பேய்


வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தாள் அந்தக் கிழவி. அவளுக்கு முன்னால் ஏற்றப் பட்டிருந்தது ஒரு குத்துவிளக்கு.
விளக்கு எரிந்து கொண்டிருக்க, விளக்கின் மேல் பகுதியை வலதுகையால் பிடித்துக் கொண்டே கண்களை மூடி மெளனமாய் இருந்தாள் அவள். அவளுக்கு முன்னால் அந்த வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் ஒரு அரைவட்ட வடிவில் அமர்ந்திருந்தார்கள். கிழவி திடீரென மெளனத்தைக் கலைத்தாள்.

‘குஞ்ஞன் யாரு ?’ கண்களைத் திறக்காமலேயே கேட்டாள் கிழவி.

‘அவரு எங்க தாத்தாவோட அண்ணன். செத்துப் போயி ஏழெட்டு வருஷம் ஆச்சு’

‘வள்ளியம்மா ?’

‘அது குஞ்ஞனோட தங்கை.. அவ குஞ்ஞனுக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா’

‘தங்கையன், செல்லையன், சங்கிலி .. இவங்கயெல்லாம் யாரு ?’

‘அவங்க எல்லாம் செத்துப் போன சொந்தக் காரங்க தான்… ‘

கிழவி மீண்டும் மெளனமானாள். எல்லோரும் வைத்த கண் வாங்காமல் கிழவியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கிழவி திடீரென எழுந்தாள். வீட்டின் முன் வாசல் படிக்கட்டைத் தாண்டி கீழே இறங்கினாள். வீட்டு முற்றத்தில் ஒரு இடத்தில் கைகளால் சதுரம் வரைந்தாள்.

‘இந்த இடத்தைத் தோண்டுங்கள். ஒரு பொம்மையும், ஒரு வெண்கலத் தகடும், அதைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கம்பியும் இருக்கும். அதை வெளியே எடுங்கள்’ கிழவி சொல்லி முடிக்கவும், ஒருவர் ஓடிச் சென்று தொழுவத்திலிருந்த மண்வெட்டியை எடுத்து அந்த இடத்தில் தோண்டினார். நான்கடி ஆழத்தில் உள்ளே கிழவி சொன்னதுபோலவே ஒரு பொம்மையும், ஒரு தகடும் இருந்தது. அது ஒரு வெண்கலக் கம்பியினால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.
எல்லோரும் குழப்ப முகங்களோடு வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘சரி… கொஞ்சம் மண்ணெண்ணை கொண்டு வாருங்கள். எடுத்ததையெல்லாம் நானே எரித்து விடுகிறேன். நீங்கள் எரித்தால் உங்களுக்கு ஏதாவது தீயது சம்பவிக்கலாம்’

கிழவி சொன்னது போலவே மண்ணெண்ணை கொண்டு வரப்பட்டு அந்தப் பொருட்கள் எல்லாம் எரிக்கப்பட்டன. கிழவி மீண்டும் கூடத்துக்குத் திரும்பி விளக்கின் முன்னால் உட்கார்ந்தார்.

‘பாட்டி… இதெல்லாம் என்ன பாட்டி ?’

‘உங்களுக்கு யாரோ செய்வினை செய்து வெச்சிருக்காங்க. அதனால தான் இந்த வீட்டுத் தலைவர் எழும்ப முடியாம படுத்த படுக்கையா கிடக்கிறாரு. ‘

‘செய்வினையா ? நாங்க யாருக்கும்  கெடுதல் எதுவும் நினைச்சது கூட இல்லையே … எங்களுக்கு யாரு செய்வினை செய்து வெச்சிருக்காங்க ?’

‘உங்க குடும்பத்துல உள்ள ஒருத்தர் தான் இதெல்லாம் செய்து வெச்சிருக்கார். உங்க முன்னோர்களோட ஆவிகளையும் கூட உங்களுக்கு எதிரா ஏவி விட்டிருக்காங்க. இரத்த பந்தத்துல இல்லாத ஆவிங்க நிறைய உங்க வீட்டைச் சுற்றி நிக்குது. இதுக்கு முன்னாடி மூணு உயிர் போக வேண்டியது. பகவானோட கருணையினால தான் அப்படி ஏதும் நடக்கல. ‘ கிழவி சொல்லச் சொல்ல வீட்டிலிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து போன முகங்களோடு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கிழவி ஆயிரத்து ஒரு ரூபாயையும் வாங்கிக் கொண்டு கிளம்பினாள். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தார் சிதம்பரம் சித்தப்பா.

‘என்ன… எல்லோரும் சோர்வா இருக்கிறமாதிரி இருக்கு ? என்ன ஆச்சு ?’

‘என்ன ஆகணும்… யாரை நம்புறதோ யாரை நம்பக் கூடாதோ தெரியலையே. சிரிச்சு சிரிச்சு கூடவே இருக்கிறவங்களை நம்பறதை விட ரோட்ல கிடக்கிற பிச்சைக்காரனை நம்பலாம்..’ செய்வினை செய்தது சிதம்பரம் சித்தப்பாவாகக் கூட இருக்கலாம் என்னும் சந்தேகம், பேசிய வீட்டுத் தலைவிக்கு.

சிதம்பரம் ஒன்றும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே போனார்.

அதுவரை ஒற்றுமையாய் இருந்த அந்த கூட்டுக் குடும்பத்தில் சந்தேகப் பேய் ஒன்று சத்தமில்லாமல் வந்து குடியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *