அன்னை 22 : பேட்டிகள், எதிர்ப்புகள், விருதுகள்

வேர்களை விசாரித்த நேர்காணல்

 

அன்னையை ஒருமுறை டைம் பத்திரிகைக்காக எட்வர்ட் என்பவர் பேட்டி கண்டார். அன்னையின் பதில்கள் எளிமையாய் வசீகரித்தன..

 

காலையில் என்ன செய்வீர்கள் ?

செபம்

 

எப்போது ?

 

நாலரை மணிக்கு

 

அதன் பின் ?

 

இயேசுவோடு, இயேசுவிற்காக, இயேசுவிற்குப் பணிசெய்யும் மனநிலையுடன் ஏழைகள், அனாதைகள், ஆதரவற்றோர் என எங்கள் பணித்தளங்களுக்குச் செல்வோம்

 

மக்கள் உங்களை ஓர் மத சமூக பணியாளராகப் பார்க்கின்றனர். இந்தப் பணிகளுக்கான ஆன்மீக அடித்தளம் என்ன என்பது மக்களுக்குத் தெரியுமா ?

 

எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லோருமே ஏழைகளுக்குப் பணிசெய்யும் மனநிலையைப் பெறவேண்டும். நமது சபையில் அனைத்தையும் ஏழைகளுக்காய் துறந்தவர்கள் ஏராளம் உண்டு.

 

நீங்கள் பெண் என்பதால் தான் பணி செய்ய முடிகிறதா ?

 

நான் அப்படி நினைக்கவில்லை.

 

இல்லை, ஒரு தாயாக நீங்கள் பணி செய்வதால் தான் இத்தனை ஆதரவு என நினைக்கவில்லையா ?

 

இல்லை. இதுவரை நாம் ஏழைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இப்போது ஏழைகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசம் முக்கியமானது. இதுவரை சாலைகளில் இறந்து கொண்டிருந்தவர்கள் இப்போது மகிழ்வுடன் காளிகட் இல்லத்தில் மரணத்தை சந்திக்கின்றனர். இது ஒரு மாற்றம்.

 

இறைவனின் பணியை உலகில் கொண்டு செல்வது மிகப்பெரிய பணி. உங்கள் பணிவு பிரமிக்க வைக்கிறது.

 

இது இறைவனின் பணி தான். கடவுள் இல்லாமை மூலமாக பெரிய செயல்கள் செய்ய விரும்புகிறார்.

 

உங்களுக்கு சிறப்பான திறமைகள் இருப்பதாக நினைக்கவில்லையா ?

 

இல்லவே இல்லை. நான் ஒரு பென்சில். அவர் தான் யோசிக்கிறார், வரைகிறார். பென்சில் எதுவும் செய்வதில்லை. முழுமையாய் அர்ப்பணிப்பதைத் தவிர.

 

கடவுளின் கொடை என்ன என நினைக்கிறீர்கள் ?

 

ஏழைகள்.

 

ஏழைகள் எப்படி உங்களுக்கான கொடையாய் இருக்க முடியும் ?

 

அவர்கள் தான் நான் எந்நேரமும் இயேசுவுடன் இருக்கும் வாய்ப்பைத் தருகின்றனர்.

 

கல்கத்தாவில் உண்மையிலேயே ஏதேனும் மாற்றம் கொண்டு வந்ததாய் நினைக்கிறீர்களா ?

 

நிச்சயமாக. ஒரு விழிப்புணர்வு, ஒரு சமூக ஈடுபாடு உருவாகியிருக்கிறது. இப்போது வீதிகளில் மக்கள் சாவதை நீங்கள் பார்க்க முடியாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காளிகட்டில் இருக்கிறார்கள்.

 

ஏழைகளோடு எப்படி பணி செய்கிறீர்கள் ?

 

ஏழைகளை அன்பு செய்வதும், அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும் முக்கியம். ஏழையை இயேசுவாய் ஏற்றுக் கொள்கிறேன் எனவே எனக்கு அது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

 

இந்தியா எனும் இந்து நாட்டில் நீங்கள் கிறிஸ்த்தவ மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை என வருந்தியதுண்டா ?

 

இல்லை. எண்ணிக்கையில் எப்போதுமே நான் கவனம் செலுத்தியதில்லை. எனது பணிகள் இதயங்களைத் தொடவேண்டும் அவ்வளவு தான். வேறு எதையும் சிந்திப்பதில்லை.

 

இந்து மதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

எல்லா மதங்களையும் நான் நேசிக்கிறேன். ஆனால் நான் ஆழமான கிறிஸ்தவ விசுவாசம் உள்ளவள்.

 

இந்துக்களும் இயேசுவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ?

 

ஒரு இந்து நல்ல இந்துவாக வேண்டும். ஒரு இஸ்லாமியர் நல்ல இஸ்லாமியர் ஆக வேண்டும், ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவராக வேண்டும். இதுவே நான் விரும்புவது. கடவுளை அறிவதும், தெரிவதும் அவரவர் கைகளில் தான்.

 

பணக்காரர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

பெரும்பாலான பணக்காரர்கள் நிம்மதியின்றி இருக்கின்றனர். இன்னும் வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருக்கின்றனர். தனிமை உணர்கின்றனர். அன்பில்லாத வெறுமையே உண்மையான வறுமை.

 

உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் ?

 

காளிகட்டில் உள்ள மரித்துக் கொண்டிருப்போருக்கான இல்லம். அங்கே தான் உண்மையான ஆனந்தத்தைக் காண முடியும். ஏழைகளின் புன்னகை தூய்மையானது, அவர்களுடைய ஆனந்தம் தெளிவானது.

 

ஏழைகள் ஆனந்தமாய் இருக்கிறார்கள் என்பது நீங்கள் அவர்களுக்கு வீடு வசதி கிடைக்காமல் இருக்கச் செய்வது எனும் குற்றச் சாட்டு பற்றி ?

 

ஆனந்தம் என்பது பொருட்களில் என்பது தவறான பாடம். இதயத்தில் உருவாக வேண்டும் அது.

 

உங்களை நிறுத்த முடியாதென்றும், எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறீர்கள் என்றும் மக்கள் சொல்கிறார்களே ?

 

ஆம். எல்லாம் இயேசுவுக்காக.

 

எதிர்காலம் ?

 

இறைவனிடம்.

 

நிறைய பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்த அன்னை தனது வாழ்நாளில் இருபத்து நான்கு புத்தகங்கள் வெளியிட்டார்.

 

அனைத்து நூல்களுமே அன்பை மையப்படுத்தியும், பணியை மையப்படுத்தியும் மட்டுமே இருந்தன.

 

அன்னையைப் பற்றி சுமார் ஐந்து வீடியோ திரைப்படங்களும், நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 


எதிர்கொண்ட எதிர்ப்புகள்

 

அன்னை மீது ஏராளமான விமர்சனங்களும், சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் எழுந்தன. எல்லாமே அன்னை தனது பணியினால் பலரைத் தீண்டிய பிறகு நடந்தவையே.

அன்னை தனியே தெருவில் இறங்கி ஏழைகளின் கூடாரத்தில் போனபோது ஏளனமாய் பார்த்து அகன்று போனவர்கள் எல்லாம் அன்னையின் மனித நேயப் பணிகள் விரிவடையத் துவங்கியபின் அன்னை மீது சகதி வாரித் தூற்றினர்.

அன்னை மதமாற்றம் செய்கிறார் என்று குரல் எழுப்பினர். அன்னையே எனது நோக்கம் மனமாற்றம் அல்ல என்று பல தருணங்களில் வெளிப்படுத்தினார்.

ஒரு இந்து நல்ல இந்துவாக வேண்டும், ஒரு இஸ்லாமியர் நல்ல இஸ்லாமியர் ஆகவேண்டும், ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவர் ஆகவேண்டும் என்பதில் என்ன மதமாற்றம் இருக்கிறது என அன்னை வினவுவதில் வியப்பில்லை.

மட்டுமன்றி அன்னையின் சிசுபவனில் குழந்தைகள் அவர்கள் சார்ந்த மத அடையாளங்களோடு தான் வாழ்கின்றனர். அவர்கள் விரும்பும் மதங்களைத் தான் பின்பற்றுகின்றனர். அவர்கள் சார்ந்த மத நிகழ்வுகளுக்கு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.

மரண வாசலில் உள்ளோருக்கான காளிகட்டில் மரணத்தைச் சந்திப்பவர்களுக்கு அந்தந்த மத வழக்கபடியே இறுதிச்சடங்கு நிறைவேற்றப்படுகிறது.

என அன்னை தனது பணிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்.

இன்னோர் குற்றச்சாட்டு வித்தியாசமானது.

அன்னையின் பணி ஏழைகளிலுள்ள பரம ஏழைகளுக்குப் பணி செய்வதே. அதனால் அன்னையின் பார்வை முழுதும் அடித்தட்டு மக்கள் மீது மட்டுமே இருந்தது.

அந்த நிலையை விட சற்றே உயர்ந்தவர்களுக்குக் கூட பல்வேறு தேவைகள் இருக்கலாம். ஆனால் அன்னை அவர்களைக் கவனிக்கவில்லை. இதுவே குற்றச் சாட்டு.

அன்னை ஒத்துக் கொண்டாள். தனது பணி தூண்டில் தூக்க வலு இல்லாதவர்களுக்கு அந்த வலுவைக் கொடுப்பது மட்டுமே. அந்த வலு வந்தபின் அவர்களை உங்களிடம் அனுப்புகிறேன் நீங்கள் தூண்டில் வாங்கிக் கொடுங்கள் என அன்னை எதிர்ப்பாளர்களிடம் கூறினார்.

அடுத்த குற்றச் சாட்டு அன்னை துவங்கிய விடுதிகளில் சுகாதாரம் இல்லை என்பதே. சரியான இடவசதியும், சரியான சுகாதாரமும் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டது, ஒரு சோப் பல குழந்தைகளைக் குளிப்பாட்டப் பயன்படுகிறது என்பதும், இட நெருக்கடியாய் இருக்கிறது என்பதுமே.

இதையும் சகோதரிகள் மறுக்கவில்லை. பல வேளைகளில் சோப்பு பலருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் விடுதிகளில் இடப்பற்றாக்குறை இருக்கிறது என்பதும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

குளிக்கவே செய்யாமல், கல்வியும் அறியாமல் இருந்த குழந்தைகளை அரவணைத்து விடுதி நடத்தும் போது இத்தகைய சிறு சிறு அசௌகரியங்கள் நேரிடும் என்பது சகோதரியர் தரப்பு நியாயம்.

அன்னையின் கைக்கு நன்கொடையாய் வரும் பணம் முதலீடு செய்யப்பட்டு பல வங்கிகளில் பல கோடிகளாய் கிடக்கிறது என்பது இன்னொரு எதிர்குரல்.

பணத்துக்குச் சரியான கணக்கு வழக்கு தணிக்கை இல்லை என்பது அதனுடன் இணைந்த இன்னோர் குற்றச் சாட்டு.

அன்னை புன்னகையுடன் தான் இந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டார். தனது சபை ஒரு நிறுவனமோ, அலுவலகமோ இல்லை. அதில் கணக்கு வழக்குகளில் மிகச்சிறந்த வழி முறை பின்பற்றப்படாமல் போகலாம். ஆனால் தனக்கு வரும் பணம் எதுவுமே நீண்டகால முதலீடுகளில் போடப்படாமல் தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் செலவழிக்கப்படுகிறது என்றார்.

குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள், போர்கள், கலவரங்கள் போன்றவை மனித வாழ்க்கையைச் சீர்குலைக்கும் போது அன்னையே முதல் ஆளாய் நின்று உதவிகளைச் செய்கிறாள்.

அன்னை ஆடம்பரம் விரும்புகிறாள் என்பது இன்னோர் குற்றச்சாட்டு. அன்னை தனது வறுமைக் கோலத்தால் உண்மையில் விளம்பரத்தையே விரும்புகிறாள் என காட்டமாய் கூறியது அந்த எதிர்ப்பு.

அன்னையின் ஆதரவாளர்கள் இதைக் கேட்டு சிரிக்கின்றனர். அன்னை தன்னைக் குறித்து எங்கும் பெருமையாய் பேசியதே இல்லை. அன்னையின் பணியில் கவரப்பட்டு அவரை பலர் சந்திக்கின்றனர், பேட்டிகள் எடுக்கின்றனர், விருதுகள் வழங்குகின்றனர்.

உண்மையில் அன்னை விருதுகள் வாங்கவே கூச்சப்படுபவர், புகழை எதிர்பார்க்காமல் எந்த மேடையிலும் தனது கொள்கைகளையே பேசுபவர், உணவிலும், உடையிலும் கடைசி வரை ஏழ்மையைக் கடைபிடித்தவர்.

தன்னை எந்த அளவுக்குத் தாழ்த்த வேண்டுமோ அந்த அளவுக்குத் தாழ்த்தினார் அன்னை.

“தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான்? எனும் இயேசுவின் வாக்குறுதி தான் அன்னை மூலம் நிறைவேறியிருக்கிறது என்கின்றனர் சகோதரிகள்.

எந்த பணி செய்தாலும் எதிர்ப்புகள் வருவது இயல்பே. இயேசுவின் வாழ்க்கையில் இயேசுவை ஆதரித்தவர்களை விட நிராகரித்தவர்களே அனேகம். எனவே என் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நான் இயேசுவின் பாதங்களில் ஒப்படைத்து விடுகிறேன் என்பார் அன்னை.

பொறாமையின் வெளிப்பாடோ, ஈகோவின் பாதிப்போ, மத அடையாளத்தின் எரிச்சலோ, இயலாமையில் கொந்தளிப்போ ஏதோ ஒருவகையில் அன்னையை எதிர்ப்புகள் துரத்திக் கொண்டே இருந்தன.

அன்னையோ அயராமல் பணிசெய்ததன் மூலம் எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.

 

விருது நதி

 

அன்னையின் பணிகளைக் குறித்து யோசித்தால் வியப்புக் கடல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

வெறும் ஐந்து ரூபாயுடன் அறைப்பணியல்ல இறைப்பணி என்னும் முடிவோடு தெருவில் பணி செய்வதே தேவ பணி என முடிவெடுத்து வந்த அன்னை செய்ததெல்லாம் சிறு சிறு செயல்களே. ஆனால் மாபெரும் அன்புடன்.

அன்பு கலக்காத செயல்களை அன்னை செய்யவே இல்லை. அன்னை எதையும் எதிர்பார்த்தோ, மாபெரும் செயல்திட்டம் வகுத்தோ செய்யவில்லை.

இறைவன் அவ்வப்போது கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப பணி செய்தாள் அன்னை.

இயேசுவை தனது கடவுளாக, மணவாளனாக, வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட அன்னை, இயேசுவின் தாய் மரியாளின் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்தார்.

எப்போதும் தனது கைகளில் ஒரு செபமாலையை வைத்துக் கொண்டு கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் செபமாலையை உருட்டியபடியே செபிக்கத் துவங்கிவிடுவார்.

அன்னையின் மீது “வெளிநாட்டவர்” எனும் வெறுப்பு வார்த்தை எறியப்படும் போதெல்லாம்

“நான் ஒரு இந்தியப் பெண். இந்தியா எனது நாடு. இந்தியர்கள் எனது சகோதரர்கள்” என வெளிப்படையாகச் சொன்னார்.

அன்னையின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி, (அன்புப் பணியாளர் ) சபை அடைந்த வளர்ச்சி அன்னையே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

திருச்சபையின் அனுமதியைப் பெறவே மாபெரும் போராட்டம் நடத்திய அன்னை, பின்னர் நினைக்கும் நேரத்திலெல்லாம் ரோமின் கதவுகளைத் திறந்து புனிதத் தந்தை என அன்னை அன்போடு அழைக்கும் போப் அவர்களைச் சந்திக்குமளவுக்கு பணி செய்தார்.

எந்த அரசியல் தலைவரை வேண்டுமானாலும் அன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் எனுமளவுக்கு அரசியல் தலைவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

வங்காள முதல்வரிடம் அனுமதி கேட்காமலேயே அடிக்கடி சென்று தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமளவுக்கு அன்னியோன்யம் கொண்டிருந்தார் அன்னை.

இந்திராகாந்தி அவர்களின் குடும்பத்தினரோடு அன்னை அரசியல் கலக்காத நெருங்கிய நேசம் கொண்டிருந்தார். தலைவர்கள் பதவியில் இருந்தாலும், பதவி இல்லாமல் இருந்தாலும் ஒரேபோல பாவிக்கும் உன்னத மனமே அன்னையின் பலமாக இருந்தது.

அன்னையைத் தேடி விருதுகள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் அன்னையோ எதையுமே தனது பெருமையைப் பறைசாற்ற பயன்படுத்தவே இல்லை. எந்த பெரிய விருது வந்திருக்கிறது என்று சொன்னாலும் ஒரு சிறு சலனம் கூட காட்டாமல் இயல்பாகவே இருந்தார் அன்னை.

கேம்பிரிட்ஜ், ஹார்வேர்ட் என வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் பல இந்தியப் பல்கலைக்கழகங்களும் அன்னைக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன.

அன்னையின் நினைவாக இந்திய அரசு அன்னைக்கு தபால் தலையும் வெளியிட்டது. ஸ்வீடன் நாடும் அன்னையை கௌரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட்டது.

பல நாடுகள் அன்னையை உலகின் மிகச் சிறந்த பெண் என தேர்ந்தெடுத்து கௌரவித்தன. பல பத்திரிகைகளின் கருத்துக் கணிப்புகளில் அன்னை அமோகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962ம் ஆண்டு அன்னை இந்திய நாட்டின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றபின் அவரைத் தேடி வந்த விருதுகள் கணக்கற்றவை. அவற்றைப் பற்றிய கணக்கை சகோதரிகளோ, அன்னையோ வைத்திருக்கவும் இல்லை என்பதே அவர்கள் புகழை எந்த அளவுக்கு வெறுத்தார்கள் என்பதன் சாட்சி.

அதன் பின் அன்னைக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான மகாசெசே எனும் விருது வழங்கப்பட்டது.

1971 ம் ஆண்டு ஜாண்.எஃப்.கென்னடி சர்வதேச விருதும், நல்ல சமாரியன் விருதும் வழங்கப்பட்டது.

1972ம் ஆண்டு அன்னை தனது உலகளாவிய பணிகளுக்காக ஜவஹர்லால் விருது பெற்றார். கருணா தத் எனும் விருதையும் ஜனாதிபதியிடமிருந்து இதே ஆண்டு பெற்றார்.

1973ம் ஆண்டு ஏப்பிரல் 25ம் நாள் அன்னைக்கு லண்டனில் வைத்து டெம்பிள்டன் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.

1979ம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள் அன்னைக்கு உலகில் மிக அதிகமாக மதிக்கப்படும் நோபல் பரிசு அன்னையின் சமாதானப் பணிகளுக்காக வழங்கப்பட்டது. ரவீந்திர நாத் தாகூர், சர் சி. வி ராமன் இவர்களுக்குப் பின் இந்திய மண் மூன்றாவது முறையாக நோபல் பரிசை வாங்கியது.

ஏழைகள், ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், அனாதைகள், தொழுநோயாளிகள், ஊனமுற்றோர் எனும் எனது சகோதரர்களின் பெயரால் இந்த விருதைப் பெற்றுக் கொள்கிறேன். என அன்னை ஏற்புரை வழங்கினார்.

அன்றைய தினத்தில் அவருக்கு அளிக்கப்பட இருந்த மலர்கொத்து வேண்டாமென அன்னை மறுத்தார். அதற்குப் பதிலாக அந்த பணத்தை ஏழைகளின் நலனுக்கென பெற்றுக் கொண்டார்.

நோபல் பரிசின் விருந்தைக் கூட அன்னை மறுத்து அந்த பணத்தையும் ஏழைகளுக்காகவே செலவழித்தார்.

1980 ம் ஆண்டு அன்னைக்கு இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” எனும் விருது வழங்கப்பட்டது. பிறப்பால் இந்தியர் அல்லாத ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.

1983ம் ஆண்டு அன்னைக்கு பிரிட்டிஷ் இளவரசர் “ஆர்டர் ஆஃப் மெரிட்” என்னும் மிக உயரிய விருதை  வழங்கினார்.

1987ம் ஆண்டு சோவியத் அமைதிக் குழுவினரின் தங்கப் பதக்கம் அன்னைக்குச் சூட்டப்பட்டது.

அன்னை வாங்கிய விருதுகள் நூற்று இருபத்து நான்கு என்கின்றன புள்ளி விவரங்கள். ஆனால் அன்னையின் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரிகள் எண்ணிக்கை இதைவிட நிச்சயம் அதிகமே என்கின்றனர்.

எந்த விருதானாலும், எந்த பரிசுப்பொருளானாலும் அன்னை அதைக் கொண்டு ஏழைகளுக்கு என்ன செய்ய முடியும் என்றே பார்ப்பார். போப் அன்னைக்கு அன்பளிப்பாய் அளித்த காரைக்கூட பெற்றுக் கொண்ட உடனேயே ஏலம் விட்டு பணத்தை ஏழைகளுக்காய் செலவிட்டவர் அன்னை.

அன்னை தனி நபராய், இறைவனின் கரம் பிடித்து திருச்சபையின் ஆசீரோடு ஆரம்பித்த பணி 1997ல் சுமார் 4000 முழுநேரப் பணியாளர்களுடன், 697 நிறுவனங்களுடன் 131 நாடுகளில் செயல்பட்டது என்பது வியப்பே.

அன்னை தனது பணி நாட்களில் பல்வேறு விதமான சோதனைகளுக்கும், மனப் போராட்டத்திற்கும் உட்பட்டார். ஆனால் அவற்றை மறைக்கவில்லை.

தான் பெரும் போராட்டத்தில் இருப்பதாகவும் பல வேளைகளில் வெறுமையை உணர்வதாகவும் அன்னை பல கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

மிகவும் உறுதியான புனிதத் தன்மை வாய்ந்த, இறைவனின் ஆழமான பிடிப்பு கொண்ட அன்னை தனது சோதனைகளையெல்லாம் தாண்டி, உடைத்து, இறை பணியில் உறுதியாய் இருந்து தனது விசுவாசத்தைக் காத்துக் கொண்டார்.

1997 மார்ச் 13ம் தியதி.

அன்னை முதன் முதலாக தலைமைப் பொறுப்பை விட்டு விலகினார். சகோதரிகள் மிகவும் கவலையடைந்தனர்.

அன்னை இல்லாத ஒரு இயக்கத்தை அதுவரை அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அன்னை அன்பையும், உயிரையும், தன்னை முழுவதுமாய் ஊட்டி வளர்த்த இந்த சபையின் தலைமைப் பொறுப்பை அன்னை சகோதரி நிர்மலாவிற்கு வழங்கினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *