இயேசுவின் வரலாறு 34 : சாதனைகளும், போதனைகளும்

நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.

 

Jesus heals two blind men

இயேசு பெத்தானியாவில் ஒரு தெரு வழியாக சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். பெரும் திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தெரு ஓரத்தில் இரண்டு பார்வையிழந்தவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது தங்களுக்கு அதிக காசு கிடைக்கும் என்ற ஆவலில் சத்தமாகப் பிச்சை கேட்டார்கள்.

வழக்கத்துக்கு மாறான கூட்டம் என்பதால் அவர்களில் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து ஏன் இவ்வளவு கூட்டம் என்று கேட்டான்.

‘இயேசு சென்று கொண்டிருக்கிறார். அதனால் தான் இத்தனை கூட்டம்’ அவர் பதில் சொன்னார். இயேசு சென்று கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்டதும் அந்த இரண்டு பார்வையிழந்த மனிதர்களும் உரத்த குரலில் கத்தினார்கள்.

‘தாவீதின் மகனே.. இயேசுவே … எங்கள் மீது இரக்கம் வையும்’. ஏனெனில் அவர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வல்லமை பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். பார்வையில்லாமல் இருந்ததால் அவர்களால் இயேசுவைச் சென்று சந்திக்க முடியவில்லை.

‘தாவீதின் மகனே.. இயேசுவே … எங்கள் மீது இரக்கம் வையும்’ மீண்டும் அவர்கள் கத்தினார்கள்.

‘பேசாதே…. அமைதியாய் இரு..’ கூட்டத்தினர் அவர்களை அதட்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கூச்சலை நிறுத்தவில்லை. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தால் அமைதியாய் போக முடியுமா ? அவர்கள் இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

‘தாவீதின் மகனே.. இயேசுவே … எங்கள் மீது இரக்கம் வையும்’.

இயேசு நின்றார். ‘அவர்களை என்னிடம் கூட்டி வாருங்கள்’ என்றார்.

கூட்டத்தினர் அவனிடம் சென்று ‘உற்சாகமாய் இரு. இயேசு உன்னை அழைக்கிறார். ‘ என்றனர். சத்தம் போடாதே என்று சற்று முன்னர் அதட்டிய மக்கள் இப்போது நேசத்துடன் பேசுகிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார்.

‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?’ இயேசு கேட்டார்.

‘ஆண்டவரே.. நாங்கள் பார்வை பெற வேண்டும். எங்கள் கண்களைத் திறந்தருளும்’ அவர்கள் வேண்டினார்கள்.

இயேசு அவர்கள் கண்களைத் தொட்டார். ‘உங்கள் நம்பிக்கை உங்களை நலமாக்கியது. பார்வையைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். இருட்டுக்குள் கிடந்த இருவரும் சட்டென்று வெளிச்சத்துக்குள் வந்தார்கள்.

கூட்டத்தினர் அதிசயிக்க, பார்வை பெற்றவர்கள் சொல்ல முடியா ஆனந்தத்தில் குதிக்க, இயேசு பயணத்தைத் தொடர்ந்தார்.

பத்துத் தொழுநோயாளிகள்.

 

10-lepers-slide1

இயேசு எருசலேம் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் தூரமாய் பத்து பேர் நின்று கொண்டிருப்பதை இயேசு கண்டார். அவர்கள் தொழுநோயாளிகள்.

தொழுநோயாளிகள் பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது என்பதும், அவர்களுக்கு எதிரே யாரேனும் வந்தால் கூட ‘தீட்டு தீட்டு’ என்று உரக்கக் கத்தி எதிரே வருபவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதும் மோசேயின் சட்டங்கள் அடங்கிய நூலில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், தொழுநோயாளிகள் என்பவர்கள் கடவுளின் சாபத்துக்கு உள்ளானவர்கள் என்றும், அவர்களுடைய நோய் ஆண்டவரின் சாபத்தின் விளைவாகத் தோன்றுவது என்றும் மக்கள் உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய பாவத்தின் நிழல் தங்கள் ‘புனிதமான’ உடலில் படக்கூடாது என்பதற்காகவே இந்தப் பழக்கத்தைக் கடைபிடித்து வந்தார்கள்.

அவர்கள் மக்கள் தங்கும் நகரங்களின் ஓரமாகக் கூட தங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தனியாக ஒதுக்குப் புறமாக புதர் அடர்ந்த, ஆளற்ற கிராமங்களிலும், குகைகள் போன்ற இடங்களிலும் தங்குவது தான் வழக்கம்.

இயேசுவும் சீடர்களும் கூட்டமாக வருவதைத் தூரத்தில் நின்ற தொழுநோயாளிகள் கண்டார்கள். அவர்களும் இயேசுவைப் பற்றியும், அவருடைய நோய்தீர்க்கும் வல்லமையையும் அறிந்திருந்தார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே

‘இயேசுவே எங்களுக்கு இரங்கும். நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். எங்களைக் குணமாக்கும்’ என்று உரத்த குரலில் வேண்டினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார். அவர்களுடைய நம்பிக்கையைப் பார்த்தார்.
‘நீங்கள் போய் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள். நீங்கள் நலமடைந்து விட்டீர்கள்’ இயேசு சொன்னார்.

தொழுநோயாளிகள் யாரேனும் முழுமையாகக் குணமடைந்து விட்டால் அவர்கள் குருக்களிடம் தங்கள் உடலைக் காண்பித்து தாங்கள் குணமானதைப் பறைசாற்றவேண்டும். அதன் பின் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். இது வழக்கிலிருந்த சட்டங்கள். அதனால் தான் இயேசு’ உங்களைக் குருக்களிடம் காட்டுங்கள்’ என்றார்.

தொழுநோயாளிகள் தங்கள் உடம்பைப் பார்த்தார்கள். நோய் அப்படியே தான் இருந்தது. நோய் தீராமலேயே குருக்களிடம் போய் காட்டச் சொல்கிறாரே என்று தங்களுக்குள் குழம்பினார்கள். ஆனாலும் இயேசுவின் வார்த்தைகளை நம்பிப் புறப்பட்டார்கள். என்ன ஆச்சரியம் ! போகும் வழியிலேயே அவர்களுடைய நோய் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து முழு உடல் நலம் பெற்றார்கள். அவர்களால் நம்பமுடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘ஏய்… உன்னுடைய முகம் சரியாகிவிட்டது..’

‘என்னுடைய உடல் கூட சரியாகிவிட்டது…’

‘நாம் சுகமாகிவிட்டோம்.. இயேசு சொன்னது சரியாகிவிட்டது !’ அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நகரை நோக்கி ஓடினார்கள்.

ஒருவன் மட்டும் திரும்பி ஓடினான். அவன் ஒரு சமாரியன். மற்றவர்கள் அனைவரும் யூதர்கள்.
அவனுடைய எண்ணமெல்லாம் இயேசுவுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்பதிலேயே இருந்தது. அவனுடைய ஆனந்தத்தின் காரணகர்த்தவாகிய இயேசுவை நோக்கி அவன் ஓடிக் கொண்டிருந்தான். வழியில் இயேசுவைக் கண்டு அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினான்.

‘போதகரே… என்னுடைய அவப்பெயரையும், மனவலியையும் நீக்கினீரே. உமக்கு எப்படி நன்றி சொல்வேன் … ‘ என்று கண்ணீர் விட்டான்.

இயேசு அவனைத் தூக்கினார்.

‘பாருங்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த யூதர்கள் தயாரில்லாத போது, இந்த அன்னியன் சமாரியன் மட்டும் வந்திருக்கிறான் பாருங்கள் !’ இயேசு சீடர்களிடம் கூறினார்.

சீடர்கள் இயேசுவின் அதிசயத்தைக் கண்டு வியந்து நின்றார்கள். அவர்களுக்கு இயேசுவுடன் நடப்பதே பெருமையாய் தோன்றியது.

இயேசு அவனைப் பார்த்து,’ உன் நம்பிக்கை உனக்கு நலமளித்தது. இனிமேல் கடவுளிடம் மாறாத நம்பிக்கை கொள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவன் மகிழ்வுடன் விடைபெற்று குருவிடம் தன்னைக் காண்பிக்க ஓடினான்.

இயேசு செபக்கூடத்துக்குச் சென்று கற்பிக்கத் துவங்கினார். அங்கே பதினெட்டு ஆண்டுகளாக கூன் முதுகினால் அவதிப்பட்ட ஒரு மூதாட்டி இருந்தார். அவர் இயேசு தன்மீது கருணைக் கண் வைக்க மாட்டாரா என்னும் ஆவலினால் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்

இயேசு அவளைக் கண்டு மனமிரங்கி, ‘அம்மா இந்நேரம் முதல் நீர் இந்த நோயிலிருந்து விடுபட்டீர்’ என்றார். உடனே அவளுடைய முதுகு நேராக அவள் வலி விலகி ஆனந்தமடைந்தாள். இயேசுவின் பாதத்தில் விழுந்து நன்றி சொன்னாள்.

அது ஒரு ஓய்வு நாள்.

ஓய்வு நாளும், இயேசுவும் சர்ச்சை பிரிக்க முடியாதபடி மீண்டும் பிணைந்து விட்டது. தொழுகைக் கூடத் தலைவன் எரிச்சலடைந்தார். கூட்டத்தினரைப் பார்த்துக் கத்தினார்.

‘வாரத்தில் ஆறு நாட்கள் உண்டே. அந்த நாளில் வந்து குணம் பெற்றுப் போங்கள். ஓய்வு நாளில் யாரும் ஆலயத்தைக் களங்கப்படுத்த வேண்டாம்’

இயேசு அவனைப் பார்த்து, ‘ வெளிவேடக்காரனே.. எதற்கு இந்த வீண் பாய்ச்சல் ? ஓய்வு நாளில் உன்னுடைய மாட்டையோ ஆட்டையோ கூட்டிக் கொண்டு போய் தண்ணீர் காட்ட மாட்டாயா ? மாட்டுக்கு கருணை காட்டலாம் மனிதனுக்குக் காட்டக் கூடாதோ ? இதென்ன உங்கள் சட்டம்’ என்று உரத்த குரலில் கேட்க அவன் அமைதியானான்.

பொறாமைக் கண்கள்

Jesus-teaching

இயேசுவை பரிசேயர்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டார்கள்.

‘சரி நீர் நிறைய நோயாளிகளைக் குணமாக்குகிறீர். நல்லது. நிறைய மக்களுக்குப் போதிக்கிறீர். அதுவும் நல்லதே. ஆனால் நீர் மறைநூலை புரட்டிப் பார்த்தால் நம்முடைய முன்னோடிகளாய் வந்த பல இறைவாக்கினர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைவாக்கினர்களாய் இருக்கும்போது, நீர் மட்டும் எப்படிக் கடவுளின் மகனாக இருக்க முடியும் ? அதை நாங்கள் எப்படி நம்புவது ? வானத்திலிருந்து ஒரு அதிசய அடையாளத்தை எங்களுக்குக் காட்டும். அப்போது நாங்கள் நம்புகிறோம்.’ என்றனர்.

இயேசு அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவராகப் புன்னகைத்தார்.
‘மாலை வேளையில் வானம் சிவந்திருந்தால் வானிலை நன்றாக இருக்கிறது என்பீர்கள். காலையில் வானம் சிவந்து மந்தாரமாய் இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பீர்கள். வானத்தில் தோற்றத்தைப் பகுத்துணரப் படித்த நீங்கள், காலத்தின் மாற்றத்தைக் கணித்துணர முடியாமல் இருப்பது வேடிக்கை தான்’ இயேசு சொன்னார்.

‘என்ன தான் சொல்கிறீர் ? புரியவில்லையே’ பரிசேயர்கள் கேட்டார்கள்.

‘உங்களுக்கு இப்போது அருங்குறிகள் எதுவும் கொடுக்கப் பட மாட்டாது. யோனாவின் கதை தெரியுமா ? மூன்று நாட்கள் மீனின் வயிற்றுக்குள் இருந்தார். யோனாவை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார். மானிட மகன் மூன்று நாட்கள் பூமியின் வயிற்றுக்குள் இருப்பார். உங்களுக்கு இந்த அடையாளங்கள் இப்போது புரியாது. காரணம் நீங்கள் காதுகளை அடைத்து விட்டு சத்தமில்லை என்று சாதிக்கும் சந்ததியினர்.’ என்றார்.

‘எவனும் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் ஒருவனை சார்ந்து கொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும், மனிதனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் முடியாது. என்னைப் பின் தொடர விரும்புபவன் தன்னையே வெறுத்து, தன் வருத்தங்களைச் சுமந்து கொண்டு, தன்னுடைய உறவினர்கள் அனைவரையும் விட்டு விட்டு என்னைப் பின்தொடர வேண்டும். அப்படிச் செய்யாதவன் என்னுடைய சீடனாக முடியாது’ இயேசு சொல்ல பரிசேயர்கள் விலகினர்.

தான் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதியை ஒட்டிய ஒரு பகுதியில் தன்னுடைய சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் இயேசு. தன்னுடைய பணியின் கடைசி கட்டத்தில் வந்துவிட்டோம் என்னும் உள்ளுணர்வு அவருக்குள் எழுந்தது. எனவே சீடர்களுக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றியும், அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றியும் விண்ணக வாழ்க்கை குறித்தும் இயேசு உரையாடினார்.

யோவான் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், ‘இதோ.. இவரே கடவுளின் மகன்’ என்று உரக்கக் கூறிய யோர்தான் நதிக்கரையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் இயேசுவும் சீடர்களும் நடக்கிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மாற்றத்தை ஒரு விஸ்வரூப வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். சாதாரண ஒரு தச்சனின் மகனாக மூன்று ஆண்டுகளுக்கு முன் யோர்தான் நதியில் வந்து இறங்கிய இயேசு இன்று எருசலேம் எல்லைகளையும் அசைக்கும் ஒரு மாபெரும் மனித சக்தியாக வளர்ந்து நிற்கிறார். துணிச்சலின் மொத்த உருவமாக உழைப்பின் பிரதிநிதியாக ஓய்வெடுக்கக் கூட தனிமை கிடைக்காத பிரபலமானவராக வளர்ந்திருக்கிறார்.

சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ஒருமுறை இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இயேசுவின் போதனைக்கு இடையூறாக அவருடன் விளையாடுவதும், அவருடைய மடியில் ஏறிக் குதிப்பதுமாக இருந்தனர். சீடர்கள் குழந்தைகளை அதட்டினர். இயேசுவோ, குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம் ஏனெனில் விண்ணரசு அத்தகையோரதே என்றார்.

சீடர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இயேசு அவர்களிடம், குழந்தைகளிடம் தான் கள்ளம் கபடம் ஏதும் இருப்பதில்லை. அவர்களைப் போன்ற மனதைப் பெறுவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால் அத்தகையோருக்கே கடவுளின் விண்ணகம் தயாராகியிருக்கிறது

மேலும் இயேசு அவர்களைப் பார்த்து ‘இரண்டு நாணயத்துக்கு ஐந்து கிளிகள் விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் ஒன்று கூட கடவுளின் பார்வைக்கு தப்பாது. கடவுள் அவற்றையும் மறப்பதில்லை. உங்கள் தலைமுடிகள் எல்லாம் எண்ணப்பட்டுள்ளன’ என்றார்.

ஒவ்வொரு மனிதனுடைய தனித்தன்மையைக் குறித்து இயேசு கூறிய வார்த்தைகள் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னும் நிலைபெறுகின்றன. எந்த இரண்டு மனிதர்களுடைய தலைமயிரும் ஒன்று போல் இருப்பதில்லை, ஏன் ஒரே தலையில் இருக்கும் இரண்டு முடிகள் கூட இரண்டு தன்மையுடையவையாய் இருக்கின்றன. அதுமட்டுமல்ல இரண்டு மனிதர்களுடைய பாதச் சுவடுகளோ, கைவிரல் அடையாளங்களோ ஏன் இரண்டு விலங்குகளுடைய பாதப் பதிவுகள் கூட வேறுபட்டவையாய் இருக்கின்றன என்று அறிவியல் இன்று விவரிப்பதை இயேசு ‘உங்கள் தலைமுடிகள் எல்லாம் எண்ணப்பட்டுள்ளன’ என்று ஒரே வார்த்தையில் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனும் பூமியில் தனித்தன்மையோடு படைக்கப்பட்டிருப்பதை இயேசுவின் ஒற்றை வாக்கியம் உணர்த்துவதாக இறையியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

‘நான் தூய ஆவியானவரை உங்களிடம் விட்டுச் செல்வேன். அவர் உங்களுடன் இருப்பார். நீங்கள் என்ன பேசவேண்டும் என்பதை அவர் உங்களுக்குள் இருந்து உங்களுக்குச் சொல்வார்’ இயேசு தூய ஆவியானவரைப் பற்றி சீடர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். தன் பெயரால் சீடர்கள் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள் என்றும் அவர்கள் பிரச்சினைகளில் விழும்போது தூய ஆவியானவர் அவர்களுக்கு உள்ளே இருந்து செயலாற்றுவார் என்றும் சீடர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறார் இயேசு.

நீண்ட நேர போதனைகள் மற்றும் அறிவுரைகளுக்குப் பிறகு சீடர்கள் மனதளவில் மிகுந்த தைரியமடைந்தார்கள்


ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும்

‘இயேசுவே நான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.’ செல்வந்தர் ஒருவர் இயேசுவின் முன் வந்து பணிவாய்க் கேட்டார். அவருடைய தோற்றமும் அவருடைய கேள்வி கேட்ட விதமும் உண்மையிலேயே விண்ணக வாழ்வுக்கு நுழைவதற்கான வழியைக் கேட்க வந்தவராய் இருக்கவில்லை. இயேசு என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்ள வந்தவராகவே இருந்தது. இயேசு அவனைப் பார்த்தார்.

‘கட்டளைகளைக் கடைபிடியும். அது மட்டுமே போதும்… விண்ணக வாழ்வில் நுழைந்து விடலாம்’ இயேசு பதில் சொன்னார்.

‘எந்தக் கட்டளைகளைச் சொல்கிறீர்கள் ?’ அவர் கேட்டார்.

‘பத்துக் கட்டளைகளைப் பற்றி அறிந்திருக்கிறாயா ? கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பெற்றோரை மதித்து நட… போன்ற கட்டளைகள்…’ இயேசு கேட்டார்.

‘இவைகள் எல்லாவற்றையும் கடைபிடிக்கிறேன்… எதிலும் தவறியதில்லை’

‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய். என்னும் கட்டளையையும் கடைபிடி. விண்ணகத்தில் நீ நுழையலாம்’ இயேசு சொன்னார்.

‘அதையும் நான் கடைபிடிக்கிறேன் இயேசுவே…’

‘இல்லை. நீ அதைக் கடைபிடித்திருந்தால் இத்தனை பெரிய செல்வந்தனாய் இருந்திருக்க முடியாது. ஏழைகள் உன்னைச் சுற்றி உண்ண உணவில்லாமல் இருக்கும்போது நீ செல்வந்தனாய் இருக்கிறாய் என்றால் உன்மீது நீ காட்டும் அன்பை அவர்கள் மீது காட்டவில்லை என்பது தானே பொருள் ?’ இயேசு கேட்க அவன் அமைதியானான்.

‘போய் உமக்குள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும். விண்ணகத்தில் உமக்குரிய செல்வம் மிகுதியாகும்’ இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் மிகவும் மன வருத்தத்துடன் சென்றார். ஏனென்றால் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சீடர்களிடம் திரும்பி, ‘செல்வந்தர் விண்ணகத்தில் சேர்வது மிகவும் கடினமானது. செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றார்.

‘அப்படிப் பார்த்தால் யார் தான் மீட்புப் பெற முடியும் ?’ சீடர்கள் கேட்டார்கள்.

‘மனிதரால் இயலாதவை எல்லாம் கடவுளால் இயலும்.’ இயேசு சொன்னார்.

சீடர்களுக்குள் குழப்பம் எழுந்தது. விண்ணகத்தில் யார் நுழைவார்கள் ? கடைசி காலம் வரை செல்வத்தையெல்லாம் அனுபவித்துவிட்டு கடைசி நிமிடத்தில் தங்கள் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மனிதன் விண்ணகம் நுழைய முடியும் என்றால், துவக்கம் முதலே எல்லாவற்றையும் உதறிவிட்டு இயேசுவோடு நடக்கும் தங்களுக்கு என்ன கிடைக்கும் ?

இயேசு சீடர்களைப் பார்த்து,’ நீங்கள் என் நண்பர்கள். உங்கள் பணிகளுக்கான பயனை நீங்கள் பெறாமல் போகமாட்டீர்கள்’ என்றார்.

இயேசு மன்னிப்பின் மகத்துவத்தைப் பற்றி சீடர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில், இயேசுவின் சீடர் பேதுரு இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

‘இயேசுவே, என்னுடைய சகோதரனோ, சகோதரியோ எனக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை மன்னிப்பது ? ஏழு முறையா ?’

ஏழு என்பது இஸ்ரயேலர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான எண். ஏழு என்பது கடவுளுக்குரியது என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே தான் பேதுரு அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.

இயேசு அவரிடம்,’ ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழுமுறை நீ அவனை மன்னிக்க வேண்டும்’ என்றார். அத்தனை முறை மன்னித்துவிட்டால் அதன்பின் மன்னிப்பது மனிதனுக்குப் பழக்கமாகிவிடும் என்பது இயேசுவின் எண்ணம். இத்தனை முறை மன்னிப்புப் பெற்றவன் தொடர்ந்து பாவங்கள் செய்யமாட்டான் என்பதும் அவருடைய நம்பிக்கை.

அதை விளக்க இயேசு ஒரு கதை சொன்னார்.

விண்ணக அரசை நான் சொல்லப்போகும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒரு அரசன் இருந்தான். அவன் சற்று நேர்மையான மன்னன். மக்களின் இக்கட்டான நேரங்களில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை அளிப்பது அவனுடைய வழக்கம். ஒருமுறை அவன் தன்னுடைய பணியாளனை அழைத்து, யாரெல்லாம் தன்னிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள். யாரெல்லாம் அதை நேர்மையாகக் கட்டியிருக்கிறார்கள், யார் யார் அதை சரியாகக் கட்டாமல் இழுத்தடிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னான். பணியாளன் ஏடுகளைப் புரட்டி கணக்கு பார்க்கத் துவங்கினான்.

‘அரசே… ஒரு பணியாளன் உம்மிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டு பல வருடங்களாகிறது. இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை’ பணியாளன் சொன்னான்.

‘உடனே அவனை இங்கே அழைத்துவாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

கடன் பட்ட அந்த மனிதர் மன்னனின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டான்.

‘என்னிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் என்னை ஏமாற்றுகிறாயா ?’ மன்னன் கர்ஜித்தான்.

‘அரசே… உம்மை ஏமாற்றும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. என்னால் கடனை திருப்பிக் கட்ட இயலாத நிலை. வறுமையில் உழல்கிறேன்’ கடன் பட்டவன் பணிந்தான்.

‘உம்முடைய சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்வேன்’ அரசன் சொன்னான்

‘அரசே எனக்கு சொத்துக்கள் என்று எதுவுமே இல்லையே…’

‘இருக்கும் சொத்துக்களையும், உன் மனைவி பிள்ளைகளையும் விற்று என்னுடைய கடனை நீ திரும்பச் செலுத்த வேண்டும்.’ மன்னன் கத்தினான்.

கடனாளி அதிர்ந்து போனான். அவன் மன்னனின் காலில் விழுந்து. ‘ அரசே.. நீர் எனக்கு இரக்கம் காட்டவேண்டும். உம்முடைய கருணைக் கண்ணை என்மீது வைத்து என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு இருப்பதே என் மனைவியும், பிள்ளைகளும் தான். அவர்களும் இல்லையென்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்னை மன்னியுங்கள். என் கடனை மன்னியுங்கள்’ என்று கதறினான்.

அவனுடைய அழுகை மன்னனைக் கரைத்தது. ‘சரி.. நீ போ… உன்னுடைய அனைத்துக் கடன்களையும் நான் தள்ளுபடி செய்கிறேன்’ மன்னன் சொல்ல, கடன்பட்டவன் நம்பமுடியாமல் பார்த்தான். அவனுடைய உள்ளத்தில் உற்சாகம் புரள, கண்களில் கண்ணீர் பனிக்க நன்றி சொன்னான்.

அவன் அரசனுடைய முன்னிலையிலிருந்து வெளியே வந்தான். தன்னுடைய கடன்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டதில் ஒரு மிகப்பெரிய சுமை இறங்கியதாய்த் தோன்றியது அவனுக்கு. அவனுக்கு எதிரே அவனிடம் நூறு தெனாரியம் கடன்பட்டவன் வந்து கொண்டிருந்தான். நூறு தெனாரியம் என்பது மிகவும் குறைந்த தொகை.

‘ஏய்.. என்னுடைய நூறு தெனாரியங்கள் எங்கே ? வாங்கிப் போய் பல நாட்களாகிறதே’ மன்னனிடம் மன்னிப்பைப் பெற்ற அந்த மனிதன் கேட்டான்.

‘ஐயா, மன்னியுங்கள். விரைவிலேயே கொடுத்துவிடுகிறேன்.’ அவன் கெஞ்சினான். ஆனால் இவனுடைய மனம் இறுகியது. தன்னுடைய பத்தாயிரம் தாலந்துக் கடனை மன்னன் மன்னித்ததுபோல, இந்த மனிதனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னிக்க இவன் விரும்பவில்லை. அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி, நன்றாக அடித்துத் துவைத்து, அவனை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் சிறையில் அடைத்தான்.

சக ஊழியர்கள் இதைக் கண்டபோது மிகவும் வருந்தினர். மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். மன்னன் அதிர்ந்தான்.
‘உடனே அவனை இங்கே இழுத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டான்.

அவன் இரண்டாம் முறையாக மன்னனின் முன்னால் நிறுத்தப்பட்டான்.
‘பொல்லாதவனே….’ மன்னன் கோபத்தின் உச்சத்தில் உரத்த குரலில் அழைத்தான். ‘ உன்னுடைய பத்தாயிரம் தாலந்தை நான் மன்னித்தேனே. அதே போல நீயும் அவனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னித்திருக்கலாமே ! அதை விட்டுவிட்டு அவனைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகிறாயே ! இப்போது சொல்கிறேன் கேள். நீ இப்போதே சிறையிலடைக்கப் படுகிறாய். நீ வாங்கிய பத்தாயிரம் தாலந்துக் கடனை நீ திரும்பிச் செலுத்தும் வரை, சிறையில் நீ சித்திரவதை செய்யப்படுவாய். மன்னிக்க மறுக்கும் உன்னை நானும் மன்னிக்க மாட்டேன்’ என்றான்.

இயேசு கதையைச் சொல்லி முடித்துவிட்டு பேதுருவிடம் திரும்பி,’ விண்ணகத்தின் நிலை இதுதான். மண்ணகத்தில் நீ மன்னிக்க மறுக்கும் நிகழ்வுகளுக்காய், விண்ணகத்தில் உனக்கான மன்னிப்பும் மறுக்கப்படும். எனவே மன்னிக்க மனம் கோணாதே ! அது உன்னை விண்ணக வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தும்’ என்றார்.

பேதுரு தெளிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *