இயேசுவின் வரலாறு 35 : லாசரின் உயிர்ப்பும், சக்கேயுவின் மனமாற்றமும்

இலாசரே… வெளியே வா

 

stdas0376

இயேசுவுக்கு அழைப்பு வந்தது. பெத்தானியாவிலிருந்த இலாசர் குடும்பத்திலிருந்து. இயேசு எருசலேமுக்குச் சற்றுத் தொலைவில் மக்களோடு அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார்

இலாசர் நோய்வாய்ப்பட்டான். இலாசர் நோய்வாய்ப்பட்டதும் சகோதரிகள் இருவரும் மிகவும் மனமுடைந்தனர். தன்னுடைய ஒரே சகோதரனை கடுமையான நோய் தாக்கியிருக்கிறதே என்று கவலையடைந்தார்கள். எப்படியாவது இயேசுவை அழைத்து அவர் மூலம் தன் சகோதரனின் நோயைக் குணமாக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் இயேசுவிடம் ஆளனுப்பி, ‘இலாசர் கடுமையான நோயினால் அவதிப்படுகிறான். நீர் வந்தால் மட்டுமே அவன் பிழைப்பான்’ என்னும் தகவலைச் சொன்னார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் இயேசு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து தங்களுக்கு உதவுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். சீடர்களும் அப்படித் தான் நினைத்தார்கள். காரணம் இயேசு அந்தக் குடும்பத்தினரை மிகவும் நேசித்தார்.

ஆனால் இயேசு அந்தச் செய்தியைக் கேட்டுப் பதட்டமடையவில்லை. அந்த இடத்தை விட்டு பெத்தானியாவுக்குப் புறப்படவும் இல்லை.

சீடர்கள் அவரிடம்,’போதகரே… உமது நண்பன் நோயுற்றிருக்கிறான் என்று தெரிந்தும் நீர் ஒன்றும் சொல்லைல்லையே’ என்று கேட்டார்கள்.

‘பயப்படாதீர்கள். சாவில் முடிவதற்கான நோயல்ல இது. இது கடவுளின் மாட்சி விளங்குவதற்கான நோய்’ என்று கூறிய இயேசு அங்கேயே அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின் இயேசு சீடர்களை அழைத்து,’ வாருங்கள் நாம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார்.

‘எங்கே செல்கிறோம் போதகரே’ அவர்கள் கேட்டார்கள்.

‘நாம் யூதேயாவுக்குச் செல்லவேண்டும்… பெத்தானியாவில் நம் நண்பன் இலாசரைச் சந்திக்க வேண்டும்’ இயேசு சொன்னார்.

‘ராபி… அங்கே சென்றால் யூதர்கள் நம்மீது தாக்குதல் நடத்துவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தானே அவர்கள் உம்மீது கல்லெறிய முயன்றார்கள் ‘ சீடர்கள் எச்சரித்தார்கள்.

‘பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை. ஏனென்றால் பகல் ஒளியில் வாழ்கிறது. இரவில் நடப்பவன் தான் இடறிவிழுவான் ஏனென்றால் அங்கே ஒளி இல்லை’ இயேசு சொன்னார். இயேசு சொன்னது என்னவென்று சீடர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘வாருங்கள். இலாசர் தூங்குகிறான். அவனை எழுப்பவேண்டும்’ இயேசு சொன்னார்.

‘தூங்குகிறானா ? அது நல்லது தானே போதகரே. தூங்கினால் அவன் நலமடைவான்’ சீடர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களை நோக்கிப் புன்னகைத்தார்.
‘எனதருமை சீடர்களே… இலாசர் இறந்து விட்டான். வாருங்கள் போவோம்…’ என்றார்.

சீடர்கள் அதிச்சியடைந்தார்கள். ‘இலாசர் இறந்து விட்டாரா ? ‘ அவகளுடைய குரலில் சோகம் வழிந்தது.

அவர்களுடைய சீடரில் ஒருவரான தோமா உடனே பதறி எழுந்து,’ வாருங்கள் நாமும் இயேசுவோடு செல்வோம். யூதர்கள் கல்லெறிந்தால் அதை தாங்கிக் கொள்வோம். ஒருவேளை கொன்று போட்டாலும் கவலையில்லை. வாருங்கள்..’ என்று சீடர்களைத் தயார்படுத்தினார்.

பெத்தானியா நீண்ட தொலைவில் இருந்தது. அவர்கள் அனைவரும் பெத்தானியாவை நோக்கிப் பயணிக்கத் துவங்கினார்கள்.

‘போதகரே… நாம் இங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்திருக்கக் கூடாது. உடனே போயிருந்தால் அவன் இறப்பதற்கு முன்பாகச் சென்று அவனைக் காப்பாற்றியிருக்கலாம்.. இல்லையா ?’ சீடர்கள் சொன்னார்கள்.

‘நாம் அப்போது செல்லாதது நல்லது தான். அது ஏன் என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்’ இயேசு சொல்ல சீடர்கள் மெளனமானார்கள்.

இயேசுவும் சீடர்களும் நீண்டதூரம் நடந்து பெத்தானியாவை அடைந்தார்கள்.

இலாசரைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது !

இலாசரின் வீடு அழுகுரல்களினாலும், ஆறுதல் சொல்ல வந்த உறவினர்களாலும் நிறைந்திருந்தது. இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தியைக் கேட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு விரைந்தோடினாள்.

ஓடிச் சென்று இயேசுவின் முன்னால் பணிந்து,’ஆண்டவரே… நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்… எங்கள் ஒரே சகோதரனை இழந்து விட்டோமே ‘ என்று அழுதாள். நான்கு நாட்களாக அழுது அழுது அவளுடைய கண்கள் சிவந்து, முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தது.

‘ஆண்டவரே.. இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குத் தருவார் என்பது எனக்குத் தெரியும்..’ மார்த்தா புலம்பினாள்.

‘மார்த்தா… கவலைப்படாதே. இலாசர் உயிர்த்தெழுவான்’ இயேசு சொன்னார்.

‘ஆண்டவரே.. இறுதி நாளில் எல்லோரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்..’ அவள் அழுகை அடங்கவில்லை.

‘மார்த்தா.. உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னை நம்புகிறவன் இறந்தாலும் வாழ்வான். இதை நீ நம்புகிறாயா ?’ இயேசு கேட்டார்.

‘நம்புகிறேன் ஆண்டவரே. நீர் கடவுளின் மகன். நீர் சொன்னால் நடக்காதது என்று எதுவுமே இல்லை. அதை நான் முழுமையாக நம்புகிறேன்.’ மார்த்தா அழுதாள்.

‘அப்படியானால் நம்பு. உன் சகோதரன் வருவான்’ இயேசு சொன்னதும் மார்த்தா அழுதுகொண்டே வீட்டுக்கு விரைந்தோடிப் போய் தன் சகோதரி மரியாவிடம் இயேசு வந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தாள். மரியா அதைக் கேட்டதும் தலைவிரி கோலமாக, அலங்கோல ஆடைகளைப் பற்றிக் கவலைப்படாதவளாக இயேசுவை நோக்கி ஓடினாள்.

ஆறுதல் சொல்வதற்காகக் கூடியிருந்த மக்கள் அவள் கல்லறைக்கு ஓடுவதாய் நினைத்தார்கள். நான்கு நாட்களாக அதுதானே நடந்துகொண்டிருக்கிறது. அழுவதும், கல்லறை வாசலில் சென்று கண்ணீர் வடிப்பதும் தானே இடைவிடாமல் நடக்கிறது. எனவே அவர்கள் அவளைத் தேற்ற பின்னாலேயே விரைந்தார்கள். அவளோ நேராக இயேசுவை நோக்கி ஓடினாள்.

‘இயேசுவே… கைவிட்டு விட்டீரே. நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் உயிரோடு இருந்திருப்பானே… ஏன் எங்களை அழவைத்தீர்… ‘ என்று புலம்பினாள்.

மரியாவின் புலம்பல் இயேசுவின் மனதைக் கரைத்தது. அவருடைய கண்களில் கண்ணீர் !

‘பார்… இவர் இலாசரை எந்த அளவுக்கு நேசித்திருக்கிறார். இவர் அழுவதை நாம் கண்டதில்லை இல்லையா ? ‘

‘இதெல்லாம் நடிப்பு. குருடனைக் குணமாக்கும் சக்தி இருக்கிறதாம், தன் நண்பனின் நோயை நீக்கும் சக்தி இல்லையாம்!’

‘அவனுடைய நோயைத் தீர்க்க முடியாது என்பதை அறிந்ததனால் தான் இவர் கொஞ்ச நாட்களாக இங்கே வரவில்லை…’ யூதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களுடைய பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கவோ, அவர்களுக்குப் பதில் சொல்லவோ இல்லை. அவர் மரியாவிடம்

‘இலாசரை எங்கே வைத்தீர்கள் ? அவனுடைய கல்லறை எங்கே இருக்கிறது ?’ என்று கேட்டார்.

‘வந்து பாரும் இயேசுவே’ என்று மரியா உடைந்த குரலில் சொல்ல இயேசுவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

இயேசு கல்லறையின் முன்னால் வந்து நின்றார். அந்தக் காலத்தில் கல்லறை என்பது ஒரு குகை போன்று இருக்கும். இறந்துபோனவனை துணிகளால் சுற்றி நறுமணத் தைலம் பூசி உள்ளே வைத்து அதன் வாசலை எளிதில் நகர்த்த முடியாத மிகப் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு மூடி வைப்பார்கள். இலாசரும் அப்படி ஒரு குகையில் தான் அடக்கம் செய்யப்பட்டிருந்தான்.

‘கல்லை நீக்குங்கள்’ இயேசு சொன்னார்.

‘என்ன ? கல்லை நீக்குவதா ? இவனுக்கென்ன பைத்தியமா ? நான்கு நாட்களான பிணம்… அவனைக் காணவேண்டுமென்றால் உடனே வந்திருக்கலாமே. இப்போது நான்கு நாட்களான பிணத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறானா ?’ யூதர்கள் பலர் முணுமுணுத்தார்கள்.

இலாசரின் சகோதரி மார்த்தாவும் இயேசுவிடம்,’ஆண்டவரே.. நான்கு நாட்களாயிற்றே… நாற்றம் அடிக்குமே’ என்று தழுதழுக்கும் குரலில் சொன்னாள்.

‘நம்பினால் நீ கடவுளின் மாபெரும் செயல்களைக் காண்பாய் என்று நான் சொன்னேனே.’ இயேசு அவளைப் பார்த்துச் சொன்னார்.

மார்த்தா உறவினர்களிடம் கல்லறைக் கல்லைப் புரட்டிப் போடுமாறு சொல்ல, பலர் வந்து மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கல்லைப் புரட்டிப் போட்டார்கள்.

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து. ‘தந்தையே… உமக்கு நன்றி. நீர் எப்போதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் தான் என்னை அனுப்பினீர் என்பதை சூழ்ந்திருக்கும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன்’ என்றார்.

கூட்டத்தினருக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லைப் புரட்டுவதால் இவர் எப்படி கடவுளின் அருள் பெற்றவர் என்றாகும் ? என்று உள்ளுக்குள் நகைத்தார்கள்.

இயேசு கல் புரட்டப்பட்ட கல்லறையை நோக்கி உரத்த குரலில்
‘இலாசரே… வெளியே வா’ என்றார்.

இலாசர் வெளியே வந்தான் !

இறந்து போய் நான்கு நாட்களாகக் கல்லறையில் கிடந்த பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து வந்துகொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திடுக்கிட்டுப் பின்வாங்கினார்கள். பலர் தலை தெறிக்க அவ்விடம் விட்டே ஓடி மறைந்தார்கள். இலாசரின் உடல் முழுவதும் துணியினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அவனுடைய முகம் கைகள், கால்கள் எல்லாம் துணிகளினால் சுற்றப்பட்டிருந்ததால் அவனால் நடக்க முடியவில்லை.

‘கட்டுகளை அவிழ்த்து அவனை நடக்கவிடுங்கள்’ இயேசு சொன்னார்.

மார்த்தாவும், மரியாவும் ஒரு வினாடி நேரம் அதிர்ச்சியில் உறைந்து, பின் நடந்ததை அறிந்து அளவிட முடியாத ஆனந்தத்தோடு ஓடிச் சென்று சகோதரனை கட்டியணைத்தார்கள். அவர்கள் தங்கள் சகோதரனை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை அவர்கள் அப்போது தான் அறிந்து கொண்டார்கள்.

இலாசரின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. நல்ல உடல் நலத்துடன் அவன் இயேசுவின் முன்னால் வந்தான். நடந்தது என்னவென்பது அவனுக்குப் புரியவில்லை. இயேசு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அந்த நிகழ்வைக் கண்ட அனைவருமே இயேசுவை நம்பினார்கள். இயேசுவின் எதிர்ப்பாளர்களுக்கும், ஆலய குருக்கள், மறைநூல் அறிஞர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய தோல்வியாய் அமைந்தது.

இலாசர் உயிர்பெற்ற நிகழ்வு இயேசுவுக்கும் ஒரு சுமையாக முடிந்தது. இதற்கு முன்பும் இயேசு இறந்தோருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் எதுவுமே எருசலேமை ஒட்டிய நகரங்களில் நடக்கவில்லை. எனவே எருசலேமுக்கு அந்த தகவல்கள் எல்லாம் அரையும் குறையுமாக, நம்பகத் தன்மை குறைந்தே வந்து சேர்ந்தன. ஆனால் இலாசர் உயிர்பெற்ற நிகழ்வோ எருசலேமுக்கு அருகில் இருந்த பெத்தானியாவிலேயே நடந்ததால் விஷயம் எருசலேம் தேவாலய எல்லைகளில் படு வேகமாகவும் உயிர்ப்புடனும் உலவியது.

தலைமைக்குருக்கள் கயபா மற்றும் அன்னா இருவரின் கோபத்தையும் வெறியையும் அந்த நிகழ்வு கிளறிவிட்டது. எப்படியாவது இயேசுவை தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்னும் எண்ணம் அவர்களுக்குள் வலுப்பெற்றது. கடந்த மூன்று வருடங்களாக இயேசுவை வளரவிட்டது தவறாகிவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுடைய சதி ஆலோசனை தீவிரமடைந்தது.

இயேசுவின் வளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமோ என்பது தான் அவர்களுடைய பிரதான அச்சமாக இருந்ததே தவிர இயேசு மெசியா என்னும் பேச்சுகள் அல்ல. இயேசுவின் போதனைகளை மக்கள் பின் பற்ற ஆரம்பித்தால் எருசலேம் தேவாலயத்தில் பலி செலுத்தும் மக்கள் குறைந்துவிடுவார்கள். அது ஒருவிதத்தில் மிகப்பெரிய வருமான இழப்பாக இருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். தங்களுக்குரிய செல்வாக்கு பெருமளவில் சரிவதால் ரோம அரசு மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள இயேசுவை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தக் கூடும் என்றும் அரசு இருக்கைகள் அலறின.

கயபா உடனே ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தான். ‘ஒரு தேசத்தைக் காப்பாற்ற ஒரு மனிதன் சாவது பிழையில்லை’ என்னும் அறைகூவலை கூட்டத்தில் மையப்பொருளாக்கினான்.

இயேசு இன்னும் தன்னுடைய பணியை முடிக்கவில்லை. மரணத்தை வரவேற்கும் நிலையில் அவர் இல்லை. எனவே அவர் அங்கிருந்து எப்பிராயீம் என்னும் இடத்துக்குச் சென்றார். அது எருசலேமிற்கு வடக்கே சுமார் இருபது மைல் தொலைவில் இருந்தது.

இயேசு சீடர்களுக்கு தன்னுடைய மரணத்தைப் பற்றி மீண்டும் ஒருமுறை விளக்கினார். தான் மதத் தலைவர்களால் பிடிக்கப்பட்டு, பின் ரோம அரசில் கையளிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி சிலுவையில் உயிர்விடுவேன் என்று சீடர்களுக்குச் சொல்ல சீடர்கள் கவலையடைந்தார்கள். இயேசு அவர்களிடம்,’ கவலைப்படாதீர்கள். இவையெல்லாம் நிகழவேண்டும். நான் மீண்டும் உயிர்பெற்று வருவேன்’ என்றார்.


 சக்கேயு உயரமானான்

 

zachius

பாஸ்கா விழாக் காலம். இஸ்ரேல் மக்களின் மிகப் பெரிய பண்டிகை பாஸ்கா. எருசலேம் தேவாலயத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். இயேசுவும் சீடர்களும் கூட பாஸ்கா விழாவில் கலந்து கொள்ள எருசலேமுக்குப் பயணமாகிக் கொண்டிருந்தார்கள்.

சீடர்கள் தங்களுக்குள் இயேசு முன்மொழிந்த தனது மரணத்தைக் குறித்து விவாதித்துக் கொண்டே வந்தார்கள். இயேசு எத்தனை சவாலான கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்லும் திறமை படைத்தவர் என்பதும், மரணித்துப் போனவர்களைக் கூட உயிர்ப்பிக்கச் செய்யும் வல்லமை உள்ளவர் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவரைக் கடவுளாகப் பார்த்த சீடர்களுக்கு அவர் மரித்துப் போவார் என்பதை நம்ப முடியவில்லை.

இயேசுவும் சீடர்களும் எரிகோவுக்குள் நுழைந்து அந்நகரின் தெரு ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அவர் செல்லும் வழிகளிலும் இரண்டு புறமும் மக்கள் பெரும்கூட்டமாக நின்று அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரில் சக்கேயு என்னும் மனிதர் இருந்தார். அவர் வரி வசூலிப்பவர்களின் தலைவர். வரி வசூலிக்கும் ஆயக்காரர்களை மக்கள் பாவிகளின் கூட்டம் என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவர்களும் அளவுக்கு அதிகமான வரியை வசூலித்தும், நேர்மைக்குப் புறம்பாகப் பணம் சம்பாதித்தும் தான் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

சக்கேயுவுக்கு இயேசுவைக் காணவேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்தது. அவர் இயேசுவைப்பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறார். அவர் செய்திருக்கின்ற அதிசயச் செயல்களையும், பாவிகளையும், தன்னைப் போன்ற வரி வசூலிப்பவர்களையும் வெறுக்காத இயேசுவின் குணத்தையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார். இயேசுவின் முக்கியச் சீடர்களில் ஒருவரான மத்தேயு ஒரு வரி வசூலிப்பாளராக இருந்தவர் என்பதையும் சக்கேயு அறிந்திருந்தார்.

சக்கேயு ஒரு குள்ளன். அதனால் அவரால் இயேசுவைக் காண முடியவில்லை. எனவே அவர் முன்னே ஓடி ஒரு அத்திமரத்தில் ஏறினார். மரத்தின் உயரமான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு அவர் தெருவை கவனித்துக் கொண்டே இருந்தார்.

இயேசு அந்தத் தெருவழியே வந்தார். இயேசு தூரத்திலிருந்து வருவதைக் கண்ட சக்கேயு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தார். சக்கேயு தன்னைக் காண்பதற்காக மரத்தில் ஏறி நிற்கிறான் என்பதை இயேசு அறிந்தார். அவர் அத்திமரத்தின் அருகே வந்து சக்கேயுவை ஏறிட்டுப் பார்த்தார்.

‘சக்கேயுவே கீழே இறங்கி வா… இன்று நான் உன் வீட்டில் உணவருந்தவேண்டும்’ இயேசு சக்கேயுவின் பெயர் சொல்லி அழைக்க, சக்கேயு ஆச்சரியமடைந்தார். உடனே மரத்திலிருந்து கீழே குதித்தார்.

‘என்ன இவர் இந்தப் பாவியின் வீட்டில் உணவருந்தப் போகிறாரா ?’

‘இவன் ஊரறிந்த ஏமாற்றுக்காரனாயிற்றே.. அது இயேசுவுக்குத் தெரியாதா ?’

‘இவன் வீட்டிலெல்லாம் சென்றால் இவரை இறைவாக்கினர் என்று யாராவது மதிப்பார்களா ?’
மக்கள் கூட்டத்தினர் முணுமுணுத்தார்கள்.

இயேசு கூட்டத்தினரின் பேச்சுக்களுக்குச் செவிகொடுக்காமல் சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார். சக்கேயு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இயேசுவைக் காண முடியுமா என்னும் ஆவலில் இருந்தவனுடைய வீட்டுக்கு இயேசுவே வந்திருக்கிறார்.

சக்கேயும் இயேசுவை நன்றாக உபசரித்தார். இயேசு அங்கே உணவருந்தினார். இயேசு உணவருந்தி முடித்ததும் சக்கேயு அவருக்கு முன்பாகப் பணிந்து,
‘இயேசுவே நீர் என்னுடைய இல்லத்தில் வந்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சொத்தில் பாதியை நான் இப்போதே ஏழைகளுக்கு வழங்குகிறேன், யாரையாவது ஏமாற்றி எதையாவது பறித்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிச் செலுத்துகிறேன்’ சக்கேயு சொல்ல இயேசு மகிழ்ந்தார்.

‘சக்கேயு, இப்போது தான் நான் உன் இதயம் என்னும் வீட்டில் வந்திருக்கிறேன். இப்போது தான் என்னுடைய விருப்பம் நிறைவேறியிருக்கிறது. இது தான் என்னுடைய பசியும், தாகமும், அதை நீ நிறைவேற்றியிருக்கிறாய்…. ‘ இயேசு சொல்ல சக்கேயு அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று !’ இயேசு சொல்ல சக்கேயு மகிழ்ந்தார்.

கூட்டத்தினர் இயேசுவைப் பார்த்தார்கள். இயேசு அவர்களிடம்
‘இவரும் ஆபிரகாமின் மகனே. ஒதுக்கப்பட வேண்டியவரல்ல. இழந்தவற்றைத் தேடி மீட்கவே மானிடமகன் பூமிக்கு வந்திருக்கிறார். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போது நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் தான் உங்களுக்கும் அளக்கப்படும். உன்னுடைய கண்ணில் மரக்கட்டை கிடப்பதை மறைத்துக் கொண்டு அடுத்தவன் கண்ணில் கிடக்கும் துரும்பை உன் கைகள் சுட்டிக் காட்ட வேண்டாம். முதலில் நீ சுத்தமாய் இரு. அப்போது தான் அடுத்தவன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்கும் பார்வையைப் பெற இயலும்.’ என்றார்.

அடுத்த இரவில் இயேசு பெத்தானியாவில் தங்கினார். ஆனால் இந்தமுறை இயேசு பெத்தானியாவிலிருந்த இலாசரின் இல்லத்துக்குச் செல்லவில்லை. அவர் சீமோன் என்னும் ஒருவருடைய வீட்டில் தங்கினார். அவர் முன்பு தொழுநோயாளியாக இருந்து இப்போது சுகம் பெற்றவர்.

இலாசர் தன்னுடைய இல்லத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். மார்த்தா அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அவர்களுடைய சகோதரி மேரி மட்டும் அங்கே இல்லை. அவர் இயேசுவைக் காணவேண்டும் என்னும் ஆவலில் சீமோனின் வீட்டுக்கு ஓடினாள்.

சீமோனின் வீட்டுக்குள் நுழைந்த மரியா இயேசுவின் பாதத்தருமே அமர்ந்தாள். தன்னுடைய கையில் வைத்திருந்த பரிமளத் தைலத்தை எடுத்து இயேசுவின் பாதத்தில் பூசத் துவங்கினாள். அது மிகவும் விலையுயர்ந்த ஒரு தைலம். மரித்தவர்களை அடக்கம் செய்யும்போது அந்தத் தைலத்தை பயன்படுத்துவது வழக்கம். மரியா இயேசுவின் பாதத்தில் தைலத்தை தேய்த்து தன்னுடைய கூந்தலினால் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். வீடு நறுமணத்தாலும், மௌனத்தாலும் நிரம்பியது.

யூதாஸ் – இயேசுவின் சீடர்களில் ஒருவர், மௌனத்தைக் கலைத்தார்.

‘என்ன இப்படி விலையுயர்ந்த நறுமணப் பொருளை வீணாக்கிவிட்டாயே ? இதை விற்றால் முன்னூறு பணமாவது கிடைத்திருக்குமே. அதை ஏழைகளுக்காவது கொடுத்திருக்கலாம்’ யூதாஸ் பொரிந்தான். யூதாஸ் முதன் முறையாக ஒரு செயலை பணத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறான்.

‘அவளை விட்டு விடுங்கள். தடுக்காதீர்கள். அவள் என் மரணத்தின் நினைவாக இவற்றைச் செய்கிறாள். ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள் ஆனால் நான் இருக்கப்போவதில்லை. உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இந்தப் பெண் செய்வதும் நினைவுகூரப்படும்’ இயேசு சொல்ல வீட்டில் மீண்டும் மௌனம்.

மறுநாள் இயேசுவும் சீடர்களும் பெத்தானியாவை விட்டு எருசலேம் நோக்கிப் பயணமானார்கள். பாஸ்காவுக்கு முந்திய ஞாயிற்றுக் கிழமை இயேசு எருசலேமிற்குள் நுழைகிறார். இயேசுவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பெரும் நிகழ்வாக அந்த நாள் அமைந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *