கி.மு 46 : யூதித்தின் ஞானம்

 

ஒரு முறை நினிவே நகரை நெபுகத்நேசர் என்னும் சர்வாதிகார மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய படைத்தளபதி ஒலோபெரின் மன்னனைப் போலவே மிகவும் ஆக்ரோஷ குணம் படைத்தவனாக இருந்தான்.

மன்னன் தன்னை எதிர்த்த மக்களையும், தனக்கு மரியாதை செலுத்தாத நாட்டினரையும் ஒலோபெரினைக் கொண்டு அழித்து ஒழித்தான். இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட காலாட்படையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகளைக் கொண்ட குதிரைப்படையும், மிகப்பெரிய எண்ணிக்கையிலான தேர்ப்படையும் மன்னனை எதிர்த்த நாடுகளைத் துவம்சம் செய்தன. நாடுகளை அழித்ததோடு மட்டும் நில்லாமல் அவர்களுடைய கோயில்களையும், வழிபாட்டு நிலையங்களையும் படைகள் முற்றிலும் தகர்த்தன. நெபுகத்நேசர் என்னும் பெயரைக் கேட்டாலே மக்களும், அண்டை நாட்டு மன்னர்களும் நடு நடுங்கினார்கள். பல மன்னர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் நாட்டை அவரிடம் ஒப்படைத்தனர். தம் நாட்டு மக்களையும் அவருக்கு அடிமைகளாய் வைத்தனர்.

மன்னனுடைய அடுத்த குறி யூதேயாவில் இருந்த இஸ்ராயேலர் மீது விழுந்தது. இதையறிந்த இஸ்ரயேல் மக்கள் கலங்கினார்கள். அவர்கள் சில காலத்துக்கு முன்பு தான் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திர வாழ்வுக்குள் வந்திருந்தார்கள். மீண்டும் ஓர் அடிமை வாழ்வு வந்து விடுமோ என்று அவர்கள் பயந்தார்கள்.

எனவே போர் வருவதற்கு முன்பே தங்கள் நகரையும், இஸ்ரேயர் தங்கியிருந்த சுற்றியுள்ள நகர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வியூகங்களை அமைக்க ஆரம்பித்தனர். அதன்படி நகருக்குள் நுழையும் சமவெளிப்பகுதிகளை அடைத்தும், மலைப் பிரதேசங்களை வீரர்களைக் கொண்டு காவல் புரிய வைத்தும் எதிரி நாட்டுப் படைகள் முன்னேறாமல் தடுக்க முடிவு செய்தனர்.

யூதேயாவில் நுழைவதற்கான மலைப்பாதை மிகவும் குறுகலானது. ஒவ்வொரு குதிரையாகத் தான் நுழைய முடியும், அல்லது இரண்டு ஆட்கள் தான் ஒரே நேரத்தில் நுழைய முடியும். அந்தப் பகுதிகளின் வழியாக எதிரிப் படைகள் வந்தால் அவர்களை அழிப்பது எளிது என்பதை அறிந்த இஸ்ரயேலர்கள் அப்படிப்பட்ட அனைத்து மலைத் தொடர்களிலும் காவல் அரண் அமைத்தனர்.

காவல் வியூகங்களை அமைத்தபின் அனைத்து இஸ்ரயேலரும் ஒரு மனத்தோடு கடவுளை நோக்கி மன்றாடினர். அனைவரும் உடலெங்கும் சாம்பல் பூசி, சாக்கு உடை உடுத்தி தங்கள் விண்ணகக் கடவுளை நோக்கிக் தங்களை அழிவிலிருந்து மீட்குமாறு கதறி அழுதனர்.

இஸ்ரயேல் மக்களின் முன்னேற்பாடு நடவடிக்கை பற்றிக் கேள்விப்பட்ட அசீரியப் படைத்தளபதி ஒலோபெரின் ஆவேசமடைந்தான்.

‘எல்லா நாடும் எனக்கு அடிபணிகிறது இவர்கள் எதிர்ப்பதற்கு ஆயத்தமாகிறார்களா ? யார் இந்த இஸ்ரயேலர்கள் ? நம்முடைய முன்னால் எதிர்த்து நிற்கும் வலிமையை எவன் கொடுத்தது அவர்களுக்கு…’ என்று கேட்டான்.

அப்போது அக்கியோர் என்பவர் அவரிடம்,’ அவர்கள் கடவுளின் பாதுகாப்பில் இருப்பவர்கள்.. அதனால் தான் தைரியமாய் எதிர்க்கிறார்கள்’ என்றார்.

‘கடவுளின் அருளா ? எந்தக் கடவுள் ? அவர் என்ன செய்தார் அந்த மக்களுக்கு ?’ படைத்தளபதி வினவினான்.

‘அந்த இஸ்ரயேல் மக்கள் நானூறு ஆண்டுகளாக எகிப்திலே அடிமைகளாய்க் கிடந்தார்கள். அவர்களைக் கடவுள் மோசே என்பவர் மூலமாக அடிமை நிலையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்’ அக்கியோர் பதில் சொன்னார்.

‘இஸ்ரயேலரா ? அவர்கள் எந்த இனம் ?’ தளபதி மீண்டும் கேட்டான்.

‘அவர்கள் எல்லோரும் எபிரேயர்கள். அவர்களுடைய மூதாதையார் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் யாக்கோபு. கடவுள் அவருக்கு இஸ்ரயேல் என்று பெயரிட்டார். இவர்கள் எல்லோரும் அவருடைய சந்ததியினர். எனவே இஸ்ரயேலர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்’ அக்கியோர் விளக்கமளித்தார்.

‘ஓஹோ.. அதனால் தான் அவர்கள் போரிடுகிறார்களா ? அவர்களை என் படையினால் நசுக்கியே தீருவேன். அவர்களின் கடவுள் உண்மையானவர் இல்லை. நம் மன்னர் நெபுகத்நேசர் தான் கடவுள் என்று அவர்களுக்குக் காட்டுவேன்’ ஒலோபெரின் கோபப்பட்டான்.

‘கோபப்படாதீர்கள் தளபதியாரே. அந்த மக்கள் இப்போது எந்தவிதமான பாவமும் செய்வதில்லை. அவர்கள் பாவம் செய்தால் மட்டுமே அழிவார்கள். இல்லையேல் அவர்களை யாராலும் வெல்ல முடியாது ?’ அக்கியோர் மீண்டும் சொன்னார்.

‘யாராலும் கொல்ல முடியாதா ? என்னால் கூடவா ?’ படைத்தளபதி நகைத்தான்.

‘முடியாது.. நிச்சயமாய் முடியாது’ அக்கியோர் உறுதிபடச் சொன்னார்.

படைத்தளபதி சுற்றிலும் நின்றிருந்த படைவீரர்களை நோக்கி ‘ இவனைப் பிடித்து அந்த எபிரேயர்கள் வாழும் நகரின் தலைமை வாசலில் விட்டு விட்டு வாருங்கள். நம்மால் அந்த நகர் அழிக்கப்பட்டால் இவனைக் கொன்று போடலாம். இவனுக்கும் நகர் அழிவதை அருகிலிருந்தே பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். ஒருவேளை அவர்களுடைய கடவுள் அவர்களைப் பாதுகாத்தால் இவனும் தப்பிப் பிழைக்கட்டும்’ என்று சொல்லி சத்தமாய்ச் சிரித்தான்.

படைவீரர்கள் அவ்வாறே செய்தனர். அக்கியோர் எபிரேயர்களின் நகருக்குள் துரத்தப்பட்டார். இஸ்ரயேல் மக்கள் அக்கியோருக்கு நடந்த அனைத்தையும் கேட்டறிந்தார்கள். அக்கியோர் தங்களுக்கு ஆதரவாய்ப் பேசியதை அறிந்த அவர்கள் அக்கியோரை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.

போரை மட்டுமே மனதில் கொண்டிருந்த ஒலோபெரின் தன்னுடைய படையை அணிவகுத்து நிற்கச் செய்தான். பெருங்கடலைப் போல தூரத்தில் எதிரிகள் படை அணிவகுத்து நிற்பதைக் கண்ட இஸ்ரயேலர்கள் பயந்து நடுங்கினார்கள். இவர்களில் பழு தாங்காமல் மலையே கூட உடைந்து சிதறுமே என்று கலங்கினார்கள்.

ஒலோபெரின் உடனே முன்னேறிச் செல்லவில்லை. நகருக்கு வெளியே ஓரிடத்தில் படைகளை நிறுத்தினான். அப்போது படைகளின் தலைவர்கள் சிலர் அவரிடம் வந்து

‘போருக்கு என்ன வியூகம் வைத்திருக்கிறீர் ?’ என்று கேட்டார்கள்.

‘நம் படைகள் உள்ளே புகுந்து, காண்போரையெல்லாம் கொல்ல வேண்டும். அந்த அக்கியோரை மட்டும் கடைசியாய்க் கொல்ல வேண்டும்.’ என்றான்.

‘இல்லை தளபதி. இந்த திட்டம் சரிவராது. ஏனென்றால் நகருக்குள் நுழையும் வாசல்கள் எல்லாம் மிகக் குறுகியவை. நாம் நுழைய நுழைய அவர்கள் ஒளிந்திருந்து நம்மைக் கொன்று கொண்டே இருப்பார்கள். மலைப் பாதையில் கூட நம்மால் குழுவாக முன்னேற முடியாது. எனவே அந்த வியூகம் நமக்கு அழிவையே தரும்’ என்றனர் தலைவர்கள்.

‘அப்படியானால் என்ன செய்வது ? வேறு ஏதேனும் வழி இருக்கிறதா ?’ ஒலோபெரின் கேட்டான்.

‘இருக்கிறது. ஒரு அருமையான வழி இருக்கிறது. நாம் நகருக்கு வெளியே ஓடும் எல்லா நீர் நிலைகளையும் கைப்பற்ற வேண்டும். அப்படிக் கைப்பற்றினால் நகருக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். தண்ணீர் இல்லாமல் அவர்களால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்களாகவே வந்து சரணடைவார்கள். நமக்கும் அழிவு நேராது’ என்றார்கள்

ஒலோபெரின் மகிழ்ந்தான். ‘நல்ல யோசனை சொன்னீர்கள். அப்படியே செய்யுங்கள்’ என்று ஆணையிட்டான்.

படைகள் நகரைச் சுற்றியிருந்த அனைத்து நீர்நிலைகளையும் கைப்பற்றின. நகருக்குள் ஒரு சொட்டு நீர் கூடப் போக விடவில்லை.

இஸ்ரயேலர்கள் இந்த வியூகத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ந்து போனார்கள். நாட்கள் செல்லச் செல்ல நகருக்குள் தொட்டிகளிலும், பானைகளிலும் இருந்த தண்ணீர் எல்லாம் தீர்ந்து போயிற்று. பெண்களும், குழந்தைகளும் தெருக்களில் மயங்கி விழுந்தார்கள். ஆண்கள் வலுவிழந்தார்கள்.

ஒலோபெரினின் படைகள் மகிழ்ந்தன. வெற்றி இதோ நம் கைக்கெட்டும் தூரத்தில் என ஆர்ப்பரித்தன.

இஸ்ரயேலரோ தங்கள் ஆடைகளையெல்லாம் கிழித்துக் கொண்டு, சாம்பலில் அமர்ந்து நோன்பு இருந்து ஆண்டவரை நோக்கி மன்றாடினர். பின் அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி இஸ்ரயேலின் தலைவர்களோடு பேசினர்.

‘இப்போது நாம் என்ன செய்வது ? நம்மிடம் தண்ணீர் இல்லை. நம் மனைவியரும், பிள்ளைகளும் நம் கண்ணெதிரிலேயே மடிவதைக் காண வேண்டி வருமோ என்று கவலையாய் இருக்கிறது’ என்றார்கள்.

தலைவர்களோ,’ நாம் கடவுளிடம் மன்றாடுவோம். அவர் காப்பார்’ என்றனர்.

‘கடவுளைத் தான் நம்பியிருக்கிறோம். ஆனால் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே இருப்பது ?’ மக்கள் கேட்டனர்.

‘வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் ?’

‘நாம் பணிந்து விடலாம். அடிமையாய் உயிர்வாழ்வது தாகத்தால் மடிவதை விட மேல் இல்லையா ?’ மக்கள் கூறினர்.

‘சரி.. இன்னும் ஐந்து நாட்கள் பார்ப்போம். கடவுள் நம்மைக் காக்கவில்லையேல் நாம் அடி பணிவோம்’ தலைவர்கள் முடிவெடுத்தனர்.

கூட்டம் பிரிந்து சென்றது !

அப்போது யூதித்து இஸ்ரயேல் தலைவர்களிடம் வந்து நின்றாள். யூதித்து இறைபக்தியிலும், இறை நம்பிக்கையிலும் சிறந்து விளங்கிய ஒரு பெண். கணவனை இழந்தவள். நுண்ணறிவும், பேரழகும் ஒருங்கே அமைந்தவள்.

அவள் தலைவர்களைப் பார்த்துக் கேட்டாள்,’ நீங்கள் கூறியது சரிதானா ? உங்கள் முடிவு நியாயமானது தானா ? அடிமைகளாய்ப் போவதற்காகத் தான் கடவுள் நம்மை எகிப்தியரிடமிருந்து விடுவித்துக் கூட்டி வந்தாரா ?’

‘வேறு என்ன செய்வது ? நாம் உடனே அடிபணியப் போவதில்லையே ? கடவுள் நமக்கு உதவுவாரா என்று இன்னும் ஐந்து நாட்கள் நாம் பொறுத்திருந்து பார்க்கத் தானே போகிறோம்’ தலைவர்கள் கூறினர்.

‘ஐந்து நாட்கள் ! …ம்ம்ம்.. கடவுளுக்கே நீங்கள் கட்டளையிடுகிறீர்களா ? அவருக்கே நீங்கள் நாள் குறிக்கிறீர்களா ? அவருக்குத் தெரியாதா உங்களுக்கு என்ன தரவேண்டுமென்று ? வீணாகக் கடவுளின் கோபத்தைக் கிளறாதீர்கள்’ யூதித்து குரலை உயர்த்தினாள்.

தலைவர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர்,’ தப்பு தான்… என்ன தான் செய்வது ?’

‘நாம் தொடர்ந்து கடவுளை நம்புவோம், அவரை மன்றாடுவோம். அவர் நினைத்தால் இந்த நிமிடமே ஒரு பெருமழையைத் தந்து நம்மைக் காப்பாற்ற முடியும் இல்லையா ?’ என்றாள் யூதித்து.

தலைவர்கள் மெளனமானார்கள். யூதித்து தொடர்ந்தாள். ‘ சரி… நாம் ஆண்டவரிடம் உறுதியான மனதோடு தொடர்ந்து மன்றாடுவோம். அவர் நம்மை மீட்பார்.’ என்று சொல்லி விடை பெற்றாள்.

இஸ்ரயேல் மக்கள் சாம்பலில் அமர்ந்து புலம்பி அழுது வேண்டிக் கொண்டிருக்கையில், வெளியே படை வீரர்கள் உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள்.

அன்று இரவு யூதித்து தன்னுடைய விதவைக் கோலத்தைக் களைந்துவிட்டு நல்ல ஆடைகளை உடுத்தி, நறுமணத் தைலத்தைப் பூசி, அழகிய காலணிகளை அணிந்து கொண்டு ஒரு பணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு நகருக்கு வெளியே புறப்பட்டாள்.

இஸ்ரயேலர் ஒன்றும் புரியாமல் விழித்தனர். யூதித்து நேராக எதிரியின் படைகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள். எதிரிப் படைகள் இரு பெண்கள் தூரத்தில் வருவதைக் கண்டு எச்சரிக்கையானார்கள். அவர்கள் படைவீரர்களை நெருங்கினார்கள்.

‘நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்’ படைவீரர்கள் கேட்டனர்.

‘நாங்கள் எபிரேயர்கள். ஆனால் அவர்களிடமிருந்தே தப்பி ஓடுகிறோம்’ யூதித்து சொன்னாள்.

‘தப்பி வருகிறீர்களா ? உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள் உளவு பார்க்கத் தானே வந்திருக்கிறீர்கள் ?’

‘உளவு பார்க்கவா ? எந்த நாட்டில் பெண்கள் உளவு பார்க்கிறார்கள். நீங்கள் என்னை உங்கள் படைத்தளபதியிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் இஸ்ரயேலரை வெல்லும் வழியை அவருக்குச் சொல்வேன்’ யூதித்து சொன்னாள்.

படைவீரர்கள் அவர்களை ஒலோபெரினிடம் கொண்டு சென்றார்கள். யூதித்தைக் கண்ட ஒலோபெரினின் கண்களுக்குள் காமம் வந்து குடிகொண்டது. அவளுடைய அழகில் மயங்கினான்.

‘சொல் பெண்ணே.. நீ சொல்ல வந்தது என்ன ?’ ஒலோபெரின் கேட்டான்.

‘நான் உங்களுக்கு நன்மை செய்வதற்காகத் தான் வந்திருக்கிறேன். உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் மிகப் பெரிய வீரர். நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு வெற்றி மிக எளிதாய்க் கிடைக்கும்…. ‘

‘சொல் பெண்ணே…. எங்களின் பக்கம் ஆதரவு தர வரும் யாரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். உன்னுடைய திட்டத்தைச் சொல்’ ஒலோபெரின் கேட்டான்

எபிரேயர்கள் தங்கள் கடவுளை விட்டு விலகி நடக்கிறார்கள். அவர்கள் இப்போது கடும் பட்டினியில் இருப்பதால் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட விலங்குகளைக் கூட உண்கிறார்கள். எனவே கடவுள் அவர்களைத் தண்டிப்பது உறுதி .’

‘ஓஹோ…. அப்படியானால் நான் போரைத் துவங்கலாம் என்கிறாயா ?’ ஒலோபெரின் கேட்டான்.

‘இல்லை தளபதியாரே…. நான் நல்ல இறை பத்தியுள்ள பெண். எபிரேயர்கள் கடவுளை விட்டு விலகிவிட்டதால் கடவுள் நிச்சயம் என்னோடு பேசுவார். எபிரேயர்களின் அழிவு எப்போது என்பதை எனக்குச் சொல்வார். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். சரியான நேரத்தை நான் உங்களுக்குச் சொல்வேன். அந்த நேரத்தில் நீங்கள் போய் போரிட்டால் நிச்சயம் வெற்றிதான்’ யூதித்து சொன்னாள்.

ஒலோபெரின் மகிழ்ந்தான். ‘நல்ல செய்தி சொன்னாய். நீ இனிமேல் படைவீரர்களோடு கூட ஒரு தனிக் கூடாரத்தில் தங்கலாம். உங்களை நாங்கள் பாது காப்போம். இனிமேல் நீ எங்கள் கட்சி. எப்போதுமே வெற்றிகளை மட்டுமே பெறும் கட்சி ! ‘ என்று கூறிச் சிரித்தான்.

‘நன்றி தளபதியாரே. நான் தினமும் அதிகாலையில் இஸ்ரயேலரின் அழிவுக்காகக் வெளியே சென்று தனிமையில் கடவுளிடம் வேண்டுவேன். தன் கட்டளைகளை மீறிய மக்களை அவரும் தண்டிப்பார்’ என்றாள்.

ஒலோபெரின் இன்னும் அதிகமாக ஆனந்தப் பட்டான். ‘உனக்கு அழகும், அறிவும் நிறைந்திருக்கிறது. இப்படி ஓர் அழகான பெண்ணுக்கு இத்தனை கூரிய நுண்ணறிவு இருந்ததை நான் பார்த்ததேயில்லை’ என்று பாராட்டினான்.

யூத்திதைப் பார்த்த கணத்திலிருந்து ஒலோபெரினின் மனசுக்குள் எப்படியும் யூதித்தோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை வளர்ந்து கொண்டே இருந்தது. எனவே இரண்டு நாட்களுக்குப் பின் ஒலோபெரின் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்காக ஒரு விருந்து ஏற்பாடு செய்தான். இந்த விருந்தை வைத்தே யூதித்தை தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒலோபெரின் திட்டமிட்டான். எனவே அந்த விருந்தில் கலந்து கொள்ள யூதித்துக்கும் தளபதி ஆளனுப்பினான்.

‘உன்னை ஒலோபெரின் விருந்துண்ண அழைக்கிறார்’ பணியாளன் வந்து சொன்னான்.

‘இதோ வருகிறேன்’ என்று சொன்ன யூதித்து அழகிய ஆடை அணிகலன்களோடு அழகு ராணியாகப் புறப்பட்டாள். ஒலோபெரினின் முன்பு வந்து நின்றாள்.

‘என்னோடு விருந்து உண்ண உனக்குச் சம்மதமா ?’ ஒலோபெரின் கேட்டான்.

‘இப்படி ஒரு வாய்ப்பை மறுத்துக் கூற எனக்கென்ன பைத்தியமா ?’ யூதித்து மெல்லிய குரலில் தேனாய் பேசினாள்.

‘விருந்துக்குப் பின் என் மஞ்சத்தில் கொஞ்சநேரம் தங்குவாயா ?’ ஒலோபெரின் மோகத்தின் விண்ணப்பத்தைச் சொன்னான்.

‘பெரும் வீரரோடு கட்டிலைப் பகிர்வது எனக்குப் பெருமையல்லவா ?’ யூதித்தும் மோகத்தை மோகத்தால் வளரவிட்டாள்.

ஒலோபெரின் ஆனந்தமடைந்தான். எல்லோரும் மது அருந்தி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். யூதித்தும் ஒலோபெரினுக்கு அளவுக்கு அதிகமாய் மதுவைக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். ஒலோபெரின் போதையில் மிதந்தான்.

இரவு வெகுநேரமானபின் எல்லோரையும் வெளியே போகச் சொன்னான் ஒலோபெரின். அவனுடைய போதையேறிய மனசுக்குள் யூதித்து மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் வெளியே போனபின் யூதித்து அவனைச் சிணுங்கல் வார்த்தைகளால் சிறை பிடித்தாள். அவனுக்கு மீண்டும் மீண்டும் மது கொடுத்தாள். ஒலோபெரின் போதையில் சரிந்தான்.

இந்தத் தருணத்துக்காகத் தானே காத்திருந்தாள் யூதித்து ! தூணில் தொங்கவிடப்பட்டிருந்த ஒலோபெரினின் வாளை எடுத்தாள். வாளை இரண்டு கைகளாலும் பிடித்து ஓங்கி ஒலோபெரினின் கழுத்தைக் குறிவைத்து வேகமாக இறக்கினாள். ஒரே ஒரு வினாடி தான்…. ஒலோபெரினின் தலை துண்டாகித் தெறித்தது. ஒலோபெரின் என்னும் மாவீரன் இரு துண்டுகளாய் விழுந்து இறந்து போனான். அவனுடைய தலையை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு ஆடைகளைத் திருத்திக் கொண்டு யூதித்து வெளியேறினாள்.

தினமும் அதிகாலையில் அவள் செபம் செய்வதற்காக வெளியே போகும் வழக்கம் கொண்டிருந்ததால் யாரும் அவளைத் தடுக்கவில்லை. அவளும் பணிப்பெண்ணும் ஒலோபெரினின் தலை இருந்த பையையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.

யூதித்து திரும்பி வந்திருப்பதைக் கண்ட இஸ்ரயேலர்கள் எல்லோரும் அவளிடம் ஓடி வந்தனர்..
‘என்ன நடந்தது ? அவர்களிடம் பேசினாயா ? என்ன தான் முடிவு ? ‘ மக்கள் ஆர்வமும் பரபரப்புமாய்க் கேட்டார்கள்.

‘கடவுள் நம்மோடு இருக்கிறார்….. கவலைப் படாதீர்கள்…’ யூதித்து சொன்னாள்.

‘அப்படியானால் ஒலோபெரின் போரைக் கைவிட்டு விட்டுப் போய்விடுவானா ?’ மக்கள் சந்தேகத்தில் கேட்டனர்.
‘போரையா ? அவன் தலையையே விட்டு விட்டு ஓடிப் போய்விட்டான். இதோ பாருங்கள் ‘ யூதித்து ஒலோபெரினின் தலையைத் தூக்கிக் காட்டினாள். எல்லோரும் அதிர்ச்சியும், ஆனந்தமும், பரவசமும், அனைத்தும் கலந்த ஏதென்று சொல்லமுடியாத உணர்வும் அடைந்தார்கள்.

அக்கியோர் மயங்கியே விழுந்தான்.

‘இப்போது நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். நம் படைகள் முழுவதும் இப்போது அவர்களை நோக்கிப் போகவேண்டும். ஆனால் நெருங்கக் கூடாது. மிக மெதுவாக அவர்களின் பார்வைக்குத் தெரியும் தூரம் வரை போகவேண்டும்’ யூதித்து சொன்னாள்.

‘அப்படிப் போனால் என்னவாகும் ?’ குழப்பத்தில் கேட்டனர் மக்கள்.

‘அவர்கள் தலைவன் இல்லாமல் போரிட மாட்டார்கள். படையைக் கண்டதும் ஒலோபெரினின் கட்டளைக்காக அவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள். அங்கே அவன் பிணமாய்க் கிடப்பான். அவன் உயிருடன் இல்லையென்று அறிந்தால் எல்லோரும் சிதறி ஓடுவார்கள். நமக்குத் தான் ஊரின் எல்லைகள் தெரியுமே… ஆங்காங்கே நம் வீரர்கள் குழுக்கள் குழுக்களாகச் சென்று சிதறி ஓடுவோரைக் கொன்று குவிக்க வேண்டியது தான்’ யூதித்து விளக்கினாள்.

‘மக்கள் எல்லோரும் புருவங்கள் உயர யூதித்தின் புத்திசாலித்தனமான பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒலோபெரினையே கொன்றவளல்லவா யூதித்து ! அவளுடைய வியூகத்துக்கு எதிரான எந்த ஒரு மறுப்புக் குரலும் மக்களிடமிருந்து எழவில்லை.

யூதித்து சொன்னபடியே எல்லாம் ஆயிற்று. ஒலோபெரினின் தலையில்லா உடலைக் கண்ட வீரர்கள் திரும்பி ஓடினார்கள். அவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப் பட்டு கொல்லப் பட்டனர். எதிரிகள் நீர்நிலைகளையெல்லாம் விட்டு விட்டு ஓடிவிட்டதால், தாகத்தால் வாடிய மக்கள் ஓடிச் சென்று நீர் நிலைகளில் விழுந்து தண்ணீர் குடித்தார்கள். தண்ணீர் இவ்வளவு சுவையா ? என்று தங்களுக்குள் பேசி மகிழ்ந்தார்கள்.

யூதித்து கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.

இலட்சக்கணக்கான படைவீரர்களை தனியே சிதறடித்த யூதித்தையும், அவளோடு இருந்து செயலாற்றிய கடவுளையும் மக்கள் அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர்.

===============================================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *