கி.மு 41 : எரேமியா இறைவாக்கினர்

 

எரேமியா என்னும் இளைஞன் நல்ல கடவுள் பக்தன். அவன் ஆலயத்தில் இறை பணி செய்து வந்தான். கடவுள் அவனுக்காய் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார்.

ஒருநாள் கடவுள் அவருக்குத் தோன்றி ‘ நீர் ஆலயத்தில் அடைபட்டுக் கிடக்கவேண்டியவரல்ல. உம்மை ஒரு தீர்க்கத்தரிசியாக்குவேன். நீர் எங்கும் போய் என்னைப்பற்றியும், என் செயல்களைப் பற்றியும் அறிவிக்கவேண்டும்’ என்றார்.

எரேமியா திகைத்தார். ‘ஐயோ கடவுளே … எனக்கு உலகமே தெரியாது. என்னால் இது எப்படி சாத்தியமாகும். நீர் தவறான ஆளைத் தேர்ந்து கொண்டிருக்கிறீர்’ எரேமியா சொன்னார்.

‘நான் உன்னோடு இருப்பேன்…. நீ போகவேண்டிய இடங்களுக்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். கவலைப்படாதே’

‘கடவுளே. எனக்குப் பேசவே தெரியாதே. நான் என்ன பேசுவேன்’ எரேமியா தயங்கினார்.

அப்போது கடவுளின் விரல் அவருடைய நாவைத் தொட்டது. ‘நான் உன் நாவில் இருப்பேன். இனிமேல் என்ன பேசுவேன் என்றெல்லாம் நீ கவலைப்படவேண்டாம். உனக்குப் பதிலாக நான் பேசுவேன். உன் மூலம் நான் மக்களை வழிகாட்டுவேன்’ என்றார்.

எரேமியா அதற்குமேல் எதையும் மறுத்துப் பேசவில்லை. கடவுளின் விருப்பத்துக்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். அதன் பின் எரேமியா கடவுள் தனக்குத் தோன்றிச் சொல்வதையும், தன் மனதில் தோன்றச் செய்யும் எண்ணங்களையும் மக்களோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

எரேமியா ஒருமுறை ஒரு தீர்க்கத் தரிசனம் கண்டார். முதலில் ஒரு வாதுமை இலை தெரிந்தது. அதைத் தொடர்ந்து பொங்கும் பானை ஒன்று வடக்கு நோக்கித் திரும்பி இருப்பதாய்த் தெரிந்தது. அதன் பொருளையும் கடவுள் எரேமியாவுக்குத் தெளிவுபடுத்தினார்.

எரேமியா மக்களைப் பார்த்து. ‘ வடக்கிலிருந்து நமக்கு ஆபத்து நேரிடப் போகிறது. அதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் அனைவரும் அன்னிய தெய்வங்களை வழிபடாமல் நம்முடைய கடவுளை மட்டுமே வணங்கவேண்டும்’ என்று தன்னுடைய தீர்க்கத் தரிசனத்தைச் சொன்னார்.

ஒரு நாள் எரேமியா கால்போன போக்கில் நடந்து ஒரு குயவனின் வீட்டைச் சென்றடைந்தார். அங்கே ஒரு குயவன் பானை ஒன்றைச் செய்து கொண்டிருந்தான். எரேமியா அந்த பானையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பானை கோணல் மாணலாக வந்தது. அதைப் பிசைந்து மறுபடியும் மண் உருண்டையாக்கிய குயவன் அதை வைத்து ஒரு நல்ல பானையை வனைந்தான். கடவுளின் வார்த்தைகள் எரேமியாவின் மனதுக்குள் எதிரொலித்தன. ‘நானும் இந்த மக்களை அழித்து, ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவேன்…’

ஒருமுறை அவர் ஒரு மண்பானையில் தண்ணீர் நிரப்பி அதைத் தலையில் வைத்துக் கொண்டே நடந்தார். மக்கள் அவரை ஒரு அரைப்பைத்தியத்தைப் பார்ப்பதுபோலப் பார்த்தார்கள். அவர் அந்த மண்பானையை மக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு வந்து கீழே போட்டார். பானை உடைந்து சிதற தண்ணீர் எங்கும் தெறித்தது.

‘மூடர்களே… எத்தனைமுறை சொன்னாலும் நீங்கள் பிடிவாதமாய் அன்னிய தெய்வங்களையே வழிபடுகிறீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் இந்த பானையைப் போல உடைந்து தண்ணீரைப் போல வீணாகி மறைவீர்கள்’ என்றார்.

‘எரேமியாவுக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. அவனைக் கல்லால் அடியுங்கள்’
‘எரேமியாவைத் துரத்துங்கள்’
எங்கும் மக்கள் எரேமியாவுக்கு எதிராகக் குரல்களை உயர்த்தினார்கள்.

எரேமியா மக்களின் எதிர்ப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர் இருபது ஆண்டுகள் தீர்க்கத் தரிசனம் உரைத்தார். அவர் தீர்க்கத்தரிசனமாய்ச் சொன்னதையெல்லாம் அவருடைய உதவியாளன் எழுதிவைத்தான். இதையறிந்த மன்னன் அவர்களை அழைத்து அந்த ஏட்டையும் பிடுங்கி,’ பெரிய தீர்க்கத்தரிசனம்…. பைத்தியக்காரத்தனம் ‘ என்று ஏளனம் செய்து அதைக் கத்தியால் கிழித்து அழித்தான். எரேமியாவை ஒரு புதைகுழிக்குள்ளும் தள்ளிவிட உத்தரவிட்டான். ஆனால் கடவுள் அவரை அங்கிருந்து மீட்டார். அழிக்கப்பட்ட ஏட்டுச் சுருள் மீண்டும் எழுதப்படவும் அருள் வழங்கினார். எரேமியாவின் தீர்க்கத் தரிசனங்கள் மீண்டும் எழுத்து வடிவம் பெற்றன.

எரேமியா சொன்னவை எல்லாம் எதிர்காலத்தில் நிறைவேறத் துவங்கின. மக்களோ மனம் மாறாமல் கடவுளை விட்டு விலகியே நடந்தார்கள். எரேமியா இறைவாக்கினர் மனம் தளராமல் தன் வாழ்நாளெல்லாம் மக்களுக்குக் கடவுளின் செய்திகளைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.

இறுதியில் மரணம் வந்து அவரைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் வரைக்கும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து விலகாதவராகவே வாழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *