இயேசுவின் வரலாறு 36 : குருத்தோலை ஞாயிறு

இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான நாள் இது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது இயேசுவுக்கு வயது முப்பத்து மூன்று.

இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி இயேசுவை வரவேற்க ஆயத்தமானார்கள். இயேசுவின் புகழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் எருசலேம் வாழ் ஏழை எளிய மக்களிடம் வெகுவாகப் பரவியிருந்தது. பாவிகள், ஏழைகள் என்று யாரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவரிடமும் அன்புடனும் நேசத்துடனும் பழகுவதிலும், நோயாளிகளை சுகப்படுத்துவதிலும், மக்களுக்குப் போதனைகள் வழங்குவதிலும் இயேசு தனித்தன்மையுடன் விளங்கியதால் இந்த முறை மக்கள் அவருடைய எருசலேம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

பெத்பகு என்னும் சிற்றூரை இயேசுவும் சீடர்களும் அடைந்தார்கள். அது ஒலிவமலைக்கு அருகே இருந்தது. எருசலேம் இன்னும் கொஞ்ச தூரம் தான். இயேசு தன்னுடைய சீடர்களில் இருவரை அழைத்து

‘நீங்கள் நேராக ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும் போதே ஒரு கழுதையையும், இதுவரை யாரும் அமர்ந்து சவாரி செய்திராத அதனுடைய குட்டியையும் கட்டி வைத்திருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாரேனும் கேட்டால், இது கடவுளுக்குத் தேவை என்று சொல்லுங்கள்’ என்று சொல்லியனுப்பினார்.

சீடர்கள் ஊருக்குள் நுழைந்தபோது இயேசு சொல்லியிருந்ததைப் போல ஒரு கழுதையையும், அதன் குட்டியையும் கண்டார்கள். அவற்றை அவிழ்த்தார்கள்.

கழுதையின் உரிமையாளன் ஓடி வந்தான்,’ ஏய்.. யார் நீங்கள் ? ஏன் என்னுடைய கழுதையை அவிழ்க்கிறீர்கள் ?’

‘இது ஆண்டவருக்கு வேண்டும்’ சீடர்கள் சொல்ல உரிமையாளன் பதில் ஏதும் பேசவில்லை.

இயேசுவின் காலத்துக்கும் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சகரியா என்னும் இறைவாக்கினர் இப்படியெல்லாம் நடக்கும் என்று தீர்க்கத் தரிசனம் சொல்லியிருந்தார் என்பதை சீடர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

‘மகள் சீயோனிடம் செல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; மறியாகிய கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார்’ என்று அவர் இறைவாக்கு உரைத்திருந்தார்.

சீடர்கள் கழுதைக் குட்டியையும், கழுதையையும் இயேசுவிடம் கூட்டி வந்தார்கள். உடனே அருகிலிருந்த மற்ற சீடர்கள் அழகிய ஆடைகளை கழுதைக் குட்டியின் மீது விரித்து இயேசுவை அதில் அமரவைத்து ஊருக்குள் அழைத்துச் சென்றார்கள். இந்தமுறை எருசலேமில் நுழைந்தபோதே பரபரப்பு நகரெங்கும் பற்றிக் கொண்டது.

இயேசு கழுதைக் குட்டியின் மீதமர்ந்து நகரில் வந்ததும், மக்கள் அனைவரும் ஒலிவ மரக் கிளைகளைக் கைகளில் ஏந்தியும், கழுதைக்கு முன்னால் இலைகளைப் பரப்பியும் வரவேற்றார்கள்.

வாழ்த்தொலிகள் முழங்கின.

‘தாவீதின்மகனுக்கு ஓசான்னா’

‘ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக’

‘உன்னதங்களிலே ஓசான்னா….’

வாழ்த்தொலிகள் முழங்கின.

எருசலேம் நகர் முழுவதும் இயேசுவுக்கு புகழ்பா வரவேற்பு வழங்கப்பட்டது. சிலர்,’ யார் இது ? இத்தனை பரபரப்புக்குச் சொந்தக்காரர் ?’ என்று வினவ
‘இவர் தான் இயேசு என்னும் இறைவாக்கினர்’ என்று மக்கள் பதில் சொன்னார்கள்.

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்து இயேசுவின் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

இயேசுவின் பவனி அதிகாரிகளைக் கலக்கமுறச் செய்தது. மக்கள் இயேசுவைத் தலைவராக்கி தைரியமாக பவனி செல்லுமளவுக்கு வந்தார்களே என திகைத்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து
‘இயேசுவே.. உமது சீடர்களின் புகழ்ப்பா அதிகமாகிக் கொண்டே போகிறது. அவர்களை அடக்கும்’ என்றனர்.

‘இவர்களை அடக்கினால் இதோ கீழே கிடக்கின்ற கற்கள் என்னைப் புகழுமே ! என்ன செய்வது ? இவையெல்லாம் நடந்தாக வேண்டும்’ இயேசு சொல்ல அவர்கள் கோபத்துடன் அகன்றனர்.

இயேசு எருசலேம் தேவாலயத்துக்கு வந்தார்.

தேவாலயத்தைக் கண்ட இயேசு கண் கலங்கினார்.
‘எருசலேமே… நீ இன்னும் திருந்தவில்லையே. ஒரு காலம் வரும் அப்போது நீ உண்மை அறிவாய். கல்லின் மீது கல் இராதபடி நீ தரைமட்டமாகப் போகிறாயே’ என்று இயேசு அழுதார்.

பவனி எருசலேம் தேவாலயத்தை அடைந்தது.

ஆலய முற்றம் முழுவதும் கூடியிருந்த மக்கள் இப்போது இயேசுவைச் சூழ்ந்து கொண்டார்கள். எருசலேம் தேவாலயத்தின் மிக முக்கிய நபராகி விட்டிருந்தார் இயேசு. கூட்டத்தினர் இயேசுவைக் குறித்துப் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். இலாசரின் நண்பர்களும் உறவினர்களும் எருசலேம் தேவாலயத்தருகே இருந்ததால் இலாசரைப் பற்றிய பேச்சும் அங்கே அதிக முக்கியத்துவம் பெற்றது.

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து செபித்தார். அப்போது வானத்திலிருந்து
‘மகிமைப் படுத்தினேன் மீண்டும் மகிமைப்படுத்துவேன்’ என்னும் குரல் ஒலித்தது. ஆலய வாசலில் கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். சிலர் குரல் எதுவும் கேட்கவில்லை, இடி இடித்தது என்றார்கள்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்கு எடுத்துக் கொண்டிருந்தபோது புறா வடிவில் கடவுளின் ஆவி இறங்கியதையும் வானிலிருந்து ‘இவரே என் அன்பார்ந்த மகன்’ என்னும் குரல் எழுந்ததையும் கூடியிருந்த மக்கள் பார்த்தார்கள். இரண்டாவது முறையாக இயேசு உருமாறியபோது வானிலிருந்து எழுந்த குரலை சீடர்கள் கேட்டார்கள். இப்போது மூன்றாவது முறையாக வானிலிருந்து எழும் குரலை எருசலேம் தேவாலய மக்கள் கேட்கிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,’ இந்தக் குரல் எனக்காக வரவில்லை. உங்களுக்காகத் தான் வந்திருக்கிறது. உலகின் தீர்ப்பு வரப் போகிறது. இதயங்களைக் கடினப்படுத்தாதீர்கள். இவ்வுலக அரசன் உங்களை விட்டு விடைபெறும் நாள் நெருங்கிவிட்டது. மனுமகன் விண்ணில் உயர்த்தப்படும் நாள் வருகிறது. விரைவில் மானிட மகன் மாட்சிமையுடன் வானிலிருந்து இறங்கி வருவதைக் காண்பீர்கள்’ என்றார்.

எருசலேம் தேவாலய குருக்களும், அறிஞர்களும் இயேசுவை நெருங்கினார்கள். அவர்களுடைய கோபம் ஒரு எல்லையைத் தாண்டியிருந்தது.

‘உம்மை பலமுறை எச்சரித்திருக்கிறோம்… இன்றும் வந்து உமது சொந்தக் கருத்துக்களை ஆலயத்தில் போதித்துக் கொண்டிருக்கிறீரே ! உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது ? நீர் குருவா ? நீர் மறைநூல் அறிஞரா ? நீர் மூப்பரா ? யாருமில்லை. பின் எந்த தைரியத்தில் ஆலயத்தில் வந்து அமர்ந்து உனக்குத் தோன்றுவதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் ? எந்த அதிகாரத்தால் இதைச் செய்கிறாய் ?’ அவர்கள் இயேசுவிடம் தங்கள் கோபத்தைக் கொட்டினார்கள்.

‘சரி… நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதன் பதிலை நீங்கள் சொன்னால், நான் எந்த அதிகாரத்தில் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்’ இயேசு சொன்னார்.

‘கேளும். சொல்கிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.

‘திருமுழுக்கு யோவான் இருந்தாரே. அவர் மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்தது எந்த அதிகாரத்தால் ? கடவுளிடமிருந்து வந்த அதிகாரமா ? மனிதரிடமிருந்து வந்த அதிகாரமா ? சொல்லுங்கள்’ இயேசு கேட்டார்.

மிகவும் எளிதாகத் தோன்றினாலும் இந்தக் கேள்வி மிகவும் ஆழமானது என்பது அவர்களுக்குப் புரிந்தது. யோவானின் திருமுழுக்கு அதிகாரம் கடவுளிடமிருந்து வந்தது என்று சொன்னால், பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை. கடவுளிடமிருந்து வந்த அதிகாரத்தைப் புறக்கணித்துவிட்டு கடவுளுக்கு உகந்தவர்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் என்று கேட்பார். மனிதரிடமிருந்து வந்தது என்றால் சுற்றியிருக்கும் அத்தனை மக்களும் நமக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே யோவானை கடவுளின் இறைவாக்கினர் என்று ஆழமாக நம்புகிறவர்கள். இப்படி எந்தப் பதிலும் சொல்ல முடியாத நிலமை.

‘எங்களுக்குத் தெரியாது’ இதைத் தவிர ஒரு சிறந்த பதிலை அவர்களால் சொல்ல முடியவில்லை.

‘அப்படியானால் நானும் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறேன் என்பதை சொல்ல மாட்டேன்’ இயேசு சொன்னார்.
மடக்க நினைத்தவர்கள். மடங்கினார்கள்.

ஆனாலும் அவர்கள் விடவில்லை. எப்படியும் ஒரு பிரச்சினையில் அவரைச் சிக்க வைக்க வேண்டும் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்கள்.

‘நாம் சீசருக்கு வரி செலுத்துவது முறையா ?’ அவர்கள் கேட்டார்கள்.

ரோம அதிகாரத்தின் கீழ் இருக்கும் யூத மக்கள் சீசருக்கு வரி செலுத்தி வருகிறார்கள். இயேசு வரி செலுத்துவது முறையே என்று சொல்வாரானால் யூத மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் ஏனெனில் அவர்கள் விருப்பமில்லாமல் தான் வரி செலுத்திக் கொண்டிருந்தார்கள். வரி செலுத்துதல் முறையல்ல என்று சொல்வாரானால் ரோம அரசுக்கு எதிராகவே அவர் செயல்பட்டதாக அர்த்தமாகிவிடும். உடனடியாக கைது செய்யப்படுவார். சிக்கலான கேள்வி இயேசுவின் முன்னால் வைக்கப்பட்டது. இயேசு அவர்களைப் பார்த்தார்,

‘வெளிவேடக்காரர்களே ஏன் என்னை சோதிக்கிறீர்கள் ? ஒரு நாணயத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்’

அவர்கள் ஒரு நாணயத்தைக் கொண்டு வந்து இயேசுவிடம் கொடுத்தார்கள்.

‘இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் யாருடையது ?’ இயேசு கேட்டார்.

‘சீசருடையது ‘ அவர்கள் சொன்னார்கள்.

‘சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்’ இயேசு சொல்ல அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இயேசு நிறுத்தவில்லை,’ ஏன் இந்த வெளிவேடத்தனம். பொது இடங்களில் மரியாதை பெறவும், ஏழைகளை ஏய்த்துப் பிழைக்கவும், அவர்களிடமிருந்து வணக்கங்களைப் பெறவும் ஆர்வம் காட்டுவது ஏன் ? எதற்காக உங்கள் ஆடைகளை அகலப்படுத்தி, பட்டுக் குஞ்சங்களைப் பெரிதாக்கி வீண் ஆடம்பரமாய் உலவுகிறீர்கள் ? தேவையானதை விட்டுவிட்டு தேவையற்றவற்றைக் கட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் கடவுளின் அரசுக்குள் நுழையப்போவதில்லை. அன்பையும், இறைநம்பிக்கையையும், இரக்கத்தையும் மறந்து விட்ட பாம்புகள் நீங்கள். இறுதி நாளின் பொதுத் தீர்வைக்கு நீங்கள் தப்பவே முடியாது’ என்று எச்சரிக்கை விடுத்தார். சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து விடுத்த அந்த சவால் தலைமைக் குருவான கயபாவின் காதுகளுக்கும், அவரது மாமனாரான குரு அன்னாவின் காதுகளுக்கும் எட்டியது. அவர்கள் எருசலேம் வாசலிலேயே நின்று தங்களை ஒருவன் எதிர்க்கிறானே என்று தங்கள் சினத்தின் அளவை அதிகப்படுத்திக் கொண்டார்கள்.

68. ஒரு துளியே கடல்


இயேசு ஆலயத்தில் நுழைந்து பேசத் துவங்கினார்.

நானே திராட்சைக் கொடி. என் தந்தை திராட்சைத் தோட்ட உரிமையாளர். திராட்சைத் தோட்ட உரிமையாளருக்குக் கனி கொடுக்கும் கிளைகள் மீது தான் கவனிப்பு இருக்கும். கனி தர மறுக்கும் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு விறகுக்காய் கட்டப்படும். கனிதரும் கிளைகளையோ அவர் அதிகக் கனிதரும் படி கழித்து விடுவார்.

நானே திராட்சைக் கொடி.

என்னில் நிலைத்திருக்கும் கிளைகள் மட்டுமே கனிதர முடியும். என்னில் நிலைத்திருக்காத கிளைகளோ கனிதருவதில்லை. அவை வெட்டுண்டு தரையில் வீழ்ந்து பச்சையமிழந்து விறகாகும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருக்கட்டும். நான் என் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றி அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறேன். நீங்களும் என் வார்த்தைகளின் படி வாழ்ந்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடமும் இல்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்.உலகம் உங்களைப் பகைக்கிறதென்று கவலைப்படாதீர்கள் அது உங்களைப் பகைக்கும் முன்பே என்னைப் பகைத்துவிட்டது. என்னில் நிலைத்திருங்கள்.

அவருடைய பார்வை அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போட்டுக் கொண்டிருப்பவர்களைக் கவனித்தது.

ஒரு செல்வச் சீமான் வந்தார். தன்னுடைய பணப்பெட்டியைத் திறந்து தன்னிடமிருந்த பணத்தில் ஒரு பிடியை அள்ளி காணிக்கைப் பெட்டியில் கொட்டினார்.

இன்னொருவர் வந்தார். தன்னுடைய அங்கியிலிருந்து கட்டுக் கட்டாய் பணத்தை எடுத்தார். அதை சிறிது நேரம் கைகளில் வைத்திருந்து மக்கள் பார்க்கிறார்களா என்று அரைக் கண்ணால் நோட்டம் விட்டார். மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள் என்பதை அறிந்ததும் பணத்தை பெட்டியில் போட்டு விட்டுப் பெருமையுடன் வெளியேறினார்.

மீண்டும் ஒருவர் வந்தார். கொஞ்சம் பணத்தைக் கைகளில் அள்ளினார். அவருக்கு எவ்வளவு பணத்தைக் காணிக்கைப் பெட்டியில் போடுவது என்ற குழப்பம். எடுப்பதும் வைப்பதுமாக கொஞ்ச நேரம் இருந்தார். பின் கொஞ்சம் பணத்தை பெட்டியில் போட்டு விட்டு நடையைக் கட்டினார்.

கடைசியாக ஏழை விதவைப் பெண் ஒருத்தி வந்தாள். அவள் தன்னுடைய ஆடையின் நுனியில் முடிந்து வைத்திருந்த ஒரு கொதிராந்திற்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டாள். அவளுடைய முகம் மலர்ந்தது. திருப்தியான புன்னகை அவளிடம் உருவானது. அவள் யாரையும் பார்க்கவில்லை. அமைதியாய் அமர்ந்து செபிக்கத் துவங்கினாள்.

இயேசு மக்களைப் பார்த்தார்.

‘இங்கே மக்கள் காணிக்கைப் போடுவதை நீங்கள் யாரேனும் கவனித்தீர்களா ?’ இயேசு கேட்டார்.

‘கவனித்தேன்… ‘

‘கொஞ்ச நேரம் கவனித்தேன்…’

‘கவனிக்கவில்லை…’ மக்கள் வெவ்வேறு பதில்களைச் சொன்னார்கள்.

‘யார் அதிகம் போட்டது ?’ இயேசு கேட்டார்.

‘முதலில் வந்தவர்…’

‘இல்லை இரண்டாவதாக வந்தவர் தான்…’ மக்கள் அதற்கும் வேறுபட்டப் பதிலையே சொன்னார்கள்.

‘நீங்கள் சொல்வதெல்லாம் தவறு. கடைசியாக வந்த விதவைப் பெண் தான் அதிகம் போட்டாள் !’ இயேசு சொன்னார்.

அவர்கள் வியந்தார்கள். ‘அந்தப் பெண்ணா ? அவள் ஒன்றோ இரண்டோ தொராந்த் தானே போட்டாள். அது அற்பப் பணம். எல்லோருமே அவளை விட அதிகமாய்த் தான் போட்டார்கள்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

இயேசு புன்னகைத்தார்.

‘ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் இருந்த பணத்தின் ஒரு பகுதியைத் தான் போட்டார்கள். இவளோ தன்னிடமிருந்த மொத்தத்தையும் போட்டு விட்டாள்’ இயேசு சொன்னார்.

‘மற்றவர்களிடம் இன்னும் ஏராளமான பணம் மீதமிருக்கிறது. அது அவர்களுக்காக அவர்கள் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இவளிடமோ இனிமேல் பணமில்லை. மொத்தத்தையும் போட்டு விட்டாள்… இப்போது சொல்லுங்கள் கொஞ்சமா, மொத்தமுமா ?எது சிறந்தது ?’ இயேசு கேட்டார்.

மக்கள் குழம்பிப் போய் பார்த்தார்கள்.

‘கடவுள் உங்கள் பணத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. உங்கள் மனத்தை எட்டிப் பார்க்கிறார். எனவே கொடுப்பதை நிறைந்த மனதோடு கொடுங்கள்’ என்றார்.

‘கடவுளின் அரசு நெருங்கிவிட்டது. எப்போது இரண்டாம் வருகை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோரும் தயாராக இருக்கவேண்டும். விழிப்பாய் இருக்காதவன் அழிவான்’ சொன்ன இயேசு விழிப்பாய் இருக்கவேண்டியதன் தேவையை உணர்த்த ஒரு கதை சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *