கி.மு 39 : யோபு – விசுவாசத்தில் வியப்பூட்டியவர்

 

ஊசு நாட்டில் யோபு என்றொரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்களும், மூன்று மகள் களும் இருந்தனர். ஆயிரக்கணக்கான ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், காளைகள் என அவர் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஏராளமான வேலைக்காரர்களும் அவரிடம் வேலை செய்து வந்தனர்.

யோபுவின் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உண்டு குடித்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது. யோபு ஒரு மிகச் சிறந்த இறைபக்தர். அவர் கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டவர். அடிக்கடி கடவுளுக்குத் தூய்மையான எரிபலிகள் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடவுளும் யோபுவின் பக்தியைக் கண்டு அவருக்கு தேவையான அனைத்தையும் வழங்கி அவரை வளமாக வைத்திருந்தார்.

சாத்தான் ஒருநாள் கடவுளின் முன்னிலையில் வந்து நின்றான்.
கடவுள் சாத்தானிடம், ‘ பார்த்தாயா ? என்னுடைய பக்தன் யோபுவைப் பார்த்தாயா ? அவன் என் மேல் எவ்வளவு மரியாதை, பக்தி எல்லாம் கொண்டிருக்கிறான்’ என்று பெருமையாகச் சொன்னார்.

சாத்தான் சிரித்தான்,’ ஹா…ஹா… அவன் கேட்பதையெல்லாம் நீர் அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர். அவனுடைய செல்வங்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் அவன் உம் மீது பக்தியாய் இருக்கிறான். அவனுடைய சொத்தை அழித்துப் பாரும் அப்போது தெரியும் உம்முடைய பக்தனின் சுயரூபம்’. என்று கூறி மீண்டும் சிரித்தான்.

‘அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. வேண்டுமானால் நீ அவனுடைய சொத்தின் மீது கை வை. சொத்து போனாலும் அவன் என்மீது பக்தியாய் தான் இருப்பான். ஆனால் ஒன்று, சொத்தின் மீது மட்டும் தான் நீ கை வைக்கலாம் ! யோபுவின் மீது உன் விரல் நுனி கூடப் படக் கூடாது’ கடவுள் சொன்னார்.

‘அது போதும். ஒன்றுமில்லாத நிலைக்கு அவன் வரும்போது உம்மை எப்படி அவமதிக்கிறான் என்பதைப் பொறுத்திருந்து பாரும்’ சாத்தான் கடவுளுக்குச் சவால் விட்டுவிட்டு தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்தான்.

யோபுவின் வேலையாள் யோபுவிடம் ஓடி வந்தான்.’ தலைவரே… நம்முடைய எருதுகளையும், கழுதைகளையும் எதிரிகள் எங்கிருந்தோ திடீரெனப் பாய்ந்து வந்து கொன்று விட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன். உம்மிடம் தகவல் சொல்வதற்காக ஓடி வந்தேன்’ என்றான்.

இதை அவன் சொல்லி முடிப்பதற்குக் காத்திருந்தது போல இன்னொருவன் ஓடி வந்து தலைவன் முன் விழுந்தான்.’ தலைவரே… வானத்திலிருந்து நெருப்பு விழுந்து நம்முடைய ஆடுகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விட்டது. மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த நம்முடைய வேலையாட்களில் என்னைத் தவிர எல்லோரும் இறந்து விட்டனர்’ என்றான்.

யோபுவோ,’ கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்துக் கொண்டார்…. அவருடைய பெயர் போற்றப்படட்டும்’ என்றார்

அதற்குள் இன்னொரு வேலையாள் ஓடி வந்து ‘ ஐயா… எல்லாம் போயிற்று, நம்முடைய ஒட்டகங்கள் எல்லாம் போயிற்று. திருடர்கள் வந்து எல்லாவற்றையும் கவர்ந்து சென்றுவிட்டனர். நான் மட்டும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உம்மிடம் தகவல் சொல்ல ஓடி வந்தேன்’ என்றான்.

யோபுவோ,’ கடவுள் கொடுத்தவைதானே எல்லாம். அவற்றைக் கடவுளே எடுத்துக் கொண்டார். அவருடைய விருப்பத்துக்குத் தடை போட நான் யார் ?’ என்றார்.

உடனே இன்னொரு வேலையாள் தலைதெறிக்க ஓடிவந்தான்.
‘ஐயா… எப்படிச் சொல்வேன் இதை. என்னுடைய நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறதே. உம்முடைய மகன்களும், உம்முடைய மகள்களும் சந்தோசமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காற்றடித்து வீடு நொறுங்கி அவர்கள் மேல் விழுந்தது. அவர்கள் எல்லோருமே இறந்து போய்விட்டார்கள்.’ என்று கூறிக் கதறினான்.

யோபு அதிர்ந்தார். தம்முடைய ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கண்ணீர்விட்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி,’ நான் என் தாயின் வயிற்றிலிருந்து நிர்வாணியாய் வந்தேன். நிர்வாணியாய் திரும்பப் போவேன். இடையில் கிடைத்தவை எல்லாம் கடவுள் கொடுத்தவை. அவருடைய பெயர் மட்டுமே போற்றப்படட்டும்’ என்றார்.

இத்தனை நடந்தபின்னும் யோபு ஆண்டவரை குற்றம் சாட்டவோ, பாவம் செய்யவோ , கடவுள் பக்தியிலிருந்து விலகவோ இல்லை.

கடவுள் சாத்தானை அழைத்தார்.’ பார்த்தாயா யோபுவை ? எத்துணை விசுவாசம் அவனிடம். நீ அவனை ஒன்றுமில்லாமல் செய்த பின்னும் அவன் என்னை பழிக்கவில்லை. உன் தோல்வியை ஒத்துக் கொள்’ என்றார்.

சாத்தானோ,’ எல்லோருக்குமே தன்னுடைய உயிர் மேல் தான் அதிக பற்றுதல் இருக்கும். நீர் அவனுடைய உடலின் மீது கை வைக்கும் உரிமையை எனக்குத் தந்தால் அவன் உம்மை பழிந்துரைப்பதைக் காண்பீர்’ என்றான்.

‘சரி… அவனுடைய உடம்பின் மீது நீ என்னவேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உயிரைத் தொடக் கூடாது’ கடவுள் அனுமதியளித்தார்.

சாத்தான் யோபுவின் உடல்முழுதும் புண்கள் வரச் செய்தான்.

திடீரென தன்னுடைய உடல் முழுதும் புண்களால் நிறைந்திருப்பதைக் கண்ட யோபு திடுக்கிட்டான். அவனுடைய புண்களெல்லாம் அரிக்கத் துவங்கின. அவன் தன்னுடைய புண்களைச் சொறியத் துவங்கினான்.

‘வெளியே போங்கள்… உங்கள் புண் அருவருப்பாய் இருக்கிறது. எனக்கும் இந்த நோய் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது’ யோபுவின் மனைவி யோபுவை விரட்டினாள்.

‘கடவுளாம் கடவுள்… கடவுள் பக்தனாய் இருந்து என்ன புண்ணியம் ? சொத்தும் போச்சு, பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள், இன்னும் என்ன கடவுள் ? கடவுள் பக்தனாய் இருந்ததில் புண்கள் வந்தது தான் மிச்சம். அவரைப் பழித்து விட்டு செத்துத் தொலை’ என்று கத்தினாள்
யோபு வெளியே வந்து தரையில் அமர்ந்து ஓடு ஒன்றை எடுத்து தன்னுடைய புண்களைச் சொறியத் துவங்கினார்.

யோபு தன்னுடைய சொத்துகளையும், பிள்ளைகளையும் இழந்த செய்தி கேட்டு அவருடைய நண்பர்கள் மூன்று பேர் அவரைக் காண வந்தார்கள். அவர்கள் யோபுவின் முன்னால் வந்து நின்றார்கள். யோபுவை அவர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்குக் கோரமாய் இருந்தது அவருடைய உடல்.

‘யோபு … இருக்கிறாரா ?’ வந்தவர்கள் கேட்டனர்.

‘நான் தான் யோபு’ யோபு பதில் சொன்னார்.

‘நீங்கள் யோபுவா ? நாங்கள் செல்வந்தரான யோபுவைப் பார்க்க வந்தோம்’

‘என்னைத் தெரியவில்லையா நண்பர்களே…. நான் தான் அந்த யோபு. கடவுள் எனக்கு நோயைக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் வெளியில் அமர்ந்திருக்கிறேன்’ என்றார்.

வந்தவர்கள் கலங்கிப் போனார்கள். தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு புழுதியின் மேல் அமர்ந்து அழத் துவங்கினார்கள். ஏழு நாட்கள் அவர்கள் அவரோடு அமர்ந்து துக்கம் அனுசரித்தார்கள். ஆனாலும் அவருடைய வேதனையை நேரடியாய்க் கண்டதால் யாரும் அவருடன் பேசவில்லை.

யோபு வருத்தம் மிகுந்தவராய்,’ நான் பிறந்த நாள் இல்லாமலேயே போயிருக்கலாம். அல்லது பிறந்ததும் இறந்து போயிருக்கலாம். குறைப்பிரசவமாக இறந்தோ, கருவில் அழிந்தோ நான் இல்லாமல் போயிருக்கலாம். இந்த வலியைக் காண வேண்டி வந்திருக்காது’ என்றார்.

நண்பர்களோ,’ நீரே நம்பிக்கை தளரவிட்டால் நாங்கள் எப்படி நம்பிக்கை கொள்வோம். விசுவாசத்தின் விளக்கல்லவா நீர். கவலை வேண்டாம். கடவுள் கைவிடமாட்டார்.’ என்றும்,
‘இல்லை கடவுள் உங்களைக் கைவிட்டு விட்டார் அவரைப் பழித்துக் கூறு’ என்றும் பலவாறாகப் பேசினர்.

யோபு தன்னுடைய நிலையை நினைத்து பலவாறாகப் புலம்பி அழுதார். ஆனாலும் அவர் ஆண்டவரைப் பழித்துப் பேசவில்லை. ‘ஆண்டவரே என்னுடைய வாயில் சுரக்கும் உமிழ்நீரை நான் விழுங்குமளவுக்கேனும் வலிமை தாரும். என்னுடைய உடல் என்னுடைய நிழலைப்போல விழுந்து கிடக்கிறதே, என் கல்லறை காத்துக் கிடக்கிறதே ‘ என்றெல்லாம் கடவுளிடம் தன் கஷ்டத்தைச் சொல்லி அழுதார்.

நண்பர்களோ,’ நீர் ஏதோ தவறு செய்திருக்கிறீர் என நினைக்கிறோம். அதனால் தான் இந்த நோய் உமக்கு வந்திருக்கிறது’ என்று மீண்டும் அவருடைய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்கள்

யோபுவோ,’ ஆண்டவரே… என்னைச் சூழ்ந்திருப்போர் எல்லோரும் என்னை வெறுப்போராகி விட்டனர். நீர் மட்டும் என்னோடு எப்போதும் இரும். எனக்கு அது போதும்’ என மன்றாடினார்.நண்பர்கள் அவரை பலவாறாகப் பழித்தும், ஆண்டவரை இகழுமாறு வற்புறுத்தியும் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆண்டவர் மேல் இருந்த விசுவாசத்தை அதிகமாக்கிக் கொண்டார்.

கடவுள் யோபுவின் விசுவாசத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.’ யோபுவே என்றழைத்து இடிமுழக்கம் வழியாகப் பேசினார். உலகத்தின் சகலமும் என்னால் தான் நடக்கின்றன. உன்னுடைய விசுவ்சாசத்தைக் கண்டு நாம் மிகவும் மகிழ்கிறேன். ஆனாலும் உன்னுடைய புலம்பல்களை நீ நிறுத்தவேண்டும். கடவுளால் எல்லாம் கூடும் என்பதால் நீ புலம்புவதால் அர்த்தமில்லை’ என்றார்.

யோபு பணிந்தார். கடவுளின் பேச்சை உள்ளத்தில் வாங்கினார். ‘அறியாமல் உம்முடைய தீர்ப்புகளைப் பற்றிப் பேசியமைக்காக மன்னியும்’ என மன்றாடினார்.

கடவுள் யோபுவின் நண்பர்களை நோக்கி,’ நீங்கள் யோபுவைப் போல சுத்தமானவர்களல்ல. அது மட்டுமல்ல, யோபுவின் மனத்தையே நீங்கள் கெடுக்கப் பார்த்தீர்கள். எனவே என்னுடைய சாபம் உங்கள் மீது விழுகிறது. அந்தச் சாபம் விலகவேண்டுமெனில் யோபு உங்களுக்காக என்னிடம் மன்றாட வேண்டும்’ என்றார்.

நண்பர்கள் யோபுவின் காலில் போய் விழுந்து, ‘எங்கள் சாபத்தை விலக்க ஆண்டவரிடம் மன்றாடும்’ என்றனர்.
யோபு நேர்மையான நெஞ்சினன் அல்லவா ? அவர் நண்பர்களுக்காக கடவுளிடம் மன்றாடி மன்னிப்பை வாங்கிக் கொடுத்தார்.

கடவுள் சாத்தானை அழைத்தார். ‘ பார்த்தாயா ? என்னுடைய பக்தன் யோபுவை ? நீ அவனை ஒன்றுமில்லாதவனாக்கி சாவின் விளிம்புக்குத் தள்ளினாய். அவனோ என் மேல் விசுவாசமாய் இருக்கிறான். என் மீது கொண்ட பக்தியை அவன் குறைத்துக் கொள்ளவே இல்லை. நீ உன் தோல்வியை ஒத்துக் கொண்டு பாதாளத்துக்கு ஓடிப் போ. இனிமேல் என் பக்தனை சோதிக்காதே’ என்றார்.
சாத்தான் தோற்றுப் போய் பின்வாங்கினான். சாத்தானில் தொல்லைகள் உடனே யோபுவை விட்டு விலகின.

சாத்தான் விலகியதும் யோபுவின் நோயும் மறைந்தது. அவருடைய வலிமை அவரிடம் திரும்ப வந்தது. கடவுள் யோபுவிற்கு இருந்த சொத்துகளை எல்லாம் இரண்டு மடங்காகக் கொடுத்தார்.

அவருக்கு மீண்டும் ஏழு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர். யோபுவின் மகள்களைப் போல அழகானவர்கள் அதுவரை பிறந்ததேயில்லை என்று அனைவரும் அவர்களை வெகுவாகப் புகழ்ந்தனர்.

யோபுவின் சொத்துக்களெல்லாம் திரும்பக் கிடைத்ததை அறிந்த அவருடைய சொந்தத்தினர் எல்லோரும் பரிசுப் பொருட்களோடு அவரிடம் திரும்ப வந்தனர்.

‘கவலைப் படாதீர்கள் யோபு. நீங்கள் ரொம்ப கஷ்டப் பட்டீர்கள். அப்போது உங்களிடம் வர முடியாத சூழ்நிலை’… என்று எல்லோரும் சாக்குப் போக்குகளைச் சொல்லத் துவங்கினர்.

யோபு புன்னகைத்தார். அவர்களுடைய சம்பிரதாயப் பேச்சுகளை வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உள்ளம் முன்பை விட பலமடங்கு அதிகமாய் கடவுளை நேசித்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *