அன்னை 19 : அன்பும், வெறுப்பும், எதிர்ப்பும்

அன்புக்கு எதிராய் ஆயுதங்கள்

அன்னை மதம் மாற்றுகிறார் என்று அன்னையைப் பற்றியும் அன்னையின் கொள்கைகளைப் பற்றியும் நன்கு அறியாதவர்கள் மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர்.

அன்னை இயேசுவை தன்னுடைய மணவாளனாக ஏற்றுக் கொண்டு இயேசுவில் முழு சரணடைந்தவர். இதை எப்போதும் எந்த இடத்திலும் மறுத்தோ, தயங்கியோ, மாற்றியோ பேசியதில்லை.

நான் கிறிஸ்தவள். அன்னை மரி எனது தாய். இயேசுவையே என் வாழ்க்கைத் துணைவராக, கடவுளாக, எல்லாம் வல்லவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என எப்போதும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வார்.

எப்போதும் செபத்திலும், திருச்சபை பலியிலும், ஜெபமாலையிலும் ஈடுபட்டிருப்பார். ஆனால் அதை பிறர்மீது திணித்ததில்லை.

ஒரு இந்து நல்ல இந்துவாய் மாறுவதையும், ஒரு இஸ்லாமியர் நல்ல இஸ்லாமியராய் மாறுவதையும், ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவராய் மாறுவதையுமே நான் மன மாற்றம் என்கிறேன். என தெள்ளிய நீரோடை போல அன்னை தனது கொள்கை பற்றிப் பேசுகிறார்.

இயேசுவைப் பற்றி பேசுவதோ, இயேசுவின் போதனைகளைப் பற்றி பேசுவதோ மதமாற்றமல்ல என்பதை அன்னை நம்புகிறாள். யாரையும் அன்னை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதில்லை.

மதம் மாறினால் மட்டுமே உதவி செய்வேன் என அன்னை என்றுமே யாரிடமும் சொன்னதே இல்லை. ஏனெனில் அன்னையின் மனம் ஓர் அன்னை மனம். அது நிபந்தனைகளற்ற அன்பை வழங்குகிறது.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டால் மட்டுமே அன்பு செய்வேன் என்பது வெறும் போலித்தனமான, அல்லது சுயநலம் சார்ந்த அன்பு என்பதில் அன்னை தெளிவாய் இருந்தாள்.

அனாதை குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட சிசு பவனில் எல்லா குழந்தைகளையும் அவர்கள் சார்ந்த மதத்தின் அடையாளங்களுடன் அன்னை அங்கீகரிக்கிறாள்.

கிறிஸ்து பிறப்பு, ஈர், தீபாவளி என மூன்று பண்டிகைகளுக்குமே அந்தந்த மதம் சார்ந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே அங்கே திருமுழுக்கு வழங்கப்படுகிறது. இந்து குழந்தைகளுக்கோ, இஸ்லாமியக் குழந்தைகளுக்கோ திருமுழுக்கு வழங்கப்படுவதே இல்லை.

அதை அன்னை விரும்பவும் இல்லை.

இதே போல இறக்கும் தருவாயில் இருப்பவர்களைப் பராமரிக்கும் காளிகட்டில் கூட இறப்பது கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமியர் என தெரிந்தால் மட்டுமே அடக்கம் செய்கின்றனர்.

இந்து எனத் தெரிந்தால் அவர்கள் இந்து முறைமைப்படி எரியூட்டப்படுகின்றனர்.

அன்னையின் பணிக்கு தங்களை அர்ப்பணித்திருப்பவர்களில் கூட பெரும்பாலானோர் இந்துக்களே. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவானதே. இதிலிருந்தே அன்னையின் பணி மதம் பரப்புதல் அல்ல, மனிதம் பரப்புதலே என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் அன்னையின் பணி இப்படித் தான் இருக்கிறது.

அன்னை மதம் மாற்றும் விருப்பம் கொண்டிருந்தால் தெருப்பணிக்குச் சென்றிருக்கத் தேவையில்லை. அன்னை செபக்கூட்டங்கள் நடத்தியிருந்தால் போதும். ஆனால் அன்னையின் விருப்பம் மதம் எனும் மந்தைக்கு ஆள் சேர்ப்பதல்ல, மனம் என்னும் பந்தியில் அன்பை சேர்ப்பதே.

அன்னை மதமாற்றம் செய்கிறார் என்று ஒரு கும்பல் தனியோ பிரச்சனைகளைக் கிளப்புகையில் இன்னொரு கும்பல் அன்னையில் பணியை வைத்து வியாபாரத்தை வளமாக்கிக் கொண்டிருந்தது.

அதன் ஒரு சிறு உதாரணமாக வார இதழ் ஒன்று செய்த கீழ்த்தரமான செயலைச் சொல்லலாம்.

எம்மாஸ் என்னும் மூத்த சகோதரி ஒருவர் அன்னையின் இல்லத்தை விட்டு வெளியேறிவிட்டார். என அது பரபரப்புச் செய்தி வெளியிட்டது.

அன்னையின் சபையை விட்டு யாராவது வெளியேறுவது மிக, மிக அபூர்வம் எனவே மக்களிடம் ஒரு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அந்த செய்தி பயன்பட்டது.

அன்னை ஒரு சர்வாதிகாரி, அன்னையைப் போல ஒரு கொடுமைக்காரியைப் பார்க்க முடியாது என்றெல்லாம் அந்த எம்மாஸ் என்னும் சகோதரி பக்கம் பக்கமாக கதைகளை அவிழ்த்து விட பத்திரிகை வியாபாரம் சூடு பிடித்தது.

அன்னையின் கொடுமை தாங்காமல் மேலும் பலர் சபையை விட்டு ஓடிவிட்டதாகவும், பலர் இன்னும் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கதை அவிழ்ந்த அந்த பத்திரிகைச் செய்தி அன்னையின் பார்வைக்கு வந்தது.

அன்னை அதிர்ந்தாள். ஒரு பத்திரிகை தன்னுடைய விற்பனையை அதிகரிக்க எந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியிருக்கிறது என்பது அன்னைக்கு அப்போது தான் புரிந்தது.

தன்னுடைய மறுப்புக் கடிதத்தை அதே பத்திரிகைக்கு உடனே அனுப்பினார். ஆனால் அந்த மறுப்புக் கடிதம் வரவேயில்லை.

அந்த மறுப்புக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த உண்மை பொசுக்கும் என்பதே அதன் காரணம்

ஏனெனில், எம்மாஸ் என்று ஒரு சகோதரி அன்னையின் சபையில் இடம்பெற்றிருந்ததே இல்லை !

உதவும் கரங்கள்

 

அன்னையின் பணிக்குத் தேவையான பண உதவிகள் பலரிடமிருந்தும் வந்து கொண்டிருந்தன.

இறைவனுக்கு எனது பணி சரியானது என தெரிந்தால் இந்தப் பணிக்குத் தேவையான பணத்தை அவரே தருவார் என்பதே அன்னையின் கொள்கையாய் இருந்தது.

ஒருமுறை ஒரு கோடீஸ்வரர் அன்னையின் வாசலுக்கு வந்து

“அன்னையே ஒரு மிகப்பெரும் தொகையை நான் வைப்பு நிதியாக உங்கள் சபைக்குத் தருகிறேன். அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டே நீங்கள் தொடர்ந்து நீண்ட காலம் பணி செய்யலாம்” என்றார்.

“தாகத்தைத் தீர்க்காத நீரினால் என்ன பயன் ?” அன்னை வினவினாள். “ முதலீடுகளுக்கோ, வைப்பு நிதிக்கோ இந்த சபையில் முன்னுரிமை இல்லை. பணத்தை சேமித்து வைப்பதல்ல, செலவழிப்பதே பணியின் நோக்கம் என்றார் அன்னை.

அன்னையின் பணிக்கு தினமும் யாராவது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருந்தனர். சில நிகழ்வுகள் உள்ளத்தை உருக்கக் கூடியவை.

ஒருமுறை அன்னையைக் காண ஒரு இளைஞர் வந்திருந்தார். மழையில் நனைந்து தயங்கித் தயங்கி வாசலில் நின்று கொண்டிருந்தான் அவன்.

அன்னை அவனை உள்ளே அழைத்து விசாரித்தார்.

அவன் கையில் ஒரு கவர் இருந்தது. அதில் 600 ரூபாய். அன்னை அதை வாங்கினாள்.

“அம்மா, இது எனது முதல் மாத சம்பளம். அதை உங்கள் பணிக்காய் அர்ப்பணிக்கிறேன். எனது தேவைகளை இறைவன் பார்த்துக் கொள்வான்” அந்த இளைஞர் சொல்ல அன்னை உருகினாள்.

முதல் மாத சம்பளம்.

எதிர்பார்ப்போடும், கனவுகளோடும் பெற்ற முழு பணத்தையுமே ஒரு சபையின் பணிக்காகக் கொடுப்பதற்கு உயரிய மனம் வேண்டும்.

இன்னொரு முறை வாசலில் பிச்சைக்காரர் ஒருவர் கூப்பிட்டார். “அம்மா…. அம்மா…”

அன்னை அவனுக்கு உதவும் நோக்கத்துடன் கீழே ஓடினார். கீழே அவன் கைகளில் சில நாணயங்களை வைத்திருந்தான்.

“அம்மா… இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள் அம்மா. ஏழைகளுக்கு உதவட்டும் “ என்றான்.

அன்னைக்கு அழுகை வந்தது. அவனுடைய இரவு உணவுக்கான பணமாய் இருக்கலாம் இது. அவன் ஒருவேளை பட்டினியில் படுக்க வேண்டியிருக்கலாம். எனினும் அவனுடைய பகிர்தல் அன்னையை உலுக்கியது.

உலக அரங்கில் பெறும் உயரிய விருதை விட நேசமாய் அந்த பணத்தை அன்னை மார்போடணைத்தாள்.

அன்னை விவிலியத்தில் வந்த கதையை நினைவு கூர்ந்தார்.

ஆலயத்தில் எல்லோரும் காணிக்கையிடுகின்றனர். பணக்காரர்கள் கட்டுக் கட்டாய் பணத்தை பெட்டியில் போட்டு விட்டு பெருமையாய் பார்த்துச் செல்கின்றனர். கடைசியாய் வந்த ஒரு ஏழை விதவை தன்னிடம் இருந்த இரண்டு காசுகளை பெட்டியில் போட்டு விட்டு தலை குனிந்து நடக்கிறாள்.

இயேசு சொன்னார். இந்த ஏழை விதவையே அதிகம் காணிக்கை கொடுத்தவள். ஏனெனில் மற்றவர்களெல்லாம் தங்களிடம் இருந்த பணத்தின் ஒரு பகுதியை காணிக்கையாய் கொடுத்தனர். இவளோ தன்னிடமிருந்த அனைத்தையுமே கொடுத்து விட்டாள். என்றார்.

அன்னையின் நினைவலைகளில் இந்த இளைஞனும் அந்த பெண்மணியும் ஒன்றாகத் தெரிந்தனர்.

ஒருமுறை அன்னையின் இல்லத்திற்கு சர்க்கரை தேவைப்படுகிறது என்பதை அறிந்த ஒரு சிறுவன் தன் தாயிடம்

“அம்மா.. இனிமேல் எனக்கு தேனீரில் சர்க்கரை போட வேண்டாம். அதைச் சேமித்து அன்னையின் இல்லத்திற்குக் கொடுத்து விடுங்கள்” என்றான்.

அன்னை தன்னிடம் தரப்படும் ஒரு ரூபாயையும், ஒரு இலட்சம் ரூபாயையும் ஒரே போல பாவித்தார். அன்னைக்கு பணத்தின் அளவை விட, அதன் பின்னால் இருக்கும் மனத்தின் அளவே முக்கியமானதாய் இருந்தது.

ஒரு இந்து தம்பதியினர் தங்களுடைய முதல் நாள் திருமண நாளைக் கொண்டாட பணம் சேமித்தனர். சிறப்பாகக் கொண்டாடவேண்டும், நல்ல ஆடைகள் வாங்க வேண்டும், உணவகம் சென்று சாப்பிடவேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருந்தனர்.

அந்த நாளுக்கு சில நாட்கள் முன்னதாக அன்னையின் பணி பற்றி கேள்விப்பட்டனர். உடனே தங்கள் சேமிப்பை முழுவதும் அன்னையிடம் கொடுத்தனர்.

அன்னை கேட்டாள்

“உங்கள் விருப்பத்தை நிராகரித்து, ஏழைகளுக்காய் வழங்குகிறீர்களே உங்களுக்கு கஷ்டமாய் இல்லையா ?”

அவர்கள் சொன்னார்கள். “ இல்லை. எங்கள் கஷ்டமெல்லாம் இத்தனை நாட்கள் உங்களுக்கு உதவாமல் போனோமே என்று தான்”.

அன்னை நெகிழ்ந்தாள்.

ஒரு முறை சிசுபவனில் குழந்தைகளின் உணவுக்கு காய்கறி இல்லாமல் போயிற்று.

என்ன செய்வது ? சாதத்தை சமைத்து, அதில் உப்பைத் தூவி உண்பதென முடிவாயிற்று.

அதற்குரிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கியவர் காரின் பின் பாகத்தைத் திறந்து காட்டினார். புத்தம் புதிதாய் காய்கறிகள் நிரம்பியிருந்தன.

“எங்கிருந்து வருகிறது ?” ஆர்வமாய் வினவினார்கள்.

“ இந்திராகாந்தியின் இல்லத்திலிருந்து. அவருடைய மருமகள் சோனியா காந்தி அனுப்பினார்கள்” பதில் வந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *