அன்னை 17 : பயிற்சிப் படிக்கட்டுகள்

பயிற்சிப் படிக்கட்டுகள்

 

அன்னையின் அன்புப் பணியாளர் சபை திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட சட்ட திட்டங்களோடு இயங்கியது.

திருச்சபையின் எல்லைகளைக் காயப்படுத்தாமலும், மரபுகளை பெரிய அளவில் மீறாமலும் அன்னையின் பணிகள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

அன்னை தவறாமல் திருப்பலியில் பங்கேற்கிறார். திருப்பலி அன்னைக்கு பணி செய்யும் ஊக்கத்தையும் தடுமாறாத மனதையும் தருகிறது. செபம் அன்னைக்கு குருடனின் கையிலிருக்கும் ஊன்றுகோலாய் உதவுகிறது.

ஆலயத்தில் நுழைந்தால் அன்னை செபத்தில் மூழ்கிப் போய்விடுகிறார். பெரும்பாலும் ஆலயத்தின் பின் இருக்கைகளில் தனியாக அமர்ந்து இறைவனுடன் மானசீக உரையாடலில் மூழ்குகிறார்.

பணியாளர்கள் திட்டமிட்டு சரியாக இயங்குகின்றனர். ஏனோ தானோ என்று யாருமே இருப்பதில்லை.

காலையில் தேனீர் முடிந்ததும் தேனீக்களைப் போல பறந்து விடுகின்றனர் சகோதரிகள். அவரவற்குக் குறிக்கப்பட்ட பணிக்காக அந்தந்த இடங்களுக்கு விரைகின்றனர்.

சிலர் சிசுபவனுக்குச் செல்கின்றனர், சிலர் தொழுநோயாளிகளைச் சந்திக்கச் செல்கின்றனர், சிலர் மரிப்போர் இல்லத்திற்குச் செல்கின்றனர், சிலர் மருந்தகம் செல்கின்றனர் என ஒவ்வொருவரும் பறக்கின்றனர்.

இந்த பணியும் தொடர்ச்சியாக ஒரே போல இருப்பதில்லை. சலிப்பும், சோர்வும் ஏற்படக் கூடாது என்பதற்காக அடிக்கடி இந்த பணித் தளம் மாறிக்கொண்டே இருக்கின்றது.

சகோதரிகள் இரண்டு இரண்டு பேராகவே பணிக்குச் செல்கின்றனர். இதற்கு பாதுகாப்புப் பயமே காரணம் என கருதப்பட்டாலும் அன்னையின் இந்த முடிவிற்கும் காரணம் இயேசுவின் போதனையே.

இயேசு தன்னுடைய சீடர்களை பணி வாழ்வுக்கு அனுப்பும் போது “நீங்கள் இரண்டு இரண்டு பேராகச் செல்லுங்கள்” என்று அறிவுறுத்துகிறார். எனவே அன்னையும் தனது சகோதரிகள் இரண்டு இரண்டு பேராகவே பணிக்குச் செல்ல வேண்டும் எனும் கொள்கையை வைத்திருக்கிறார்.

பணிக்குச் சென்றபின் பணி இடங்களில் பிறரிடமிருந்து எதையும் பெற்று உண்பதில்லை. மதிய உணவையும், குடிநீரையும் கையிலேயே எடுத்துச் செல்கின்றனர் சகோதரிகள்.

வறுமையில் உழலும் மக்கள் சகோதரிகளுக்கு தேனீர், உணவு என அளிக்க பிரியப்பட்டால் அவர்களுடைய தேனீரையோ, உணவையோ தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதே அன்னையின் எண்ணம்.

எனவே ஏழைகளை மேலும் துன்புறுத்தும், அல்லது சிரமத்துக்குள்ளாக்கும் என்பதால் இந்த கொள்கை கடைபிடிக்கப் படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் சகோதரிகள் இந்தக் கொள்கையை இறுகப் பற்றியிருக்கின்றனர்.

ஏழைகளிடம் எதையும் பெற்றுக் கொள்ள சகோதரிகள் மறுப்பதால் பணக்காரர்களிடமிருந்தும் அவர்கள் எதையும் பெற்றுக் கொள்வதில்லை.

அது ஏழைகளை அலட்சியப்படுத்தி பணக்காரர்களை ஏற்றுக் கொள்வது போல இருக்கிறது என்பதற்காக அன்னையும், சகோதரிகளும் அதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்னை எப்போதுமே விடுப்பு எடுத்துக் கொண்டதில்லை. ஓய்வு நாள் மனிதனுக்காகத் தான், மனிதன் இருப்பது ஓய்வு நாளுக்காக அல்ல என்னும் இயேசுவின் போதனையே அன்னையின் வழியாய் இருந்தது. ஆனால் சபை சகோதரிகளுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் சகோதரிகள் தங்கள் கிழிந்த ஆடைகளைச் சரிசெய்வது, சிறு சிறு வீட்டு வேலைகள் செய்வது என நேரத்தைச் செலவிடுகின்றனர். பெரும்பாலான சகோதரிகள் அன்றைய தினத்தை தியானம் மற்றும் மறைக் கல்விக்காய் செலவிடுகின்றனர்.

இந்த சபையில் இருக்கும் ஒரு பலம். யாருமே இந்த சபையின் கொள்கைக்கு எதிராகவோ, சட்டங்களுக்கு எதிராகவோ குரல் கொடுப்பதில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க விருப்பத்துடன் மட்டுமே இந்த குழுவில் இணைகின்றனர்.

விருப்பப்படும் அனைவரையும் அன்னை தன்னுடைய பணியில் உடனே சேர்த்துக் கொள்வதில்லை.

சபையில் கடைபிடிக்கும் வழிமுறை, வடிகட்டும் வழிமுறையாக காட்சி தருகிறது.

மொத்தமாக வரும் சகோதரிகள் ஓரிரு மாதங்கள் அங்கே தங்க வைக்கப்படுகின்றனர். இந்த ஓரிரு மாதங்களில் பலர் பணியின் சிரமம் கண்டும், செய்ய வேண்டிய தியாகம் கண்டும் ஒதுங்கி விடுவார்கள்.

இயேசுவின் பார்வையில் இவர்கள் வழியோரமாய் விழுந்த விதைகள். முளைக்கும் முன்னே வானத்துப் பறவைகளால் தின்னப்படும் விதைகள்.

இந்த நிலையைத் தாண்டி வருபவர்களில் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, உண்மையிலேயே பணி செய்யும் ஆர்வமுடையவர்கள் இரண்டாண்டு கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த பயிற்சி இவர்களை நன்றாகப் புடமிட்டு பணி செய்யும் பக்குவம், பணியின் தேவை குறித்த புரிதல், இன்னல்கள் குறித்த அறிவு என அனைத்தையும் தருகிறது.

இந்தப் பயிற்சியின் முடிவில் விலகுபவர்கள் இயேசுவின் பார்வையில் பாறையில் விழுந்த விதைகள். ஆர்வமாய் முளைத்து வரும் இவர்கள், வேர் பிடிக்க முடியாமல் காய்ந்து போகின்றனர்.

இந்த நிலையைக் கடந்தவர்கள் பணியாளராகத் தொடர விரும்பினால் அவர்களிடமிருந்து முதல் வாக்குறுதி பெறப்படுகிறது. முதல் வாக்குறுதி எடுத்துக் கொண்டவர்கள் இளம் துறவி எனும் நிலைக்குள் வருகின்றனர்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் இறுதி வாக்குறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாக்குறுதி எடுத்துக் கொண்டவர்கள் உண்மையிலேயெ பணி செய்யும் ஆர்வம், உறுதி, மனம் என அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த கடைசி வாக்குறுதிக்கு முன் பணியாளர்கள் சுமார் ஒரு மாத கால விடுப்பில் சொந்த வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். அது வரை வீடுகளுக்குச் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த ஒரு மாத காலம் கடைசி வடிகட்டலாக அமைந்து விடுகின்றது. சிலர்

இந்த விடுப்பின் முடிவில் தான் இழந்து போன குடும்ப உறவுகள், மகிழ்ச்சி இவையே பணி செய்வதை விடப் பெரிது எனக் கருதினால் வீட்டிலேயே தங்கி விடுகின்றனர்.

இவர்கள் இயேசுவின் பார்வையில் முள்செடியிடையே விழுந்த விதைகள். உலகத்தின் ஆசாபாசங்களின் முட்களால் நெரியுண்டு பணிவாழ்விலிருந்து பின் வாங்கிப் போபவர்கள்.

பணியின் மேல் தீராத தாகம் கொண்டவர்கள் சில நாட்களிலேயே விடுப்பை முடித்துக் கொண்டு ஓடி வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் பின் வாழ்நாளில் பணி வாழ்வை விட்டு விலகுவதே இல்லை.

இவர்களே இயேசுவின் பார்வையில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள். அவை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு என பலன் கொடுக்கின்றன.

பணியில் ஈடுபட்டபின் அவர்கள் குடும்பத்தோடான உறவுகளை பெரும்பாலும் துண்டித்து விடுகின்றனர். தன்னையே வெறுத்து,தன் சிலுவைகளைச் சுமந்து கொண்டு பணி செய்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என அபூர்வமாய் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *