அன்னை 21 : சர்வதேச அரங்கில் அமைதிப் புறா

சர்வதேச அரங்கில் அமைதிப் புறா

 

வாஷிங்கடனின் அன்னை தெரசா அழைக்கப்பட்டிருந்தார்.

மூவாயிரம் ‘பெரிய மனிதர்கள்” கலந்து கொண்ட விழாவில் அன்னை பேசுவதற்காக அழைக்கப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார்.

அமெரிக்காவின் மிகப்பெரும் தலைவர்கள் அனைவரும் அந்த விழாவில் அன்னையின் பேச்சைக் கேட்க அமர்ந்திருந்தனர்.

முதிய அன்னை எழுந்தாள்.

தன்னுடைய மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். தன்னை வரவழைத்த விருந்தினர்களை வாழ்த்தியோ, அவர்களை பாராட்டியோ, உதவி கேட்டு விண்ணப்பித்தோ அன்னை பேசவில்லை.

அன்னை விவிலியத்தில் இயேசு சொன்ன அன்னைக்கு மிகவும் பிடித்தமான பகுதியுடன் ஆரம்பித்தாள்.

இறுதித் தீர்வு நாளில் இயேசு இறந்தோர் அனைவரையும் ஒன்று கூட்டுவார். அவர்களை வலது புறமாகவும், இடது புறமாகவும் இரண்டு பிரிவாகப் பிரிப்பார்.

வலது புறம் இருப்பவர்களைப் பார்த்து. வாருங்கள் என் பிரியத்துக்குரியவர்களே. நீங்கள் விண்ணகம் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன் நீங்கள் உண்ணத் தந்தீர்கள். தாகமாய் இருந்தேன் குடிக்கத் தந்தீர்கள். அன்னியனாய் இருந்தேன் வரவேற்றீர்கள். நோயுற்று இருந்தேன் எனக்கு ஆறுதல் தந்தீர்கள், சிறையில் இருந்தேன் என்னை வரவேற்றீர்கள் என்பார்.

அப்போது அவர்கள். ஆண்டவரே எப்போது நீர் பசியாய் இருக்கக் கண்டு உமக்கு உண்ணத் தந்தோம், எப்போது நீர் தாகமாய் இருக்கக் கண்டு உமக்கு குடிக்கத் தந்தோம், எப்போது நீர் நோயுற்று இருக்கக் கண்டு உமக்கு ஆறுதல் சொன்னோம், எப்போது நீர் சிறையில் இருக்கக் கண்டு உம்மைப் பார்க்க வந்தோம் என்பார்கள்.

அதற்கு அவர்

சின்னம் சிறிய சகோதரர்கள் ஒருவருக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்பார்.

பின் இடது பக்கம் நிற்போரை நோக்கி. என்னை விட்டு அகன்று போங்கள். நான் பசியாய் இருந்தபோது நீங்கள் எனக்கு உண்ணத் தரவில்லை. தாகமாய் இருந்தேன் குடிக்கத் தரவில்லை. அன்னியனாய் இருந்தேன் வரவேற்கவில்லை. நோயுற்று இருந்தேன் சந்திக்க வரவில்லை. சிறையில் இருந்தேன் என்னைப் பார்க்க வரவில்லை என்பார்.

அவர்களோ, ஆண்டவரே எப்போது நீர் இப்படியெல்லாம் இருக்கக் கண்டு உமக்கு பணிவிடை செய்யாதிருந்தோம் என்பார்கள்.

இயேசுவோ, சின்னம் சிறிய சகோதரர்கள் ஒருவருக்கு நீங்கள் இவற்றைச் செய்யாத போதெல்லாம் எனக்கே செய்யவில்லை. என்பார்.

அன்னை தனது உரையை ஆரம்பிக்க மக்கள் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இறைவன் நம்மிடம் மாபெரும் அன்பு வைத்திருக்கிறார். எனவே தான் தனது ஒரே மகனான இயேசுவை உலகிற்கு அனுப்பி சிலுவையில் அவரை பலியாக்கினார்.

இயேசு அன்னை மரி மூலமாக வந்தார். அன்னை இயேசுவைக் கருத்தாங்கியதும் அன்னையின் வாழ்க்கை மாறிவிடுகிறது. அன்னை மரி எலிசபெத் வீட்டிற்குச் சென்று வாழ்த்துகிறாள். வாழ்த்தைப் பெறும் எலிசபெத்தும் கர்ப்பமாய் இருக்கிறார்.

அன்னையின் வாழ்த்தைக் கேட்டவுடன் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆனந்தத்தால் துள்ளியது. கருவில் இருந்த திருமுழுக்கு யோவானுக்கே இயேசு ஆனந்தக் களிப்பை அளித்தார்.

நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்று இயேசு சொன்னார். அதே அன்பை நாம் கடை பிடிக்க வேண்டும். இன்று 105 நாடுகளில் அந்த பணியைத் தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

இயேசுவே உம்மை நேசிக்கிறேன் எனும் வார்த்தைகள் அன்பை வெளிப்படுத்தாது. “கண்ணால் காணும் சகோதரனுக்கு அன்பைச் செலுத்தாமல் கண்ணால் காணாத கடவுளுக்கு அன்பு செலுத்த முடியாது” என்றார் இயேசு.

நாம் பார்க்கின்ற, நம்மோடு பேசுகின்ற, நம்மைத் தொடுகின்ற சகோதரனுக்கு அன்பு செலுத்தாமல் நம்மால் கடவுளை அன்பு செய்தல் என்பது இயலாத காரியம்.

“தாகமாயிருக்கிறேன்” என இயேசு சிலுவையில் சொன்னது அன்பின் மீதான தாகத்தைத் தான் குறிக்கிறது. அன்பு அனைவருக்கும் இருக்க வேண்டும், ஏழை பணக்காரன் என வேறுபாடு இல்லாமல்.

ஒருமுறை முதியோர் இல்லம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டிருந்த பெற்றோர் நிரம்பியிருந்தார்கள். அவர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

நல்ல உணவு, உடை , இருக்கைகள் பொழுது போக்க தொலைக்காட்சி என அனைத்துமே இருந்தன.

ஆனால் எல்லா முதியவரின் கண்களும் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. தன்னை இங்கே எறிந்து விட்டுச் சென்ற மகனின் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமா எனும் ஏக்கத்தையே அனைத்து விழிகளும் பிரதிபலித்தன.

நிராகரிக்கப்படும் நிலையே வறுமையின் உச்சம். இதுவே ஆன்மீக வறுமை. மறக்கப்பட்ட நிலையில் தள்ளப்படுபவர்களின் நிலை எத்துணை பரிதாபமானது என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்போதே முடிவெடுப்போம். நமது குடும்பங்களில் யாரேனும் அன்புக்காய் ஏங்குகிறார்களா ? யாரையேனும் நாம் நிராகரித்திருக்கிறோமா ? யாரேனும் வேண்டாமென ஒதுக்கியிருக்கிறோமா. இந்த இடைவெளிகளை குடும்பங்களில் சரி செய்வோம்.

குடும்பங்களில் சரியான கவனிப்பும் அன்பும் இல்லாத நிலை குழந்தைகளை தவறான பாதைக்கும், போதைக்கும் வழியனுப்பி வைக்கிறது. தங்கள் பணிகளில் அதிக நேரம் செலவிட்டு குடும்பத்தைக் கவனிக்காத பெற்றோர் பெரும் தவறு செய்கின்றனர்.

உலக சமாதானத்தைக் கெடுக்கும் மிகப்பெரும் சக்தியாக நான் கருக்கலைப்பைப் பார்க்கிறேன். கருக்கலைப்பு என்பது கருவிலேயே குழந்தையைப் படுகொலை செய்வது.

தனது குழந்தையைப் படுகொலை செய்யும் தாயிடம் தாயன்பு எங்கே இருக்கிறது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் எந்த நாடும் வன்முறையை ஆதரிக்கிறது. கருவில் தனது குழந்தையைக் கொல்ல அனுமதிப்போம் எனில் நாம் எப்படி கொலை செய்வது தவறு என போதிக்கவோ, சட்டம் இயற்றவோ முடியும் ?

கருக்கலைப்பு சுயநலத்தின் வெளிப்பாடு. தங்கள் சுய லாபத்துக்காக குழந்தையைப் பலியிடும் கொடுமை. இறைவனின் கொடையான குழந்தைகளை படுகொலை செய்வதை ஆதரிக்கும் போக்கு சுயநலத்தின் உச்சகட்டமல்லவா ?

அன்னை பேசப் பேச அவையிலிருந்தவர்கள் நெளிந்தனர். செயற்கையாய் புன்னகைத்தனர். ஆனால் அன்னை நிறுத்தவில்லை

கருக்கலைப்பை நியாயப்படுத்தும் எந்த நாடும் தனது மக்களுக்கு வன்முறையையே போதிக்கிறது, அன்பை அல்ல.

அன்னை பேச அமெரிக்க ஜனாதிபதி தடுமாறினார். அவருடைய முகத்தில் சொல்ல முடியாத உணர்ச்சிகள் வெளிப்பட்டன.

அன்னை தொடர்ந்தார்.

ஏராளமானோர் இந்தியாவில் வறுமையினால் குழந்தைகள் மடிகின்றன, ஆப்பிரிக்காவில் மடிகின்றன என வருந்துகின்றனர். போர் வருவதனால் பலர் மடிகிறார்கள் என்றெல்லாம் கவலைப்படுகின்றனர். இந்த கரிசனை நல்லது தான். ஆனால் எத்தனை பேர் கருவிலேயே கொல்லப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்காய் கவலைப்படுகிறீர்கள் ?

உங்களுக்கு உங்கள் குழந்தை தேவையில்லையெனில் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் வளர்க்கிறேன் அந்த சின்ன இயேசுவை. கொலை செய்து விடாதீர்கள்.

அழிப்பதை விட என்னிடம் அளிப்பது சிறந்ததல்லவா ?

தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் என்றாரே கடவுள் ! உன்னை என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் என்றாரே அவர். கருவில் இருக்கும் குழந்தைகளும் இயேசுவின் கையில் வரையப்பட்டிருக்கின்றனர். அதை நீங்கள் அழிக்கத் துணிவது அநியாயமல்லவா ?

கல்கத்தாவிலிருக்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்து சுமார் மூவாயிரம் குழந்தைகள் இதுவரை தத்து கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் ஒவ்வோர் குடும்பத்திற்கு ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும், இறை பிரசன்னத்தையும் அளித்திருக்கின்றனர்.

ஒருமுறை தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பெரிய நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நான் அந்த தாயை அழைத்துச் சொன்னேன். அந்தக் குழந்தையை என்னிடம் தந்து விடுங்கள். நான் உங்களுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தையைத் தருகிறேன்.

அந்த தாய் சொன்னாள். அன்னையே முதலில் எனது உயிரைக் கேளுங்கள் பிறகு என் குழந்தையைக் கேளுங்கள். சொல்லும் போதே அந்தத் தாயும், அன்னையும் அழுதனர்.

இது தான் அன்பு. இந்த அன்பைத் தான் நீங்கள் அழிக்கிறீர்கள். “என் பெயரால் ஒரு குழந்தையை ஏற்றுக் கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக் கொள்கிறான்” என்கிறார் இயேசு.

கருக்கலைப்பு கருத்தடையின் நீட்சியாய் இருக்கிறது. இயற்கையான முறையில் கரு உருவாவதைத் தடுப்பதே சிறந்தது.

ஒருமுறை சாலை ஓரத்தில் ஒரு பெண் மரணத் தருவாயில் கிடப்பதைக் கண்டேன். விரைந்து அவளை அணுகி படுக்கையில் கிடத்தி என்னிடம் இருந்த அன்பையெல்லாம் விரல்களில் நிறைத்து அவளுடைய கரம் பற்றினேன்.

அவளுடைய முகத்தில் அழகிய புன்னகை வந்தமர்ந்தது. அவளுடைய உதடுகள் முனகின.

ஏதோ உணவு தான் கேட்கிறாள் என்று அவளுடைய வாய் அருகே குனிந்தேன். அவள் மீண்டும் முனகினாள். நான் அதிர்ந்து போனேன்.

“மிக்க நன்றி” என்பதே அவளுடைய அந்த கடைசி இரண்டு வார்த்தைகள்.

அதன் பின் அவளிடம் உயிர் இருக்கவில்லை.

ஒரு நேசத்தின் தொடுதலுக்காக உலகில் எத்தனை உயிர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன என்பதை இந்த நிகழ்வு எனக்கு விளக்கியது.

இன்னொரு முறை தெருவில் கிடந்த ஒரு மனிதரை இல்லத்திற்கு தூக்கி வந்தேன். அவனுடைய உடலில் ஒரு பாகத்தை புழுக்கள் அரித்து தீர்த்திருந்தன.

சோகத்தின் மொத்த உருவமாக இருந்தான் அவன். சாக்கடையின் மீது கிடந்தது அவனுடைய பாதி உடல்.

அவனை இல்லத்தில் கொண்டு வந்து தூய்மைப்படுத்தி, நல்ல ஆடைகளை உடுத்தி படுக்கையில் படுக்க வைத்த போது அவன் எனது கரம் பற்றினான்.

“அம்மா.. நான் ஒரு நாயைப் போல தெருவில் கிடந்தேன். என்னை ஒரு தேவதை போல இங்கே மாற்றியிருக்கிறீர்கள்” என்றான். பின் புன்னகைத்தான். அப்படியே இறந்து விட்டான். நான் அதிர்ந்து விட்டேன்.

இந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதன், யாரையுமே குற்றம் சாட்டாமல், தன்னுடைய நிலையை நொந்து கொள்ளாமல் வாழ்க்கையை அன்பின் வெளிப்பாடாய் காணும் உன்னத மனநிலையில் இருந்திருக்கிறான் என்பதே சிலிர்ப்பூட்டியது. இவர்கள் பொருளாதார ஏழ்மையிலும், ஆன்மீக செழுமையிலும் இருக்கிறார்கள்.

நாங்கள் செய்வது சமூகப்பணி அல்ல. ஆன்மீகப் பணியே. ஆன்மீகப் பணி என்பது சமூகத்திலுள்ள மக்களுக்கு அன்பை அளிப்பதும், அவர்களுடைய தேவைகளைச் சந்திப்பதும், இறைவனின் அன்பை அவர்களுக்கு செயல் முறையில் காட்டுவதுமே.

ஒருமுறை அருகிலிருந்த ஒரு இந்து குடும்பத்தில் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக சொன்னார்கள். உடனே அரிசி எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றேன்.

அந்தத் தாய் ஏகமாய் மகிழ்ந்தாள். உள்ளே ஓடினாள். அரிசியை வாங்கிக் கொண்டு என்னை அமரச் சொல்லி விட்டு வெளியே ஓடினாள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவளிடம் கேட்டேன். என்ன அத்தனை அவசரமாய் போனீர்கள் ?

“அவர்களும் பட்டினியில் இருக்கிறார்கள் “ அவள் பதில் சொன்னாள்.

“அவர்களா ?” நான் கேட்டேன்.

“ஆம். பக்கத்து வீட்டு இஸ்லாமியர் குடும்பம் மிகவும் பட்டினியில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் அரிசியைப் பகிர்ந்தளிக்கச் சென்றேன்” அவள் சொன்னாள்.

எனது கண்களில் கண்ணீர். இது ஆனந்தக் கண்ணீர். ஆன்மீகத்தின் உன்னத நிலையில் அவர்கள் இருப்பதைக் கண்ட ஆனந்தக் கண்ணீர். பகிர்தலில் உன்னத ஆனந்தத்தை அந்தக் குடும்பம் கண்டு கொண்டிருந்தது.

எங்கள் இல்லங்களில் இருப்பவர்கள் நோயாளியாகவோ, வறுமையிலோ, உடல் ஊனத்திலோ இருக்கலாம். ஆனால் எல்லோரிடமும் நிரம்பியிருக்கிறது ஆனந்தம்.

ஒரு அமெரிக்க பேராசிரியர் ஒருமுறை என்னிடம் கேட்டார்.

“அன்னையே நீங்கள் திருமணம் ஆனவரா ?”

நான் சொன்னேன். ஆம். நான் இயேசுவை மணந்திருக்கிறேன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்கா குழந்தைகள் பிறப்பதை அனுமதிப்பதை ஆதரிக்க வேண்டும். குடும்பங்களில் செபம் தவறாமல் நடைபெறவேண்டும். செபம் இருந்தால் மற்றவை தானாய் வந்து விடுகின்றன.

இறைவனோடு நாம் நெருங்கி வருவதன் அறிகுறியே நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் வலிகளும், வேதனைகளும்.

இந்த சபையின் பணிக்காக பணியாளர்களை மனமுவந்து அனுப்பிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இறையாசீர் உங்களோடு இருப்பதாக.

அன்னையின் பேச்சு அங்கிருந்த அனைவரையும் அசைத்தது. சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவிடம் பணிந்து பேசியே பழக்கப்பட்ட உலகத் தலைவர்கள் வியந்தார்கள்.

அன்னை, தனக்காய் பேசவில்லை. அன்னை தானாய் பேசவில்லை. அன்னை இறைவனோடு, இறைவனால் பேசியவள்.

அன்னையின் வார்த்தைகள் பலரை ஈர்த்தன. உண்மையை உணர்த்தின.

அன்னை அமைதியாகவே பேசினாள். ஆனால் அவளுடைய வார்த்தைகள் ஈட்டி முனையாய் மக்களின் மனதை தைத்து நுழைந்தன.

இந்த நிகழ்வு வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக எழுதப்பட்டது.


அன்னை அன்பானவள்

 

அன்னையின் போதனைகள் மனித நேயத்தின் பிரதிபலிப்புகளாகவே இருந்தன. எப்போதுமே விரோதத்தையோ, வெறுப்பையோ, போராட்டத்தையோ தூண்டுவதாய் அன்னையின் மொழிகள் இருக்கவில்லை.

எந்த செயலைச் செய்தாலும் அதை அன்பு கலந்தே செய்யுங்கள். அன்பு கலக்காத எந்த செயலுமே அதன் அர்த்ததை இழந்து விடுகிறது என்பார் அன்னை.

நீங்கள் மனிதர்களை தீர்ப்பிட வேண்டுமென நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் பின் உங்களுக்கு அவர்களை அன்பு செய்ய நேரமில்லாமல் போய் விடும்.

நாம் பெரிய பெரிய செயல்களைச் செய்ய முடியாமல் போகலாம் பரவாயில்லை. ஆனால் சிறு சிறு செயல்களை பெரிய பெரிய அன்பு கலந்து செய்ய முடியும்.

நிராகரிப்பு தான் உண்மையிலேயே மிகக் கொடுமையானது. வறுமையை விடக் கொடியது நிராகரிப்பே.

மக்கள் அனைவருமே இயேசுவின் பிரதிபலிப்புகள். எனவே அவர்களில் இயேசுவைக் காணவேண்டும். நிபந்தனையற்ற அன்பை வழங்க வேண்டும்.

நீங்கள் ஒருவரைப் பார்த்து புன்னகைக்கும் போது அவர்களுக்கு ஒரு பரிசை வழங்குகிறீர்கள். புன்னகை அன்பின் வெளிப்பாடு. அது ஆழத்திலிருந்து வரவேண்டிய அழகான செயல்.

அன்பு இல்லாத இடத்திலிருந்து நல்ல செயல்கள் ஊற்றெடுக்க முடியாது.

நம்முடைய செயல்களல்ல, அந்த செயல்களில் எவ்வளவு அன்பை நிறைத்து செய்கிறோம் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியது.

அன்பு நம்மை நாமே வருத்திக் கொள்ளும் வரை கொடுக்க வேண்டும். எதிர்ப்புகளாலோ இழப்புகளாலோ சுயநலத்தாலோ நின்று போகும் அன்பினால் பலனில்லை. காயத்தைப் பொருட்படுத்தாமல் அன்பு செய்தால், பின் காயம் விலகி அன்பு மட்டுமே நிலைபெறும்.

அன்பு என்பது உள்ளத்தின் ஆழத்திலிருந்து உருவாக வேண்டும். பணத்தினால் அன்பை உருவாக்க முடியாது. இலட்சம் ரூபாய்க்காக நான் ஒரு தொழுநோயாளியைத் தொட முடியாது. ஆனால் இறைவனின் அன்புக்காக இலவசமாக, உண்மையான அன்புடன் பணி செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் அடுத்த வீட்டுக்காரரிடம் அன்பாய் இருக்க வேண்டுமென்று தான் நான் விரும்புகிறேன். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் அடுத்த வீட்டுக்காரரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

இயேசு உலகை அன்பு செய்யுங்கள் என சொல்லவில்லை. ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள் என்று தான் சொன்னார். தன்னில் துவங்காத அன்பை உலகம் உணர முடியாது.

இறையரசு என்பது அன்பினால் கட்டப்பட்டது அதை முதலில் தேடினால் பொருளாதாரம் நம்மைத் தேடி வரும்.

அன்பு என்பது தேக்கி வைப்பதிலல்ல, செலவழிப்பதில் தான். எனவே அன்பை தாராளமாய் செலவழியுங்கள்.

அன்பை அளக்க முடியாது, அளிக்கத் தான் முடியும். நாம் இந்த உலகிற்கு வந்தது உலக மக்களின் எண்ணிக்கையைக் கூட்ட அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி இறைவன் கொடுத்திருக்கிறார். அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் இறைவன் நம் அனைவருக்கும் தந்திருக்கும் பணி.

அன்பை இல்லத்திலிருந்து துவங்க வேண்டும். பெற்றோருக்கு, முதியோருக்கு, வாழ்க்கைத் துணைக்கு, குழந்தைகளுக்கு என அன்பு செலுத்துதல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் உலகின் மிகப்பெரிய வலி வறுமையினாலோ, நோயினாலோ வருவதில்லை. தன்னை அன்பு செய்ய ஒரு நபர் இல்லையே எனும் ஏக்கத்தில் வருவதே.

அன்னை தனது போதனைகளால் மக்களுக்கு வழிகாட்டினார். அவருடைய போதனைகள் எல்லாமே ஆழமாய் சென்று மனித மனங்களில் அமர்ந்து கொண்டன.

 

செபம் ஒளிகாட்டும்

 

செபம் மன்னிக்கும் மனத்தைத் தருகிறது. மன்னிக்கும் மனம் இல்லாதவர்களால் யாரையும் அன்பு செய்ய இயலாது. அன்னை அடிக்கடி சொல்லும் வழிகாட்டல் இது

அன்னை ஒருமுறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் ஒரு மூதாட்டி வாழ்வின் இறுதி மூச்சை சிரமத்தோடு இழுத்துக் கொண்டிருந்தார்.

அன்னை அவள் அருகில் மண்டியிட்டாள். அவளை தனது கரங்களில் ஏந்தினார்.

அவர்களைச் சுற்றி சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. ஈக்கள் அவள் மீது கூடாரமடிக்கத் துவங்கியிருந்தன.

அன்னை அவளிடம் கண்ணீர் மல்க பேசினார்.

“உனக்குப் பிள்ளைகள் இல்லையா ? இந்த சிரமமான சூழலில் இங்கே குப்பையோடு குப்பையாக தனியாக இருக்கிறாயே ?” அன்னையின் குரலிலும் கண்ணீரின் ஈரம் அடித்தது.

“எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.” அவள் சிரமத்தோடு பேசினாள்.

“ அவர்கள் உன்னைக் கவனிப்பதில்லையா ?” அன்னை கேட்டார்

“அவன் தான் என்னை இங்கே எறிந்து விட்டுச் சென்றான். என் மகன்.. என் மகன்… அவன் தான்… நான் அவனுக்கு வேண்டாமாம்” அவள் திக்கித் திக்கி பேசினாள்.

அன்னை அதிர்ச்சியடைந்தாள். எத்தனையோ கனவுகளோடு கருவில் சுமந்து, எத்தனையோ இரவுகளில் தூக்கமின்றி தோளில் சுமந்து, எத்தனையோ சிரமங்களையும் தியாகங்களையும் செய்து வளத்திய அன்னையை தூக்கி எறிய எப்படி மனம் வந்தது மகனுக்கு ? அன்னை அழுதார்.

“நீ உன் மகனை மன்னித்து விடு. அது தான் இப்போது உன்னால் செய்ய முடிந்த மிகப்பெரிய செயல்” அன்னை சொன்னாள்.

மரணத்தின் வாசலில் கால் வைத்திருந்த அந்தத் தாய் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிய அமைதியாய் இருந்தாள்.

“முழு மனதோடு அவனை மன்னித்து விடு” அன்னை மீண்டும் சொன்னார்.

சற்று நேர மௌனம் இருவரையும் இறுக்கிக் கட்டியது. முடிவில் அந்தத் தாய் சொன்னார்

“அன்பு மகனே, உன்னை மன்னிக்கிறேன். நீ நன்றாக வாழ்” திக்கிக் திணறி அந்தத் தாய் அந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

விழிகளில் ஏதோ ஒரு சொல்ல முடியாத நிம்மதி. உதடுகளில் இருந்த வெறுப்பு உதிர்ந்து வீழ்ந்திருந்தது.

அன்னையின் கைகளில் அந்தத் தாயின் தலை சாய்ந்தது.

மன்னிப்பு அன்பின் வெளிப்பாடு. மன்னிக்காத மனம் உண்மையான அன்பைக் கொண்டிருக்க முடியாது.

எத்தனை பிழைகள் செய்தாலும் தன் பிள்ளைகளை மன்னிக்கும் தாயை விட மன்னிப்பிற்கு வேறு சிறந்த உதாரணத்தை உலகில் இருக்க முடியாது.

ஒரு சிறு மன்னிப்பு, ஒரு சிறு புன்னகை, ஒரு சிறு அன்பின் அங்கீகாரம் இவை மனித வாழ்விலும், மனித மனதிலும் ஏற்படுத்தும் மாற்றம் நினைத்துப் பார்க்க முடியாதது என்பதே அன்னையின் பார்வையாய் இருந்தது.

குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே பிரச்சனை என வருகின்றனர், குழந்தைகள் பெற்றோரிடையே பிரச்சனை என வருகின்றனர், பிள்ளைகள் தங்களிடையே பிரச்சனை என வருகின்றனர்.

அனைவருக்கும் அன்னை சொன்னது ஒரே பதில் தான்.

மன்னிக்கும் மனத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அதுக்காக செபியுங்கள்.

நம் அனைவருக்குமே மன்னிப்பு தேவையாய் இருக்கிறது. பிழைகள் செய்யும் ஒவ்வோர் மனிதனுமே கடவுளின் மன்னிப்பையோ, சக மனிதனின் மன்னிப்பையோ எதிர்பார்க்கிறான். எனவே மன்னிப்பு எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

பிறரிடம் எதிர்பார்ப்பதை நாம் பிறருக்கும் வழங்க வேண்டும். “மன்னியுங்கள், மன்னிக்கப் படுவீர்கள்” என்பதே இயேசுவின் போதனையாய் இருக்கிறது.

மன்னிப்பை இயேசு வார்த்தைகளில் சொல்லவில்லை, வாழ்க்கையில் செய்து காட்டினார்.

சிலுவையில் தன் உயிரைத் துறக்கும் கடைசி நிமிடங்களில் கூட மன்னிப்பை வழங்கினார். அதுவும் தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்கே ! அத்தகைய மன்னிப்பை நாம் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பை எப்போதும் எல்லோருக்கும் வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.

இதுவே அன்னையின் மன்னிப்பு குறித்த பார்வையாய் இருந்தது.

 

சாலையில் இறைவன்

 

மௌனத்தின் கனி செபம்

செபத்தின் கனி விசுவாசம்

விசுவாசத்தின் கனி அன்பு

அன்பின் கனி பணிவாழ்வு

பணிவாழ்வின் கனி அமைதி

 

அன்னையின் வாழ்க்கையின் சாரம்சமும், அன்னையின் பார்வையில் ஒவ்வோர் செயல்களிடையே உள்ள பிணைப்பும் இந்த வாசகங்களில் மிளிர்கின்றன.

அன்னை தன்னுடைய பணி வாழ்விலிருந்து செபத்தை எப்போதுமே பிரித்துப் பார்த்ததே இல்லை.

அன்னையின் சகோதரிகளும் செபத்தை எப்போதுமே தங்கள் துணையாக கொண்டிருந்தனர்.

செபத்தையும் இறை விசுவாசத்தையும் அன்னை நெஞ்சில் நிறைத்திருந்தாலும் முக்கியத்துவத்தை அன்னை ஏழைகளுக்கே தந்தார்.

ஒருமுறை அன்னை திருப்பலிக்காகச் சென்று கொண்டிருந்தார். கூடவே சகோதரிகள்.

அன்னை வழியில் ஒரு மனிதனைச் சந்தித்தாள். அவனை நோக்கிச் சென்று அவருக்கு உதவி செய்யத் துவங்கினாள்.

கூட வந்த சகோதரிகள் அன்னையை அவசரப்படுத்தினார்கள்.

“அன்னையே வாருங்கள். திருப்பலி ஆரம்பமாகப் போகிறது. வரும் வழியில் இவரைக் கவனித்துக் கொள்ளலாமே. கொஞ்ச நேரம் தானே ?”

அன்னை தீர்க்கமாய் சொன்னாள்.

“இல்லை. நீங்கள் செல்லுங்கள். நான் ஆலயத்தில் இயேசுவைச் சந்திக்கச் சென்றேன். ஆனால் சாலையிலேயே கண்டு கொண்டேன்” சொல்லிவிட்டு அன்னை அவரை கவனிக்கத் துவங்கினாள்.

ஜெபமாலை சொல்வதை பெரும்பாலான சகோதரிகள் வழக்கமாய் கொண்டிருந்தனர். நடந்து செல்லும்போதும், பணியிடங்களுக்குச் செல்லும் போதும், பயணத்தின் போதும் ஜெபமாலை சொல்வதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.

இது அவர்களுடைய இரத்தத்தில் ஊறிப் போய் விட்டிருந்தது. தூரத்தைக் கூட செபமாலை செபத்தின் தூரத்தைக் கொண்டு, இரண்டு செபமாலை தூரம் என,  அவர்கள் அளக்குமளவுக்கு செபம் அவர்களுக்குள் வேரூன்றியிருந்தது.

செபிக்கும் போது அன்னை தன்னுடைய விசுவாசத்தில் நிலைத்திருக்கும் மன உறுதி வேண்டுமென்றே பல வேளைகளிலும் வேண்டினார். விசுவாசம் நிலைத்திருந்தால் அன்பு விடைபெறாது என்பது அன்னையின் நம்பிக்கையாய் இருந்தது.

குழுவாக அமர்ந்து செபம் செய்வதையும் அன்னை வலியுறுத்துவார். “என் பெயரால் எங்கே இரண்டு மூன்று பேர் கூடியிருக்கிறீர்களோ அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்” என இயேசு சொன்ன வார்த்தையை அன்னை அடிக்கடி நினனவூட்டுவார்.

எந்த செயலைக் கொடுத்தாலும் அதை முழுமையாய் கொடுக்க வேண்டும்.

ஒரு மனிதன் பசியினால் இறக்கிறான் என்றால் அதற்குக் காரணம் கடவுள் அல்ல.

கடவுள் அவனை இறந்து போகச் சொல்லவில்லை. அவனைக் காப்பாற்ற நம்மிடம் சொல்லியிருக்கிறார். ஒரு மனிதன் பசியினால் இறந்தால் அந்த கொடுமை நமது அன்பின்மையினால் விளைந்தது என்பதே உண்மை.

நம்முடைய வாழ்க்கை என்பது பிறருக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொண்டால் உலகம் உன்னதமானதாகி விடும். சுயநலமற்ற உலகமே உண்மையான இறைவனின் உலகம்.

குறைவான செல்வம் இருக்கும் போது அதிகமாய் உதவுகின்றோம். செல்வம் சேரச் சேர இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம். தொலைக்காட்சி இல்லையேல் மகிழ்ச்சி இல்லை என்று கூட சொல்லுகிறார்கள்.

செபம் இறைவனின் அருளை வாங்குமளவுக்கு நமது இதயத்தை விசாலமாக்கும் என்பது அன்னையின் போதனையாய் இருந்தது.

குடும்ப உறவுகள் பலப்படவேண்டுமென்றும், அதற்கு அனைவரும் இணைந்து செபிப்பது மிகவும் நல்ல பயன் தரும் எனவும் அன்னை அடிக்கடி சொல்வார்.

அன்பான வார்த்தைகள் மிகவும் எளிதாக பேசமுடியும். அதன் எதிரொலி மிகவும் சக்தி வாய்ந்தது.

அன்பு இன்றைய அவசரத் தேவையாய் இருக்கிறது. நாம் பல வேளைகளில் நினைக்கிறோம் உண்ண உணவு இல்லாததே கொடுமை என்றும் வறுமை என்றும். ஆனால் அன்பு செய்ய ஒருவரும் இல்லாத நிலையே வறுமைகளிலெல்லாம் கொடுமையான வறுமை.

இறைவனில் முழுமையாய் சரணடைதல் உன்னத நிலை. இந்த நிலையில் இறைவன் தனது பலத்தினால் நமது பலவீனங்களை மூடி விடுகிறார்.

பிறருக்கு உதவும் போது அதில் எப்போதும் புன்னகை கலந்தே செய்யுங்கள். அன்பான ஒரு வார்த்தை பேசும்போது உதடுகள் மட்டுமன்றி, கண்களும், வார்த்தையும் உள்ளமும் எல்லாமே அன்பில் நிரம்பியிருக்கட்டும்.

அன்பை வீதிகளில் வினியோகிக்கும் முன் வீடுகளில் வினியோகியுங்கள்.

வீடுகளில் துவங்காத அன்பு பலனளிப்பதில்லை. நம்மோடு நெருக்கமாக இருக்கும் ஒருவருக்கு நாம் அன்பு கொடுக்கவில்லையெனில் மற்றவர்களுக்கு எப்படி அன்பை அளிக்க முடியும் ?

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள், நீண்ட நேரம் செபியுங்கள். அன்னை குடும்பத்தினருக்காக தான் இறைவனிடமிருந்து பெற்ற தெளிவினை போதித்தார்.

அன்னையின் போதனைகள் நூல் வடிவம் பெற்றன. பலருடைய உள்ளங்களை ஊடுருவிப் பாய்ந்தன.

அன்னையின் போதனைகள் மிக எளிமையாய் இருந்தன. ஆனால் அடர்த்தியாய் இருந்தன.

 

பெண்கள் மாநாட்டில்

 

பீஜிங்கில் நடந்த நான்காவது உலக பெண்கள் தின மாநாட்டிற்கு அன்னை அனுப்பிய செய்தி வித்தியாசமானது.

அன்பு நண்பர்களே, இந்த மாநாடு கடவுளின் பார்வையில் பெண்களின் தேவையைப் பற்றியும், அன்பைப் பற்றியும் பல புரிதல்களைத் தருமென நம்புகிறேன்.

ஆண்களும் பெண்களும் ஒன்றே என பலரும் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அப்படியல்ல. இறைவன் ஆணையும் பெண்ணையும் தனித்தனிக் குணாதிசயங்களோடும், வேறுபட்ட சிறப்பு இயல்புகளோடும் தான் படைத்திருக்கிறார்.

இறைவன் முன்னிலையில் எல்லா படைப்புகளும் சமம் தான், ஆனால் எல்லா படைப்புகளும் ஒன்றே என்று சொல்ல முடியாது. அப்படி நாம் சொல்லும் போது கடவுள் அழகியலோடு படைத்த பல விஷயங்களை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஆண்கள் செய்ய முடிகின்ற செயல்கள் பெண்களால் செய்ய முடியாமல் போகலாம். பெண்கள் செய்கின்ற பல செயல்கள் ஆண்களால் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் ஆணும் பெண்ணும் இணைந்து செயலாற்றும் போது பணிகள் முழுமையடைகின்றன.

ஆண்கள் இறைவனின் அன்பின் ஒரு வடிவம் எனில், பெண்கள் இன்னொரு வடிவம். இரண்டும் இணைந்து பணியாற்றும் போது இறைவனின் அன்பின் முழு வடிவம் நமக்குத் தெரிகிறது.

இதனால் தான் கடவுள் மனித குலத்தை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அவருடைய படைப்பின் முழுமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவுமே நம்மை இறைவன் படைத்திருக்கிறார்.

தாய்மையை நினைத்துப் பாருங்கள். பெண்ணுக்கு இறைவனால் தரப்பட்டிருக்கும் மிகப்பெரிய வரம் அது எனக் கொள்ளலாம். குழந்தை ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் இறைவனின் பிம்பமே.

இத்தகைய மாபெரும் வரத்தையே சாபமாய் நினைத்து கருவிலேயே குழந்தைகளை படுகொலை செய்யும் தாய்மை தனது புனிதத்துவத்தை இழந்து விடுகிறது.

இறைவனின் வரத்தை அழிக்கும் செயல்கள் எல்லாமே இறைவனுக்கு எதிராய் நிகழ்த்தப்படும் பாவமாகவே கருதப்படும்.

தன்னைத் தான் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்யச் சொன்னார் இயேசு. நாம் நம்மை நாமே அன்பு செய்யாவிடில், நம்மைப் படைத்த இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் இயல்புகளோடே நம்மை ஏற்றுக் கொள்ளாவிடில் நாம் எப்படி பிறரை அன்பு செய்ய முடியும் ?

தன்னை நேசிக்காமல் இருப்பதன் அடையாளம் தானே கருக்கலைப்பு ? இது சமாதானத்தின் மேல் விழுகின்ற மிகப்பெரிய போர் அல்லவா ?

சோகமும் மரணமும் உலகில் நிறைவதற்குப் பதிலாக அன்பையும், சமாதானத்தையும் உலகில் நிறைப்பதே சிறப்பானது. கடவுள் அனைவரையும் சகோதர அன்புடன் பழகச் சொன்னார். அந்த அன்பை கடைபிடிக்க வேண்டும்.

நல்ல அன்பு குடும்பத்திலிருந்து முளைக்க வேண்டும். வீட்டில் விளையாத அன்பு வீதிகளில் விளையாது. வீட்டில் அன்பையும், செபத்தையும் பெற்றோர் அறிமுகப்படுத்துவதே குழந்தைகளுக்குச் செய்யும் மிகப்பெரிய நலம்.

சண்டையிட்டு பிளவு பட்டு பிரியும் பெற்றோரின் குழந்தைகள் அன்பை ஏங்கியும், செபத்தை மறந்தும் தவறான வழிகளில் அலைந்து திரிந்து வாழ்க்கையை அழித்து விடும். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் உள்ள சிக்கல் இது தான்.

ஆனால் வீடுகளில் அன்பையும், நேசத்தையும் பரிமாறும் பெற்றோர் இருந்தால் குழந்தைகளும் அதைக் கற்றுக் கொள்கின்றன. அவை கடவுளின் அன்பை தாயின் மூலமாகக் கற்றுக் கொள்கின்றன.

சேர்ந்து செபிக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்கின்றனர். கடவுளின் உயர்ந்த வரமான குழந்தைகளுக்கு முன்மாதிரிகையாக இருக்கின்றனர். இறைவனின் அன்பை பெற்றோர் செயல்முறைப் படுத்துகையில் குடும்பம் அதன் அர்த்தத்தைக் கண்டு கொள்கிறது.

எனவே அனைவரும் அன்பின் ஆனந்தத்தை இதயங்களில் நிறைப்போம். அன்பின் கனிகளை சந்திப்போர் அனைவருக்கும் அளிப்போம். அன்னை மரியைப் போல தூய்மையான உள்ளத்துடனும், பணிவான இதயத்துடனும் வாழ உறுதியெடுப்போம்.

அப்படி இருக்கும் போது நமது இல்லமும், உலகமும் இறைவனுக்கு ஏற்புடையதாய் மாறிவிடுகின்றது.

அன்னையின் கடிதம் அந்த மாநாட்டில் வாசிக்கப்பட்டது. பலருடைய இதயங்களைத் தொட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *