கி.மு 42 : எசேக்கியேல் இறைவாக்கினர்

எசேக்கியேல் யூதேயாவில் வாழ்ந்து வந்த ஒரு இறைவாக்கினர். அவருக்குக் கடவுள் சொல்லும் செய்திகளை காட்சிகள் மூலமாக அவர் மக்களுக்குச் சொல்வது வழக்கம்.

அவர் வாழ்ந்த காலத்தில் யூதர்கள் எருசலேமை விட்டுச் சிதறடிக்கப்பட்டு பாபிலோனைச் சுற்றி வாழ்ந்து வந்தார்கள். அவர்களை மீண்டும் கடவுள் எருசலேமில் கூட்டிச் சேர்க்கப் போகிறார் என்பதையும் அது மிகவும் கடினமானதாக இருந்தாலும் நிறைவேறும் என்பதையும் கடவுள் எசேக்கியேலுக்குத் தெரியப்படுத்தினார்.

எசேக்கியேல் ஒரு செங்கல்லை எடுத்தார். அதில் எருசலேமின் படத்தை வரைந்தார் சுற்றிலும் படைவீரர்கள் சுற்றி நிற்பதுபோலவும் வரைந்தார். யூதர்கள் இந்தப் படத்தைக் கண்டதும் கடவுள் சொல்லவந்த செய்தியை அறிந்து கொண்டார்கள்.

அதன்பின் சிலநாட்களுக்கு அவர் வெறும் தண்ணீரைக் குடித்து வாழ்ந்து வந்தார். இதன்மூலம் எருசலேமை மிகப்பெரிய பஞ்சம் ஒன்று முற்றுகையிடும் என்றும், மக்கள் உணவில்லாமல் அல்லல்படுவார்கள் என்றும் அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

சிறிது காலத்துக்குப் பின் அவர் ஒரு தரிசனம் கண்டார். அவர் ஒரு பள்ளத்தாக்கில் நிற்கிறார் அவருக்கு முன்னால் எலும்புக்கூடுகள் ஏராளமாக பரவிக் கிடக்கின்றன. கடவுள் அதற்கருகில் நின்று அவருடன் பேசுகிறார்.

‘எசேக்கியேல்… நீ என்ன காண்கிறாய் ?’

‘உலர்ந்து போன எலும்புக் கூடுகளைக் காண்கிறேன் கடவுளே’

‘எலும்புக் கூடுகள் எழுந்து நடக்குமா ?’

‘எலும்புக் கூடுகள் நடக்காது. ஆனால் நீர் சொன்னால் எலும்புக் கூடுகளும் நிச்சயம் எழுந்து நடக்கும் கடவுளே’

‘சரி.. என் குரலைக் கேட்டு அவைகளை உயிர்பெறச் சொல்’ கடவுள் சொன்னார்.

‘கடவுளின் குரலைக் கேட்டு நீங்கள் எழும்புங்கள்’ எசேக்கியேல் எலும்புக் கூடுகளைப் பார்த்துக் கூறினார். உடனே எலும்புகள் ஒன்றோடொன்று உரசும் சப்தம் அந்தப் பள்ளத்தாக்கை நிறைத்தது. உடைந்து கிடந்த எலும்புகளெல்லாம் நன்றாகப் பொருந்திக் கொள்ள அவற்றை சதை வந்து மூடியது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலும்புக் கூடுகள் எல்லாம் மனித உடல்களாக மாறின.

‘பெரும் காற்று வீசட்டும் என்று சொல்’ கடவுள் தொடர்ந்தார்.

‘கடவுளின் பெயரால் பெரும் காற்று வீசட்டும்’ எசேக்கியேல் சொன்னார்.
உடனே பெரும் காற்று வீசியது. உடல்கள் எல்லாம் உயிர்பெற்று பெரும் திரளாக எழுந்து நின்றன. அந்தச் சிலிர்ப்பூட்டும் காட்சி அத்துடன் மறைந்து போயிற்று.

கடவுள் எசேக்கியேலிடம். ‘என் மக்கள் இப்போது இப்படித்தான் கிடக்கிறார்கள். உலர்ந்து போன எலும்புக்கூடுகளாக. ஆனால் நான் அவர்களை ஒரு மிகப்பெரிய படையாக உருவாக்குவேன்.’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

பின்பு ஒருநாள் எசேக்கியேல் ஒரு செயலைச் செய்தார். அது யூதர்களை திடுக்கிட வைத்தது. அவர் ஒரு கத்தியை எடுத்துத் தன்னுடைய தலைமயிரையும், தாடியையும் வெட்டி எறிந்தார். யூதர்கள் திடுக்கிட்டார்கள். என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கித் தவித்தார்கள். எசேக்கியேல் அவற்றை கூட்டிச் சேர்த்து எடைபார்த்தார். பின் அதை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அதில் ஒரு பகுதியை நெருப்பிலிட்டு எரித்தார். இன்னொரு பகுதியை தன்னிடமிருந்த கத்தியால் பொடிப்பொடியாய் நறுக்கினார். இன்னொரு பகுதியைக் காற்றில் அலையவிட்டார். கடைசியில் ஆங்காங்கே கிடந்த சில முடிகளைக் கூட்டிச் சேகரித்துப் பத்திரப்படுத்தினார்.

எருசலேம் மக்கள் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் அழிவைப்பற்றியே எசேக்கியேல் குறிப்பால் உணர்த்தினார். மூன்றில் ஒருபங்கு மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும். மற்றவர்கள் தாக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள் என்றும், கடைசியில் கடவுள் சிலரைத் தெரிந்தெடுத்து அவர்கள் மூலம் மீண்டும் குலத்தைப் புதுப்பிப்பார் என்பதையுமே அவருடைய செய்கை விளக்கியது.

சாகும் வரை இறை சாட்சியாளராகவே வாழ்ந்த எசேக்கியேலின் காட்சிகள் அனைத்தும் பிற்காலத்தில் நிறைவேறின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *