கி.மு 45 : தோபித்து.

 

திசிபே நாட்டில் தோபித்து என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறந்த இறை பக்தர். அவர் அசீரியர்களின் மன்னனான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப் பட்டார். அவரும் அவர் உறவினர்களும் நினிவே நகரில் குடிபுகுந்தார்கள். தன்னுடைய உறவினர்கள் அனைவருக்கும் தோபித்து மனம் கோனாமல் உதவி செய்து வந்தார். அதனால் அவருடைய உறவினர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். அவருடைய தந்தை இறந்தபின் அவர் தந்தையின் வழிமரபில் வந்த ஒரு பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனுக்கு அவர்கள் தோபியா என்று பெயரிட்டார்கள்.

மேதியா நாட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்த தோபித்து, மேதியா நாட்டில் வாழ்ந்து வந்த கபேல் என்பவரிடம் நானூறு கிலோ வெள்ளியைப் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார். மன்னர் எனமேசருக்குப் பின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிக்கு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவன் அரசனான பின் தோபித்தின் இனத்தாருக்கு ஏராளமான தொல்லைகள் நேர்ந்தன. தோபித்தின் இனத்தினர் பலர் மன்னனால் படுகொலை செய்யப்பட்டு நினிவே நகருக்கு வெளியே வீசப்பட்டனர். தோபித்து நகருக்கு வெளியே சென்று அங்கே அனாதையாய்க் கிடக்கும் பிணங்களையெல்லாம் எடுத்து நல்லடக்கம் செய்வது வழக்கம். ஒருமுறை அரசர் இஸ்ரயேலர் பலரைக் கொன்று நினிவே நகருக்கு வெளியே வீசினார். தோபித்து வழக்கம் போல மன்னருக்குத் தெரியாமல் அவற்றை ரகசியமாய் எடுத்து நல்லடக்கம் செய்தார்.

வழக்கத்துக்கு மாறாக, மறுநாள் மன்னன் தான் கொன்றெறிந்த பிணங்களைப் பார்ப்பதற்காக வந்தான். அங்கே பிணங்களைக் காணவில்லை. மன்னன் சினந்தான்.

‘நான் கொன்றெறிந்த இஸ்ரயேலரின் பிணங்கள் எங்கே’

‘அரசே… இங்கே தோபித்து என்றொருவர் இருக்கிறார். அவர் அனாதையாய்க் கிடக்கும் இஸ்ரயேலரின் பிணங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துப் புதைத்து விடுவார்.’ பணியாளர்கள் கூறினர்.

மன்னன் ஆத்திரமடைந்தான். ‘ நான் கொன்ற பிணங்களை அவன் புதைக்கிறானா ? அவ்வளவு தைரியமா அவனுக்கு ? உடனே அவனை இங்கே இழுத்து வாருங்கள். அவனை மட்டுமல்ல, அவனுடன் இருப்பவர்களையும், அவனுடைய சொத்துக்களையும் அனைத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

இதற்குள் தோபித்தின் காதுகளுக்கு விஷயம் வரவே அவர் தப்பியோடினார். அவருடைய மகனையும், மனைவியையும் மன்னன் சிறைப்பிடித்தான்.

வருடங்கள் ஓடின. மன்னன் சனகெரிபுவை அவனுடைய மகன்களே கொன்றுவிட்டு ஓடிவிட்டனர். இன்னொரு மகன் சக்கர்தோன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனுடைய அரசவையில் நிதி அமைச்சராக இருந்தவர் தோபித்தின் நண்பர். அவர் தோபித்துவுக்காகப் பரிந்து பேசி அவருக்கு மன்னிப்பைப் பெற்றுத் தந்தான் அவருடைய மகனும், மனைவியும் திரும்பவும் அவரிடமே ஒப்படைக்கப் பட்டனர்.

மனைவியையும், மகனையும் திரும்பப் பார்த்த தோபித்து மிகவும் மகிழ்ந்தார். அடுத்து வந்த பெந்தெகோஸ்தே விழாவில் மிகப்பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். அவர் தம் மகனை அழைத்து,’ தோபியா.. நீ வெளியே போய். கடவுளை முழுமனதோடு தேடும் ஏழைகள் யாராவது இருந்தால் கூட்டிவா. அவர்களும் நம்முடன் விருந்துண்ணட்டும்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

மகன் வெளியே சென்றான். மகன் திரும்பி வருவதற்காக தந்தை உணவருந்தாமல் காத்திருந்தார். சிறிது நேரம் சென்றபின் பதட்டத்தோடு ஓடி வந்தான் தோபியா…

‘அப்பா… அப்பா…’

‘என்னவாயிற்று ஏன் பதட்டமாக இருக்கிறாய்..’

‘அப்பா நீங்கள் சொன்னபடி ஏழைகளை அழைக்கச் சென்றேன். எங்கும் ஏழைகளைக் காணவில்லை.. ஆனால்…’

‘ஆனால் ? என்ன சொல்’ தந்தை பதட்டமானார்

‘நம் இனத்தார் ஒருவருடைய சடலம் தெருவோரத்தில் கிடப்பதைக் கண்டேன்’

மகன் சொன்னதைக் கேட்டதும் தோபித்து எழுந்தார். உணவு தயாராக இருந்தும் எதையும் தொடாமல், எதற்கும் காத்திருக்காமல் உடனடியாக வெளியே ஓடினார்.
ஓடிப் போய் அங்கே அனாதையாய்க் கிடந்த தன் இனத்தவனின் பிணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

‘தோபித்து… உனக்கு ஏன் இந்தக் கஷ்டம் எல்லாம் ? இதற்காகத் தானே நீ நாடுகடத்தப் பட்டு பல கஷ்டங்களையும் அனுபவித்தாய்.. இன்னும் என்ன ? இதையெல்லாம் விட்டு விட்டு மனைவி, மகனோடு சந்தோசமாய் வாழ்வது தானே ?’ மக்கள் அவரை திட்டினார்கள். தோபித்து எதையும் பொருட்படுத்தவில்லை. பிணத்தைக் கொண்டு வந்து தன்னுடைய வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு கலங்கிய விழிகளோடும், கனத்த மனதோடும் உணவு அருந்தச் சென்றார்.

அன்று உணவு அருந்திய பின் இரவில் யாருக்கும் தெரியாமல் அந்தப் பிணத்தைப் புதைத்தார். புதைத்துவிட்டு சோர்வுடன் வீட்டு முற்றத்தில் அவர் படுத்தார். அவருக்கான சோதனை ஒரு பறவை வடிவில் வந்தது. வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவை ஒன்று அவருடைய கண்களில் எச்சமிட்டது. பறவையின் எச்சம் பட்டதும் தோபித்துவின் கண்கள் எரிந்தன. அவருடைய கண்களின் பார்வை மங்கியது. இழந்த பார்வையை திரும்பப் பெற தோபித்து ஏராளமான வைத்தியங்களைச் செய்து பார்த்தார். ஆனால் எதுவும் அவருக்குப் பலன் தரவில்லை. அவருடைய பார்வை முழுவதுமாகப் போய்விட்டது.

அவருடைய மனைவி கைவினைப் பொருட்கள் செய்து அவற்றை விற்றுப் பொருளீட்டி வந்தார். பார்வையில்லாததை நினைத்து தோபித்து மிகவும் வருந்தினார்.
கடவுளை நோக்கி உருக்கமாக மன்றாடினார். அப்போது தான் தோபித்தின் மனதில் பழைய விஷயம் ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்தது. மேதியா நாட்டில் கபேல் என்பவரிடம் நானூறு கிலோ வெள்ளியைக் கொடுத்து வைத்திருந்த விஷயம்.

இதே நேரத்தில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் சாரா என்பவர் வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அழகானவள். ஆனால் கொடிய அலகையான அசுமதேயு அவளைப் பிடித்திருந்தான். அவளுக்கு திருமணமானது. முதலிரவில் கணவன் சாராவைத் தொட நெருங்கினான். அலகை அவனை உயிருடன் விடவில்லை. அவளைத் தொடும் முன்னரே அவனைக் கொன்றுவிட்டது. திருமணத்தின் மறுநாள் காலை மயான நாளாகியது. எங்கும் அழுகுரல்.

அவளை வேறொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அவனுக்கும் இதே சாவு தான் கிடைத்தது. இப்படியே அவளுக்கு ஏழுமுறை திருமணம் முடிந்து ஏழுமுறையும் சாராவைத்தொடாமலேயே ஏழுபேரும் இறந்து போனார்கள். அனைவருக்கும் மணநாளே மரண நாளாகிப் போன படு பயங்கரமான அனுபவம் நடந்தது.

சாராள் மிகவும் வருத்தமடைந்து தற்கொலை செய்ய முயன்றாள். ஆனால் தான் தற்கொலை செய்து கொண்டால் தன் தந்தையை எல்லோரும் பழிப்பார்களே என்றஞ்சி அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தனக்கு இயற்கையான மரணம் வந்தால் தந்தையையும் யாரும் பழிக்க மாட்டார்கள், தன்னுடைய துயரமும் அத்துடன் தீர்ந்து போகும் என்று நினைத்த சாரா தன்னைக் கொன்றுவிடும்படி கடவுளை மன்றாடினாள்.

சாராவின் தந்தை இரகுவேலும், தோபித்தும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.

சாராவின் மன்றாட்டையும், தோபித்தின் மன்றாட்டையும் கடவுள் கேட்டார். இருவருடைய துயரத்தையும் தீர்த்து வைக்க அவர் ஒரு தூதரை அனுப்பினார். அவருடைய பெயர் இரபேல்.

மேதியா நாட்டு கபேலிடம் தான் பணம் கொடுத்து வைத்திருந்த விஷயம் தோபித்துவின் மனதில் வந்து கொண்டே இருந்தது.
தனக்குப் பார்வை இல்லையே, கொடுத்து வைத்திருக்கும் நானூறு கிலோ வெள்ளியை எப்படி திரும்பவாங்குவது என்று தோபித்து கவலைப்பட்டார். தன் மகன் தோபியாவை அனுப்பி வெள்ளியை திரும்ப வாங்குவதென முடிவெடுத்து மகனை அழைத்தார்.

‘தோபியா…. ‘

‘அழைத்தீர்களா அப்பா ?…’

‘நீ மேதியா நாடுவரைக்கும் செல்லவேண்டும்…’

‘சொல்லுங்கள் அப்பா என்ன விஷயம் ..’

‘நமக்குச் சொந்தமான நானூறு கிலோ வெள்ளியை அங்கே ஒருவரிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். நீ போய் அவற்றை வாங்கி வரவேண்டும்’

‘நானூறு கிலோ வெள்ளியா !!! யாரிடம் கொடுத்திருக்கிறீர்கள் ?’

‘காபேல் என்பவரிடம்…’

‘நான் எப்படி போய் வாங்கி வருவது ? எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் என்னைத் தெரியாது. இப்போது இருக்கும் நிலையில் நீங்கள் பயணம் செய்யவும் முடியாது ? நான் தான் உங்கள் மகன் என்றால் அவர் நம்புவாரா ? நீங்கள் பணம் கொடுத்ததற்கு ஏதேனும் அத்தாட்சி இருக்கிறதா ?’

‘கவலைப்படாதே மகனே. காபேல் மிகவும் நல்லவர். நான் அவரிடம் பணத்தைக் கொடுத்தபோது, நாங்கள் ஒரு ஆவணம் தயாரித்து அதில் கையொப்பமிட்டோம். பின் அதை இரண்டாகக் கிழித்து ஆளுக்கு ஒன்றாய் வைத்துக் கொண்டோம், இப்போது ஒன்று அவரிடம் உள்ளது ஒன்று என்னிடம் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் இந்த ஆவணத்தைக் காட்டினால் போதும் அவர் நம்புவார்’

‘இந்த அடையாளம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர் என்னை நம்புவார் என்று நினைக்கிறேன். இப்போது இன்னொரு பிரச்சனை’

‘என்ன ?’

‘எனக்கு மேதியா எங்கிருக்கிறது என்றே தெரியாதே. நான் அங்கே சென்றதும் இல்லையே’ தோபியா தயங்கினார்.

‘வருந்தாதே. உன் வழித்துணையாக மேதியாவுக்குச் செல்ல நீயே ஒரு மனிதரைக் கண்டுபிடி. அவருக்கு நல்ல கூலி கொடுக்கலாம்’ தந்தை சொன்னார்.

தோபியா வெளியே வந்து தன்னோடு பயணம் செய்யத் தயாராய் யாரேனும் உள்ளரா என்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடவுளின் தூதர் இரபேல் அவருக்கு முன்பாக வந்து நின்றார்.

‘இளைஞனே .. நீ யார் ?’ தோபியா கடவுளின் தூதரிடம் கேட்டார்.

‘நான் உங்கள் இஸ்ரயேல் குலத்தைச் சேர்ந்தவன் தான். இந்த ஊருக்குப் புதியவன். எங்கள் ஊரில் வேலை கிடைக்காததால் வேலை தேடி இங்கே வந்தேன். இங்கே ஏதாவது வேலை கிடைக்குமா ?’ இரபேல் கேட்டார்.

‘உனக்கு மேதியாவுக்கு வழி தெரியுமா ?’

‘தெரியுமாவா ? நான் அடிக்கடி செல்லும் ஊர் ஆச்சே அது. அந்த ஊரின் சின்னச் சின்னச் சந்துகள் கூட எனக்கு அத்துப்படி. போகும் வழியும் மிகப் பரிச்சயம்’ அவர் சொன்னார்.

தோபியா மகிழ்ந்தார்.’நீர் என்னோடு மேதியா வரைக்கும் வர முடியுமா ? உமக்கு நான் ஊதியம் தருவேன்’ தோபியா கேட்டார்.

‘கண்டிப்பாக. அதற்காகத் தானே வந்திருக்கிறேன் ‘ இரபேல் புன்னகைத்தார்.

தோபியா அவரை அழைத்துக் கொண்டு தந்தையிடம் வந்தார்.
‘தந்தையே… இதோ என் வழித்துணைக்கு ஒரு நல்ல மனிதர் கிடைத்திருக்கிறார். இவரும் நம்முடைய இஸ்ரயேல் குலத்தைச் சேர்ந்தவர் தான். நான் இவருடன் சென்று வரவா ? ‘ தோபியா தந்தையிடம் கேட்டார்.

‘அவர் எங்கே மகனே ?’ தந்தை கேட்டார்.

‘மங்கலம் உண்டாகட்டும்’ இரபேல் வாழ்த்தினார்.

‘என்ன மங்கலம் ? இந்த பார்வையற்ற குருடனுக்கு ? தம்பி நீ யார் ? நீ எந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் . உண்மையிலேயே நீ இஸ்ரயேல் குலத்தைச் சேர்ந்தவன் தானா ? ‘ தோபித்து கேட்டார்

‘ஐயா, உமக்கு சந்தேகமே வேண்டாம். நான் இஸ்ரயேல் குலத்தினன் தான். எங்கள் குடும்பத்தைக் கூட உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான் அனனியாவின் மகன் அசரியா’ இரபேல் தூதர் சொன்னார்.

‘ஓ.. அனனியாவின் மகனா நீ. அனனியா என் உறவினன் ஆயிற்றே. அவர்களை நான் நன்கு அறிவேன். மிகவும் நல்ல குடும்பத்தினர் அவர்கள். உன்னைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்கிறேன். நீ என் மகனோடு சென்று அவனுக்குத் துணையாயிரு. உனக்கு வேண்டிய பணத்தை நான் கூலியாகத் தருவேன். இந்த பார்வையற்ற மனிதனால் பயணம் செய்ய முடியாது. நீ தான் என் மகனை பத்திரமாகக் கூட்டிச் சென்று திரும்ப ஒப்படைக்கவேண்டும்’

‘கவலைப்படாதீர்கள். உங்கள் மகனை நான் பத்திரமாகக் கூட்டிச் சென்று, நலமுடன் திரும்ப உங்களிடமே ஒப்படைப்பேன். அதுமட்டுமல்ல, பார்வையில்லை என்று நீங்கள் இனிமேல் கவலைப்படவேண்டாம் உங்கள் பார்வை விரைவிலேயே திரும்பக் கிடைத்துவிடும்’ இரபேல் சொன்னார்.

‘தம்பி உன் வாக்கு பலிக்கட்டும். பார்வையில்லாத மனிதனின் வாழ்க்கை மிகவும் பயங்கரமானது என்பதை நான் அறிந்து கொண்டேன். எனக்குப் பார்வை கிடைக்குமானால் அதைவிடப் பெரிய சந்தோசம் ஏது ?’ தோபித்து சொன்னார். பின் அவர் தன்னுடைய மகனையும், இரபேலையும் வழியனுப்பி வைத்தார். தாய் மட்டும் அழுதுகொண்டே இருந்தாள். ‘ சொத்தா நமக்குப் பெரிது ? நமக்கு இருக்கும் சொத்து போதாதா ? ஏதோ ஒரு மூன்றாவது நபருடன் அவனை அனுப்பி வைத்திருக்கிறீர்களே ? வெள்ளிக்கு ஆசைப்பட்டு அவன் நம் மகனைக் கொல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம் ? ஏன் மகனை அவ்வளவு தூரம் அனுப்பி வைத்தீர்கள் ? என்று கூறி தாய் அழுதாள். தோபித்து மிகவும் கஷ்டப்பட்டு அவளைச் சமாதானப் படுத்தினார்.

தோபியாவும் இரபேலும் பயணம் செய்து தீக்ரிசு என்னும் ஆற்றங்கரையில் வந்தார்கள். தோபியா காலைக் கழுவுவதற்காக ஆற்றில் இறங்கினார்.
திடீரென பெரிய மீன் ஒன்று தோபியாவின் காலைக் கவ்வியது. தோபியா பயந்தார். இரபேல் அவரிடம்
‘பயப்படவேண்டாம். அந்த மீனைப் பிடித்துக் கொள்ளுங்கள் அதை வெட்டி அதன் இதயம், ஈரல், பித்தப்பை மூன்றையும் பத்திரமாக வைத்திரும். அது மருந்தாகப் பயன்படும்.’ இரபேல் சொன்னார்.

‘மருந்தாகப் பயன்படுமா ? எந்த நோய்க்கு ? நான் கேள்விப்பட்டதேயில்லையே ?’

‘மீனின் இதயத்தையும், ஈரலையும் புகையச் செய்தால் அந்த நாற்றத்தில் தீய ஆவி ஓடிவிடும். கண்களில் தோன்றும் வெண்புள்ளி மீனின் பித்தப்பையத் தடவி ஊதினால் காணாமலேயே போய்விடும்’ இரபேல் சொன்னார்.

தோபியா இரபேல் சொன்னபடி செய்தார். மீனின் ஒருபாகத்தைச் சுட்டு அவர்கள் உண்டார்கள். பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட நாட்கள் பயணித்த பின் அவர்கள் மேதியா நகரின் எக்பத்தானாவை நெருங்கினார்கள். அங்கே தான் சாராவின் வீடு இருந்தது.

இரபேல் தோபியாவிடம், ‘ நாம் இன்று இரகுவேலின் வீட்டில் தங்குவோம். அவர் உனக்கு நெருங்கிய உறவினர். அவருக்கு சாரா என்றொரு மகள் இருக்கிறாள். அவள் உனக்கு அதிக உரிமையானவள்’ என்றார்.

‘இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்’ தோபியா கேட்டார்.

‘அதான் முதலிலேயே சொல்லி விட்டேனே. நானும் உங்கள் குடும்பத்தினன் தான். எனக்கு இந்த ஊரை மிகவும் நன்றாகத் தெரியும் என்று.’ தூதர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘சாராவைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவளை ஏழுபேர் மணந்தார்கள் என்றும், அவர்கள் ஏழுபேருமே மணநாள் இரவிலேயே இறந்துவிட்டார்கள் என்பதும் தெரியுமா ?’ தோபியா கேட்டார்.

‘தெரியும்’

‘தெரிந்து கொண்டே என்னைக் கொல்லப் பார்க்கிறாயா ? நான் என் தந்தைக்கு ஒரே மகன். அவருடைய கடைசி காலத்தில் நான் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும். இப்போது அவருக்குப் பார்வை கூட இல்லை.’ தோபியா பதட்டமாய்ச் சொன்னார்.

‘பதட்டப்படாதே நான் சொல்வதைக் கேள். சாராள் உன் தந்தையின் வழிமரபினள்’

‘அது சரிதான். அவளை நான் நேசிக்கிறேன். ஆனால் அவளுக்காக என் உயிரைக் கொடுக்க முடியாது’

‘நீ உயிரைக் கொடுக்க வேண்டுமென்று நான் சொன்னேனா ?’

‘நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சாத்தான் அவனாகவே வந்து எடுத்துக் கொள்வான்’

‘ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள். உங்கள் உயிருக்கு ஒன்றும் நேராது. அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். முதலில் போய் இரகுவேலிடம் பேசி அவளை மணமுடித்துக் கொள்ளுங்கள்’

‘என் உயிருக்கு ஏதும் நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?’

‘சாத்தானைத் துரத்தும் வழியை உனக்கு நான் சொல்வேன். அது போதாதா ?’

‘சரி சொல்லுங்கள்’

‘நீர் அவளை மணமுடித்து இரவில் அவளை நெருங்கும் போது, உம்மிடமிருக்கும் மீனின் இதயத்தையும், ஈரலையும் தீயில் போடவேண்டும். அப்போது எழும் புகையின் வாசத்தால் அந்த அசுத்த ஆவி ஓடிவிடும்’ இரபேல் சொல்ல தோபித்து உற்சாகமானார்.

‘நிஜமாகவா ?’

‘ஆம். என்னை நீங்கள் முழுதும் நம்பலாம். சாத்தான் ஓடிய பின் நீங்கள் கடவுளிடம் மன்றாடினால் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் தருவார்’ இரபேல் சொல்லச் சொல்ல தோபியா தைரியமானார்.

அவர்கள் இரகுவேலின் வீட்டை அடைந்தனர். வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த இரகுவேல் அவர்களைக் கண்டு வரவேற்றார்.
‘வாருங்கள்.. உங்கள் வரவு நல்வரவாகுக.. ‘

‘உங்கள் அழைப்பிற்கு நன்றி’ இரபேலும் தோபியாவும் நன்றி சொன்னார்கள்.

இரகுவேல் தோபியாவை உற்றுப் பார்த்தார்.

‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்’ தோபியா கேட்டார்.

‘இல்லை.. என்னுடைய உறவினர் ஒருவர் உங்களைப் போல் இருப்பார். அதனால் தான் அப்படிப் பார்த்தேன்’ இரகுவேல் சொன்னார்.

‘என்னைப் போல உங்கள் உறவினரா ? யார் அது ?’

‘தோபித்து என்றொருவர். ஆனால் அவர் நினிவேக்கு நாடுகடத்தப் பட்டவர்’

‘அவருடைய மகன் தான் நான்’ தோபியா புன்னகையுடன் சொன்னார். அதைக்கேட்டதும் இரகுவேல் மிகுந்த ஆனந்தமடைந்தார். அவருடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

‘நீ அவருடைய மகன் தானா ? உன்னைக் கண்டதில் மிகவும் மகிழ்கிறேன். இளைப்பாறுங்கள் உங்களுக்கு இன்று ஒரு நல்ல விருந்து தயாராக்குவேன்’ சொன்னபடியே இரகுவேல் சென்று ஒரு கொழுத்த ஆட்டை அடித்து விருந்து தயாராக்கினார்.

அனைவரும் விருந்து உண்டனர்.

உண்டு முடித்தபின் தோபியா இரபேலிடம் ‘ இரகுவேலிடம் பேசி சாராவை எனக்கு மணம் முடித்து வையும்’ என்று கிசுகிசுத்தார். அது இரகுவேலின் காதிலும் விழுந்தது. அவர் தோபியாவைப் பார்த்து,’தம்பி, உன்னைத் தவிர என் மகள் சாராவை மணமுடிக்க அதிக உரிமையுள்ளவர் யாரும் இல்லை. ஆனால் உனக்கு நான் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும்’ இரகுவேல் இழுத்தார்.

‘ஏழுபேர் சாராவை மணமுடித்து இறந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஏதாவது செய்தி இருந்தால் சொல்லுங்கள்’ தோபியா புன்னகையுடன் கேட்டார்.

‘அது உனக்குத் தெரியுமா ?’

‘தெரியும். தெரிந்து தான் மணமுடிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்’

‘எல்லாம் தெரிந்தும் நீ அவளை மணமுடிக்க விரும்புகிறாயென்றால் நீ அவள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறாய் என்று தான் பொருள். உனக்கு என் மகளை மணமுடித்துத் தருவதில் மகிழ்கிறேன். திருமணச் சடங்கள் நமக்குள்ளே எளிமையாக நடத்துவோம்’ இரகுவேல் சொல்ல தோபியா ஒத்துக் கொண்டார்.

இரகுவேல் தன் மகள் சாராவை அவனுடைய கைகளில் கொடுத்து ‘இன்று முதல் இவள் உன் மனைவி’ என்றார். திருமணம் மிகவும் எளிமையாய் நடந்து முடிந்தது.

முதலிரவு.

சாரவை நெருங்கத் துணிந்த ஏழுபேரை மரணம் இழுத்துச் சென்ற பயங்கரமான இரவு. தோபியா எட்டாவது நபராக அந்த சாராவை நெருங்கப் போகும் இரவு.

சாராவின் அறைக்குள் தோபியா சென்றார். சாராள் மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். உள்ளே சென்றதும் முதல் வேலையாக இரபேல் சொல்லியிருந்தபடி மீனின் ஈரலின் ஒரு துண்டையும், இதயத்தின் சிறுபகுதியையும் தூபத்தில் போட்டார் தோபியா. துர்நாற்றம் அறையை நிறைத்தது.

இரபேல் சொன்னபடியே அந்த துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் பேய் அவளை விட்டு விட்டு ஓடிப்போய்விட்டது.

தோபியா சாராவிடம்’ சாரா… எழுந்திரு நாம் கடவுளிடம் மன்றாடவேண்டும். நம்முடைய இல்லற வாழ்க்கையை ஆசீர்வதிக்க அவரால் மட்டும் தான் முடியும். என்னை மரணம் தீண்டாமலும், நம்முடைய வாழ்க்கையை நாம் மகிழ்வுடன் வாழவும் அவரை வேண்டுவோம் வா’ என்றார். சாரா உடனே மஞ்சத்திலிருது கீழே இறங்கி முழந்தாள் படியிட்டாள். தோபியாவும் முழங்காலில் நின்றார். இருவரும் கடவுளிடம் உருக்கமாக மன்றாடினார்கள்.

அந்த இரவு அவர்களுக்கு இன்பமான இரவாய் மாறியது. ஏழு பேருக்கு மரண இரவாக மாறியிருந்த அந்த இரவு தோபியாவுக்கு மட்டும் மணத்தது. சாராவின் தந்தையோ தன்னுடைய அறையில் கவலையுடன் உலாவிக் கொண்டிருந்தார். அவருக்கு உறக்கம் வரவில்லை.

விடியும் முன் அவர் பணியாளர்களை அழைத்து,’நீங்கள் போய் ஒரு குழி வெட்டுங்கள். தோபியா நிச்சயம் இறந்திருப்பான். யாருக்கும் தெரியாமல் அவரைப் புதைத்துவிடலாம். வெளியே தெரிந்தால் மக்கள் என்னையும் மகளையும் இன்னும் அதிகமாய் கேவலப்படுத்துவார்கள்’ என்றார். ஏழு பேரைத் தொடர்ச்சியாகக் கொன்ற முதலிரவு தோபியாவை விட்டு வைக்காது என்று அவர் நம்பினார்.

பணியாளர்கள் குழிவெட்டினார்கள்.

இரகுவேல் பணிப்பெண்ணை அழைத்து,’ நீ போய் சாராவை அழைத்து வா. தோபியா இறந்திருப்பான். எதற்கும் போய் பார்த்து உறுதி செய்’ என்று சொல்லியனுப்பினார்.

பணிப்பெண் அவர்களின் அறைக்குச் சென்று பார்த்தபோது தோபியாவும், சாராவும் நித்திரையில் இருந்தார்கள். பணிப்பெண்ணால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. தோபியாவை நெருங்கிச் சென்று பார்த்தாள். தோபியா சீராக மூச்சு விட்டுக் கொண்டெ நிம்மதியாய் உறங்குவதைக் கண்ட அவள் ஆச்சரியமானாள்.

‘ஐயா…. அதிசயம் … அதிசயம். தோபியா இறக்கவில்லை. நலமாய் இருக்கிறார் ‘ பணிப்பெண் ஆனந்தத்தில் கத்தினாள். சாராவின் பெற்றோர் மகிழ்ச்சியின் உச்சத்துக்குத் தாவினார்கள். ஓடிச் சென்று மகளைக் கட்டியணத்து மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டார்கள்.

தோபியா சிலநாட்கள் அவர்களுடனே தங்கினார். இரபேல் சில பணியாளர்களுடன் சென்று தோபித்துக்குச் சேரவேண்டிய நானூறு கிலோ வெள்ளியை வாங்கி வந்தார். பின் தோபியாவும், மனைவியும், இரபேலும் பயணத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினர்.

வீட்டில் தோபியாவின் தாய் அழுது கொண்டிருந்தாள். தினமும் காலையில் வழியில் சென்று மகனை எதிர்பார்த்திருப்பதும். இரவு வரைக் காணாமல் இரவு முழுவதும் அழுவதுமாக அவள் நாட்கள் கழிந்து கொண்டிருந்த போது ஒரு நாள் தூரத்தில் மகன் வருவதைக் கண்டாள். அவளால் ஆனந்தத்தை அடக்க முடியவில்லை. ஓடோடிச் சென்று மகனை அணைத்துக் கண்ணீர் விட்டாள்.

மகன் வந்த செய்தி அறிந்ததும் தந்தையும் உற்சாகமானார். சாராவைப் பற்றிய கதையை தோபியா அவர்களுக்குச் சொன்னார்.

‘மகனே.. உன் மனைவியைக் காணும் பாக்கியம் எனக்கு இல்லையே. கடவுள் என் பார்வையைப் பறித்து விட்டாரே’ தோபித்து அழுதார்.

‘கவலைப் படாதீர்கள் அப்பா. உங்கள் கண்களைக் காட்டுங்கள்’ சொல்லிக் கொண்டே தோபியா தன்னிடமிருந்த மீனின் பித்தப்பையை இரபேல் சொல்லியிருந்தபடி தந்தையின் கண்களில் தேய்த்தான்.

என்ன ஆச்சரியம், தோபித்தின் கண்களிலிருந்து ஒரு பாடை கழன்று விழுந்தது.
‘ஐயோ… மகனே … என்னால் பார்க்க முடிகிறதே….. ‘ தோபித்து ஆனந்தத்தில் அலறினார்.

தோபியா தந்தையிடம்,’ அப்பா எல்லாவற்றுக்கும் காரணம் என்னுடன் வந்த அந்த இளைஞன் தான். நான் சாராவை மணமுடித்ததற்கும், சாராவின் பேய் அவளை விட்டு ஓடியதற்கும், இப்போது நீங்கள் பார்வை பெற்றதற்கும், நம்முடைய சொத்து திரும்பக் கிடைத்ததற்கும் எல்லாவற்றிற்கும் காரணம் அவர் தான். நாம் அவருக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.

‘கண்டிப்பாக. அவருடைய மனம் கோணாமல் அவருக்குத் தேவையானதைக் கொடுக்கலாம். என்ன கொடுக்கலாம் என்று நினைக்கிறாய் ?’ தோபித்து முழு மனதுடன் கேட்டார்.

‘அவர் செய்த உதவிக்கு அவருக்கு நம்முடைய சொத்து முழுவதையும் கூட கொடுக்கலாம். என்ன கொடுக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். ‘ தோபியா சொன்னார்.

‘அவரை உடனே உள்ளே அழைத்து வா’

தோபியா அவரை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

‘இளைஞனே.. உன்னால் ஏராளமான நன்மைகள் நடந்துள்ளன. உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தக்க சமயத்தில் கடவுள் போல வந்து உதவினாய். உனக்கு நான் நல்ல சன்மானம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்’ தோபித்து கேட்டார்.

‘நான் வாங்குபவன் அல்ல. கொடுப்பவன்’ இரபேல் புன்னகைத்தார்

‘புரியவில்லையே…’ தோபித்து குழம்பினார்.

‘உண்மையைச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் உண்மையில் உங்கள் உறவினர் அல்ல. நான் கடவுளின் தூதன். உமது வேண்டுதலும், சாராவின் வேண்டுதலும் கடவுளின் காதுகளுக்கு எட்டியபோது உங்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக அவர் என்னை அனுப்பினார்’ இரபேல் சொன்னார்.

தங்கள் முன்னால் நிற்பது கடவுளின் தூதர் என்பதை அறிந்ததும் தோபியாவும், தோபித்தும் அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

அவர்கள் எழுந்தபோது அங்கு தூதரைக் காணவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *