கி.மு 40 : ஏசாயா இறைவாக்கினர்

 

இஸ்ரேல் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூதேயா என்றும், இஸ்ரேல் என்றும் இரண்டு நாடுகள் காலப்போக்கில் உருவாகின. இஸ்ரேலை இரண்டாம் ரகோபெயாம் என்னும் மன்னனும் யூதேயாவை உசியா என்னும் மன்னனும் ஆட்சி செய்து வந்தார்கள். உசியா மன்னன் மிகவும் சிறப்பாக தன்னுடைய நாட்டை வழிநடத்தி வந்தார். அவருடைய ஆட்சியில் மக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர்.

உசியா மன்னன் இறந்தான். உசியா மன்னனின் மறைவு மக்களை மிகவும் கலக்கத்துக்குள்ளாக்கியது. அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து அதிகமாகக் கவலைப்பட ஆரம்பித்தார்கள். தங்களை வழிகாட்ட உசியாவைப் போல சிறந்த ஒரு தலைவர் இனிமேல் கிடைப்பாரா என்று அவர்கள் அழுது புலம்பினார்கள். அப்போது ஆலயத்தில் ஒரு இளைஞன் உட்கார்ந்து நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து அழுது கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான். அவன் பெயர் ஏசாயா !

ஏசாயா மிகவும் நல்ல இளைஞன். அவனிடம் தீய குணங்கள் என்பதே இல்லை. கடவுள் பக்தியிலும் அவன் சிறந்து விளங்கினான். ஒரு நாள் அவன் ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி கண்டான்.

உயரமான ஒரு அழகிய ஆசனத்தில் கடவுள் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி தேவதூதர்கள் நிற்கிறார்கள். கடவுளின் ஆடையின் தொங்கல்களால் அந்த ஆலயமே நிறைந்து வழிகிறது. தேவதூதர்களுக்கு ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரண்டு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடி, இரண்டு சிறகுகளால் தங்கள் கால்களை மூடி, மிச்சமிருந்த இரண்டு சிறகுகளால் பறந்து கொண்டே ‘ சேனைகளின் கடவுள் தூயவர்… தூயவர்… தூயவர்’ என்று வாழ்த்துப் பாடல்கள் இசைத்தனர். அந்த சத்தத்தால் ஆலயத்தின் வாயில்களில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலைகள் அசைந்தன. ஆலயம் புகையால் நிறைந்தது.

இந்தக் காட்சியைக் கண்டதும் எசாயா கதறினார். ‘ ஐயோ… நான் பாவி.. நான் பாவி… என்னுடைய கண்கள் கடவுளைக் கண்டுவிட்டதே.. இந்த பாவியின் கண்களுக்குக் கடவுள் தரிசனம் தந்தாரே’ என்று பரவசமும், பதட்டமுமாய் கத்தினார். அப்போது அந்த தேவதூதர்களில் ஒருவன் தன் கையிலிருந்த கொம்பில் ஒரு நெருப்புத் தழலை எடுத்து அதை ஏசாயாவின் நாக்கில் வைத்தார்.

‘ஏசாயா ! இப்போது உன்னுடைய பாவங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. நீ பரிசுத்தமாகிவிட்டாய். வருந்தாதே. நீ இனிமேல் பாவியல்ல ‘ என்று அந்த தேவதூதர் சொல்ல ஏசாயா மெய்மறந்து நடப்பவற்றை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கடவுள் பேசினார். கடவுளைக் காண்போம் என்றும் அவருடைய குரலைக் கேட்போம் என்றும் ஏசாயா தன்னுடைய வாழ்நாள்களில் கற்பனையே செய்து பார்த்திருந்ததில்லை. இப்போது கடவுள் பேச ஏசாயா பரவசத்தில் பணிந்தார்.

‘யாரை நான் அனுப்புவேன்… என் மக்களை மீட்க…. என் மக்களை வழிகாட்ட…’ கடவுள் கேட்டார்.

‘இதோ நான் இருக்கிறேனே கடவுளே.. என்னை அனுப்பும்’ ஏசாயாவின் உதடுகள் தயக்கமின்றிக் கூறின.

‘நீ போய் இந்த மக்களிடம். நீங்கள் கண்டும் கண்டும் காணாமலும், கேட்டும் கேட்டும் உணராமலும் இருக்கிறீர்கள் என்று சொல்’ என்றார்.

கடவுள் சொல்லி முடித்ததும் காட்சி சட்டென்று மறைந்தது. ஏசாயா கடவுளின் அருள் பெற்றவரானார். அவருடைய நாவு கடவுளால் சீர்செய்யப் பட்டிருந்தது. அதன்பின் அவர் சொன்ன தீர்க்கத் தரிசனங்கள் எல்லாம் தவறாமல் நிகழ்ந்தன.

கன்னி ஒருத்தி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள். அவர் பலருடைய வீழ்ச்சிக்கும், பலருடைய எழுச்சிக்கும் அடித்தளமாய் இருப்பார். அவரால் மனுக்குலம் மீட்படையும் என்று இயேசுவின் பிறப்பைக் குறித்தும் அவர் தீர்க்கத் தரிசனம் சொன்னார். எழுநூறு ஆண்டுகளுக்குப் பின்பு அந்த தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது.

எசேக்கிய மன்னன் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஏசாயா அவரைப் பார்ப்பதற்காகச் சென்றார். எசேக்கியேல் அவரிடம்

‘ஐயா… இறைத் தூதரே. என்னுடைய உடலெங்கும் கொப்புளங்களாகி நாளுக்கு நாள் நோயும் வலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நான் பிழைப்பேனா என்று தீர்க்கத் தரிசனம் சொல்லும்’ என்று கேட்டான்.

‘நீர் மரித்துப் போவீர். உம்முடைய ஆயுள் அவ்வளவு தான்’ ஏசாயா சொன்னார். எசேக்கியேல் மன்னர் அழுது கடவுளிடம் மன்றாடினார்.

‘கடவுளே… நான் உமக்குப் பிரியமானவனாகத் தான் வாழ்ந்தேன். உம்முடைய கட்டளைகளை நான் மீறவேயில்லை. உம் வழிகளை வாழ்நாளெல்லாம் கடைபிடித்தேன். எனக்கு நீடிய ஆயுள் தரவேண்டும்’ என்று இடைவிடாமல் செபித்தார். கடவுள் எசேக்கியேலின் மன்றாட்டைக் கேட்டார்.

ஒரு நாள் ஏசாயாவின் மனதில் கடவுள் பேசினார். ‘ நான் எசேக்கியேலுக்கு அவனுடைய ஆயுளில் பதினைந்து ஆண்டுகளை நீட்டித்திருக்கிறேன் என்று அவருக்குத் தெரிவி.’
கடவுளின் இந்த முடிவில் மிகவும் மகிழ்ந்த ஏசாயா மன்னனிடம் போய் விஷயத்தைச் சொல்ல அவர் ஆனந்தமடைந்தார்.

‘இதை நான் எப்படி நம்புவது ? ஏதேனும் அடையாளம் காட்ட முடியுமா ? ‘ மன்னன் கேட்டான்.

அங்கே ஒரு படிக்கட்டு இருந்தது. அது சூரியக் கடிகாரம் என்று அழைக்கப்பட்டது. அதில் சூரியஒளி விழும் அளவைக்கொண்டு அவர்கள் நேரத்தையும் காலத்தையும் கணக்கிட்டார்கள்.

‘இதோ இந்த சூரியப் படிக்கட்டு உங்களுக்குத் தெரிகிறதல்லவா ?’ ஏசாயா கேட்டார்.

‘ஆம். அதிலே சூரிய ஒளியும் தெரிகிறது’ எசேக்கியேல் சொன்னார்.

‘அந்த ஒளியையே பார்த்துக் கொண்டிருங்கள் அது இப்போது பத்து பாகைகள் பின்னோக்கிப் போகும். இது சாதாரணமாய் நிகழாது என்பது உமக்கே தெரியும். அதன் மூலம் இது கடவுளின் அடையாளம் என்பதை அறிந்து கொள்வீர்’ எசேயா சொன்னார்.

அவர்கள் இருவரும் சூரியப் படிக்கட்டை உற்றுப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம். வெளிச்சம் பத்து பாகைகள் பின்னோக்கி நகர்ந்தது. மன்னன் மகிழ்ந்தான். கடவுள் சொன்னபடியே அவர் மேலும் பதினைந்து ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்தார்.

ஏசாயா வாழ்நாள் முழுவதும் ஒரு மிகச் சிறந்த தீர்க்கத் தரிசியாய் வாழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *