கி.மு 38. எஸ்தர் : அழகும், அறிவும்

 

அகஸ்வேர் என்னும் மன்னன் இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிலான நூற்று இருபத்து ஏழு மாநிலங்களையும் ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றான். ஒரு மிகப்பெரிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பெருமிதத்தில், தன்னுடைய ஆட்சியின் மூன்றாவது ஆண்டில் குறுநில மன்னர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பெரிய விருந்தொன்றை அளித்தார். அதைத்தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் சிறப்புகளையும் பெருமைகளையும் ஆறுமாத காலம் நாடுமுழுவதும் விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தான்.

அதன்பின் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மன்னன் ஒரு மிகப்பெரிய விருந்தொன்றை ஏற்பாடு செய்தார். அரசனின் செல்வச் செழிப்பை வெளிக்காட்டும் விதமாக அந்த விருந்தை அமைந்திருந்தது.

வந்திருந்த மக்கள் அனைவருக்கும் தங்கக் கிண்ணத்தில் தான் மது வழங்கப்பட்டது. பொன், வெள்ளி முத்துக்கள் பதிக்கப் பட்ட மஞ்சங்களும், அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய திரைச்சீலைகளும் விருந்துக்கு வந்தவர்களைப் பரவசப் படுத்தின.

‘வாருங்கள்… உங்களுக்கு வேண்டிய மட்டும் உண்ணுங்கள். உங்களால் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு திராட்சை ரசம் குடியுங்கள்… இன்னும் ஏழு நாட்களுக்கு இங்கே உங்களுக்கு முழு விருந்து உண்டு….’ என பணியாளர்கள் விருந்தினரை உபசரித்தனர். மக்கள் மனமகிழ்ச்சியாக உண்டு குடித்து விருந்தை அனுபவித்தனர்.

விருந்தின் நிறைவு நாளான ஏழாவது நாள் வந்தது. மன்னர் பணிப் பெண்களை அழைத்து,’ நீங்கள் போய் அரசி வஸ்தியை அவைக்கு வரச் செய்யுங்கள். அழகான ஆடைகள் அணிந்து ஒப்பனைகளோடு அவள் வரவேண்டும்’ என்று சொல்லி அனுப்பினார்.

அரசி வஸ்தியோ அரசனின் அழைப்பை நிராகரித்தாள்.
‘மன்னன் மதுவருந்தி மயக்கத்தில் கிடக்கும் நேரம் இது. நான் அழகுப் பெண்ணாய் எல்லோருடைய முன்னாலும் வலம் வருவது எனக்குப் பிடிக்காது என்று போய்ச் சொல்’ என பணிப்பெண்களை அனுப்பி வைத்தாள்.

வஸ்தி மறுத்ததைக் கேள்விப்பட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். ‘அரசி என்னுடைய அழைப்பை நிராகரிப்பதா ? எல்லோர் முன்னிலையிலும் என்னுடைய தரத்தை இவள் தாழ்த்தி விட்டாளே’ என்று சினந்தான். அவசர அவசரமாக ஆலோசனைக் குழு ஒன்றைக் கூட்டினான்.

‘என்னுடைய கட்டளையை நிராகரித்த வஸ்திக்கு என்ன தண்டனை தரலாம் ?’ மன்னன் கேட்டான்.

‘அரசே…. உம்முடைய கட்டளையை வஸ்தி நிராகரித்ததால், இனிமேல் நாட்டில் எந்தப் பெண்ணும் தன் கணவனை மதிக்கமாட்டாள். எனவே தரும் தண்டனை பெரியதாக இருக்க வேண்டும். அது எல்லாப் பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்’ என்றார் ஒருவர்.

‘ஆம் அது தான் சரி. எல்லா பெண்களும் ஆண்களை மதிக்கும் விதமாகத் தண்டனை இருக்க வேண்டும்’ இன்னொருவர் அதை ஆமோதித்தார்

‘சரி… என்ன தண்டனை தரலாம் என்று நீங்கள் சொல்லவே இல்லையே’ மன்னன் கேட்டார்.

‘அரசே… உங்கள் கட்டளையை மீறியதால், வஸ்தி அரசிப் பதவியை இழக்க வேண்டும். நீங்கள் அழைத்தபோது உங்கள் முன் வராததால் இனிமேல் அவள் உங்கள் முன்னால் எப்போதும் வரக் கூடாது என்று தண்டனை வழங்க வேண்டும். ஊரிலுள்ள அழகிய கன்னிப் பெண்களில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்து அவரை உமது அரசியாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் கணவனே ஆளுகை செலுத்துபவன் என்பதை மனைவியர் கண்டுகொள்வார்கள் ‘ என்று யோசனை சொன்னார்கள்

மன்னனுக்கும் அந்த யோசனை சரியெனப் பட்டது. அரசி வஸ்தி அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டாள்.

நாடு முழுவதும் அரசனுக்குப் பெண் தேடும் செய்தி தெரிவிக்கப் பட்டது. ஏராளமான பெண்கள் அரசியாக வேண்டும் என்னும் நோக்கத்தோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தார்கள். அரண்மனையில் ஏகா என்றொருவரிடம் அரசனுக்கான பெண்களைத் தேர்ந்தெடுத்து அலங்காரம் செய்யும் பணி ஒப்படைக்கப் பட்டது.

அரண்மனையில் மொர்தகாய் என்றொரு யூதர் வேலைபார்த்து வந்தார். அவர் தன்னுடைய சிற்றப்பாவின் மகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவள் மிகவும் அழகு வாய்ந்த கன்னிப் பெண். அவளுடைய பெயர் எஸ்தர்.

ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் பலர் அரண்மனையில் ஏகாயிடம் ஒப்படைக்கப் பட்டனர். எஸ்தரை மன்னரின் மனைவியாக்கும் நோக்கத்தில் மொர்தகாய் அவளையும் ஏகாயிடம் அழைத்துப் போனார். ஏகாய் எஸ்தரைப் பார்த்தார். அவளுடைய அழகில் சொக்கினார். அவளை அரண்மனையின் சிறந்த பகுதிக்கு மாற்றினார். அங்கு அவளுக்கு ஓராண்டு கால அழகுபடுத்தல் வேலைகள் நடந்தன. அவள், தான் ஒரு யூதப் பெண் என்னும் விஷயத்தை யாருக்கும் சொல்லவேயில்லை.

மன்னனுக்கான பெண்ணைத் தேர்வு செய்யும் காலம் வந்தது.

ஒவ்வொரு பெண்ணாக மன்னனின் அந்தப் புரத்துக்கு ஒவ்வொரு நாளும் அனுப்பப் பட்டனர். மன்னன் அந்தப் பெண்ணோடு ஒரு இரவைக் கழித்து விட்டு மறு நாள் அவர்களைத் திருப்பியனுப்பினான். எஸ்தரின் முறை வந்தது. எஸ்தரைக் கண்ட மன்னன் மதிமயங்கினான். ஆஹா…, இவளல்லவா அழகி என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். அன்று இரவு எஸ்தருடன் மிகவும் இனிமையாக ஒரு இரவைக் கழித்த மன்னன் எஸ்தரின் மீது அளவுக்கு அதிகமாகவே காதல் கொண்டான். மறுநாள் காலையில்
‘இவள் தான் இனிமேல் அரசி’ என அறிவித்தான். எஸ்தரும், மொர்தகாயும் பெரும் ஆனந்தமடைந்தார்கள்.

மொர்தகாய் அரண்மனை வாசலில் பணிபுரிந்து வந்தார்.
நாட்கள் கடந்தன. ஒருநாள் அரண்மனையோரமாய் இரண்டுபேர் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டிக் காத்திருப்பதை மொர்தகாய் கண்டார்
‘மன்னரை எங்கே காணோம். ? இன்றைக்கும் அவனுடைய உயிர் தப்பியதா ?’

‘எப்படியானாலும் அவனுடைய உயிரை எடுக்காமல் விடப்போவதில்லை. நம்முடைய திட்டங்கள் எல்லாம் ரகசியமாக இருக்கட்டும்’

‘திட்டம் வெளியே தெரியப்போவதுமில்லை. அவன் உயிரோடு தப்பப் போவதுமில்லை. கவலையை விடு’ என்று அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்

மன்னனைக் கொல்வதற்காக மிகப் பெரிய சதி நடக்கிறது என்பதை உணர்ந்த மொர்தகாய் மன்னனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று முடிவெடுத்தார். மன்னனுக்குப் மிகப் பெரிய ஆபத்து வரவிருக்கிறது என்ற செய்தியை எஸ்தர் மூலமாக மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னன் ரகசிய வீரர்களை ஏற்படுத்தி, தன்னைக் கொல்லச் சதி செய்திருந்த எதிரிகளைக் கண்டுபிடித்து ஒழித்தான். மொர்தகாயின் பெயர் அரசவை நிகழ்ச்சிகள் குறிப்பேட்டில் எழுதி வைக்கப்பட்டது.’மன்னனின் உயிரைக் காப்பாற்றியவர்’ என்னும் குறிப்போடு !

மன்னனின் அரசில் மன்னனுக்கு அடுத்தபடியாக ஆமான் என்பவர் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அரசரைத் தவிர எல்லோரும் வணங்கும் உயர்ந்த இடத்தில் இருந்தார் அவர். ஆமானுக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களும், அனைத்து குறுநில மன்னர்களும், பிரபுக்களும் மரியாதை செலுத்திக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் ஆமானைக் கண்டுகொள்ளவேயில்லை. அவர் மொர்தகாய்.

ஒவ்வொரு முறை ஆமான் மொர்தகாயைக் கடந்து செல்லும்போதும் அவனுடைய உள்ளத்தில் கோபம் கொப்பளிக்கும். மொர்தகாய் அரண்மனை வாயிலில் வேலை செய்பவர் என்பதால் ஆமான் அவரை அடிக்கடி கடந்து செல்லவேண்டியும் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஆமானின் மனதில் குடிகொண்டிருந்த கோபமும் வளர்ந்து கொண்டே இருந்தது. மொர்தகாய் அரசவையில் வேலை பார்ப்பவர் என்பதால் அவரைப் பழிவாங்குவதில் நிதானம் காட்டினார் ஆமான். எப்படியாவது மொர்தகாயை அழித்துவிட வேண்டும் என்னும் எண்ணத்தை மட்டும் மனசுக்குள் ஆழப் பதித்துக் கொண்டான்.

‘அந்த மொர்தகாய் என்னை அவமானப் படுத்துகிறான். இப்படியே போனால் மக்களிடம் என்னுடைய மரியாதை குறைந்து விடும். இவனுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்’ ஆமான் தன் நண்பர்களிடம் சொன்னான்.

‘மொர்த்தகாய் ஏன் உன்னை அவமதிக்கிறான் தெரியுமா ? ‘ நண்பர்கள் கேட்டனர்.

‘அவனுக்கு மரியாதை கிடைக்காமல், எனக்கு மட்டும் உயர் மரியாதை கிடைக்கிறதே. அந்த வயிற்றெரிச்சல் தான் வேறென்ன ?’ ஆமான் சலித்தான்.

‘இல்லை… அது அல்ல விஷயம். மொர்தகாய் ஒரு யூதன் ! அதனால் தான் அவன் உனக்கு மரியாதை தர மறுக்கிறான்’ நண்பர்கள் தூண்டி விட்டனர்.

ஆமான் ஆத்திரமடைந்தான். ‘ ஓஹோ… அது தான் விஷயமா ? அந்த மொர்தகாய் யூதனா ? அப்படியானால் மொர்தகாயை மட்டுமல்ல நாட்டில் இலட்சக்கணக்கான யூதர்கள் இருக்கிறார்களே அனைவரையும் கொல்வேன்’ ஆமான் சபதமிட்டான்.

‘எல்லா யூதர்களையும் கொல்வாயா ? எப்படி ?’ நண்பர்கள் கேட்டனர்.

‘பொறுத்திருந்து பாருங்கள்…’ என்று சொல்லிவிட்டு ஆமான் வேகமாய் வெளியேறினான்.

நேராக அரசனின் முன் சென்று வணங்கி நின்றான்.

‘அரசே… ஒரு செய்தி சொல்ல வந்தேன்…’

‘சொல் ஆமான்… என்ன விஷயம் ?’

‘அரசே… நமது நாட்டில் சில மக்கள் உம்முடைய கட்டளைகளைக் கடைபிடிக்காமல் உமக்கு விரோதமாய் நடக்கிறார்கள். அவர்களை வளரவிட்டால் உமது ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்….’ ஆமான் தந்திரவாதியானான்.

‘அப்படியா ? அப்படியானால் அந்த மக்களைக் கண்டு பிடித்து ஒழிக்க வேண்டியது தானே’ மன்னன் கூறினான்.

‘அதற்காகத் தான் மன்னா உங்கள் உத்தரவை நாடி உங்கள் முன்னால் நிற்கிறேன்’ ஆமான் பணிவைக் கூட்டினான்.

‘இதோ.. என்னுடைய கணையாழி. நீ நிறைவேற்ற வேண்டிய ஆணையை எழுதி, இந்த மோதிரத்தால் முத்திரையிடு. முத்திரையிட்ட பின் அது அரச ஆணை. எந்த சந்தர்ப்பத்திலும் அதைத் திரும்பப் பெற முடியாது’ மன்னன் தன்னுடைய கணையாழியைக் கழற்றி ஆமானின் கைகளில் வைத்தான்.

ஆமான் ஆனந்தமடைந்தான். யூதர்களைக் கொல்வதற்கான மிகப் பெரிய ஆயுதம் தன் கையில் கிடைத்ததை நினைத்துப் பூரித்தான். அவனுக்குள் கொலை வெறித் திட்டம் ஒன்று தயாரானது.

மிக விரைவாக ஒரு அரச ஆணையைத் தயாரித்தான். அதை எல்லா மாநிலங்களின் தலைவர்களுக்கும் அவர்கள் பேசும் மொழியில் எழுதி முத்திரையிட்டு அனுப்பி வைத்தான். அந்த அரச ஆணை நகரெங்கும் விரைவாகக் கொண்டு சேர்க்கப் பட்டது. அந்த ஆணையைப் படித்த யூத மக்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக அதிர்ந்தனர்.

‘பன்னிரண்டாம் மாதத்தின், பதின்மூன்றாம் நாள் யூத இனத்தைச் சேர்ந்த அனைவரும் கொல்லப் படவேண்டும்’ என்பதே ஆமான் தயாராக்கிய அந்த அரச ஆணை.

‘சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. யூத இனத்தைச் சேர்ந்ததாயிருக்கும் அனைத்து உயிர்களும் அழிக்கப் படவேண்டும்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது அரச ஆணை.

யூதர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அலறினார்கள். நகரமே கலங்கி நின்றது.

மொர்தகாய் விஷயத்தைக் கேள்விப்பட்டார். தன் உடைகளைக் கிழித்துக் கொண்டு, சாம்பலில் புரண்டுக் கதறினார். அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு நகர சந்தில் அமர்ந்து அழுது கொண்டே துக்கம் அனுஷ்டித்தார்.

இந்த விஷயம் பணிப்பெண்கள் மூலமாக எஸ்தர் அரசிக்கும் தெரிவிக்கப் பட்டது.

‘நீ போய் மொர்தகாயைய் சந்தித்து முழு விபரங்களையும் கேட்டு வா’ எஸ்தர் தன்னுடைய பணிப்பெண்ணை மொர்தகாயிடம் அனுப்பினாள்.

மொர்தகாயைச் சந்தித்த பணிப்பெண்ணிடம் நடந்தவற்றை அனைத்தையும் மொர்தகாய் விளக்கினார். ‘நீ எஸ்தரிடம் போய், அரசனைச் சந்தித்து யூதர்களுக்குக் கருணை காட்டுமாறு சொல்’ என்று பணிப்பெண்ணிடம் சொல்லியனுப்பினார்

எஸ்தரோ,’ அதெப்படி முடியும் ? மன்னன் அழைக்காமல் யாரும் மன்னனுடைய முன்னிலையில் போக முடியாது என்பது அவருக்குத் தெரியாதா என்ன ? நான் மன்னனைச் சந்தித்து ஒரு மாதமாகிறது. அவர் அழைக்காமல் நான் போகக் கூடாது, அது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல… ‘ என்றாள்

மொர்தகாய் கோபப்பட்டார்.’ ஒட்டு மொத்த யூத குலமும் அழிவுக்குள் போகப் போகிறது. நீ அரண்மனையில் இருப்பதால் தப்புவாய் என்று நினைக்காதே. நீயும் யூதப் பெண் தான். நீயும் அழிக்கப் படுவாய். கடவுள் தான் உன்னை அரசியக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். எனவே புத்திசாலித்தனமாய் செயல்படு’

‘சரி… நான் மன்னனைச் சந்திக்கிறேன். அதற்கு முன் நாம் கடவுளிடம் மன்றாடவேண்டும். இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து யூதர்களும் சாம்பலில் அமர்ந்து உண்ணா நோன்பு இருக்க வேண்டும். நானும், என் பணிப்பெண்களோடு இங்கே நோன்பு இருப்பேன். பின்பு நான் மன்னனைச் சந்திக்கிறேன். கடவுள் நம்மைக் காப்பார்’ என்றாள் எஸ்தர்.

பணிப்பெண் இருவருக்குமிடையே தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அனைத்து யூதர்களுக்கும் அந்தத் தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். மூன்று நாட்கள் எதையும் உண்ணாமல் குடிக்காமல் கோணி உடுத்தி, சாம்பலில் அமர்ந்து நோன்பிருந்தார்கள். தங்கள் உயிர் காக்கப்பட வேண்டுமே என்று கடவுளை நோக்கி மன்றாடினார்கள்.

மூன்றாவது நாள் எஸ்தர் தன்னை அழகாய் அலங்கரித்து , அழகிய ஆடைகள் அணிந்து, நறுமணத் தைலங்கள் பூசி மன்னரின் முன்னாய் போய் நின்றாள். பணியாளர்கள் விக்கித்துப் போனார்கள். மன்னன் அழைக்காமல் அரசவைக்குள் நுழைந்து வருகிறாளே அரசி ! என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று அரசரைச் சுற்றியிருந்த மக்கள் பதட்டப் பட்டார்கள்.

மன்னன் எஸ்தரைப் பார்த்தான். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய அழகு ராணியைப் பார்த்த மன்னன் தன்னை மறந்தான்.

‘அரசியே. என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன். நாட்டில் பாதி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்’ மன்னன் புன்னகைத்தான். ஆமானும் அரசனுக்கு அருகே நின்றுகொண்டிருந்தான்.

‘எனக்கு உங்கள் அன்பைத் தவிர வேறேதும் வேண்டாம். உங்களுக்காக நான் ஒரு பெரிய விருந்து தயார் செய்திருக்கிறேன். நீங்களும், ஆமானும் தவறாமல் அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும். அதற்காகத் தான் உங்கள் அனுமதியின்றி உங்கள் முன் வந்து நின்றேன். என்னை மன்னியுங்கள்’ எஸ்தர் அமைதியாகச் சொன்னாள்.

மன்னன் பெருமிதப் பட்டான். ‘நல்லது. நீ தயாராக்கும் விருந்தில் நான் கலந்து கொள்ளாமல் இருப்பேனா ? கண்டிப்பாகக் கலந்து கொள்வேன். அதற்கு முன் உனக்கு நான் ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். என்ன வேண்டும் கேள்’ மன்னன் மீண்டும் கேட்டான்.

‘விருந்துக்கு வாருங்கள். அங்கே வைத்து என்னுடைய ஆசையைச் சொல்கிறேன்’ என்றாள் எஸ்தர்.

ஆமானுக்குப் பெருமிதம் தலைக்கேறியது. அரசி மன்னனுக்கும், எனக்குமாக தனியாய் விருந்து நடத்துகிறாளே ! என்று உற்சாகப் பட்டான். உற்சாகத்தோடு வெளியே விரைந்தான். அன்றும் மொர்தகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தார். இப்போதும் அவர் எழுந்திருக்கவும் இல்லை, ஆமானுக்கு வணக்கம் சொல்லவும் இல்லை.

மீண்டும் ஆமானுக்குள் கோபம் மூண்டது.
‘மொர்தகாயைத் தூக்கிலிட வேண்டியது தானே !.. ஏன் தயங்குகிறாய் ? ‘ நண்பர்கள் மீண்டும் தூண்டி விட்டனர்.

‘மன்னர் கேட்டால் என்ன சொல்வது’ ஆமான் கேட்டான்.

‘ஒரு வேலையாள் கொல்லப் படுவதை எல்லாம் மன்னர் கண்டு கொள்ளப் போவதில்லை. அதுவும் நீ இப்போது மன்னனுக்கு அடுத்த நிலையில் இருக்கிறாய். அரசியே உனக்கு விருந்து தருகிறார். துணிந்து செய். மொர்தகாய் ஒரு பொருட்டே அல்ல… ‘ என்றனர் நண்பர்கள்.

‘சரி… அப்படியானால் அரண்மனைக்கு எதிரிலேயே ஒரு தூக்கு மரத்தைத் தயார் செய்து வையுங்கள். நாளை அவனைக் கொன்றுவிட்டு தான் மறுவேலை . இன்றைக்கே நான் மன்னனிடம் இதற்கான அனுமதியைப் பெறுவேன் ‘ என்றான் ஆமான்.

அன்று இரவு மன்னன் தூங்கப் போகும் முன் எஸ்தர் அவருடைய படுக்கைக்கு அருகிலே அரச குறிப்புகள் அடங்கிய புத்தகத்தைக் கொண்டு வைக்க ஏற்பாடு செய்தாள்.மன்னர் உறங்குவதற்காக தன்னுடைய மஞ்சத்துக்கு வந்த போது அந்தப் புத்தகம் இருப்பதைக் கண்டு பணியாளன் ஒருவனை அழைத்து அதை வாசிக்கச் சொன்னார். அதில் மன்னனின் உயிரைக் காப்பாற்றியவன் என்னும் குறிப்போடு மொர்தகாயின் பெயர் காணப்பட்டது !

‘நிறுத்து…. மொர்தகாய் என் உயிரைக் காப்பாற்றினானே.. அவனுக்கு என்ன செய்யப் பட்டது ?’ மன்னன் கேட்டான்.

‘ஒன்றும் செய்யப் படவில்லை மன்னா… குறிப்பேட்டில் அவர் பெயர் அதற்குப் பின் வரவேயில்லை’ ஊழியன் சொன்னான்.

‘ஓ… அது மன்னன் செய்யும் தவறாயிற்றே. மன்னனின் உயிரைக் காப்பாற்றியவனல்லவா ! அவனுக்கு ஏதேனும் செய்யப் படவேண்டுமே’ என்றார் மன்னன்.

மன்னனும் பணியாளனும் பேசிக் கொண்டிருந்தபோது, மொர்தகாயைக் கொல்வதற்கு அனுமதி கேட்பதற்காக ஆமான் வாசலில் வந்து நின்றார். மன்னன் ஆமானை அழைத்தார்.

‘வா.. ஆமான். சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறாய். நான் ஒருவனுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். என்ன செய்யலாம் ?’ என்று கேட்டார் மன்னர்.

தன்னைத் தவிர யாருக்கு மன்னன் மரியாதை செலுத்தப் போகிறார் ? அரசி என்னை விருந்துக்கு அழைத்ததால் மன்னரும் என்னை கெளரவிக்க விரும்புகிறார் போலிருக்கிறது என்று ஆமான் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார். அவர் மனம் ஆனந்தத்தால் துள்ளியது.

‘அரசே… அந்த மனிதனை அரச ஆடை அலங்காரங்களோடு, அரச குதிரையில், அரச கிரீடத்தோடு நகரை வலம் வர வைப்போம். நாட்டின் மிக முக்கியமான ஒரு நபர் அதை நடத்தி வைக்கலாம்’ என்றான் ஆமான்.

மனசுக்குள் தான் அரச குதிரையில், அரச கிரீடத்தோடு வலம் வரும் கனவில் ஆமான் மூழ்கியிருந்தபோது மன்னன் சொன்னார்.

‘அப்படியானால் நீயே போய் அந்த மரியாதையை மொர்தகாய்க்குச் செய்’…

ஆமானின் இதயத்துக்குள் இடி விழுந்தது போலாயிற்று ! தான் கொல்ல நினைத்த ஒருவனுக்கு இந்த மரியாதையா ? என்று அதிர்ந்தே போனார்.

‘மொ….மொ…மொர்தகாய் ??’ ஆமானுக்கு வார்த்தைகள் வரவில்லை.

‘ஆம்… அரண்மனை வாசலில் இருக்கும் மொர்தகாய்க்குத் தான் அந்த மரியாதை. அவன் என்னுடைய உயிரை ஒருமுறை காப்பாற்றியிருக்கிறான்’ மன்னன் சொன்னான்.

‘அரசே… அது… வந்து…’ ஆமான் இழுத்தான்.

‘போ… இது அரச ஆணை. உடனே நிறைவேற்று..’ மன்னன் தன் குரலை உயர்த்தினான்.

மொர்தகாயை இனி தன்னால் தொடக்கூட முடியாது என்பதை அறிந்த ஆமான் வேறு வழியில்லாமல் மொர்தகாய்க்கு மரியாதை அளிக்கப் புறப்பட்டான். நகர வீதிகளில் அரச கம்பீரத்தோடு மொர்தகாய் குதிரையில் பவனி வந்தார். ஆமான் அவருக்குப் பின்னால் சென்று கொ. மொர்தகாயின் பவனியைக் கண்ட யூதர்கள் மகிழ்ந்தனர். மொர்தகாய் மூலமாக தங்களுக்கு வரவிருக்கும் அழிவு தடுக்கப் படும் என்று நம்பினர்.

ஆமான் தன்னுடைய திட்டம் எல்லாம் தவிடுபொடியானதை எண்ணிக் கலங்கினான்.

‘இனிமேல் உன்னுடைய அதிகாரங்கள் எல்லாம் பயனற்றவையாகிவிடும். மொர்தகாய்க்கு நீதான் இனிமேல் வணக்கம் செலுத்த வேண்டும் … அவன் உனக்கு வணக்கம் செலுத்தப் போவதேயில்லை ‘ நண்பர்கள் ஆமானை உசுப்பேற்றினார்கள். ஆமானின் மனைவியும் தன் பங்கிற்கு ஆமானை வெறுப்பேற்றினாள். ‘ இனிமேல் உம்முடைய கை ஓங்கப் போவதில்லை ! மொர்தகாய் மன்னனிடம் நல் மதிப்பைப் பெற்றுவிட்டான். இனிமேல் உன்னால் அவனை தீண்டக் கூட முடியாது’.

நண்பர்களின் பேச்சும், மனைவியின் பேச்சும் கேட்டுக் கேட்டு ஆமான் மனம் நொந்து போயிருந்த வேளையின் அரச பணியாளர்கள் அவரிடம் வந்தனர்.

‘அரசியின் விருந்து ஏற்பாடாகி விட்டது. உடனே கலந்து கொள்ளுமாறு அரசர் ஆணையிட்டிருக்கிறார்’

ஆமான் கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விருந்தினருக்குரிய ஆடை அணிந்து அரசியின் விருந்தில் கலந்து கொள்ளச் சென்றான்.

விருந்து தடபுடலாய் நடந்தது. மன்னனும் ஆமானும் நன்றாக உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள். விருந்தின் இரண்டாவது நாள் மன்னன் அரசியிடம் மீண்டும் கேட்டார்.

‘அரசியே… உன்னுடைய விண்ணப்பத்தை நீ இன்னும் சொல்லவில்லையே… நீ கேட்பதையெல்லாம் தருவேன்… தயங்காமல் கேள். ‘ மன்னன் கூறினார்.

‘அரசே… எனக்கு எதுவும் தரவேண்டாம். இருப்பதைப் பறித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும்’ எஸ்தர் கூறினாள்.

‘உன்னிடமிருந்து பறிப்பதா ? என்ன முட்டாள் தனமாக உளறுகிறாய் ? நீ அரசி … என் பிரியத்துக்குரியவள். நினைவில் கொள்’ என்றான் மன்னன்.

‘அரசி தான்… ஆனால் என்னையும் கொல்ல அல்லவா நீங்கள் உத்தரவிட்டிருக்கிறீர்கள் ?’ எஸ்தர் விஷயத்துக்கு வந்தாள்.

‘என்ன ? உன்னைக் கொல்ல உத்தரவிடப்பட்டிருக்கிறதா ? என்ன சொல்கிறாய் ? ‘ மன்னன் கோபப் பட்டார்.

ஆமானும் விழித்தான். அவனுக்கு எஸ்தர் யூதப் பெண் என்பது தெரியாது.

‘ஆம் அரசே… என்னையும் என்னுடைய குலத்தினர் அனைவரையும் கொல்ல வேண்டுமென்று உம்முடைய முத்திரையிட்ட அரச ஆணை ஒன்று நகரெங்கும் அறிவிக்கப் பட்டிருக்கிறதே…’ எஸ்தர் சொன்னாள்.

‘யார் அந்த ஆணையை இட்டது ? என்னுடைய மனம் கவர்ந்த உன்னை எவன் தொட முடியும் ? எவன் அந்த அயோக்கியன் ? சொல்…’ மன்னனின் கோபம் அதிகரித்தது.

‘அரசே … மன்னிக்க வேண்டும். என்னையும் என் இனமான யூதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று ஆணை நிறைவேற்றப் பட்டிருக்கிறது …’ எஸ்தர் சொன்னாள்.

‘நீ… எந்த குலமானாலும் எனக்குக் கவலையில்லை. நீ என் மனைவி. உன்னைக் கொல்லச் சொன்னவன் எவனென்று சொல்’ மன்னன் கோபம் தணியாமல் கத்தினான்.

‘இதோ… இந்த ஆமான் தான் அந்த ஆணையை இட்டவன். நான் உங்கள் மனைவியென்று தெரிந்தும், நான் ஒரு யூதப் பெண் என்பதை அறிந்திருந்தும் ஆமான் என்னைக் கொல்ல உம்முடைய கணையாழியை உபயோகித்துக் கட்டளை இட்டிருக்கிறான்’ எஸ்தர் சொன்னாள்.

ஆமான் திடுக்கிட்டான். அவனுடைய உடல் முழுதும் வியர்வையால் நனைந்தது. தனக்கு மரணம் வரப்போகிறதோ என்று நடுநடுங்கினான்.
அரசர் எஸ்தரின் வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டார். கோபத்தில் எழுந்து அறையை விட்டு வெளியேறினார்.

ஆமான் மரண பயத்தில் அரசியின் கால்களில் விழுந்து,’ என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.

எஸ்தர் அந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவள் போல, அவனை மஞ்சத்தில் பிடித்துத் தள்ளி தன்னுடைய மேலாடையை அவிழ்ந்தெறிந்து விட்டு ‘ ஐயோ காப்பாற்றுங்கள்…. ‘ என்று அலறினாள்.

சத்தம் கேட்டு மன்னன் உள்ளே ஓடி வந்தான்.
‘மன்னா… இதோ உங்கள் ஆமான் என்னை பலாத்காரம் செய்ய முனைகிறான். நான் அவனுடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால் தான் என்னைக் கொல்ல ஆணையிட்டிருக்கிறான்’ என்று எரியும் கோபத்தில் வார்த்தை ஊற்றினாள்.

‘என் எதிரிலேயே இவன் அரசியிடம் தகாத முறையில் நடக்கிறானே…. அப்படியானால் நான் இல்லாத வேளைகளில் என்னென்ன கொடுமைகள் செய்திருப்பான் ? ‘என்று மன்னன் கடும் கோபம் கொண்டான்

‘இவனுடைய முகத்தைத் துணியால் மூடுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

ஊழியர்கள் அவனுடைய முகத்தை துணியால் மூடினர். ஆமான் மூடப்பட்ட துணிக்குள் மரணத்தின் வாசனையை முகர்ந்தான்.

‘அது மட்டுமல்ல அரசே…. நீர் மரியாதை செலுத்திய மொர்தகாயைக் கொல்வதற்காக தூக்கு மரம் கூடத் தயாராக்கி வைத்திருக்கிறான் இந்த ஆமான்’ எஸ்தர் மன்னனின் கோபம் அணையாமல் பார்த்துக் கொண்டாள். அரசனின் கோபம் அதிகரித்தது.

‘அதே தூக்கு மரத்தில் இந்தத் துரோகியைத் தூக்கிலிடுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

ஆமான் பேச்சு மூச்சற்றவனானான். மொர்தகாய்க்காய் தயாராக்கிய தூக்குக் கயிறு ஆமானை இறுக்கியது. ஆமான் இறந்தான். மன்னன் கோபம் தணிந்தான்.

‘மொர்தகாய் உனக்கு யார் ?’ எஸ்தரைப் பார்த்து மன்னன் கேட்டான்.

‘அவர் என்னுடைய உறவினர். என்னை சிறுவயதிலிருந்தே அவர் தான் வளர்க்கிறார்… மிகவும் நல்லவர்.’ எஸ்தர் சொன்னாள்.

‘சரி… அப்படியானால் இனிமேல் ஆமான் இருந்த இடத்திற்கு மொர்தகாய் வரட்டும்’ என்று ஆணையிட்ட மன்னன் தன்னுடைய முத்திரை மோதிரத்தையும் அவரிடம் கொடுத்தான். அரண்மனை வாசலில் வேலைசெய்து கொண்டிருந்த மொர்தகாய் மன்னனுக்கு அடுத்த இடத்தில் அமர்த்தப் பட்டார். அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

‘அரசே… இன்னொரு வேண்டுகோள்’ எஸ்தர் கேட்டாள்.

‘என்ன ? கேள்…’

‘யூத மக்களைக் கொல்லவேண்டும் என்று ஆமான் இட்ட ஆணையை நீர் ரத்து செய்ய வேண்டும். யூத இனம் அழியாமல் நீர் தான் காக்க வேண்டும்’ எஸ்தர் மன்னனின் பாதம் பணிந்தாள்.

‘அரசியே…. இட்ட ஆணை இட்டது தான் ! அதைத் திரும்பப் பெற இயலாது. வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள், இப்போது மொர்தகாயிடம் அரச முத்திரை இருக்கிறதே. விவேகமாய் நீங்கள் ஏதேனும் புதிய ஆணையை என் பெயரால் அனுப்பி யூதர்களைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன ஆணையிட்டாலும் எனக்குச் சம்மதமே… ‘ மன்னன் சொன்னான்.

மொர்தகாய் ஒரு புத்திசாலித் தனமான ஆணையைத் தயாராக்கினான். யூதர்களின் சாவுக்குக் குறிக்கப் பட்ட நாளை யூதர்களின் வாழ்வுக்கான நாளாக்கும் விதமாய் இருந்தது அது.

‘பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாள் யூதர்கள் தங்கள் எதிரிகளை அழிக்கலாம். அவர்களின் பொருட்களையும் கவர்ந்து கொள்ளலாம்’ என்பதே அந்த ஆணை.

அந்த ஆணை யூதர்களை உற்சாகப் படுத்தியது. யூதகுலத்தினர் அனைவரும் ஆயுதங்களோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தனர்.

அந்த நாளும் வந்தது.

யூதர்கள் குழுக்கள் குழுக்களாகச் சென்று தங்களுக்கு எதிரிகளாய் இருந்த அனைவரையும் , தங்களை அடிமையாய் வைத்திருந்தவர்களையும் கொன்று குவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் அன்று கொல்லப்பட்டனர்.

மன்னன் இந்த செய்திகளையெல்லாம் கேள்விப் பட்டான். அவன் அரசியை அழைத்து,
‘இப்போது மகிழ்ச்சி தானே ? உன் இனம் காப்பாற்றப் பட்டது … இனி ஏதேனும் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்..’ என்றான்.

‘அரசே…. உங்கள் தயவுக்குத் தலைவணங்குகிறேன். என்னிடம் தகாத முறையில் நடந்த ஆமானுக்குப் பத்து மகன்கள் இருக்கிறார்கள், அவர்கள் பத்து பேரையும் தூக்கில் போடுங்கள்… இது ஒன்றே என் விண்ணப்பம்’ என்றாள்.

மன்னன் சம்மதித்தான். ஆமானின் மகன்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.

யூதர்களின் சாவுக்குக் குறிக்கப்பட்ட அந்தக் கரிய நாள், யூதர்களின் வாழ்வுக்கு படிக்கட்டு அமைத்த அரிய நாளாக மாறியது.
இந்த செய்தியை அரச குறிப்பேடு ஆச்சரியத்தோடு எழுதிக் கொண்டது !

One thought on “கி.மு 38. எஸ்தர் : அழகும், அறிவும்

  1. Duleep says:

    Written nicely bro.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *