கி.மு 43 தானியேல் – மன்னனின் கனவும், சிங்கத்தின் சினமும்

பாபிலோன் மன்னன் நெபுகாத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். நகரைக் கைப்பற்றிய அவர் வீரர்களை அழைத்து
‘இஸ்ரயேல் மக்களில் அழகும், திறமையும், ஒழுக்கமும் நிறைந்த நான்கு இளைஞர்களை கண்டுபிடித்து அழைத்து வாருங்கள். அவர்கள் கல்தேயரின் எழுத்துக்களைப் படித்தறிந்து நமக்கு தகவல் பரிமாற்றத்தில் உதவட்டும்’ என்றார்.

வீரர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதும் சுற்றித் திரிந்து நான்கு இளைஞர்களைக் கொண்டு வந்தார்கள்.

‘உங்கள் பெயர் என்ன ?’ மன்னன் கேட்டான்

‘சாக்ராத்’

‘மேஷாக்’

‘சாத்ராக்’

‘தானியேல்’

‘நீங்கள் நால்வரும் இந்த அரண்மனையிலேயே தங்கி, நான் உண்பதுபோன்ற உயர்தர உணவை உண்டு மகிழலாம். உங்களுக்கு நல்ல மரியாதை வழங்கப்படும். மூன்று வருடகாலம் உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். மூன்று வருடப் பயிற்சிக்குப் பின் உங்கள் திறமைக்கு ஏற்ப உங்களுக்கு நல்ல பதவிகளும் அளிக்கப்படும்.’ மன்னன் சொன்னார்.

அரச கட்டளையாயிற்றே… இளைஞர்கள் மறுக்காமல் ஒத்துக் கொண்டார்கள்.

உணவு வேளை வந்தது.

தானியேலும், அவன் நண்பர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர். அரண்மனைப் பணியாளன் நல்ல மாமிசமும், திராட்சை ரசமும் கொண்டு வந்து மேஜையில் வைத்தான்.

‘உங்களுக்கு அரசனுக்குத் தருவதுபோன்ற உணவை ஆயத்தம் செய்திருக்கின்றேன். உண்டு மகிழுங்கள்’ பணியாளன் சொன்னான்

‘எங்களுக்கு இந்த உணவு வேண்டாம்’ தானியேல் சொன்னதும் பணியாளன் திடுக்கிட்டான்.

‘ஏன் ? இன்னும் நீங்கள் சாப்பிட்டுப் பார்க்கவில்லையே ? சாப்பிட்டுப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்’ அவன் பணிவாய் சொன்னான்.

‘இல்லை. நாங்கள் மாமிச உணவு உண்ணவும் மாட்டோம், மது அருந்தவும் மாட்டோம். எங்களுக்கு நல்ல காய்கறி உணவு தான் வேண்டும்’

‘ஐயோ… வெறும் காய்கறி உணவா ? அதைச் சாப்பிட்டால் நீங்கள் வாடிப்போவீர்கள். நீங்கள் வாடிப்போவதை மன்னன் கண்டால் அவர் என்னைக் கொன்றுவிடுவார்’ பணியாளன் பயந்தான்.

‘காய்கறி உணவைச் சாப்பிட்டால் வாடிப் போவோம் என்று யார் உன்னிடம் சொன்னது ? நாங்கள் எப்போதுமே காய்கறி உணவைத் தான் சாப்பிடுகிறோம். நாங்கள் வலிமையாகவும், அழகாகவும் இல்லையா என்ன ?’ தானியேல் சிரித்தார்.

‘சரி… சரி… உள்ளே போய் காய்கறி உணவு என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு வா’ தானியேல் சொன்னார்.

‘ஐயா… பிடிவாதம் பிடிக்காதீர்கள். தயவு செய்து நல்ல உணவு உண்ணுங்கள்.’ பணியாளன் சொன்னான்.

‘அப்படியானால் நாங்கள் உண்பது மோசமான உணவா ? சரி.. ஒன்று செய்யலாம். இன்று முதல் பத்து நாட்களுக்கு நீ எங்களுக்குக் காய்கறி உணவைச் சமைத்துக் கொடு. பத்து நாட்களுக்குப் பின் எங்கள் முகங்களையும், அரச குலத்தினர் முகங்களையும் ஒப்பிட்டுப் பார். எங்கள் முகம் வாடியிருந்தால் நாங்கள் காய்கறி உணவை விட்டுவிட்டு மாமிச உணவுக்கு மாறிவிடுகிறோம். சரிதானே ? ‘ தானியேல் சொன்னார்.

வேறு வழியில்லாமல் பணியாளனும் அவர்களுக்குக் காய்கறி உணவைச் சமைத்துக் கொடுத்தான். பத்து நாட்கள் கடந்தன. பணியாளனுக்கு அவன் கண்களை நம்பவே முடியவில்லை. அரச குல மக்கள் அனைவரையும் விட தானியேலின் முகமும், அவனுடைய நண்பர்களின் முகமும் அழகானதாகவும், தெளிவானதாகவும், உற்சாகமானதாகவும் இருந்தது. எனவே அவர்களுக்குக் காய்கறி உணவையே தொடர்ந்து அளித்தான்.

தானியேலும் அவனுடைய நண்பர்களும் மூன்று ஆண்டுகாலம் அங்கே பயின்றார்கள். நல்ல அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார்கள். கடவுள் அவர்களை ஆசீர்வதித்தார். குறிப்பாக தானியேலுக்கு அவர் கனவுகளின் பலன் அறிந்து சொல்லும் திறமையையும் கொடுத்தார்.

தானியேலும் அவனுடைய நண்பர்களும் அரசனுக்கே ஆலோசனை சொல்பவர்களாக நியமிக்கப் பட்டார்கள். அவர்களுடைய புத்திசாலித்தனமான பல யோசனைகள் மன்னனை பல இக்கட்டுகளிலிருந்து பாதுகாத்தது. எனவே மன்னன் அவர்கள் மீது மிகவும் அதிகமான மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தான்.

ஒருமுறை மன்னன் ஒரு கனவு கண்டான். அரசவையில் கனவுகளுக்குப் பதில் சொல்லும் பலர் இருந்தார்கள். கனவுகளுக்குப் பலன் சொல்வதையே அந்நாட்களில் பலர் தொழிலாகக் கொண்டிருந்தனர். ஏனென்றால் கனவுகள் என்பவை கடவுளிடமிருந்து வரும் அறிவிப்புகள் என்று மக்கள் நம்பினார்கள். எனவே கனவுகளுக்குப் பலன் சொல்பவர்கள் கடவுளின் நேரடி அருள் பெற்றவர்களாகக் கருதப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.

மன்னன் கனவுகளுக்குப் பலன் சொல்லும் நிபுணர்களையெல்லாம் ஒன்று சேர்த்தான்.

‘நான் ஒரு கனவு கண்டேன்’

‘சொல்லுங்கள் அரசே அதன் பதிலை நாங்கள் சொல்கிறோம்’

‘இல்லை.. இந்தமுறை நான் கனவைச் சொல்லப் போவதில்லை. கனவு என்னவென்பதையும் நீங்கள் தான் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்’ மன்னன் சொன்னார். எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

‘அரசே… இது எப்படிச் சாத்தியம். கனவைச் சொன்னால் அதற்குரிய பலனைத் துல்லியமாகச் சொல்வோம்’ அவர்கள் பதட்டத்துடன் சொன்னார்கள்.

‘இல்லை. நீங்கள் சொல்லும் பலன் சரியா தவறா , உங்களுக்கு கடவுளின் அருள் உண்மையிலேயே இருக்கிறதா என்பதெல்லாம் எனக்குத் தெரியவேண்டும். நீங்கள் என் கனவையும் சொல்லி, அதன் பதிலையும் சொல்லவேண்டும். இது அரச கட்டளை’

‘அரசே மன்னிக்கவேண்டும். நீங்கள் கண்ட கனவை நாங்கள் எப்படி அறிவது ? அதற்கு தேவதூதர்கள் தான் இறங்கி வரவேண்டும். எந்த மனிதனாலும் அதைச் சொல்லவே முடியாது’ அவர்கள் குரல் தாழ்த்திச் சொன்னார்கள்.

‘நான் இட்ட ஆணை இட்டதுதான். இந்தக் கனவை எனக்கு நீங்கள் சொல்லவில்லையென்றால் நாட்டிலுள்ள கனவுக்குப் பலன் சொல்லும் அத்தனை பேரும் கொல்லப்படுவீர்கள் இது உறுதி’ மன்னனின் குரலில் கோபம் தெறித்தது.

‘அரசே கருணை காட்டவேண்டும். கனவைச் சொல்லும் திறமை நம் நாட்டில் யாரிடமும் இல்லை’ அவர்கள் நடுநடுங்கியபடியே சொன்னார்கள்.

‘அப்படியானால் உங்கள் அனைவரையும் இப்போதே கொன்று விடுவேன்’ என்று சொல்லிய அரசன் அவர்களைக் கொல்வதற்கு ஆணையிடத் தயாரானான். அப்போது தானியேல் பேசினார்.

‘அரசே…. உங்கள் கனவையும், பலனையும் நான் சொல்கிறேன்’ அரசவை சட்டென்று அமைதியானது.

‘நீங்கள் கண்ட கனவு என்ன என்பதையும், அது எதைக் குறிக்கிறது என்பதையும் நான் கண்டறிந்து சொல்வேன்’ தானியேல் மீண்டும் கூறினார். மக்கள் மூச்சு விடும் சத்தம் கூட வெளியே கேட்காதவண்ணம் அமைதியானார்கள்.

மன்னன் மகிழ்ந்தான். ‘நல்லது தானியேல். உன்னைப் பாராட்டுகிறேன். எங்கே அந்தக் கனவைச் சொல் பார்க்கலாம்’ மன்னன் கேட்டான்.

‘அரசே.. எனக்கு சிலநாட்கள் அவகாசம் தரவேண்டும். நான் இதுபற்றி கடவுளிடம் பேசவேண்டும்’ தானியேல் சொல்ல மன்னர் ஒத்துக் கொண்டார்.

மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு தானியேல் நேராகத் தன்னுடைய வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குச் சென்று தனியறையில் கடவுளை நோக்கி இடைவிடாமல் மன்றாடத் துவங்கினார். ஒருநாள் இரவு கடவுள் அவருக்குத் தரிசனமானார். தானியேல் பரவசமானார். கடவுள் அவருக்கு மன்னன் கண்ட கனவையும், அதன் அர்த்தத்தையும் விளக்கினார். தானியேல் மிகவும் உற்சாகமாகி கடவுளைப் பணிந்து வணங்கினார்.

மறுநாள் காலை அரசவை கூடியது. தானியேல் மலர்ந்த முகத்துடன் மன்னனின் முன்னால் வந்து நின்றார்.

‘அரசே… உங்கள் கனவையும் விளக்கத்தையும் சொல்ல என்னை அனுமதியுங்கள்’

‘உண்மையாகவா !!! நான் கண்ட கனவைக் கண்டுபிடித்து விட்டாயா ?’ மன்னன் சந்தேகமும், வியப்பும் முண்டியடிக்கக் கேட்டான்.

‘கனவைத் தப்பாகச் சொன்னால் உனக்கு மரணம் நிச்சயம். தெரியுமல்லவா ? ‘ மன்னன் மீண்டும் கேட்டான்.

‘கடவுள் தப்பாகச் சொல்லமாட்டார் அரசே. இந்தக் கனவை அவர் தான் என்னிடம் சொன்னார்’ தானியேல் நம்பிக்கையுடன் சொன்னான்.

‘சரி சொல் பார்க்கலாம்’ மன்னன் கேட்டான். கூடியிருந்த அனைவரும் காதுகளைக் கூர்மையாக்கி தானியேல் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இரண்டு வினாடி நேர மெளனத்துக்குப் பின் தானியேல் பேசினார்.

‘நீர் ஒரு மிகப் பயங்கரமான சிலையைக் கண்டீர். அந்த சிலை மிகவும் பிரகாசமாகவும், அச்சுறுத்தக் கூடியதாகவும் இருந்தது. அதன் தலை பசும் பொன்னாலும், மார்பும் தோள்களும் வெள்ளியினாலும், வயிறும் தொடைகளும் வெண்கலத்தினாலும், கால்கள் இரும்பினாலும், பாதங்கள் பாதி இரும்பும் மீதி களிமண்ணினாலும் செய்யப்பட்டிருந்தது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மிகப்பெரிய கல் உருண்டு வந்து அந்த சிலையின் பாதங்களில் மோத அவை நொறுங்கின. பின் முழு சிலையுமே நொறுங்கி விழுந்தது. அதன் உடைந்த துகள்களெல்லாம் காற்றில் பறந்து மறைந்தன. அந்தக் கல் ஒரு பெரிய மலையாக உருவெடுத்து நின்றது’ இது தானே அந்தக் கனவு ? தானியேல் கேட்டார்.

மன்னன் வியப்பு மேலிட இருக்கையிலிருந்து எழுந்தான். அது தான் அவன் கண்ட கனவு.

‘தானியேல் உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய கனவை நீ அப்படியே சொல்லியிருக்கிறாய். அதன் பலனையும் சொல்’ மன்னன் கேட்டான்.

‘அரசே.. ஒரு மிகப்பெரிய செய்தியைக் கடவுள் உங்கள் கனவின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதை நான் சொல்கிறேன்…’ தானியேல் கனவின் விளக்கத்தைச் சொல்லத் துவங்கினார்.

‘மன்னனான நீர் அனைத்தையும் சிறப்பாக ஆண்டு வருகிறீர். உம்முடைய தலைமை சிறப்பானது. அதைத் தான் அந்தச் சிலையின் பொன் தலை உணர்த்துகிறது. உமக்குப் பிறகு கீழ்த்தரமான இரண்டு அரசுகள் தோன்றும். அதையே வெள்ளி மார்பும், வெண்கல வயிறும் சொல்கிறது. நான்காவதாக இரும்பைப் போன்ற ஒரு அரசு தோன்றும். அவர்கள் மக்களோடு ஒட்டாத ஒரு அரசை அமைப்பார்கள். இரும்பும், களிமண்ணும்போல ஒட்டாத அரசாக அவர்களின் அரசு இருக்கும். அப்போது கடவுள் ஒரு நல்ல அரசை நாட்டில் ஏற்படுத்துவார். பாறைக்கல் என்பது கடவுளின் அரசைக் குறிக்கும். அது கீழ்த்தரமான ஆட்சிகளையெல்லாம் உடைத்து நொறுக்கிவிட்டு நல்ல ஒரு அரசை அமைக்கும். இதுவே கனவின் பலன்’ தானியேல் சொன்னார்.

கூடியிருந்த மக்களெல்லாம் தானியேலின் திறமையைக் கண்டு வாயடைத்துப் போய் நின்றார்கள். மன்னன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தானியேலை நோக்கி ஓடிவந்து அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினான். மக்கள் கூட்டம் ஸ்தம்பித்துப் போய் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது.

‘இஸ்ரயேலர்களின் கடவுள் தான் உண்மையான கடவுள். தானியேலுக்குத் தூபம் காட்டுங்கள். அவரைக் கடவுளுக்கு அடுத்தபடியாக மரியாதை செலுத்துங்கள். இனிமேல் தானியேல் அரசவையில் எனக்கு அடுத்த இடத்தில் இருப்பான்.’ மன்னன் ஆணையிட்டான்.
அதைக்கேட்ட அரசவை ஊழியர்கள் அனைவரும் தானியேலை பொறாமைக் கண்களோடு பார்த்தார்கள்.

சிலையைக் கனவில் கண்ட மன்னன் உடனே ஒரு பொன் சிலையைச் செய்யக் கட்டளையிட்டான். அறுபது அடிச் சிலை ஒன்று தயாரானது. அதை நகரின் மையத்தில் நிறுத்தி மக்கள், அதிகாரிகள் அனைவரும் அங்கே வந்து கூடினார்கள்.

‘எக்காளச் சத்தம் கேட்கும் போது அனைவரும் தாழ விழுந்து சிலையைப் பணிந்து தொழவேண்டும். இது நம்முடைய தெய்வம். அப்படிப் பணிய மறுக்கும் அனைவரும் எரியும் தீயில் எறியப்படுவீர்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

சிலைக்கு முன்னால் அனைவரும் திரண்டு நிற்க, எக்காளச் சத்தம் ஊதப்பட்டது. எல்லோரும் சிலைக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள் தானியேலின் நண்பர்களைத் தவிர !
தானியேல் அரசவையிலேயே இருந்ததால் அவன் சிலைக்கு முன்னால் வரவில்லை.

தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் பொறாமையுடன் பார்த்தவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாய் அமைந்தது. அவர்கள் மன்னனிடம் ஓடினார்கள்.

‘அரசே.. நீர் அமைத்த சிலையை அனைவரும் தொழவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தீர் அல்லவா ?’

‘ஆமாம் அதற்கென்ன ?’

‘மூன்று பேர் அந்த சிலையை வணங்கவில்லை.’

‘யாரவர்கள். உடனே அவர்களை இங்கே இழுத்து வாருங்கள்’ மன்னன் சினந்தான்.

‘அரசே அது தானியேலின் மூன்று நண்பர்களும் தான்’

‘யாராய் இருந்தால் என்ன ? என் கட்டளையை மீறியவர்களை உடனே இங்கே இழுத்து வாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

தானியேலின் நண்பர்கள் இழுத்து வரப்பட்டார்கள்.

‘உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் என்னுடைய கட்டளையை மீறுவீர்கள் ?’ மன்னன் கேட்டான்.

‘கடவுள் எங்களோடு இருக்கும் தைரியம் இருக்கும் போது நாங்கள் அரச கட்டளையை மீறுவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்’ மூவரும் சொன்னார்கள். மன்னனின் கோபம் பலமடங்கு உயர்ந்தது.

‘ஏன் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள்? ‘

‘எங்கள் கடவுள் உண்மையான கடவுள். அவரைத் தவிர இன்னொரு சிலையை வணங்க நாங்கள் தயாராக இல்லை.’

‘சிலையை வணங்காததற்காக நீங்கள் சாகப் போகிறீர்கள்.’

‘கடவுள் எங்களைக் காப்பாற்றுவார்’

‘ஒருவேளை கடவுள் உங்களைக் கைவிட்டால் ?’

‘கடவுள் கைவிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு விரோதமாய் நடக்கமாட்டோம்’ அரசனின் முன்னால் நின்றுகொண்டே அரசனுக்கு எதிராய் அவர்கள் பேசப் பேச மன்னனின் கோபம் கரைகடந்தது.

‘ஏழு மடங்கு அதிகமாக சூளையில் நெருப்பைப் போடுங்கள். இந்த மூன்றுபேரையும் துணிகளால் சுற்றிக் கட்டித் தீயில் எறியுங்கள். சிலையை வணங்காதவன் சிதைந்து போகட்டும்’ மன்னன் கட்டளையிட்டான்.

சூளை வழக்கத்தை விட ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டது. பணியாளர்கள் சிலர் வந்து அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் தீயில் எறிந்தார்கள். சூளை மிகவும் சூடாக இருந்ததால் தானியேலின் நண்பர்களைத் தீயில் வீசியவர்கள் அந்த நெருப்பின் அனலிலேயே சுருண்டுவிழுந்து இறந்தார்கள்.

மன்னன் தொலைவிலிருந்த சன்னல் வழியாக நெருப்பைப் பார்த்தான். திடுக்கிட்டான்.
நெருப்புக்கு நடுவே நான்கு பேர் நடந்து கொண்டிருந்தார்கள் !

அரசன் பதட்டமாய் அதிகாரியை அழைத்தான்.

‘இதோ பார். நாம் மூன்று பேரையல்லவா நெருப்பில் போட்டோம். நான்குபேர் நெருப்பில் நடக்கிறார்களே !!! ‘ மன்னன் நடுங்கிக் கொண்டே கேட்டான்.

‘ஆம் அரசே. நான்குபேர் உள்ளே இருக்கிறார்கள். அது எப்படியென்று தெரியவில்லையே. அவர்களை நெருப்பில் எறிந்தவர்கள் அனலிலேயே செத்துவிட்டார்கள். இவர்கள் தீயில் விழுந்தும் உயிரோடு இருக்கிறார்களே ! ‘ அதிகாரி திகிலடைந்தான்

‘உடனே அவர்களை வெளியே வரச் சொல்.’ மன்னன் ஆணையிட்டான்.

அவர்கள் மூன்று பேரும் நெருப்பிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர். அவர்களுடைய ஆடை நுனி கூட கருகவில்லை. ஒரு தலை மயிர் கூட சூடாகவில்லை. மன்னன் அவர்களைக் கண்டு நடுங்கினான்.

‘தானியேலின் நண்பர்கள் தொழும் கடவுள் உண்மையான கடவுள். அவர்களுக்கு எதிராக இனிமேல் யாரும் பேசாதீர்கள். அவருக்கு விரோதமாய் நடப்பவன் கொல்லப்படுவான்’ மன்னன் புதிய கட்டளை ஒன்றை இட்டான்.

தானியேலும் நண்பர்களும் மகிழ்ந்தார்கள். கடவுளின் செயலை எண்ணி எண்ணி வியந்தார்கள். மன்னன் தானியேலின் நண்பர்களையும் அரசவையின் உயரிய பதவிகளில் அமர்த்திக் கெளரவித்தான்.

சிறிது நாட்களுக்குப் பின் மன்னன் இரண்டாவதாக ஒரு கனவைக் கண்டான். அந்தக் கனவு இதுதான்.

ஒரு மிகப் பெரிய மரம் நாட்டின் நடுவில் நிற்கிறது. அது திடீரென வளர்ந்து விஸ்வரூபமெடுத்து வானத்தை எட்டுகிறது. அதன் கிளைகள் தேசத்தில் எல்லை வரை நீண்டது. அப்போது ஒரு தேவதூதன் வந்து. ‘இந்த மரத்தின் கிளைகளையெல்லாம் வெட்டுங்கள். பறவைகள் எல்லாம் மரத்தை விட்டுப் பறந்து போகட்டும். இந்த மரத்தின் கனிகளையெல்லாம் சிதைத்து விடுங்கள் அது யாருக்கும் பயன் தரவேண்டாம் பின்மரத்தையும் வெட்டி விடுங்கள். அடிப்பாகம் மட்டும் நிற்கட்டும். அது பனியில் நனைந்து, புல்லோடு தங்கியிருக்கட்டும். இரும்பினாலும், வெண்கலத்தினாலும் செய்த சங்கிலியைக் கொண்டு அதை கட்டி வையுங்கள்’ என்றான்.

மன்னன் தன்னுடைய கனவைச் சொன்னான். ஆனால் நாட்டிலுள்ள எந்த ஞானியாலும் அதன் விளக்கத்தைச் சொல்ல முடியவில்லை. மீண்டும் மன்னனின் ஆஸ்தான ஆலோசகரான தானியேல் வரவழைக்கப் பட்டார். மன்னன் தானியேலிடம் தன் கனவைக் கூற தானியேல் சிறிது நேரம் மெளனமாய் இருந்தார். பின் தலை நிமிர்ந்து மன்னனை நோக்கினார். அவருடைய கண்கள் திகிலடைந்திருந்தன.

‘தானியேல் நீ கலங்கவேண்டாம். கனவில் பொருள் எதுவானாலும் நீ தயங்காமல் என்னிடம் சொல்’ மன்னன் கேட்டான்.

‘அரசே நான் எப்படிச் சொல்வேன் ? இந்தக் கனவு உமது எதிரிகளுக்குப் பலித்தால் நன்றாக இருக்குமே… ‘ தானியேல் கலங்கினார்.

‘கலங்காதே. எதுவானாலும் சொல்..’ மன்னன் கேட்டான்.

‘அரசே… அந்த மரம் நீர் தான். உம்முடைய ஆட்சி எங்கும் நிலை நிற்கிறது. ஆனாலும் ஆணவம் உம்மிடம் வந்தால் நீர் மனிதர்களிடமிருந்து விலக்கி விடப்பட்டு சிறிது காலம் விலங்குகளைப் போல திரிவீர். பின் உண்மை உணர்ந்து நீர் மீண்டும் கடவுளை வேண்டும்போது மீண்டும் உம்மிடம் அரசாட்சி வரும். ‘ தானியேல் சொன்னார். மன்னன் அமைதியானான். ஆணவத்துக்கு இடம் கொடுக்காத ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்று தீர்மானித்தான்.

மாதங்கள் கடந்தன. வருடம் ஒன்று ஓடிவிட்டது. மன்னன் ஒரு நாள் அரண்மனையின் மேல் தளத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் பாபிலோன் நகரம் அழகாய் நிமிர்ந்து நின்றது. மன்னன் ஒருவினாடி அனைத்தையும் மறந்தான். சட்டென்று ஆணவன் அவனுக்குள் வந்து குடியேறியது.

‘ஆஹா… என் திறமையைப் பார்த்தால் எனக்கே பொறாமையாய் இருக்கிறது. இது நான் கட்டிய பாபிலோன் அல்லவா ?’ என்றான். அவ்வளவு தான். அவனுடைய குணங்கள் மாறின. அவனுடைய உருவமும் மாறத் துவங்கியது. அவன் மிருக குணத்தினன் ஆனான்.

அரண்மனைக்கு வெளியே ஓடினான். அங்கே கிடந்த புற்களை மேய்ந்தான். அவனுடைய தலைமயிர் கழுகின் சிறகுகளைப் போல விரிந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப் போல நீண்டன. அவன் மிருகத்தைப் போல வெளியே உலவத் துவங்கினான். மக்கள் அதிர்ந்தார்கள். அரண்மனைவாசிகள் குழம்பினார்கள். தானியேல் மட்டும் அமைதியாய் இருந்தார்.

ஏழு பருவ காலங்கள் ஓடி மறைந்தன. மன்னன் திடீரென ஒரு நாள் நினைவு திரும்பியவராக வானத்தை ஏறிட்டுப் பார்த்து அழுது கடவுளை வேண்டி மன்றாடினார். கடவுளைப் புகழ்ந்து பாடல்களையும் பாடினார்.

மன்னனின் வேண்டுதலைக் கேட்ட கடவுள் அவர் மீது மனமிரங்கி அவருக்கு நலமளித்தார். மன்னர் மீண்டு தன்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார்


நெபுகாத்நேசர் மரணமடைந்தபின் அவருடைய மகன் பெல்சாத்சார் மன்னனானான்.

ஒரு நாள் அவன் அரச உயர் அதிகாரிகள் பிரபுக்கள் ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு ஒரு மிகப் பிரம்மாண்டமான விருந்தை அளித்தான். அந்த விருந்தில் மன்னன் இரண்டு மிகப் பெரிய தவறுகளைச் செய்தான்.

முதலாவதாக எருசலேம் தேவாலயத்திலிருந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை எடுத்து அவற்றில் திராட்சை ரசத்தை ஊற்றி விருந்தினர்களுக்கு அளித்தான்.

இரண்டாவதாக வேற்று தெய்வங்களுக்கு அந்த விருந்தில் பாடல்கள் பாடி, ஆராதனைகள் செய்யப்பட்டன.

விருந்து கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஆடல் பாடலில் மூழ்கியிருந்தார்கள். அப்போது தான் அந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்தது.

ஒரு கை தோன்றி அரண்மனையின் சுவரில் ஏதோ எழுதியது. மக்கள் சப்தநாடியும் ஒடுங்கி அமைதியானார்கள். மன்னன் திகைத்தான். உடனே நாட்டிலுள்ள அனைத்து ஞானிகள், குறி சொல்பவர்கள் அனைவரும் வரவழைக்கப் பட்டனர். ஆனால் யாராலும் அந்த எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை.

மன்னன் வேறு வேறு மொழிதெரிந்த அனைவரையும் அழைத்து வந்தான். ஆனால் யாருக்குமே அந்த மொழி தெரியவில்லை.

‘அரசே… நமது நாட்டில் தானியேல் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கடவுளின் அருள் பெற்றவர். அவரால் முடியாத காரியங்கள் எதுவும் இல்லை. அவர் உமது தந்தையின் அரசவையில் மிக உயரிய இடத்தில் இருந்தவர். அவரிடம் பேசிப்பார்க்கலாமா ?’

‘கண்டிப்பாக. உடனே அவனை அழைத்து வாருங்கள்’

தானியேல் அழைத்து வரப்பட்டார். மர்ம விரல்கள் எழுதியிருந்த எழுத்துக்களின் முன்பாக நிறுத்தப்பட்டார்.

‘உம்மால் வாசிக்க முடிகிறதா ?’ மன்னன் கேட்டான்.

‘கண்டிப்பாக. இந்த வரிகளின் ஒவ்வோர் வார்த்தையின் விளக்கத்தையும் நான் உமக்குச் சொல்வேன்’ தானியேல் சொல்ல மன்னர் ஆர்வமானார்.

‘சரி என்ன எழுதியிருக்கிறது என்பதை விரைவாகச் சொல். நீர் இதை வாசித்துச் சொன்னால் உமக்கு நான் நல்ல வெகுமதிகள் தருவேன் ‘ மன்னன் சொன்னான்

தானியேல் சிரித்தார். ‘ வெகுமதிகளா ? உம்முடைய வெகுமதிகள் யாருக்கு வேண்டும். அது உம்மிடமே இருக்கட்டும். எனக்கு உம்முடைய வெகுமதிகள் ஏதும் வேண்டாம். இந்த எழுத்துக்களின் விளக்கத்தைக் கடவுள் என்னிடம் கூறிவிட்டார். அதை நான் உமக்குச் சொல்வேன்’ தானியேல் ஆரம்பித்தார்.

‘மெனே மெனே தெக்கேல் உப்பார்சின். என்று எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடைய அரசு முடிவுக்கு வருகிறது. நீ கடவுளின் தராசில் நிறுக்கப்பட்டபோது குறைவாகவே எடை காட்டினாய். உன் அரசு கைமாறப் போகிறது. இது தான் அதன் விளக்கம்’ தானியேல் சொன்னார்.

மன்னன் அதிர்ச்சியுடன் கேட்டான் ‘ஏன் கடவுள் இப்படி எழுதியிருக்கிறார் ? ‘

‘ஏன் என்பது உனக்கே விளங்கியிருக்க வேண்டும். உன்னிடம் நல்ல செயல்கள் இல்லை என்பதை நீயே கண்டுணர்ந்திருக்க வேண்டும். உன் தவறுகளைச் சொல்வதானால், நீ கடவுளை அவமதித்தாய். கடவுளின் ஆலயத்திலிருந்து புனிதப் பாத்திரங்களை எடுத்து வந்து அவற்றில் போதைப் பொருட்களை ஊற்றி மனிதர்கள் உதடுகளுக்குக் கொடுத்தாய். வேற்றின தெய்வங்களைப் புகழ்ந்தாய். அதனால் தான் உனக்கு இந்த முடிவு’ தானியேல் சொன்னார்.

அன்று இரவே தரியு எனப்படும் மேதியனால் பெல்சாத்ஷார் மன்னன் கொல்லப்பட்டார்.

தரியு மன்னனின் அரசவை நிவாகத்தைக் கவனிப்பதற்காக மன்னன் மூன்று உயர் அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தானியேலும் ஒருவர். நாட்கள் செல்லச் செல்ல மன்னன் தானியேலின் திறமையை உணர்ந்தார். தானியேல் மற்ற இரண்டு உயர் அதிகாரிகளையும் விட மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வந்ததால் அவரை அவர்களுக்கும் மேலான ஒரு உயர் பதவியில் வைக்க விரும்பினார். இதை அறிந்த மற்ற இரண்டு அதிகாரிகளும் தானியேலின் மீது பொறாமை கொண்டனர்.

எப்படியாவது தானியேலின் மீது குற்றம் கண்டுபிடிக்கவேண்டுமென்று அவர்கள் தோண்டித் தோண்டித் தேடினார்கள் ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மன்னன் தானியேல் மீது அதிக பாசம் வைத்திருந்ததால் பொய்யாக எதையும் சொல்லி மாட்டிக் கொள்ளவும் கூடாது என்பதில் அவர்கள் எச்சரிக்கையாய் இருந்தார்கள்.

‘தானியேல் எதிலும் குறைவைக்கவில்லை. அவனை எந்தவிதத்தில் மாட்டவைப்பது என்றே தெரியவில்லை’

‘அவனுடைய தொழிலிலோ, தனிவாழ்க்கையிலோ அவனிடம் நாம் குறை காண முடியாது. ஆனால் ஒரு வழி இருக்கிறது !’

‘என்ன வழி’

‘தானியேல் எதை வேண்டுமானாலும் விட்டு விடுவார். ஆனால் அவருடைய கடவுளை மட்டும் விட்டு விட மாட்டார்.’

‘சரி.. அதை வைத்து அவரை எப்படி குற்றம் சுமத்துவது ? அவருடைய கடவுளை வணங்கக் கூடாது என்று சட்டம் ஏதும் இல்லையே !’

‘சட்டம் இது வரைக்கும் இல்லை… இனிமேல் போடப்பட்டால் ?…’

‘என்ன சொல்கிறாய் ? புரியும் படியாகச் சொல்’

‘நாம் மன்னனிடம் சென்று ஒரு புதிய சட்டத்தைப் போடச் சொல்ல வேண்டும். அதாவது நாட்டு மக்களின் கடவுள் மன்னர் மட்டுமே. அவரை மட்டுமே வணங்கவேண்டும். வேறு தெய்வங்களை யாரும் வணங்கக் கூடாது. அப்படி வணங்குபவர்கள் கொல்லப்படுவார்கள். என்று ஒரு ஆணையைப் போடச் செய்யவேண்டும். அப்படி ஒரு ஆணை போடப்பட்டால் தினமும் மூன்று முறை எருசலேம் திசை நோக்கித் தொழுகை செய்யும் தானியேல் மாட்டுவார் !’

‘திட்டம் நன்றாகத் தான் இருக்கிறது. மன்னர் ஒத்துக் கொள்வாரா ?’

‘ஒத்துக் கொள்ள வைப்போம்….’

ஒரு சதித்திட்டத்தை உள்ளுக்குள் உருவாக்கிப் பார்த்த அவர்கள் இருவரும் நேராக மன்னனை சென்று சந்தித்தார்கள்.

‘அரசே வாழி’

‘சொல்லுங்கள் என்ன செய்தி ?’ மன்னன் கேட்டான்.

‘அரசே … ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒன்றை நீர் இந்த நாட்டைக் கைப்பற்றிய பின் இடவில்லை. அதை நினைவுறுத்தத் தான் வந்தோம்’

‘அது என்ன சட்டம் ?’ மன்னன் குழம்பினார்.

‘உம்மைத் தவிர வேறு தெய்வங்களை யாரும் வணங்கக் கூடாதென்றும், அப்படி வணங்கினால் அவர்கள் சிங்கத்தின் கூட்டில் போடப்படுவார்கள் என்றும் மேதியருக்கும், பெர்சியருக்கும் நீர் ஒரு கட்டளை இட்டிருக்கிறீர் அல்லவா ? அதை நீர் இப்போது இந்த நாட்டிலும் இடவேண்டும்’ அவர்கள் சொன்னார்கள்.

மன்னன் அவர்களுடைய உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் சட்டம் நிறைவேற்றினார்.

தானியேல் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேல் மாடிக்குச் சென்று வழக்கம் போலவே எருசலேம் இருக்கும் திசை நோக்கி தினமும் மூன்று முறை தொழுது வந்தார். இதற்காகத் தானே காத்திருந்தனர் பொறாமை பிடித்த அதிகாரிகள். தானியேலை கையும் களவுமாகப் பிடித்து அரசனின் முன்னால் நிறுத்தினார்கள்.

‘ஏன் தானியேலை அழைத்து வந்திருக்கிறீர்கள் ?’ மன்னன் கேட்டான்.

‘அரசே… இவன் உம்முடைய கட்டளையை மீறி அவனுடைய தெய்வத்தை வணங்கினான்’ அவர்கள் சொன்னார்கள். மன்னன் திடுக்கிட்டான். தானியேலை ஆபத்தில் மாட்டி விடத் தான் இப்படி ஒரு கட்டளையைப் போட இவர்கள் அவசரப் படுத்தினார்கள் என்பது மன்னனுக்குச் சட்டென்று விளங்கியது.
மன்னன் தடுமாறினான். அவனுடைய ஆணை திரும்பப் பெற முடியாதது. தானியேலைக் கொல்லவும் அவருக்கு மனமில்லை.

‘அரசே… உமது ஆணை அனைவருக்கும் பொதுவானது. இவனை சிங்கங்களின் கூட்டில் தள்ளும்’ அவர்கள் அவசரப் படுத்தினார்கள்.

மன்னன் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான்.

தானியேலை சிங்கங்கள் கிடக்கும் கெபிக்குள் தள்ளி அதன் வாயிலை பாறாங்கல் வைத்து மூடி சீல் வைக்கக் கட்டளையிட்டான். பின் தானியேலை நோக்கி
‘தானியேல். நீ வணங்கும் கடவுள் உண்மையானவராக இருந்தால் அவர் உன்னைக் காக்கட்டும்’ மன்னனின் குரலில் இயலாமையும், ஏமாற்றமும் தெரிந்தது.

வீரர்கள் தானியேலை அழைத்துச் சென்றுசிங்கங்கள் இருந்த குகைக்குள் தள்ளி அதன் மேல் ஒரு கல்லை வைத்து முத்திரை மோதிரத்தால் சீல் வைத்தார்கள். சிங்கங்களின் குகையில் மேல் பகுதியில் மட்டுமே ஒரு திறப்பு உண்டு. சிங்கங்கள் மேலேறி வர முடியாத அளவுக்கு ஆழமாக இருந்தது அந்தக் குகை.

அன்று இரவு மன்னர் உண்ணவே இல்லை. அவரால் உறங்கவும் முடியவில்லை. மிகவும் மன வருத்தத்தோடு தன்னுடைய அறையில் உலாவிக் கொண்டிருந்தார்.

பொழுது விடிந்தது.

காலையில் மன்னர் சிங்கத்தின் குகைக்குச் விரைந்து சென்றார்.

‘தானியேல்… தானியேல்… உயிருடன் இருக்கிறாயா ?’ மன்னர் துயரமான குரலில் கத்தினார். அவருடைய குரலில் பதட்டமும் பரபரப்பும் நிறைந்திருந்தது.

‘ஆம் அரசே. நான் உயிருடன் தான் இருக்கிறேன்…’ தானியேல் சிங்கங்களின் குகைக்குள்ளிருந்து குரல் கொடுத்தார். மன்னரால் தன்னுடைய காதுகளை நம்பவே முடியவில்லை. அவர் மிகுந்த ஆனந்தத்துடன் வீரர்களைக் கூப்பிட்டு தானியேலை வெளியே எடுக்கச் சொன்னார். அவர்கள் நீளமான ஒரு கயிற்றை குகையினுள் இட்டு தானியேலை வெளியே எடுத்தார்கள். அவருக்கு எந்த காயமும் ஏற்பட்டிருக்கவில்லை. கூடியிருந்த வீரர்களும், அலுவலர்களும், மக்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

‘தானியேல்… நீ எப்படித் தப்பினாய் ?’ மன்னர் உற்சாகமாய்க் கேட்டார்.

‘தேவதூதர்கள் வந்து சிங்கங்களின் வாயைக் கட்டிப் போட்டார்கள். எனவே அவை என்னை ஒன்றும் செய்யவில்லை. ‘ தானியேல் சொல்ல மன்னன் மகிழ்ந்தான்.

‘உடனே போய் பொறாமை பிடித்த அந்த இரண்டு அதிகாரிகளையும் இழுத்து வாருங்கள். அவர்கள் சிங்கங்களுக்கு இரையாகட்டும்’ மன்னன் கட்டளையிட்டான். அவர்கள் இருவரும் மன்னன் முன்னால் அழைத்து வரப்பட்டார்கள்.

‘இதோ பாருங்கள். நீங்கள் மரணத்தைக் கொடுத்த மனிதன். இவனைக் காப்பாற்றிய கடவுள் தான் உண்மையான கடவுள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. இனிமேல் தானியேலின் கடவுளை அனைவரும் வழிபடவேண்டும். ‘ மன்னன் ஆணையிட்டான். அதிகாரிகள் இருவரும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘இவர்கள் இருவரையும் சிங்கங்களின் குகையில் தள்ளுங்கள்.’ மன்னன் ஆணையிட்டான். உடனே அவர்கள் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டு சிங்கக் குகைக்குள் வீசப்பட்டனர்.

அவர்கள் குகையின் தரையைத் தீண்டும் முன்பே சிங்கங்களால் பிய்த்து வீசப்பட்டு இறந்து போனார்கள்.

இவற்றையெல்லாம் கண்ட மக்கள் இஸ்ரயேலர்களின் கடவுளை பயத்துடனும், விசுவாசத்துடனும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

தானியேல் தன்னுடைய வாழ்நாளெல்லாம் மன்னனுக்கும், கடவுளுக்கும் பிரியமான வாழ்க்கை வாழ்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *