அன்னை 20 : விரிவடைந்த பணி

சிறகு விரிக்க அனுமதி

 

திருச்சபையின் சட்ட திட்டங்கள் சற்று கடினமானவையாய் இருந்தன. அன்னையின் பணி பரந்தபின்னும், அதன் வேர்கள் ஆழமாய் இறங்கிய பின்னும் கல்கத்தாவுக்கு வெளியே சபையைத் திறக்க அன்னைக்கு திருச்சபை அனுமதி வழங்கியிருக்கவில்லை.

பத்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். திருச்சபை உறுதியாய் சொல்லி விட்டது. அது அன்னையின் பணியின் ஆழத்தை வருடங்கள் கொண்டு அளந்து பார்த்தது.

அன்னை தனக்குக் கொடுக்கப்பட்ட பணித்தளத்தில் உண்மையான பணியைச் செய்தார்.

தன்னுடைய பணியை பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அன்னை மிகவும் ஆர்வமுடன் இருந்தார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் சபைப் பணியாளர்கள் செல்ல வேண்டும் எனவும், பல நாடுகளில் கூட கிளைகள் ஏற்படுத்தி பணி செய்ய வேண்டும் எனவும் அன்னை தனியாத தாகம் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் அன்னை மிகவும் பிரபலமாகியிருந்தார். அன்னைக்குத் தேவையான உதவிகள் செய்ய ஆட்கள் இருந்தனர். அன்னையின் சபைக்குத் தேவையான பணியாளர்கள் கிடைத்தனர். ஆனாலும் அன்னை திருச்சபையை விட்டுப் பிரியவில்லை.

திருச்சபையோடு இருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டு பணி செய்யவில்லை. பொறுமையாய் காத்திருந்தார். திருச்சபையின் வரையறைகளை மதித்து செபத்துடன் காத்திருந்தார்.

பேராயரோ அவசரப்படவில்லை. திருச்சபையின் சட்டங்களை மீறி அன்னைக்கு எந்தவிதமான சிறப்பு அனுமதிகளையும் வழங்கவே இல்லை.

1960ம் ஆண்டில் தான் அனுமதி கிடைத்தது.

கல்கத்தாவுக்கு வெளியே கிளைகள் ஆரம்பிக்கலாம் !

அன்னை மகிழ்ந்தாள். மனிதனில் இறைவனைக் காணும் தனது பணியை பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வாய்ப்புக் கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்ந்தாள்.

ராஞ்சியிலுள்ள மலைவாழ் மக்களிடையே ஒரு கிளையை ஆரம்பித்துப் பணிசெய்ய வேண்டும் என அன்னை விரும்பினாள்.

அந்த காலகட்டத்தில் அந்த மலைவாழ் மக்களுக்கு குறிப்பிடும்ப் படியான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே அன்னை அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தார்.

அந்த கிளையைத் திறக்க ஒரு பிரபலமானவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் வந்தார். அவரிடம் அன்னை

“ எங்கள் பணிகளைக் குறித்து உங்களிடம் விவரமாய் சொல்லட்டுமா “ என்று கேட்டார்.

“அன்னையே, உங்கள் பணிகளைக் குறித்து எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே அதைக் குறித்து ஒன்றுமே சொல்ல வேண்டாம். உங்கள் பணிகளின் மீதான ஆர்வத்தினால் தான் நான் இன்று வந்தேன்” என்றார்.

அன்னை மகிந்தாள். அவருக்கு நன்றி சொன்னாள்.

அந்தப் பிரமுகர் நேரு ! அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு !

நேரு அவர்கள் அன்னையின் பணிகளைக் குறித்து நிறையவே அறிந்து வைத்திருந்தார்கள். எனவே தான் அன்னையின் பணிகள் மீதும், அன்னை மீதும் தனிக் கரிசனை கொண்டிருந்தார்கள்.

அதை நிரூபிக்கும் விதமாக ஒரு விருதுக்காய் ஜனாதிபதியிடம் அன்னையைப்  பரிந்துரை செய்தார்.

அந்த விருது அன்னைக்கு 1962ம் ஆண்டு வழங்கப்பட்டது.

நான் ஒரு இந்தியப் பெண். இந்தியா எனது தாய் நாடு என அன்னை எப்போதுமே சொல்லி வந்தாலும், பிறப்பால் இந்தியர் அல்லாத ஒருவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது அதுவே முதல் முறை.

அந்த விருது தான், பத்ம ஸ்ரீ விருது !


ஆண்கள் சபை

 

அன்னையின் அன்பின் பணியாளர் சபை முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே நடத்தப்பட்டு வந்தது.

பெரும்பாலான பணிகள் சிரமமின்றி நடந்தன. வருடங்கள் செல்லச் செல்ல பணியைக் குறித்து அதிகமான பரிச்சயம் ஏற்பட ஏற்பட சில பணிகளைச் செய்ய ஆண்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என அன்னை நினைத்தார்.

குறிப்பாக சாலையில் நிராகரிக்கப்பட்டிருக்கும் மனிதர்களைத் தூக்கி வண்டியில் ஏற்றுவது, சபைக்குத் தேவையான கடினமான உடலுழைப்பு தேவைப்படும் பணிகளைச் செய்வது போன்றவற்றைச் செய்ய ஆண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என அன்னை நினைத்தாள்.

இதைக்குறித்து அன்னை தந்தை வான் எக்சமின் கருத்தைக் கேட்டார். அவர் ஏற்கனவே இப்படி ஒரு சிந்தனையை மனதுக்குள் கொண்டிருந்ததால் ஆனந்தமடைந்தார்.

நிச்சயமாகச் செய்யுங்கள் என ஊக்கம் கொடுத்தார். அன்னைக்கு தந்தை வான் எக்சமின் வார்த்தைகள் பெரும் ஊக்கமளித்தன.

தந்தை வெறுமனே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அமைதியாய் இருப்பவர் அல்ல. அவர் அதற்குரிய மற்ற செயல்களிலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தி அந்த செயல் முடியும் வரை துணை நிற்பவர்.

அவர் நேராக பேராயரிடம் பேசினார். இப்போது இருந்த பேராயர் புதியவர். ஆனால் அன்னையின் பணிகளை நன்கு அறிந்தவர். அவருக்கு அன்னையின் இந்த முடிவு வரவேற்கத் தக்கதாகவே இருந்தது.

அவர் ஒப்புதல் அளித்தார்.

அன்னை ஆனந்தமடைந்தார்.

1963ம் ஆண்டு ! ஆண்களுக்கான சபை ஒன்று ஆரம்பமானது.

ஆண்களுக்கான சபை ஒன்றை ஆரம்பிப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அன்னை ஆரம்பித்த சிசுபவனில் சிறுவர்கள் ஏராளம் பேர் இருந்தனர்.

அந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் பதிநான்கு வருடங்கள் ஆகிவிட்டிருந்ததால் அவர்களில் பலர் இளைஞர்களாகி இருந்தனர். அவர்களை சகோதரிகள் பராமரிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

பணி என்று வந்து விட்டால் ஆண் என்றும் பெண் என்றும் இல்லையே. ஆண்களும் பணியில் இணைந்தது அன்னைக்கும், அன்னையின் பணிக்கு துணையாய் இருந்தவர்களுக்கும் ஆனந்தம் அளிப்பதாகவே இருந்தது.

ஆனால்…

ஆண்களின் ஒரு சபை ஆரம்பிக்கப் பட்டால் அதற்கு பெண் தலைமை இருக்கக் கூடாது ! இப்படி ஒரு சட்டம் திருச்சபையில் அப்போது இருந்தது!

அப்படியெனில் அன்னை ஆண்கள் சபைக்குத் தலைமையாக இருக்க முடியாது. வேறொரு நபர் தான் தலைமை ஏற்க வேண்டும்.

அன்னை இதனால் சற்றும் கவலைப்படவே இல்லை. தனக்குத் தேவையானது பணி மட்டுமே. தலைமையை இறைவன் நியமிக்கும் யார் வேண்டுமானாலும் ஏற்கலாம் என்பதே அன்னையின் முடிவாய் இருந்தது.

நல்ல ஒரு தலைவர் வேண்டும் என்பதற்காக அன்னை இயேசு சபை போன்ற பல துறவற சபைகளிலுள்ள தலைவர்களையும், சிறந்த பணியாளர்களையும் அணுகினார்.

ஆனால் பலரும் தங்கள் பணிகளை விட்டு விட்டு அன்னையின் பணியில் இணைய இசைவு தெரிவிக்கவில்லை.

அன்னை செபித்தாள். நல்ல ஒரு தலைமையை கண்டுபிடித்துத் தரும் பொறுப்பை இறைவனின் காலடிகளில் சமர்ப்பித்தாள்.

இறைவன் இசைந்தார்.

திரு. பால் என்பவர் ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வந்தார். அவர் அன்னையின் ஆண்கள் சபையில் இணைந்து பணியாற்ற விரும்பினார். அன்னைக்கு அது குறித்து கடிதம் எழுதினார்.

அன்னை இறைவனின் தேர்வை ஏற்றுக் கொண்டார். பால் அன்னையின் சபையில் இணைந்தார். தனது பெயரை ஆண்ட்ரூ என மாற்றிக் கொண்டார்.

ஆண்கள் சபையின் தலைமைப் பணியை ஏற்றார்.

பெண்கள் சபைக்கு இருப்பது போல ஒரு சீருடை ஆண்கள் சபைக்கும் வேண்டும் என அன்னை நினைத்தாள்.

ஆனால் ஆண்ட்ரூ அதை விரும்பவில்லை. ஆண்களுக்கு பாதுகாப்புத் தேவை இருக்காது எனவும், சீருடை இல்லாமல் இருந்தால் இன்னும் அதிகமான மக்களிடம் வேறுபாடின்றி கலக்க முடியும் எனவும் அவர் நினைத்தார்.

சகோதரிகள் அணிவதைப் போல ஒரு சிலுவையை தங்கள் சட்டையின் தோள் பகுதியில் அணிந்து கொள்ளலாம் எனவும் ஆண்ட்ரூ பரிந்துரை செய்தார்.

அன்னை தன்னுடைய விருப்பங்களை ஒதுக்கினார். ஆண்களின் தலைமை என்ன நினைக்கிறதோ அவை பணியின் மூலத்தைப் பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை என நினைத்தார்.

சீருடை இல்லாமல் ஆண்கள் பணி செய்ய ஆரம்பித்தனர். இதனால் பலவிதமான இன்னலுக்கும் அவர்கள் ஆளானார்கள். எனினும் ஆண்களுக்குப் பொதுவான சீருடை என்பது உருவாகவில்லை.

ஆண்களின் சபைக்கும் பெண்களின் சபைக்குமிடையே கருத்து ரீதியாகவும், பணி ரீதியாகவும், அணுகுமுறை ரீதியாகவும் எந்த வேறுபாடும் காட்டப்படவில்லை.

அனைவரும் ஒரே போல திறந்த மனதுடன், உண்மையான உள்ளத்துடன் பணி செய்தனர். மனித நேயத்தை தளும்பத் தளும்ப வினியோகித்தனர்.

ஆனால் சில செயல்பாடுகளின் மாற்றங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக ஆண்கள் ஓய்வு நேரங்களில் சில பொழுதுபோக்குகளில் ஈடுபட்டனர். விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். பெண்களைப் போல முழுக்க முழுக்க தியானத்திலும், மறைக்கல்வியிலும், வீட்டுப் பணிகளிலும் ஈடுபடவில்லை.

அன்னையின் ஆலோசனையின்றி ஆண்ட்ரூ எதையும் செய்யவில்லை. அன்னை சொல்லும் கருத்துக்களுக்கு தன்னிடம் மாற்றுக் கருத்து இருந்தால் அதைத் தெரிவிக்கவும் தயக்கம் காட்டவில்லை.

சுயநலமற்ற பணி என்று வந்தபிறகு இறைவனின் விருப்பமே இறுதி விருப்பம் என்பதில் இருவரும் எப்போதுமே ஒத்த சிந்தனையுடன் இருந்தார்கள்.

ஹௌரா ரயில் நிலையம் போன்ற இடங்களில் வசிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டோர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் போன்றவர்களிடையே ஆண்கள் பணி செய்யத் துவங்கினர்.

இவர்கள் இரவிலும் பகலிலும் பணி செய்தனர். தேவையான நேரங்களிலெல்லாம் அலைந்து திரிந்தனர்.

பல இளைஞர்கள், ஊனமுற்றோர் ஆகியோர் ஆண்கள் சபையினால் கவனிக்கப்பட்டு தையல், ரேடியோ பழுது நீக்குதல், விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பலர் இத்தகைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் புதிய வாழ்க்கையையே கண்டு கொண்டனர்.

இவர்களுக்காக சில இல்லங்களும் திறக்கப்பட்டன.

இந்தியாவில் சகோதரர்கள் சபை வளர்ந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் வெளிநாட்டு சபை ஆரம்பமானது.

வியட்னாமில் ஆண்ட்ரூ ஒரு ஆண்கள் சபையை நிறுவினார்.

அதன் பின் ஆண்கள் சபை உலகின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜப்பான், தாய்லாந்து, பிரேசில், ஹெய்தி உட்பட பல்வேறு நாடுகளில் ஆண்களின் இல்லம் வளர்ந்தது.

அன்னையின் பணி ஆண்கள் சபை வழியாகவும் உலகின் கோடிக்கணக்கான ஏழைகளைத் தொட்டது.

 

அடுத்த அங்கீகாரம்

 

கல்கத்தாவுக்கு வெளியே முதல் கிளையைத் துவங்கிய பின் அன்னை பல கிளைகளை விரைவாக துவங்கினார்.

ஆக்ராவிலும், ஜான்சியிலும் அன்னை தனது சபையின் கிளைகளைத் தொடங்கினார்.

அதன் பின் பணிகள் வீரியமடைந்தன.

மும்பை, பாட்னா, கோவா, டார்ஜிலிங் என பல இடங்களில் அன்னையின் இல்லம் துவங்கப்பட்டது.

அனுமதி கிடைத்த அந்த ஆண்டின் இறுதியில் சுமார் இருபத்து ஐந்து இல்லங்கள் எனுமளவுக்கு சபையின் கிளைகள் பரவின.

இந்த எண்ணிக்கை சீராக வளர்ந்து கொண்டே இருந்தது. பணிகளைப் பொறுத்தவரை சீரான நடையும், தெளிவான பார்வையும் எல்லா கிளைகளிலும் இருந்தன.

மாநிலங்களின் அடிப்படையில் சபைகள் நிர்வாகிக்கப் பட்டன. அந்தந்த மாநில சபைகள் மாநிலத் தலைவியின் கண்காணிப்பின் கீழ் வந்தன.

நிதிகளும் கூட மாநில அளவில் நிர்வகிக்கப் பட்டது. பின் அவை மாநில வரையறைகள் இல்லாமல் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட்டது.

மாநிலத் தலைவியே பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டது. அன்னை மாநிலங்களுக்கு அடிக்கடி வருகை புரிந்தார். தனது பணியின் ஒரு முக்கியமான அங்கமாக சபைகளைச் சென்று சந்திப்பதையும், அவர்களுக்கு ஊக்கமூட்டுவதையும் கொண்டார்.

மாநில தலைமையால் தீர்க்க முடியாத குழப்பங்கள் அல்லது எடுக்கப் படவேண்டிய முக்கிய முடிவுகள் மட்டும் அன்னையின் பார்வைக்கு வந்தன.

எந்த இடத்தில் புதிய கிளை துவங்க வேண்டுமெனினும் அன்னையே நேரில் அந்த இடத்திற்குச் சென்று பார்த்து வருவது வழக்கம். அதற்காகவும் தனது நேரத்தின் ஒரு பகுதியைச் செலவிட்டு வந்தார்.

இந்தியாவில் பல இடங்களுக்கும் அன்னையின் பணி பரவியது.

கல்கத்தாவுக்கு வெளியே சபைகள் திறக்க அனுமதி கிடைத்திருக்கிறது. இனிமேல் இந்தியாவுக்கு வெளியே சபைகள் திறக்க வேண்டும்.

அன்னையின் தாகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அனுமதிக்காக அன்னையின் மனம் காத்துக் கொண்டிருந்தது. அந்த அனுமதி அதிகம் தாமதமாகாமல் கிடைத்தது.

1965ம் ஆண்டு இந்தியாவுக்கு வெளியே சபைகள் திறக்கலாம் என திருச்சபை அனுமதிக் கதவுகளை அகலத் திறந்தது.

அன்னை ஆனந்தமடைந்தாள்.

வெனிசூலாவில் அன்னை தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சபையை ஆரம்பித்தார்.

வெளிநாடுகளில் சபையைத் துவங்குவதற்கு அன்னைக்குக் கிடைத்த அனுமதி, அன்னையின் மனித நேயப்பணியை உலகளாவ கொண்டு செல்ல பெரிதும் உதவியது.

உலகின் பல நாடுகள் வறுமையிலும், ஏழ்மையிலும், நோயிலும் இருந்தன. அவற்றை அன்னையின் அன்புப் பணியாளர்கள் தீண்டவேண்டும் என இறைவன் விரும்பியதே அவருக்கு அனுமதியை விரைவாய் கொண்டு வந்து சேர்த்தது எனலாம்.

ரோம் அன்னையின் பணிகளை வெகுவாய் பாராட்டி அங்கீகரித்தது. அதன் சாட்சியாய் ஒரு சட்டத் திருத்தத்தை ரோம் செய்தது.

அந்த திருத்தம் திருச்சபை வரலாற்றில் மிகச் சிறப்பானது. அன்னையே எதிர்பாராதது.

அன்னையின் சபை ரோமின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பதே அந்த திருச்சபைச் சட்டம் !

 

தீமையில் விளைந்த நன்மை

 

போப் அவர்களின் வத்திக்கானிலேயே அன்னையின் சபை ஆரம்பிக்கப் பட்டது வியப்புக்குரிய செய்தி.

1968ம் ஆண்டு ரோமில் அன்னையின் இல்லம் ஒன்று திறக்கப் பட்டது.

இந்தியாவிற்கு வெளியே துவங்கிய இரண்டாவது கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் அன்னை லண்டனிலும், ஜோர்தானிலும் அன்னை தனது சபையின் கிளைகளை ஆரம்பித்தார்.

துவக்கம் மட்டுமே தாமதமானது. அனுமதி கிடைத்தபின் கிளைகள் நாட்டின் எல்லா இடங்களிலும் மின்னல் வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

உலகின் பல நாடுகளிலுமுள்ள மக்கள் பணிவாழ்வில் தங்களை இணைக்க முன்வந்ததால் கிளைகள் துவங்கும் பணி துரிதமாக நடைபெற்றது.

ஜப்பான், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பனாமா, சிசிலி, எத்தியோப்பியா, அயர்லாந்து, ரச்ஜ்யா, பிரேசில் உட்பட ஏராளமான நாடுகளில் அன்னையின் அன்பின் சபை பரவியது.

மனித நேயம் மொழி, இனம், மதம் என அனைத்து எல்லைகளையும் கடந்தது என்பதையே இது நிரூபித்துக் காட்டியது.

அன்னையின் பணியாளர்கள் நாட்டின் எந்த மூலையில் சென்றாலும் உடனடியாக அந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு உடனடியாக பணிகளில் ஈடுபடுவது மிகப்பெரிய நிர்வாகத்தை வைத்திருப்பவர்களுக்கே ஆச்சரியத்தை ஊட்டுவதாக இருந்தது.

உண்மையான மனமும், உறுதியான குணமும் இருந்தால் சூழல்கள் பணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதையே அன்னையின் பணி நிரூபித்துக் காட்டியது.

அன்னை உலகெங்கும் கிளைகள் ஆரம்பித்தபின் உலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. எனவே அன்னை தனது நேரத்தில் பாதியை பயணங்களுக்கே செலவிட வேண்டியதாய் இருந்தது.

அன்னை வயதாக வயதாக தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கி, வயது குறைவான திறமையான துறவி ஒருவரை தலைமைப் பதவிக்கு அமர்த்த வேண்டுமென விரும்பினார்.

ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த தலைமைத் தேர்வில் அன்னையைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்கவும் சபை சகோதரிகள் விரும்பவில்லை.

எட்டு நாட்கள் தியானமும், செபமும் நடைபெற அதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் நடக்கும். அந்த தேர்தலில் அன்னையே எப்போதும் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்னை தலைமையில் இருந்தால் பணியாளர்கள் ஒருவித மன பலத்தை இயல்பாகவே பெற்று விடுகின்றனர்.

இதனால் அன்னையே தொடர்ந்து தலைமைப் பதவியில் அமர்ந்து பணிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனினும் அன்னை எதையும் சுமையாய் கருதவே இல்லை.

ஐந்து ரூபாயுடன் கல்கத்தா வீதிகளில் இறங்கிய போது இருந்த அதே உறுதி உள்ளத்தில் இருந்தது.

“ஊனுடலோ வலுவற்றது. ஊக்கம் பெற விழித்திருந்து செபியுங்கள்” என்னும் இயேசுவின் போதனை அன்னையை வலுவூட்டியது. மரியாளின் பாதத்தில் தனது இயலாமைகளையெல்லாம் கொட்டினாள் அன்னை.

“இரசம் தீர்ந்து விட்டது” என மகனிடம் பரிந்து பேசிய அன்னை தனது இயலாமைகளை நிவர்த்தி செய்ய தனது மகனிடம் பரிந்து பேசுவார் என அன்னை உறுதியாய் நம்பினாள்.

1983ம் ஆண்டு அன்னை தனது படுக்கையிலிருந்து கீழே விழுந்து விட்டார்.

எல்லா நிகழ்வுகளிலும் ஒரு நன்மை உண்டு என்பதை அந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.

எழுபத்து இரண்டு வயதான அன்னை படுக்கையிலிருந்து விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

மருத்துவர் சொன்னார், “ நல்ல வேளை அன்னையைக் கொண்டு வந்தீர்கள். இல்லையேல் கண்டு பிடிக்க முடியாமல் போயிருக்கும்”

“எதை டாக்டர் ?”

“ அன்னைக்கு இதய நோய் இருக்கிறது என்பதை” மருத்துவர் சொன்னார்.

சகோதரிகள் அதிர்ந்தனர். ஒட்டு மொத்த உலகமும் அதிர்ந்தது.

அன்னையின் நோய் உலக நாடுகளின் தலைவர்களையும், சபையின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், மக்களையும் ஒட்டு மொத்தமாய் அதிர்ச்சிக் கடலில் இறக்கியது.

அன்னை நலம்பெற வேண்டுமென உலகத் தலைவர்களெல்லாம் தந்தியும், கடிதமும், பிரார்த்தனையும் அனுப்பினர்.

அன்னையின் பணியாளர்கள் “அன்னைக்குக் கூட இதய நோய் வருமா ? நோயாளிகளுக்காகவே துடிக்கும் இதயத்துக்கே நோயா ? “ என துடித்தனர்.

அன்னையின் பணியில் வாழ்க்கையில் விடிவைக் காணும் மக்களோ

இதென்ன விந்தை, கடவுளுக்கே உடல்நலக் குறைவா என அதிர்ந்தனர்.

பல கடிதங்கள் கண்ணீர் விட்டன. பல கடிதங்கள் கண்ணீர் விட வைத்தன.

இறைவன் இரங்கினார். அன்னை நலமடைந்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *