இயேசுவின் வரலாறு 39 : சதிக்கு அனுமதி

 

நாளை புளியாத அப்பத் திருவிழா !

பாஸ்காவுக்கு முந்திய நாளை புளியாத அப்பத் திருவிழாவாகக் கொண்டாடுவது யூதர்களின் வழக்கம். இன்னும் சில நாட்களில் பாஸ்கா விழா. இஸ்ரயேலர்களின் மிகவும் முக்கியமான விழா. மோசேயின் காலத்தில் எகிப்தில் இஸ்ரயேலர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்களை விடுவிப்பதற்காக கடவுள் எகிப்தியரின் தலையீற்றுகளை எல்லாம் அழித்தார், ஆனால் இஸ்ரயேலர்களை அவர் அழிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைத் தான் இஸ்ரயேலர்கள் பாஸ்கா என்று பெயரிட்டு அழைத்து விழாவாகக் கொண்டாடி வந்தார்கள். பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இஸ்ரயேல் மக்கள் எருசலேம் தேவாலயத்தில் ஒன்று கூடுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் எருசலேம் தேவாலயத்துக்கு வருவார்கள் என்பது அவர்களின் கணிப்பு.

பதினான்காவது நாளில் மாலையில் பாஸ்காவுக்கான ஆட்டை வெட்ட வேண்டும் என்பதும், அதை ஒரு குறிப்பிட்ட முறையில் உண்ணவேண்டும் என்பதும் மோசே காலத்தில் அவரால் வகுக்கப்பட்டுள்ளது. யூதர்களைப் பொறுத்தவரை நாள் என்பது மாலை ஆறுமணி முதல், மறுநாள் மாலை ஆறுமணி வரை என்பதே வழக்கமாக இருந்தது. இந்தமுறை பாஸ்கா சனிக்கிழமையில் வருகிறது. மிக முக்கியமான பாஸ்கா விழா இது. சனிக்கிழமை என்பது ஓய்வு நாளானதனால், ஆடு வெட்டும் சடங்கை பெரும்பாலான யூதர்கள் வியாழக்கிழமைக்கு மாற்றி வைத்தார்கள். வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு மேல் புளியாத அப்பத் திருவிழா தினம் ஆரம்பமாவதால் அது யூத சட்டத்தைக் கடைபிடிப்பதாக அர்த்தம்.

அன்று கயபா வும், குருக்களும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள். எப்படியும் இந்தமுறை இயேசுவை எருசலேம் விட்டு வெளியே செல்லவிடக் கூடாது. இந்த முறை அவனைத் தப்பவிட்டால் அடுத்தமுறை வரும்போது இன்னும் பல மடங்கு வளர்ச்சியடைந்திருப்பான். நம்மையே அவன் அழிக்கவும் செய்வான். எனவே இயேசுவை எந்தக் காரணம் கொண்டும் இந்தமுறை தப்ப விடக் கூடாது. கயபா சொன்னான்.

இயேசுவைப் பிடிக்கவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் அதற்கு அன்னா வின் அனுமதி வேண்டுமே ! கூட இருந்தவர்கள் சொன்னார்கள்.

அன்னா ! தலைமைக் குருவாக இருந்தவர். இப்போதைய தலைமைக் குருவாக இருக்கும் கயபாவின் மாமனார். அன்னாவுக்கு இப்போது சுமார் எண்பது வயதாகிறது. நேரடியான அதிகாரம் ஏதும் இல்லையெனினும் அவர் தான் பின்புலமாக இருப்பவர். அவருடைய அனுமதியில்லாமல் இந்த திட்டம் நிறைவேறாது. அன்னாவுக்குப் பின் அவருடைய பிள்ளைகள் ஏழுபேரின் கைகளில் மாறிய அதிகாரம் மருமகனான கயபாவின் கைக்கு வந்திருக்கிறது. அன்னா திடீரென்று எதையும் ஒத்துக் கொள்பவர் அல்ல. இயேசுவைப் பிடிக்கவேண்டும் என்னும் திட்டத்தை அவர் எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

‘அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தமுறை நாம் சற்றும் பிசகிவிடக் கூடாது. நான் அன்னாவிடம் அனுமதி பெற்று வருகிறேன்.’ கயபா சொன்னான்.

அன்னா புத்திக் கூர்மையுள்ளவர். எதையும் சட்டென்று ஒத்துவிடாத மனம் அவருக்கு இருந்தது. யூதேயாவின் ஆளும் அதிகாரம் உள்ளவர்களிலேயே அன்னா தான் அதி புத்திசாலி என்று வியப்பவர்களும் உண்டு. அன்னா மிகப்பெரிய செல்வந்தர். அவருக்கு ஏராளமான நிலபுலன்களும் இருந்தன. ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்னும் கொள்கையுடையவர்.

இஸ்ரேல் மக்கள் பதினான்காவது நிசான் என்று அழைக்கும் அந்த வியாழக்கிழமை அன்னா தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்தார். சன்னலுக்கு வெளியே விழாக்கால சத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நகரில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். யூதேயா, சமாரியா, கலிலேயா உட்பட ஏராளமான நகர்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக விழாவுக்கு வந்து கொண்டே இருந்தார்கள்.

கயபா தன்னுடைய தனி அறையில் கர்வத்துக்குரிய அரியணை இருக்கையில் அமர்ந்து தனக்கு முன்னால் இருந்த தீநாக்குகள் அருகே விரல்களை நீட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கையில் கயபா வந்தான்.

கயபா அன்னாவிடம் சென்று பணிந்தான்.

‘சொல் கயபா.. என்ன விஷயம் ?’

‘நீங்கள் ஓய்வெடுக்கப் போகும் நேரமென்று தெரியும் தலைவரே. ஆனாலும் தாமதிக்க முடியாத செய்தி ஆனதால் தான் நான் உங்களை தொந்தரவு செய்யும் படி ஆயிற்று’ கயபா பீடிகை போட்டான்.

‘அப்படியென்ன தாமதிக்க முடியாத விஷயம் ? கயபா ? கயபா என்னும் வார்த்தைக்கே துக்கம் என்பது தான் பொருள். என்ன துக்கமான செய்தியுடன் வந்திருக்கிறாய் சொல் ‘ மெல்லிய புன்னகையுடன் அன்னா கேட்டார்.

‘இந்த தேசத்தின் தலைவிதி இன்று இரவு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது’ கயபா சொன்னான்.

‘தேசம் எத்தனையோ இரவுகளைச் சந்தித்திருக்கிறது. இன்னும் சந்திக்கத் தான் போகிறது. ஏன் இன்றைய இரவு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது ? பீடிகை போதும் கயபா .. விஷயத்தைச் சொல்’

‘சரி. சொல்கிறேன். நமக்கு நிம்மதி வேண்டுமென்றால் நான் இயேசுவை ஒழித்தாக வேண்டும். இல்லையேல் அவன் நம்முடைய வாழ்க்கையையே அழித்து விடுவான்’ கயபா சொன்னான்.

அன்னா சிரித்தான் ‘ எப்படி ? என்ன சொல்கிறாய் நீ ? நம்முடைய வாழ்க்கையை அந்த இயேசு எப்படி நிர்ணயிக்க முடியும் ? தெருஓரங்களில் சுற்றித் திரிபவனல்லவா அவன் ?’

‘அப்படியல்ல தலைவரே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யார் என்று தெரியாமல் இருந்த இயேசு இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த மனிதனாக வளர்ந்திருக்கிறார். இன்று அவர் பின்னால் சுற்றித்திரிய ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவன் சொல்வதைக் கேட்க மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது.’

‘எல்லாம் கொஞ்ச நாள் சுற்றித் திரிவார்கள்.. பிறகு சென்று விடுவார்கள்’ அன்னா சொன்னார்

‘அப்படித் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவனுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குருடருக்குப் பார்வை கொடுக்கிறான், முடவரை நடக்கச் செய்கிறான். இறந்து போனவர்களுக்கு உயிர் கொடுக்கிறான்.. எனவே மக்கள் அவனிடம் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் ‘ கயபா சொன்னான்.

‘நீ என்ன முட்டாளா ? இவையெல்லாம் உண்மையிலேயே நடக்கிறது என்று நீயுமா நம்புகிறாய் ?’

‘நான் நம்புகிறேனா என்பது முக்கியமில்லை. மக்கள் நம்புகிறார்கள் என்பது தான் முக்கியம். பொதுமக்கள் மட்டுமல்ல தலைவரே, நம் கூட்டத்தில் உள்ளவர்கள் கூட நம்புகிறார்கள். நிக்கோதேமு கூட இப்போது அவன் பக்கம்’ கயபா சொன்னான்.

‘அதெல்லாம் இருக்கட்டும் இதற்காக என்னிடம் ஏன் வருகிறாய். இயேசு ஒரு போலித் தீர்க்கத் தரிசி. அதைப்பற்றிப் பேசத் தான் வந்தாயா ?’ அன்னாவின் குரலில் கோபத்தின் முதல் சுவடு தெரிந்தது.

‘கடந்த ஞாயிற்றுக் கிழமை என்ன நடந்ததென்று கேளுங்கள். இயேசு ஒரு கழுதையின் மீது அமர்ந்து வர, அவரைச் சுற்றிலும் மக்களும் சிறுவர்களும் சேர்ந்து ஓசான்னா என்று பாடி வாழ்த்துகிறார்கள். கேட்டால் பழைய தீர்க்கத் தரிசனம் நிறைவேறுகிறது என்கிறார்கள். ‘ கயபா முதல் காயை நகர்த்தினான். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்வது மன்னிக்க முடியாத சட்டம். இந்த சட்டமீறலை இயேசு செய்திருக்கிறார்.

அன்னாவின் முகத்தில் குழப்ப ரேகைகள். ‘ சரி அப்படியென்றால் அவனைக் கைது செய்ய வேண்டியது தானே ? ஏன் என்னிடம் அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய் ? புரியவில்லை ?’

‘இது பண்டிகைக் காலமல்லவா ? சுமார் இரண்டு இலட்சம் மக்கள் எருசலேம் விழாவுக்காக வந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவனைக் கைது செய்ய முடியாது. மிகப்பெரிய கலகம் மக்களிடையே உருவாகும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உலகமே அவன் பின்னால் தான் இருக்கிறது இப்போது ‘ கயபா நாசூக்காகப் பேசினான்.

அன்னா சலிப்பைக் காட்டினார். ‘ கயபா… கயபா.. இப்போது என்னதான் செய்யவேண்டும் என்கிறாய் ?’

‘இயேசுவை ரகசியமாய்க் கைது செய்ய வேண்டும். செய்து தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்த வேண்டும்’ கயபா சொன்னான்.

‘என்ன ? கைது செய்து தலைமைச் சங்கத்தின் முன்னால் நிறுத்தவா ? உனக்கென்ன பைத்தியமா ? எதை வைத்து விவாதிப்பாய் ?’

‘அவன் தன்னை உலகை மீட்க வந்த மெசியா என்கிறான். மீட்பர் என்கிறான்.’ கயபா சொன்னான்.

‘மெசியா.. மெசியா.. இந்த வார்த்தையைக் கேட்டுக் கேட்டு போரடிக்கிறது. எரேமியாவும், இசையாசும் ஒருகாலத்தில் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். நமக்கு முன்னால் எப்போதும் ஏதாவது மெசியாக்கள் ஓடிக் கோண்டே தான் இருக்கிறார்கள். ரெவோல்ட், சீலோட், கமாலியாவில் ஒரு யூதா.. எத்தனையோ மெசியாக்களை நான் கண்டிருக்கிறேன். இப்போது இதோ ஒரு புதிய மெசியா ! கயபா… நீ ஏன் இதை பெரிதாக எடுத்துக் கொள்கிறாய் ?’ அன்னா குரலை உயர்த்தினான்.

‘இவன் சற்று வித்தியாசமான மெசியா தலைவரே. இவன் பணக்காரர்கள் உலகில் இருக்கக் கூடாது என்கிறான். எல்லோரும் சமம் என்கிறான். பணக்காரர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாதாம். அதைவிட ஊசியின் ஓட்டையில் ஒட்டகம் நுழையுமாம். நாம் விண்ணகத்தில் நுழைய வேண்டுமென்றால் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டுமாம். உலகில் எல்லோரும் சமம் என்றால் நமக்கு என்ன மரியாதை இருக்கிறது’ கயபா இன்னொரு காயை நகர்த்தினான். அன்னா மிகப்பெரிய பணக்காரர். ஏழைகள் ஏழைகளாக இருக்கவேண்டும் தன்னை வணக்க வேண்டும் என்னும் கொள்கையுடையவர். கயபாவின் இந்த குற்றச்சாட்டு அவரை எரிச்சலடையச் செய்தது.

‘சுத்த பைத்தியக்காரத் தனமான பேச்சு…’ அன்னா பொறுமினார்.

‘அது மட்டுமல்ல தலைவரே.. அதைவிட அதிகமாய்ப் பேசுகிறான். அவனுடைய பேச்சைக் கேட்போர் எல்லாம் அவனுடைய தாயும் சகோதரருமாம்’

‘அவன் பைத்தியக் காரன் தான். இல்லையென்றால் இப்படியெல்லாம் பேசுவானா ?’ அன்னா மெலிதாய் புன்னகைத்தார்.

‘அப்படி ஒதுக்க முடியாது தலைவரே. அவன் மக்களுக்காக உயிரைப் பலியாகக் கொடுப்பானாம் அதனால் மக்கள் பலி செலுத்தத் தேவையில்லையாம். இப்படி ஒரு அறிவிப்பை மக்கள் பின்பற்ற ஆரம்பித்தால் நமக்கு ஏற்படக்கூடிய இழப்பை நீங்கள் எண்ணிப்பாருங்கள். மக்கள் ஆலயத்தில் புறாக்களையோ, ஆடுகளையோ வாங்காமல் இருந்தால் நமக்கு நேரப்போகும் பொருளாதார இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல’ கயபா நிலமையை கொஞ்சம் கொஞ்சமாய் சூடேற்றினான்.

‘இதை ஏன் நீங்கள் என்னிடம் ஏற்கனவே சொல்லவில்லை ?’ அன்னாவின் குரலில் இப்போது கோபம் வெளிப்படையாகவே தெரிந்தது.

‘சுமார் ஆறு வாரத்துக்கு முன் பெத்தானியாவில் இலாசரஸ் என்னும் ஒருவனை அடக்கம் செய்த நான்கு நாட்களுக்குப் பின் உயிருடன் எழச் செய்திருக்கிறான் ‘ கயபா தொடர்ந்தான்.

‘நீ நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறாய் கயபா.’

‘இதுதான் வேளை. அவனை இன்று இரவு பார்த்துக் கொள்ளலாம். ‘ கயபா சொன்னான். அன்னாவின் கோபத்தைக் கிளறிவிட்ட திருப்தி அவனுக்கு.

‘என்ன குற்றம் சொல்லப் போகிறீர்கள் ?’

‘போலி தீர்க்கத் தரிசனம் !’ கயபா சொல்ல அன்னா நெற்றியைத் தேய்த்தான். சந்தர்ப்பத்தை எந்தவிதத்திலும் நழுவ விடக்கூடாது என்று முடிவெடுத்த் கயபா முக்கியமான அஸ்திரத்தை வீசினான்.

‘எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு செய்தி சொல்கிறேன். அவன் கோயிலில் என்ன செய்தான் தெரியுமா ? நம்முடைய விற்பனையாளர்களையெல்லாம் அடித்து விரட்டினான். கேட்டால் அது அவனுடைய தந்தையின் வீடாம். நாம் அதை கள்வர் குகையாக்கியிருக்கிறோமாம்.’ கயபா துருப்புச் சீட்டை வீசினான்.

அன்னா கோபத்தில் எழுந்தார். ‘ என்ன நம்முடைய வியாபாரிகளை விரட்டினானா ? நம்முடைய ஆலயம் அவனுடைய தந்தையின் இல்லமா ?’ அன்னா கொதித்தார்.

‘இந்த விழா மட்டும் முடியட்டும் அவனை முடிப்போம்’ அன்னா சொல்ல கயபா குறுக்கிட்டான்.

‘இல்லையில்லை… நான் அவ்வளவு நாள் காத்திருக்கவே கூடாது. ஏன் ஒரு நாள் கூட காத்திருக்கக் கூடாது. அவன் தப்பிவிடுவான். நம்முடைய பார்வையில் இங்கே எருசலேமில் இருக்கும்போதே காரியத்தை கட்சிதமாய் முடித்து விட வேண்டும்’

‘அதுவும் சரிதான். ஆனால்… இந்த மக்களும், ஆளுநன் போந்தியு பிலாத்துவும் தான்….. ‘ அன்னா இழுத்தார்.

‘மக்களை விட்டு விடுங்கள். பிலாத்துவை சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கான தகுதியும், அனுபவமும், திறமையும் உங்களுக்குத் தான் இருக்கிறது. ‘ கயபா சொல்ல அன்னா தலையாட்டினான்.

‘சாட்சிக்கு யாராவது வருவார்களா ?’ அன்னா கேட்டான்

‘யாரும் வரமாட்டார்கள். அதற்கும் திட்டம் வைத்திருக்கிறேன். பார்க்கலாம்…’ கயபா சொன்னான்.

‘எப்படிக் கைது செய்யப் போகிறீர்கள் ?’

‘இரவில் அவன் எங்கே தங்குவான் எங்கே போவான் என்பதெல்லாம் புரியாத புதிர் தான். எனவே அவனுடைய சீடர்களில் ஒருவனையே வலைவீசிப் பிடித்து ஆசை காட்டி வைத்திருக்கிறோம். அவன் நமக்கு உதவுவான். இரவில் இயேசு எங்கே தங்குவார் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும்’ கயபா சொன்னான்.

‘நமக்கு அவனுடைய ஆள் துணை வேண்டுமா என்று யோசித்துக் கொள்.’ அன்னாவின் குரலில் அனுமதி தெரிந்தது.

‘கைது செய்யும்போது படைவீரர்கள் மட்டும் தான் இருப்பார்கள். அவர்களில் பலர் இயேசுவைப் பார்த்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல இயேசு எங்கே இருப்பார் என்பது நமக்கு தெரியாது. எனவே அவனுடைய ஆள் ஒருவன் இருப்பது நமக்கு பலம் தான்.’ கயபா நியாயப் படுத்தினான்.

‘சரி.. யார் அது ? அவன் பெயர் என்ன ?’ அன்னா கேட்க, கயபா பதில் சொன்னான்.

‘யூதாஸ் இஸ்காரியோத். இன்னும் சற்று நேரத்தில் இங்கே வந்து விடுவான்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *