக்கு வேண்டாத விருந்தாளியாகி விட்ட எண்ணம் எனக்குள் முளைத்தது.

இனிமேல் அந்த சைக்கிள் பக்கமாகவே போகக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன். வழக்கம் போலவே தயக்கத்துடன் பற்றிக் கொண்டிருந்த அந்த ஒரு டாலர் நாணயம் என்னுடைய கையில் கனத்தது.

ரெண்டேல் மாலின் கடைசியில் ஒருவர் ‘அடிலெட்டின் பட்டினியைத் தீர்க்க உதவுங்கள்’ என்று ஏந்திக் கொண்டிருந்த உண்டியலில் அந்த ஒரு டாலரைப் போட்டுவிட்டு நடந்தேன்.

q

இந்தக் கதை சிங்கப்பூர் ‘தமிழ் முரசு ‘ நாளிதழில் வெளியானது.

xavier001-large.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *