கி.மு 37. யோவாஸ் மன்னன்

 

இஸ்ரயேல் நாட்டில் ஏராளமான அரசர்கள் ஆட்சியமைப்பதும், கொல்லப்படுவதும் வழக்கமாக இருந்தது.

ஒருமுறை அகஸியா என்னும் மன்னன் இஸ்ரயேலரை ஆண்டுவந்தான். அவன் இறந்தபோது அரசனுடைய தாய் அத்தாலியம்மாளுக்கு அரசமைக்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது. அவள் தன்னுடன் சிலரைச் சேர்த்துக் கொண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் அரச குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்று குவித்தாள். அத்தாலியம்மாளின் அதிரடிப் போரை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அரச குடும்பமே அத்தாலியம்மாளின் அதிரடிப் போரில் காலியாகிவிட்டது.

மன்னன் அகசியாவிற்கு ஒரு கைக்குழந்தை இருந்தது. அவனுடைய பெயர் யோவாஸ். அந்தக் குழந்தையை மன்னனின் சகோதரி ரகசியமாய் எடுத்து ஒரு வேலைக்காரியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னாள். இந்த விஷயம் அத்தாலியம்மாளுக்குத் தெரியாது. அந்தக் குழந்தையும் கொல்லப்பட்டதாக அவள் நினைத்தாள்.

குழந்தை ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு ஆசாரியர் என்று அழைக்கப் படும் ஆலயப் திருப்பணியாளர்களால் வளர்த்தப் பட்டான். அத்தாலியம்மாள் தன்னுடைய தாந்தோன்றித்தனமான ஆட்சியை ஆரம்பித்தாள். வருடங்கள் ஓடின. மக்கள் அத்தாலியம்மாளின் ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்தார்கள்.

ஏழு வருடங்கள் கடந்தன. சிறுவன் யோவாஸ் கொஞ்சம் சிந்திக்கும் வயதை அடைந்தான். அப்போது ஆலயத்தின் முதன்மை ஆசாரியர் யோப்தா, மக்கள் தலைவர்களை எல்லாம் ரகசியமாய் அழைத்தார். எல்லோரும் ஒன்றுகூடினர்.

‘சொல்லுங்கள் திருப்பணியாளரே… எங்கள் அனைவரையும் ஒன்று கூட்டியிருக்கிறீர்கள். கண்டிப்பாக முக்கியமான செய்தியாய் தான் இருக்கும்’ தலைவர்கள் கேட்டார்கள்.

‘ஆம். மிகவும் முக்கியமான செய்தி தான்’ யோப்தா சொன்னார்.

‘நாம்… அரசி அத்தாலியம்மாளின் ஆட்சியில் பல இன்னல்களைக் கண்டுவிட்டோம். அவளுடைய ஆட்சியை அகற்றவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? ‘

‘நாங்கள் என்ன ? மக்கள் எல்லோருமே இந்த ஆட்சியில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இந்த ஆட்சி அகற்றப்பட்டால் நிச்சயமாக எல்லோரும் மகிழ்வார்கள். ஆனால் என்ன செய்வது ? அரச பரம்பரையே அழிந்து விட்டதே. யாரை அரசராக்குவோம் ?’

‘அகஸியா மன்னனின் வாரிசு அரசனானால் ஒத்துக் கொள்வீர்களா ?’ யோப்தா கேட்டார்.

‘அகஸியா மன்னனின் வாரிசா ? அவர்களில் யாரும் உயிருடன் இல்லையே ?’ தலைவர்கள் குழம்பினார்கள்.

யோப்தா மெல்ல புன்னகைத்தார். பின் ஆலயத்தின் உள்ளே பார்த்து அழைத்தார்

‘யோவாஸ்… யோவாஸ்….’

சிறுவன் யோவாஸ், கம்பீரமாய் வந்து நின்றான்.

‘இவன் யோவாஸ். அகஸியாவின் ஒரே மகன்.’ யோப்தா சொன்னார். உடனே அனைத்து மக்கள் தலைவர்களும் ஆச்சரியமான முகங்களோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் இருக்கையை விட்டு எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

‘மன்னர் அகசியாவின் மகனா இவர் ?’

‘மன்னனின் மகன் சாகவில்லையா ? அவர் எப்படித் தப்பித்தார் ?’

‘உண்மையிலேயே அவர் அகசியாவின் மகன் தானா ?’

‘இவன் அரசனின் மகன் தான் என்பதை நாங்கள் எப்படி நம்புவது ?’ கூடியிருந்த மக்கள் தலைவர்களின் கேள்விகள் யோப்தாவை முற்றுகையிட்டன.

‘உங்கள் கேள்வி நியாயமானது தான். ஆசாரியனாகிய நான் பொய் பேசமாட்டேன். நான் சொல்வதை நம்புங்கள். ஒருவேளை உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் அகசியாவின் சகோதரியிடம் கேளுங்கள். அவள் தான் இவனைக் காப்பாற்றி இங்கே ஒப்படைத்தாள். இல்லையேல் இந்தக் குழந்தையைக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பராமரித்து வரும் பெண்ணைக் கேளுங்கள்’ யோப்தா சொல்ல அனைவரும் திருப்தியானார்கள்.

‘அப்படியானால் உடனே இவரை மன்னனாக்க வேண்டியது தான் ‘ மக்கள் தலைவர்கள் அனைவரும் ஆனந்தமாய் சொல்ல யோப்தா திருப்தியானார்.

அதன்பின் எல்லாம் ரகசியமாகவும், விரைவாகவும் நடந்தேறின. அரசின் உயர் மட்டத்திலிருந்த இராணுவ வீரர்கள் எல்லோரும் புதிய மன்னனுக்கு ஆதரவாய் திரட்டப்பட்டனர். கடைசியில் ஒருநாள் யோப்தா யோவாஸை அரண்மனையிலிருந்து வெளியே அழைத்து வந்து மக்கள் தலைவர்கள் முன்னிலையில் அவனுக்குக் கிரீடம் சூட்டி,

‘இஸ்ரயேலரின் அரசரே வாழ்க’ என்று முழங்கினார்.

மக்கள் தலைவர்களும் ‘இஸ்ரவேலரின் புதிய மன்னனே வாழ்க’ என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது யோவாஸுக்கு வயது வெறும் ஏழு !

நாடெங்கும் இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. விஷயத்தைக் கேள்விப்பட்ட அத்தாலியம்மாள் கடும்கோபம் கொண்டாள். கேள்விப்பட்டவையெல்லாம் சரியா என்பதை அறிய தன்னுடைய ஆதரவாளர்களோடு ஆலயத்துக்கு விரைந்தாள். அங்கே புதிய மன்னன் தலையில் கிரீடத்தோடு ஆலயத் தூணில் சாய்ந்து நின்று புன்னகைத்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்டதும் அத்தாலியம்மாள் கடும் கோபமடைந்தாள்.

‘துரோகம் செய்து விட்டீர்களே பாவிகளே….’ அத்தாலியம்மாள் கோபத்தில் கத்தினாள்.

‘நீ.. செய்தது தான் துரோகம். இது துரோகத்துக்கான பரிகாரம்’ யோப்தா பதிலுக்குக் கத்தினார். உடனே மக்கள் அனைவரும் அத்தாலியம்மாளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். பெரிய மக்கள் கூட்டத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டதை அப்போது தான் அத்தாலியம்மாள் உணர்ந்தாள். தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்த அத்தாலியம்மாள் பயந்து நடுங்கினாள். ஓடிப் போய் ஆலயத்துக்குள் அமர்ந்து கொண்டாள்.

ஆலயத்தில் வைத்து யாரும் யாரையும் கொல்லக் கூடாது என்பது அந்த நாளைய வழக்கம். எனவே யோப்தா வீரர்களை வைத்து அவளை ஆலயத்துக்கு வெளியே இழுத்து வந்தார். வெளியே வந்த அத்தாலியம்மாளை வீரர்கள் கூர்மையான தங்களுடைய வாள்களால் வெட்டிக் கொன்றனர். அத்தாலியம்மாளின் ஆட்சி அங்கே முடிவுற்று சிறுவன் யோவாஸின் ஆட்சி ஆரம்பமானது.

யோவாஸ் நீண்டகாலம் திறமையாக ஆட்சிசெய்தார். எலிசா என்னும் இறைவாக்கினர் வாழ்ந்த நாட்களில் தான் அவருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது. எலிசா கடவுளின் அருள் பெற்ற ஒரு தலைசிறந்த இறைவாக்கினர். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

எலிசா மரணத்தின் விளிம்பில் இருப்பதைக் கேள்விப்பட்ட மன்னர் அவரைச் சந்திக்கச் சென்றார். ஒரு தனியறையில் அவர் எலிசாவைச் சந்தித்தார்.

‘இறைவாக்கினரே… நலமா ? நீங்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நீர் எங்கள் வலதுகையாய் இருந்து எங்களுக்கு உதவி வந்தீர். எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் இருந்தீர். உம்மால் தான் நாங்கள் ஏராளமான வெற்றிகளைப் பெற்றோம். உம்மூலமாகத் தான் கடவுள் எங்களோடு பேசிவந்தார். இப்போது நீங்கள் மரணத்தின் தருவாயில் இருப்பதைக் காணும்போது என்னால் தாங்கமுடியவில்லை’ யோவாஸ் கண்ணீர் விட்டார்.

யோவாஸின் பாசத்தைக் கண்ட எலிசா நெகிழ்ந்தார்.

‘மன்னரே… ஒரு வில்லையும் அம்புகளையும் எடுத்து வாருங்கள்’ எலிசா சொன்னார்.

மரணத்தருவாயில் இருப்பவர் ஏன் வில்லையும் அம்புகளையும் எடுத்துவரச் சொல்கிறார் என்று மன்னர் குழம்பினார். ஆனாலும் இறைவாக்கினர்களின் பேச்சில் ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை உணர்ந்திருந்ததால் அவர் பதில் பேசவில்லை. உடனே சென்று ஒரு வில்லையும் அம்புகள் நிறைந்திருந்த அம்பறாத்தூணியையும் எடுத்து வந்தார்.

‘அதோ அந்த சன்னலைத் திறவுங்கள்’ படுக்கையில் கிடந்த எலிசா சொன்னார். மன்னன் சென்று கிழக்குப் பக்கமாக இருந்த சன்னலைத் திறந்தார்.

‘ஒரு அம்பை அந்த சன்னல் வழியாக எய்யுங்கள்’ எலிசா சொன்னார்.

அவர் ஒரு அம்பை எடுத்து சன்னல் வழியாக வெளியே எய்தார். அம்பு சன்னல் வழியாக பாய்ந்து மறைந்தது.

எலிசா புன்னகைத்துக் கொண்டே ‘ நீர் சீரியர்களை வெற்றி கொள்வீர். கடவுள் உம்மோடு இருப்பார்’ என்றார். யோவாஸ் மகிழ்ந்தார். ஏனென்றால் அந்நாட்களில் சீரியர்கள் அடிக்கடி இஸ்ரயேலர்கள் மீது படையெடுத்து பெரும் தொல்லை கொடுத்து வந்தார்கள்.

‘இப்போது நீர் தரையை நோக்கி அம்புகளை எய்யுங்கள்’ எலிசா சொன்னார்.

யோவாஸ் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அம்புகளைத் தரையில் எய்தார். அதைக் கண்ட எலிசா மெலிதாகக் கோபமடைந்தார். அவருடைய குரலில் வருத்தமும் கலந்திருந்தது.

‘மன்னரே நீங்கள் ஐந்தாறு அம்புகளை எய்திருக்க வேண்டும். மூன்று அம்புகள் என்றால் நீங்கள் சீரியர்களை மூன்று முறை வீழ்த்துவீர்கள் என்பதும், ஐந்தாறு முறை என்றால் அவர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்பதும் தான் கடவுள் என்னிடம் சொன்னவை.’ எலிசா சொன்னார். அதைக் கேட்டதும் யோவாஸ் வருத்தமடைந்தார்.

‘கவலைப்படாதீர்கள். கடவுள் உம்மோடு எப்போதும் இருப்பார்’ எலிசா சொன்னார்.

யோவாஸ் தன்னுடைய அரண்மனைக்குத் திரும்பினார். எலிசா மரணமடைந்தார். அதைக் கேள்விப்பட்ட இஸ்ரயேலர்கள் அனைவரும் கலங்கினர். யோவாஸ் தன்னுடைய நல்லாட்சியைத் தொடர்ந்தார். எலிசாவின் வாழ்த்தின் படி கடவுள் அவரோடு இருந்து அவரை வழிநடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *