இயேசுவின் வரலாறு 40 : பணி வாழ்வுக்குத் தேவை பணிவு

Image result for Jesus washing disciples feet

அதே நேரத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுடன் இரவு உணவு அருந்துவதற்காக சீயோன் மலை மீதிருந்த ஒரு வீட்டின் மேல் மாடியில் அமர்ந்தார். பெரிய அறை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அசைந்து கொண்டிருந்தது.

இந்த இடத்தை தேர்வு செய்ததே ஒரு வியப்பான நிகழ்ச்சி தான். இயேசு தன்னுடைய சீடர்களிடம், நீங்கள் ஊருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒருவர் உங்களுக்கு எதிரே வருவார். அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டில் நீங்களும் சென்று வீட்டு உரிமையாளரிடம், இயேசு தன்னுடைய சீடர்களுடன் அமர்ந்து பாஸ்கா உணவை உண்பதற்கான அறை ஏது என்று கேளுங்கள். அவர் உங்களுக்கு ஒரு அறையை காட்டுவார். அது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் அங்கே நம் உணவு உண்ண ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லியிருந்தார். அப்படியே எல்லாம் நிகழ்ந்தன.

பாஸ்கா உணவு உண்ணும் வேளை.

‘நாம் இணைந்து உண்ணும் கடைசி பாஸ்கா விருந்தல்லவா இது ! எனவே இதை மிகவும் சிறப்பானதாகக் கொண்டாடவேண்டும்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

‘கடைசி விருந்தா ? என்ன சொல்கிறீர்கள் ?’ சீடர்கள் திகைப்புடன் கேட்டார்கள்.

‘ஆம்… இன்னும் சிறிது காலமே என்னைக் காண்பீர்கள். பின்னர் சிறிது காலம் என்னைக் காண மாட்டீர்கள். பின்பு மீண்டும் என்னைக் காண்பீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சொல்கிறீர்கள் ? எங்களை விட்டு விட்டு வேறெங்கேனும் செல்கிறீரோ ?’

‘ஆம். என் தந்தையிடம் செல்கிறேன்.’ இயேசு சொல்ல சீடர்கள் இன்னும் அதிகமாய்க் குழம்பினார்கள். ஒருவேளை இயேசு போதனைகளைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்துவிட்டு தன்னுடைய தந்தையுடன் சில நாட்கள் செலவிடப் போகிறார் போலிருக்கிறது என்று சீடர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

‘இன்னும் ஏன் முணுமுணுப்பு. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதோ நான் என்னுடைய உயிரை பகைவர்களின் கையில் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது’

‘பகைவர் கையிலா ? உமது உயிரா ? அதெல்லாம் நடக்காது. நாங்கள் பன்னிரண்டு பேரும் உமக்குப் பக்க பலமாய் இருப்போம்’ சீடர்கள் சொன்னார்கள்.

பின்பு இயேசு யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார். ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து முழங்காலைத் தரையில் ஊன்றி சீடரின் பாதத்தருகே குனிந்தார். சீடர் திடுக்கிட்டார்.

‘க…கடவுளே என்ன இது ? எ..என் காலருகே ….’

‘நான் உங்கள் பாதங்களைக் கழுவப் போகிறேன்..’ இயேசு சொன்னார். விழாக்காலங்களில் அடிமைகள் தான் விருந்தினர்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். அப்படியானால் இயேசு, தங்கள் தலைவர், அடிமைகளின் வேலையைச் செய்கிறாரா ? சீடர்கள் மீண்டும் அதிர்ந்தனர்

‘ஐயோ கடவுளே.. இதென்ன விளையாட்டு… வேண்டாம். நீர் என் பாதத்தைத் தொடக்கூடாது.’ சீடர் அதிர்ச்சியுடன் காலைப் பின்னால் இழுத்தார்.

‘இல்லை. நான் உன்னுடைய பாதங்களைக் கழுவ வேண்டும். இல்லையேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !’

சீடர்கள் ஸ்தம்பித்தார்கள். இயேசு ஒவ்வொருவராக அனைவருடைய பாதங்களையும் கழுவி, இடையில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார்.
சீடர்கள் கூசினார்கள். தங்கள் கடவுள் தங்கள் கால்களைக் கழுவுவதா என்று அதிர்ந்தார்கள்.

யோவானின் காலருகே வந்தபோது,’ கடவுளே என் கால்களைக் கழுவ வேண்டாம். வேண்டுமானால் தலையில் தண்ணீர் ஊற்றும்.’ யோவான் உளறினார்.

‘குளித்து விட்டவன் கால்களைக் கழுவினாலே போதும்’ இயேசு சொல்லிக் கொண்டே அவருடைய காலையும் கழுவினார்.

எல்லா சீடர்களின் கால்களையும் கழுவி முடித்த இயேசு அவர்களைப் பார்த்து,’ நான் ஏன் உங்கள் பாதங்களைக் கழுவினேன் தெரியுமா ?’ என்று கேட்டார்

‘தெரியாது..’

‘பணி வாழ்வுக்கு முக்கியமானது பணிவு. உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும்..’ இயேசு சொன்னார்.

‘அதைச் சொன்னால் போதுமே கடவுளே.. நீரே எங்கள் கால்களைக் கழுவ வேண்டுமா ?’

‘கடவுளாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் அந்தப் பணிவைக் கடைபிடியுங்கள். வெறும் பேச்சில் அல்ல செயல்களில் உங்கள் பணிவைக் காட்டுங்கள் ‘ இயேசு அமைதியாய்ச் சொன்னார். பின் கைகளைச் சுத்தம் செய்துவிட்டு உணவருந்த அமர்ந்தார்.

இயேசு அப்பத்தை எடுத்து விண்ணகத் தந்தையிடம் செபித்தார். பின்பு அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து
‘இது என்னுடைய உடல். இதை உண்பதன் மூலம் என்னுடன் நீங்கள் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்து கொள்கிறீர்கள்’ என்றார்.

பின் திராட்சை இரசம் இருந்த கிண்ணத்தை எடுத்து செபித்து சீடர்களுக்குக் கொடுத்து,’ இது என்னுடைய இரத்தம் ! இதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் உடன்படிக்கையை உறுதி செய்து கொள்கிறீர்கள்.’ என்றார்.

‘மனுமகன் பாடுகள் படவேண்டிய நேரம் நெருங்கி வருகிறது. உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இயேசு சொல்ல சீடர்கள் அதிர்ந்தார்கள்.

‘எங்களில் ஒருவனா ? யார் அது ? சொல்லுங்கள் இயேசுவே யார் அது ?’ சீடர்களுக்குள் திடீர் சலசலப்பு. இயேசுவோடு உறுதியாய் இருந்த சீடர்கள் இயேசுவின் திடீர் அறிவிப்பைக் கேட்டு குழம்பினார்கள். அவர்களிடையே கோபம் உலவியது.
‘இயேசுவே என்ன சொல்கிறீர் ? யாரைச் சொல்கிறீர் ? நானா ? சொல்லும்’ சீடர்கள் இயேசுவை வேண்டினர்.

‘நானா ?’

‘நான் காட்டிக் கொடுக்கவே மாட்டேன்…’ யூதாசும் தன் பங்குக்குச் சொல்லி வைக்க, இயேசு யூதாஸைப் பார்த்துப் புன்னகைத்தார்.

‘நான் யாருக்கு இந்த அப்பத்தை அளிக்கிறேனோ அவனே….’ என்று சொன்ன இயேசு அப்பத்தைப் பிட்டு, பாஸ்கா ஆட்டின் கறியில் தோய்த்து யூதாசுக்கு வழங்கினார்.

சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘அப்படியானால் யூதாஸ் தான் இயேசுவைக் காட்டிக் கொடுப்பவனா ?’ அவர்களுக்குள் குழப்பம். யூதாஸ் இயேசுவின் சீடர்களில் அதிகம் பேசப்படாமல் இருந்த ஒரு சீடர். கணக்கு வழக்குகளைப் பார்க்கும் பணியை அவன் செய்து வந்தான்.

இயேசு அப்பத்தை அனைவருக்கும் அளித்தார்.

அப்பமும் இரசமும் பகிர்ந்தளிக்கப் பட்டது. அனைவரும் உண்டார்கள்.

‘யூதாஸ்… உன்னைப் பார்த்தால் ஏதோ அவசர வேலை இருப்பது போல் இருக்கிறதே..’ இயேசு கேட்டார்.

‘ஆ..ஆம். கடவுளே… எ…எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது..’ யூதாஸ் தடுமாறினான்.

‘போ யூதாஸ். செய்யவேண்டியவற்றைத் தாமதப்படுத்தாமல் செய்’ இயேசு அவனை அனுப்பி வைக்க சீடர்களிடையே மீண்டும் சலசலப்பு. யூதாஸ் அப்பத்தை மட்டும் உண்டு விட்டு இரசத்தைக் குடிக்காமல் எழுந்து சென்றான்.

‘அமைதியாய் இருங்கள். நடக்கப் போவது எல்லாமே எனக்குத் தெரியும். இதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருந்தீர்கள். இனிமேல் வலிகளின் காலம். பணப்பையும், தேவையான பொருட்களும், ஆயுதங்களும் உங்களுடன் இருக்கட்டும். ஏனென்றால் இனிமேல் நீங்கள் தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’ இயேசு சொன்னார்.

பேதுரு நடப்பவற்றையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இயேசுவே நீர் என்ன சொல்கிறீர் ? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர் ?’

‘பேதுரு ! எல்லோரும் என்னை விட்டு விட்டு ஓடி விடப் போகிறீர்கள். அதைத் தான் சொன்னேன்’

‘கடவுளே… எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் ஓடிப் போக மாட்டேன்’ பேதுரு உறுதியுடன் சொன்னார்.

‘பேதுரு… என்னருமை சீடனே. நாளை விடியற்காலையில் கோழி கூவும் முன் நீ என்னை மூன்று முறை மறுதலித்துப் பேசுவாய் !’ இயேசு சொல்ல பேதுரு மறுத்தார்.

‘கண்டிப்பாக அப்படி நடக்காது. உம்முடன் சேர்ந்து உயிர் விட்டாலும் விடுவேனே தவிர உம்மை மறுதலிக்கவே மாட்டேன்’

‘பேதுரு. வருந்தாதே. நீ மறுதலிப்பாய். ஆனால் அதன்பின்பு மனம் மாறி என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்’ இயேசு சொல்ல பேதுரு மீண்டும் மறுத்தார்
‘இல்லை கடவுளே… உம்மை மறுதலிக்கமாட்டேன். மரணமடைய நேர்ந்தாலும் மறுதலிக்கமாட்டேன்’. எல்லா சீடர்களும் அவ்வாறே சொன்னார்கள்

இயேசு புன்னகைத்தார்

இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய பதினொன்று சீடர்களையும் பார்த்தார்.

‘உங்களை நான் அன்பு செய்தது போல நீங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யுங்கள். உள்ளம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தையை நம்புகிறீர்கள் என்னையும் நம்புங்கள். நான் என் தந்தையின் இல்லத்துக்குச் சென்று உங்களுக்காய் இருக்கைகள் தயாரிப்பேன்’. இயேசு சொன்னார். சீடர்களிடையே ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது.

‘நானே வழி, நானே உண்மை, நானே உயிர். என் வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது. நீங்கள் என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிவீர்கள். இன்றிலிருந்து நீங்கள் தந்தையை அறிந்தவர்களாயிருக்கிறீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே தந்தையை எங்களுக்குக் காட்டும். அது போதும் எங்களுக்கு’ கடவுளைப் பார்க்கும் ஆவலில் சீடர்கள் கேட்டார்கள்.

இயேசு சற்று நேரம் மௌனமாய் இருந்தார். பின் அவர்களிடம்
‘இத்தனை நான் உங்களோடு இருந்தான் இன்னும் நான் யார் என்பதை நீங்கள் அறியவில்லையா ? என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். நானே அவர். நான் உங்களிடம் பேசியவை எவையும் நான் பேசியவை அல்ல, என் தந்தை பேசியவையே. ‘ இயேசு சொல்ல சீடர்கள் புருவம் உயர்த்தினார்கள். விண்ணகத் தந்தையும் தானும் ஒன்று என்னும் ரகசியத்தை இயேசு மரிக்கப் போகும் நேரத்தில் வெளியிடும் காரணம் புரியாமல் தடுமாறினார்கள். முதலிலேயே சொல்லியிருந்தால் இயேசுவைக் கடவுளாகப் பார்த்தால் இணைந்து பணியாற்றியிருக்க முடியுமா என்னும் கேள்வியும் அவர்களைச் சுற்றியது.

‘நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் நான் அதை உங்களுக்குத் தருவேன். நீங்கள் என்னை அன்பு செய்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். நான் தந்தையிடம் கேட்பேன் அவர் தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவார். அவர் உங்களுக்கு தைரியமும் வழிகாட்டுதலும் தருவார்’ இயேசு தொடர்ந்து சொன்னார்.

‘உங்களிடையே அமைதியை விட்டுச் செல்கிறேன். இந்த அமைதியை நீங்கள் உலகுக்கு வழங்குங்கள். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகளிலும் நிலைத்திருங்கள்…’ இயேசு தொடர்ந்து சற்று நேரம் சீடர்களுக்கு ஆறுதலும், போதனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கினார்.

‘வாருங்கள் போவோம். நேரம் நெருங்கிவிட்டது’ இயேசு திடீரென்று எழுந்தார். சீடர்களும் எழுந்தார்கள்.

இயேசு கெத்சமெனி தோட்டத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சீடர்கள் பின் தொடர்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *