அன்னை 18 : சிசு பவன், தொழுநோயாளிகள் இல்லம், ஆனந்த மரணம்

சிசு பவன்

 

கல்கத்தா தெருக்களில் அனாதைகளாகக் கண்டெடுக்கப்படும் குழந்தைகளைக் குறித்த கவலை அன்னையை வாட்டியது.

இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் அன்னையின் மனதுக்குள் கனலாய் எரிந்து கொண்டிருந்தது.

ஆதரவற்ற சிறுவர்கள் வீதிகளில் மரணத்துக்குள்ளாவதும், சமூக விரோத செயல்களுக்குள் விழுவதுமான அவலங்களை நிறுத்த வேண்டுமெனும் அன்னையின் கனவு 1955ம் ஆண்டு நிறைவேறியது.

சிசுபவன்.

அன்னை ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்காக ஆரம்பித்த இல்லம். இங்கு ஆதரவற்ற அனாதைகள், ஊனமுற்றோர், மன நிலை பாதிக்கப்பட்டோர், தவறான உறவுகளின் சாட்சியாக பிறந்தோர் என நிறைய குழந்தைகள் இருந்தனர்.

சிசு பவன் ஆரம்பித்த பின் அன்னையும் சகோதரிகளும் தேவையில்லை என மக்கள் நினைக்கின்ற குழந்தைகளை மார்போடணைத்து இல்லத்துக்குக் கொண்டு வந்தனர்.

அவர்களுக்கு அங்கே சுகாதாரமான உடையும், உணவும், கல்வியும் அளிக்கப்பட்டது.

காலம் செல்லச் செல்ல சகோதரிகள் காலையில் சிசுபவன் வாசலில் குழந்தைகளைக் கண்டெடுப்பது சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. மக்கள் இரவில் யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை வாசலில் வைத்து விட்டுச் சென்றனர்.

மோயீசனை பேழையில் வைத்து தண்ணீரில் விட்ட கதையைப் போல, சொந்தத் தாய் தூரத்திலிருந்து சகோதரிகள் குழந்தையை எடுத்துக் கொண்டனர் என உறுதிப்படுத்திய பின் அமைதியுடன் சென்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.

சில மருத்துவ மனைகள் அன்னையின் இல்லத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. தேவையில்லை என பெற்றோர் கருதும் பெண் குழந்தைகளோ, ஊனமுற்ற குழந்தைகளோ, தவறான உறவினால் பிறந்த குழந்தைகளோ அன்னையின் இல்லத்துக்கு ஏற்றுக் கொள்வதற்கான அழைப்பு.

அன்னையின் சகோதரிகள் உடனே குறிப்பிட்ட இடத்திற்கு விரைகின்றனர். அங்கே சென்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சிசு பவன் திரும்புகின்றனர்.

சிசுபவன் பல இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

எந்த இடத்தில் குழந்தைகளுக்கான இல்லம் ஆரம்பித்தாலும், அன்னை அதை சிசுபவன் என்றே அழைத்தார்.

சிசுபவனில் குழந்தைகள் ஆனந்தமாக வளர்ந்தனர்.

சிசுபவனிலிருந்து குழந்தைகளை தத்து எடுப்பதற்காக பல இடங்களிலிருந்தும் நல்ல மனம் கொண்ட தம்பதியினர் ஏராளமாக வர ஆரம்பித்தனர்.

அன்னை உண்மை விருப்பம் கொண்ட மக்களுக்கு குழந்தைகளை வழங்கினார். அவர்களுடைய முழு விவரமும் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அன்னை வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கே தத்து கொடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சிலரின் வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்திப்பதும் உண்டு.

சிசுபவன் ஆரம்பித்தபின் கல்கத்தா நகரில் தேவையற்ற மரணங்கள் ஏராளம் தடுக்கப்பட்டன. அன்னை வித்தியாசம் பாராட்டாமல் குழந்தைகளை ஏற்றுக் கொண்டாள். இன்னும் சில மணி நேரத்தில் இறந்து போகும் நிலையிலிருக்கும் குழந்தைகளைக் கூட கொண்டு வந்து பராமரித்தார்.

அடுத்த வினாடி ஒரு குழந்தை இறந்தால் கூட அது அன்பின் ஒரு துளியையேனும் சுவைத்து விட்டே இறக்க வேண்டும் என்பதே அன்னையின் விருப்பமாய் இருந்தது.

சில குழந்தையற்ற தம்பதியினர் வெளியூர்களில் தங்கி சில காலத்திற்குப் பின் ஊருக்குச் செல்லும் போது ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என சொல்லிக் கொண்டே ஊருக்குள் நுழைகின்றனர்.

பல வெளிநாட்டு தம்பதியினர் ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்டு சென்று இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து உடல் நிலையைச் சரிசெய்து மகிழ்ச்சியான வாழ்க்கையைக் காட்டுகின்றனர்.

சிசுபவனில் தத்து கொடுக்கப்படாத குழந்தைகள் சிறப்பான கவனிக்கப்படுகின்றனர்.

பெண்கள் எனில் உரிய காலத்தில் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். சகோதரிகளே அவர்களுக்கு அவர்கள் மதம் சார்ந்த முறையில் திருமணத்தை நடத்தி வைத்கின்றனர்.

ஆண்கள் எனில் சற்று வளர்ந்தபின் பணி செய்கின்றனர், அல்லது விவசாயம், ரேடியோ மெக்கானிக் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பல குழந்தைகளை பெற்றோர் வறுமையின் காரணமாக அன்னையரின் பாதங்களில் சமர்ப்பித்து விட்டுக் கண்ணீருடன் சென்று விடுகின்றனர்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தீர்க்க முடியாத வியாதி இருப்பதால் அவர்களைக் கவனிக்கப் பணமில்லை என்றும், சிறிது சிறிதாய் குழந்தை மரணமடைவதைக் காணும் வலிமை இல்லையென்றும் குழந்தைகளை சகோதரிகளிடம் கொடுத்து விட்டு விசும்பலுடன் விடைபெறுகின்றனர்.

எந்த நிலையில் வந்தாலும் குழந்தைகளுக்கு வாழும் காலம் வரை ஆனந்தத்திற்கும், குறைந்த பட்ச வாழ்க்கைக்கும் உத்தரவாதம் கிடைக்கிறது.

இல்லத்தின் இட வசதியைப் பொறுத்து குழந்தைகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டது.

சுசுபவனில் படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்கின்றனர். இந்த பவனிலிருந்து திருமணமாகி சென்ற பெண்கள் இருக்கின்றனர்.

இவர்களெல்லாம் அவ்வப்போது இந்த இல்லத்திற்கு வரும்போது அவர்களுடைய கண்களில் அருவி போல பெருக்கெடுத்து ஓடும் கண்ணீரை துடைக்கவும் மனமின்றி தழுதழுக்கின்றனர்.

சகோதரிகளும் இத்தகைய நிகழ்வுகளில் இன்னும் அதிகமாக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றனர்.

அன்னையின் சிசுபவனுக்கு உலகெங்கும் வாழும் மக்களின் ஆதரவு இருந்தாலும் அன்னையின் கொள்கைகளான கருக்கலைப்பு கூடாது, கருத்தடை கூடாது என்பன போன்றவை மிகப்பெரும் எதிர்ப்புக்கு உள்ளாயின.

அன்னை தன்னுடைய கொள்கையில் உறுதியாய் இருந்தாள். எதிர்ப்புகள் வலுக்கும் போதெல்லாம் அன்னை ஆழமான தியானத்திலும், செபத்திலும் மூழ்கி விடுவார். பல மணி நேரத்திற்குப் பின் தியானத்தை முடிக்கும் அன்னை தனது கொள்கையில் இன்னும் உறுதியாய் இருப்பார்.

அன்னையில் போதனைகள் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாக அன்னையின் பணியாளர்கள் அனைவருமே முழுமனதுடன் நம்புகின்றனர்.

சிசுபவனின் வளர்ச்சி இப்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது. தினமும் சில குழந்தைகள் பவனுக்குள் நுழைகின்றன, அதே போல தினமும் ஒரு சில குழந்தைகள் தத்து எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

அன்னையின் சிசுபவனிலிருந்து குழந்தைகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனை விலங்குகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் ஒரு அதிர்ச்சிக் கட்டுரையை ஒருமுறை ஒரு பத்திரிகை வெளியிட்டது.

அன்னை அதிர்ந்தாள். தனது கால்களுக்குக் கீழே தரை வழுக்கிப் போவது போல உணர்ந்து இருக்கையில் சரிந்தாள்.

ஒருவேளை இந்த பத்திரிகைச் செய்தி உண்மையாய் இருந்தால் ? எனது குழந்தைகளை வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களில் விலங்குகளைப் போல சோதனைக்கு உட்படுத்தினால் ? அன்னையின் மனம் அந்த சிந்தனையையே செய்யத் திராணியற்று உடைந்தது.

அன்னை சற்றும் தாமதிக்கவில்லை. உடனே அந்த வெளிநாட்டுத் தூதரகத்துக்கு ஓடினாள்.

தூதரகத்தில் அந்த செய்தியைக் காட்ட அந்த தூதரகம் உடனே அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்குத் தொடர்பு கொண்டு விசாரித்தது.

கடைசியில் அது ஆதாரமற்ற போலியான தகவல் என்றும் பத்திரிகை பரபரப்புக்காய் எழுதப் பட்ட கட்டுரை என்றும் தெரிய வந்தது.

ஆனால் அந்த அதிர்ச்சி அன்னையின் கண்களை விட்டு விலகவில்லை. அன்னை குழந்தைகளத் தத்துக் கொடுப்பதை அப்போது தற்காலிகமாக நிறுத்துமளவுக்கு அந்த செய்தி அன்னையைப் பாதித்தது.

எனினும் புரட்டுகளையும், எதிர்ப்புகளையும் மீறி உண்மையான அக்கறை கொண்ட கோடான கோடி இதயங்களால் இன்றும் சிசுபவன் அன்பின் சாட்சியாய் நிற்கிறது.

தொழுநோயாளிகள் இல்லம்

 

கல்கத்தா வீதிகளில் ஏராளமான தொழுநோயாளிகள் இருப்பதைக் கண்டதனால் தொழுநோயாளிகளுக்காக இல்லம் ஆரம்பிப்பதும் அன்னையின் விருப்பங்களில் ஒன்றாய் இருந்தது.

தொழுநோயாளிகள் மற்ற நோயாளிகளைப் போல இல்லாமல் சமூகத்திலிருந்தும், வீடுகளிலிருந்தும் துரத்தப்படும் நிலையே மிகவும் கொடுமையானதாக இருந்தது.

தொழுநோய் கண்ட தாய் தன் குழந்தைகளிடமிருந்து வலுக்கட்டாயமாக துரத்தப்பட்டாள். குழந்தைகளுக்கு அந்த நோய் வந்து விடும் என தாயே அஞ்சி குழந்தைகளை சிசுபவனில் ஒப்படைத்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

இயேசுவுக்கு முந்தைய பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தொழுநோய் பாவத்தில் அமிழ்ந்த மனிதனுக்கு கடவுள் கொடுத்த தண்டனையாகக் கருதப்பட்டது. ஆனால் இயேசு தொழு நோயாளிகளைத் தொட்டார். அவர்களை அரவணைத்தார். அவர்களை சுகமாக்கினார்.

மலைகளிலும், குகைகளிலும், பள்ளங்களிலும் முடங்கி வாழ்ந்த தொழுநோயாளிகளை இயேசு தயக்கமின்றி சந்தித்தார்.

இயேசுவின் வாழ்க்கையையும், வார்த்தையையும் தனது உயிர் மூச்சாகக் கொண்ட அன்னையும் தொழுநோயாளிகளை மனமார நேசித்தார்.

தொழுநோயாளிகளுக்கான இல்லம் ஆரம்பமானது.

தெருக்களின் குப்பைகளுக்கு இடையே குப்பையாய்க் கிடந்த தொழுநோயாளிகள் அன்னையின் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அங்கே பராமரிக்கப்பட்டனர்.

காந்திஜி பிரேம் நிவாஸ் என அன்னை திட்டகாரில் உள்ள தொழுநோயகத்திற்குப் பெயர் வைத்தார்.

காந்தியடிகளின் தீண்டாமை எதிர்ப்பு, தொழுநோய் ஒழிப்புக் கொள்கைகளில் அன்னை ஆர்வம் கொண்டிருந்தார். காந்தியடிகளின் சாத்வீக அணுகுமுறை அன்னையை வசீகரித்ததில் ஆச்சரியமில்லை.

காந்தியடிகளை மிகவும் நேசித்த அன்னை காந்தியடிகள் தனது பணியில் உடன் வருவோரை உடன் உழைப்பாளிகள் என்று அழைத்தது போல தனது சகோதரிகளையும், சகோதரர்களையும் உடன் உழைப்பாளிகள் என்றே அழைத்தார்.

காந்தியடிகளுக்கும் தொழுநோய் ஒழிப்பிற்கும் இருக்கும் பந்தத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் காந்தியடிகள் இறந்த தினத்தை தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கின்றோம்.

பிரேம் நிவாஸ் – முட்களுக்கு இடையே கிடந்த தொழுநோய் கிராமத்தை அன்னை தொழுநோயாளிகளின் காப்பகமாக மாற்றினார்.

தொழுநோயாளிகளும் வாழ்வின் ஆனந்தத்தை அறியும் விதமாக அவர்களை அன்னை பயன்படுத்தினாள். அவர்கள் மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டனர்.

அன்னை அந்த தொழுநோயாளிகளைக் கொண்டே தனது சகோதரிகளுக்குத் தேவையான ஆடைகளை நெய்யச் சொல்லுமளவுக்கு அவர்களுடைய பந்தம் இறுக்கமானதாய் இருந்தது.

தொழுநோயாளிகளின் காப்பகமாக, மருந்தகமாகத் துவங்கிய இந்த இடம் பின்னர் பொதுமக்களுக்கும் தேவையான தொழுநோய் சிகிச்சைகளும், பரிசோதனைகளும் இலவசமாகச் செய்து தரும் இடமாகவும் மாறியது.

அன்னையின் தொழுநோயாளிகள் காப்பகம் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களையும் இயேசுவின் பிம்பங்களாகப் பார்த்து பணிவிடை செய்தது.

தொழுநோயாளிகளுக்கான காப்பகங்கள், வீடுகள், புது வாழ்வு மையங்கள் துவங்கப்பட்டன.

அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்பட்டது. தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கிறிஸ்தவர் அல்லாத பல மருத்துவர்கள் தாங்களாகவே முன் வந்து இலவசச் சேவை செய்தனர்.

நோயாளிகள் துணி நெய்தல், செருப்பு தைத்தல், விவசாயம் செய்தல் என பல தொழில்களில் ஈடுபட்டனர்.

தொழுநோயாளிகளின் படைப்புகளை வாங்க மக்கள் மறுத்த நிகழ்வுகளும், அதனால் நோயாளிகள் காயமடைந்த சம்பவங்களும் நிறைய நடந்தன. ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றிலும் மாற்றம் நிகழ்ந்தது.

தொழுநோயாளிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் துயரங்களின் மூட்டையான ஒவ்வொரு கதை இருக்கிறது.  ஒவ்வொருவிதமான சோகக் கதைகளுடன் அவர்களுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

அன்னை அவர்களுக்கு முதலில் நம்பிக்கை ஊட்டுகிறார், பின் மருத்துவம் அளிக்கிறார். இறைவனின் அன்பை அவர்களுக்கு மனித நேயத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார்.

இன்று தொழுநோயாளிகளுக்கான இல்லம் பல நாடுகளிலும் பரவி பல இலட்சம் மக்களுக்கு உதவியாய் இருக்கிறது என்பதே அதன் தேவையையும், தரத்தையும், ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.

 

ஆனந்த மரணம்

 

அன்னை ஏற்படுத்திய இல்லங்களிலேயே அன்னைக்கு மிகவும் பிடித்தமான இல்லம் மரிக்கும் நிலையிலுள்ளவர்களைப் பராமரிக்கும் இல்லம் தான்.

அன்னை பணி செய்ய ஆரம்பித்த காலத்தில் பல்வேறு சூழலில் பல மனிதர்கள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக, உதவிக்கு ஆளில்லாமல் தனித்து துயரத்துடன் மரிக்கும் நிலையைக் கண்டார்.

இத்தகைய மனிதர்கள் இறக்கும் முன்பு கொஞ்சமேனும் மனித நேயத்தையும், அன்பையும், ஆனந்தத்தையும் பெற்றுக் கொண்டால் இறக்கும் போது அவர்களுடைய மரணம் நிம்மதியாய் இருக்கும் என நம்பினார்.

இதன் வெளிப்பாடாய் ஆரம்பமானது தான் காளிகட்டில் உள்ள தூய இல்லம்.

அன்னை இத்தகைய ஒரு பணியைச் செய்ய முடிவு செய்து இடம் தேடியபோது எந்த இடமும் கிடைக்கவில்லை.

அன்னை நகராட்சியை அணுகினார்.

“தெருவில் ஏராளமான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை துயரமாய் முடிந்திருக்கிறது. அவர்களுடைய மரணத்தையாவது மதிக்க வேண்டும். கடைசி மூச்சு விடும் மனிதர்கள் ஆதரவும், அன்பும் நிரம்பிய சூழலில் உயிர் விட வேண்டும். அதற்கு உங்கள் உதவி தேவை.”

“கல்கத்தாவில் எந்த இடமும் இல்லை. எந்த இடம் தருவது என்பது எனக்குத் தெரியவில்லை” நகராட்சி மறுத்தது.

“அப்படிச் சொல்லாதீர்கள். அரசு மருத்துவமனைகள் இத்தகையோரைக் கவனிப்பதில்லை. நாங்கள் கவனிக்க விரும்புகிறோம்” அன்னை சொன்னாள்.

நகராட்சித் தலைவர் யோசித்தார்.

“காளிகட் என்னுமிடத்தில் ஒரு காளி கோயில் இருக்கிறது. அந்த கோயில் எல்லைக்குள் இரண்டு சத்திரங்கள் உள்ளன. அவை பக்தர்கள் தங்குவதற்காக எப்போதோ கட்டப்பட்டவை. இப்போது சும்மா தான் இருக்கின்றன… ஆனால்” நகராட்சித் தலைவர் இழுத்தார். அன்னை கிறிஸ்தவ மதம் சார்ந்தவள். இந்துக் கோயிலின் எல்லைக்குள் நுழையமாட்டாள் என நினைத்திருந்தார் அவர்.

“ஆனால் என்ன ? சொல்லுங்கள். ஏதேனும் பிரச்சனையா ?” அன்னை அவசரமாய் கேட்டாள்.

“இல்லை. அது இந்து கோயிலின் அருகே இருக்கிறது. “

“அதனால் என்ன ? மனித நேயப் பணியை எந்த மதமும் எதிர்ப்பதில்லையே. அந்த இடத்தை எங்களுக்குக் கொடுங்கள்” அன்னை விண்ணப்பித்தாள்.

“அது மிகவும் பாழடைந்து…”

பரவாயில்லை. அன்னை இடைமறித்தாள். எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் சரிசெய்து கொள்கிறோம். அன்னை சொன்னாள்.

அன்னையின் பணிகளுக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. அன்னை அந்த இடத்தை சரி செய்து அதற்கு நிர்மல் ஹிர்தே என பெயரிட்டார். முதலில் இதே பெயரைத் தான் தனது பள்ளிக்கு முதல் முதலாய் சூட்டினார் என்பது கவனிக்கத்தக்கது. இது தூய இதயம் என்னும் பெயரின் மீது அன்னைக்கு இருந்த பிடிப்பைக் காட்டுகிறது

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் நிர்மல் ஹிர்தே எனும் தூய இதயம் பணியைத் துவங்கியது.

மரணத்தின் வாசலில் இருக்கும் மனிதர்கள் சாலைகளில் கண்டெடுக்கப்பட்டால் இங்கே கொண்டு வரப்படுகின்றனர். அவர்களின் உடலில் இருக்கும் புண்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

அவர்கள் குளிப்பாட்டப்படுகின்றனர். நல்ல ஆடை உடுத்தப்படுகின்றனர். முதலுதவி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த இல்லத்தில் வந்து பலர் உயிர்பிழைத்து ஆனந்தத்துடன் சென்ற அதிசயமும் நிகழ்கிறது.

இறப்பவர்கள் கூட அவர்களுடைய மரணத்தின் நிமிடங்களில் முக மலர்ச்சியோடு விடைபெறுகின்றனர்.

யாராவது மரிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தால் ஒரு பணியாளர் அவருடைய அருகில் அமர்கிறார். அவருடைய கைகளைப் பற்றிக் கொள்கிறார். அவருடைய கைகால்களை அமுக்கி விடுகிறார்.

அவர்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காய் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார். யார்மேலாவது கோபம் இருந்தால் அவர்களை முழு மனதோடு மன்னிக்கச் சொல்கிறார். இறைவனை விரைவில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறீர்கள், உங்கள் வலிகள் எல்லாம் முடியப்போகின்றன என்கிறார்.

அமைதியும் புன்னகையும் தவழும் முகத்தோடு அவர்களுடைய உயிர் அவர்களை விட்டுப் பிரிகிறது.

பெரும்பாலும் இறப்பவர்கள் “மிக்க நன்றி” என்று தங்களுடைய மரணத்தை மகிழ்வுடன் ஏற்கின்றனர்.

“வாழும் போது நான் ஒரு நாய் போல குப்பையில் கிடந்தேன். சாகும்போது ஒரு தேவதை போல உணர்கிறேன்”  என பலர் ஆனந்தக் கண்னீர்

வடிக்கின்றனர்.

“இதை விட சிறந்த மரணம் கிடைக்காது” என பலர் தழுதழுக்கின்றனர்.

மரணத்திற்கு முன் அவர்கள் தங்கள் மதம் சார்ந்த செபத்தைச் சொல்கின்றனர். பின் பணியாளர்கள் செபிக்கின்றனர். பின் இருவரும் சேர்ந்து செபத்தில் நிலைக்கின்றனர்.

ஆன்மீகக் கடலும், மனித நேயக் கடலும் சங்கமிக்கும் அந்த இடத்தில் இறைவனின் இருப்பை நிச்சயம் உணர முடியும்.

அந்த அருவருக்கத் தக்க சூழலில் கூட ஆனந்தமாய், உற்சாகமாய், புன்னகையாய் பணி புரிய இந்த பணியாளர்களால் எப்படி முடிகிறது என்பதே வியப்பின் உச்சகட்டம்.

வெளிநாடுகளில் மிகவும் செல்வச் செழிப்புடன் இருக்கும் பலர் இங்கே வருகின்றனர். சில மாதங்கள் இங்கே தங்கி முழுவதுமாக தங்களை அர்ப்பணித்து இவர்களுக்குப் பணிவிடை புரிகின்றனர்.

எதையோ நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சியில் பின்னர் விடைபெறுகின்றனர்.

ஆனால் அன்னையின் அந்தப் பணிக்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தன. காளி கோயிலுக்குள் கிறிஸ்தவர்கள் பணி செய்வது சில இந்துக்களின் எரிச்சலைக் கிளப்பியது.

அன்னையின் பணியாளர் சபையில் ஏராளம் இந்துக்கள் உள்ளனர், அன்னை பராமரிப்போரும் பெரும்பாலானோர் இந்துக்களே. எனினும் இந்தப் பணி சில இந்துக்களின் வெறுப்பைச் சம்பாதித்தது.

அவர்கள் போராடினர். அன்னை காளி கோயிலுக்குள் இருந்து கொண்டு மக்களை மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டினர்.

நகராட்சித் தலைவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் உண்மையைக் கண்டறிய அந்த இடத்திற்குச் சென்றனர்.

உள்ளே அன்னை ஒருவனை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவன் சாகும் நிலையில் இருந்தான். அவனிடமிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.

அன்னை ஒரு இடுக்கியால் அவனுடைய உடலில் இருந்த புழுக்களை ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் குமட்டியது.

அன்னை மெதுவாய் அவனுடைய கரங்களைப் பற்றி தலையைக் கோதினாள். பின் அவனிடம் அன்னை சொன்ன வார்த்தைகள் இருவரையும் தூக்கி வாரிப் போட்டது

“நீ உன் செபத்தைச் சொல், நான் என் செபத்தைச் சொல்கிறேன். பின் இருவருமாய் சேர்ந்து ஒரு செபத்தைச் சொல்வோம்” என அன்னை சொன்னார்.

அன்னை மதத்தைத் திணிக்கிறார். மக்களை கிறிஸ்தவராகும் படி வற்புறுத்துகிறறர். கிறிஸ்தவ மத போதனைகளையே வலியுறுத்துகிறார் என்று சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டவர் செய்யும் செயல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“அம்மா…” அவர்கள் அழைத்தனர்.

அன்னை திரும்பிப் பார்த்தாள். புன்னகைத்தாள்.

“வாருங்கள்.. வாருங்கள்…. உள்ளே செல்லலாம்… நம் சகோதரர்களைச் சந்திக்கலாம்.” அன்னை சொன்னார்.

“வேண்டாம் அம்மா… நீங்கள்…” காவல்துறை அதிகாரியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்ணீர் வழிந்தோட வெளியே வந்தார்.

வெளியே ஒரு கூட்டம் நின்றிருந்தது. அவர்கள் அன்னையை காவல்துறை கைது செய்து செல்வதைப் பார்க்க ஆவலாய் இருந்த கூட்டம்.

காவல் துறை அதிகாரி சொன்னார். “நான் அன்னையைக் கைது செய்கிறேன். ஆனால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் இதே பணியை ஏற்றுக் கொள்வதாக வாக்களியுங்கள்”

அவர் சொல்ல, கூட்டத்தினர் கலைந்தனர்.

“உங்களில் குற்றம் இல்லாதவன் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்” என விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்காக இயேசு பரிந்து பேசியபோது விலகிச் சென்ற கூட்டம் போல ஆலய முற்றம் வெறுமையானது.

அன்னையின் பணி தொடர்ந்தது. எனினும் எதிர்ப்புகள் விலகவில்லை.

கடைசியில் அந்த காளிகோயில் அர்ச்சகர் ஒருவரே மரண நோயைச் சந்தித்தார். அவரும் சமூகத்தின் நிராகரிப்புக்கு உள்ளானார்.

நிர்மர் ஹிர்தே அவரை நிராகரிக்கவில்லை.

மதங்களைத் தாண்டிய மனித நேயமே முக்கியம் என்பதை அன்னை மீண்டும் ஒருமுறை விளக்கினாள்.

அவர் பராமரிக்கப்பட்டார். அன்பு செய்யப்பட்டார்.

“உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்தால் அதனால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை, உங்கள் எதிரிகளுக்கும் நன்மை செய்யுங்கள். உங்களை வெறுப்போருக்காகச் செபியுங்கள்” இயேசுவின் போதனைகள் அங்கே செயல்வடிவம் பெற்றன.

அர்ச்சகர் அன்னையின் பணியின் உண்மை நிலையை உணர்ந்தார்.

அங்கே ஆனந்த மரணமடைந்தார். அவருடைய உடல் இந்து முறைப்படி எரியூட்டப்பட்டது.

இந்த நிகழ்வுக்குப் பின் அன்னையில் தூய இல்லம் பெரிய அளவிலான எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை.

2002ம் ஆண்டுவரை சுமார் 76 ஆயிரம் பேர் இங்கே வந்து மரணத்தை மகிழ்வுடன் சந்தித்திருக்கின்றனர் என்கிறது சகோதரிகளின் குறிப்பேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *