கட்டுரை : விலைவாசி வெயிலும், தற்காப்பு நிழலும்

 

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

விலைவாசியை அண்ணாந்து பார்த்தே பழக்கப்பட்டிருக்கிறது நமது வாழ்க்கை. இப்போது பணவீக்கம் விண்கலம் போல நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் சென்றபின் விலைவாசியும் மாரத்தான் ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது

கையில் பணத்தைக் கொண்டு போய் பையில் பொருட்கள் வாங்கிவரும் காலம் போய், பையில் பணத்தைக் கொண்டு போய் கையில் பொருட்கள் வாங்கிவரும் சூழல் இது என்பார்கள் இந்த சூழலை.

சரி இந்த சூழலில் ஏதேனும் செய்து சூப்பர் மார்கெட் செலவை மட்டுப்படுத்த முடியுமா ? இவற்றை முயன்று பாருங்கள்.

1. சரியாகத் திட்டமிட்டு தேவையானவற்றை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை பொருள் வாங்குவீர்கள் எனில் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக் கொள்ளுங்கள். கடைக்குச் சென்று அதையே வாங்குங்கள். சூப்பர் மார்கெட் சென்று பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பிவிட்டால் தேவையற்றதை வாங்கியும், தேவையானதை வாங்காமலும் பணத்தை வீணாக்கும் வாய்ப்பு உண்டு.

2. ஆரோக்கியமான பொருட்கள் விலை குறைவாக இருக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அதாவது பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறு, கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சிப்ஸ் வகையறாக்கள் என ஆரோக்கியக் கேடு விளைவிக்கும் பொருட்கள் எல்லாம் விலை அதிகம் உடையவையே. அவற்றை இடது கையால் ஒதுக்கி வைத்து விடுங்கள். அவற்றை வாங்குவதால் உங்கள் உடலுக்கோ, பணத்துக்கோ எந்த நன்மையும் இல்லை, மாறாக கெடுதல் மட்டுமே.
3. பொருட்களை அதனதன் பருவத்தில் (சீசன்) வாங்குங்கள். மாம்பழ சீசன் காலத்தில் மாம்பழம் விலை குறைவாக இருக்கும் என்பது ஒரு உதாரணம். சீசன் துவங்குவதற்கு முன்பாகவோ, முடிந்த பின்போ அந்தப் பொருட்கள் அதிக விலை உடையதாக மாறிவிடும் எனவே அந்தந்த காலகட்டத்தில் மட்டுமே அந்தப் பொருட்களை வாங்குங்கள். உண்ணும் பழக்கத்தை இயற்கையின் விளைச்சலோடு இணைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தைக் கணிசமாய் பாதுகாக்கும்.

4. தள்ளுபடி விலை !!, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களில் மயங்கி விடாதீர்கள். “ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்” பெரும்பாலும் ஒன்று வாங்க நினைக்கும் உங்களிடமிருந்து ஒன்றரை அல்லது இரண்டு பொருளுக்கான பணத்தைக் கறக்கும் திட்டமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருள் தள்ளுபடியில் கிடைத்தால் ஆனந்தமாய் வாங்குங்கள். ஆனால் தள்ளுபடி கிடைக்க வேண்டுமே என்பதற்காக தேவையற்ற பொருளையோ, அதிகமான எண்ணிக்கையிலோ வாங்காதீர்கள்.
5. பொருட்கள் வாங்கச் செல்லும் முன் சாப்பிட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்பது உளவியல் பாடம். பசியுடன் இருக்கும் மனம் சுவைக்காய் அலைபாயுமாம். தேவையற்ற சில உணவுப் பொருட்களையோ, சில பானங்களையோ வாங்க அது ஏதுவாகி விடக் கூடும். எனவே பசியில்லாத நிலையிலேயே செல்லுங்கள்.

6. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மயங்கி அதிக விலை கொடுக்காதீர்கள். வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களோ, பிரபலங்கள் விளம்பரங்களில் வரும் பொருட்களோ தரத்தில் சிறந்தது என முடிவு கட்டி விடாதீர்கள். உள்ளூர் தயாரிப்பு அதை விடத் தரமானதாய் இருக்கக் கூடும். வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்தால் உங்கள் பணத்துக்கான பொருள் கிடைக்காது என்பது வெகு நிச்சயம்.
7. இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் எல்லாவற்றையும் பாக்கெட் கணக்கில் வாங்க நம்மைப் பழக்கி விட்டது. கால் கிலோ பட்டாணியை பாக்கெட்டில் வாங்குவதற்கும், கால்கிலோ பட்டாணியை தனியே வாங்குவதற்கும் விலையில் நிறைய வேறுபாடு உண்டு என்பதைக் கவனியுங்கள். அதிலும் குறிப்பாக ஜப்பான் ஆப்பிள், அமெரிக்கா ஆரஞ்ச் என துடைத்து வைத்த ஆப்பிள்களை வெளிச்சத்தில் காட்டி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள் இல்லையேல் உங்கள் பணம் துடைக்கப்பட்டு விடும்.

8. சில எளிய காய்கறிகளை வீட்டுக் கொல்லையிலே நடுவதற்கு முயலுங்கள். குறிப்பாக மிளகாய், தக்காளி, கீரை எல்லாம் எளிதில் வளர்க்க முடிந்த காய்கறிகளே. இதனால் மனசும் நிறையும், பணமும் துளியூண்டேனும் மிச்சப்படும். அதுபோலவே எல்லா பொருட்களும் கிடைக்கிறது என்பதற்காக ரிலையன்ஸ் போன்ற பெரிய கடைகளிலேயே எல்லாவற்றையும் வாங்காதீர்கள். முடிந்தமட்டும் சிறு கடைகளில் வாங்குங்கள். விலையும் குறைவாக இருக்கும், சிறு வணிகத்தை ஊக்கப்படுத்துவதாகவும் அது அமையும்.
9. உடனடித் தேவை இல்லையேல் பிறகு வாங்கலாம் என ஒத்தி வையுங்கள். எப்போதாவது பயன்படும் என வாங்கி வைக்கும் பொருட்கள் பல வேளைகளில் வீணாகிப் போவது கண்கூடு. இப்போது, இந்த வாரம் என அத்தியாவசியத் தேவைகளை மட்டுமே வாங்கப் பழகுங்கள்.

10. முப்பது மில்லியன் டன் உணவுப் பொருள் அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் வீணாகிக் கொண்டிருக்கிறதாம். சுற்றுப் புறச் சூழலின் இந்த புள்ளி விவரம் தேவையான எடையில் பொருட்களை வாங்க நம்மை தூண்டுகிறது என்பதே உண்மை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் இருக்கும் பணத்தை சரியான முறையில் செலவிடும் கடமை ஒவ்வோர் மனிதனுக்கும் உண்டு என்பதை உணர்தல் அவசியம். வீண் ஆடம்பரங்கள், விளம்பரங்கள், கவர்ச்சிகள், மேலை நாட்டு மோகம் இவையெல்லாம் நம் பொருளாதாரத்தை அரிக்கும் கரையான்கள் என்பதை உணர்ந்து ஒதுங்கிக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *